தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

நகுலன்
This topic is about நகுலன்
59 views
கவிதைகள் > கவிதைகள்: நகுலன்

Comments Showing 1-17 of 17 (17 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (last edited Oct 16, 2020 05:00PM) (new)

Prem | 230 comments Mod
பல நாட்களுக்கு பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நகுலன் பற்றிய குறிப்புகள் வாசித்தேன். மிகவும் எளிதான ஆனால் ஆழ்ந்து யோசிக்க வைக்கின்ற வரிகள்.

கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

* சந்திப்பு என்பதை அவர் தற்செயல் என்று கருதுவதில்லை பெரும்பாலும் அவர் கவிதையின் முக்கிய புள்ளியாக சந்திப்பு இடம் பெறுகிறது. யாரோ யாரையோ சந்திக்கிறார்கள். எதையோ கேட்கிறார்கள். அல்லது சொல்கிறார்கள். இதில் அவர்கள் உரையாடல் அளவிற்கு இந்த சந்திப்பு ஏன் நடைபெற்றது என்ற புதிர்மையும் உருவாகிறது

* ஜென் கவிதைகளில் காணப்படுவது போல தோற்றத்திலிருந்தே அதை கடந்து செல்லும் நிலையை உருவாக்குவது தொடர்ந்து செயல்படுகிறது. அன்றாட செயல்பாடுகளை அவர் தியானநிலை போலவே அடையாளம் காண்கிறார். பலநேரம் தன் வாழ்க்கை என்பதை பல்வேறு தனித்த மற்றும் ஒன்றிணைந்த சொற்களின் விளையாட்டுகளமாக கருதுகிறார்.

* என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்சி

சில கவிதைகள்:

வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.

*
அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
`
எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`

*
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

*
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.


message 2: by Prem (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரை - நகுலன் இல்லாத பொழுது.

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை!

எழுத்தாளர் ஜெயமோகன், நகுலன் அவர்களின் சிறந்த நவீன கவிதைகளாக கருதுபவை பற்றிய பதிவு. இப்பதிவில் இருந்து நகுலனின் சில கவிதைகள்:

ஒரு மரம்

அதற்குப்
பல கிளைகள்
ஒரு சொல் தொடர்
அதில் / அதனுள்
பல வளைவுகள்
சில நேர்த்திகள்
ஆழங்கள்
நுணுக்கங்கள்
சப்த விசேஷங்கள்
நிசப்த நிலைகள்
நேரஞ் சென்றது அறியாமல்
அதனுள் நான்.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை


message 3: by Prem (last edited Nov 11, 2020 05:39AM) (new)

Prem | 230 comments Mod
நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய கட்டுரை - நகுலன் என்றொரு மானிடன்

'ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு'

பாத்ரூமில் இருந்த பாம்பு பற்றி ஒரு கவிதை. அது பாம்பு வருகிற பாத்ரூம்தான். அடுத்தமுறை போயிருந்தபோது நான் பாத்ரூம் போனபோது, "பாம்பிருக்கும்..பாத்து" என்றார். "பாம்பு பாத்ரூமிலா.. நம்ம மனசிலா?" என்றேன்/ சற்று நேரம் திகைத்தாற் போல நின்று விட்டு, "இது நேக்குத் தோணல்லியே..' என்றார்.

'The umbilical cord
has to be severed
twice
First
you cut it
Next
you burn it
to ashes
SWAHA'


message 4: by MJV (new)

MJV | 2 comments அந்த நண்பன் கவிதை வாசித்து வாசித்து அசந்து போன கவிதை. சமீபத்தில் தான் எஸ்.ரா அவர்களின் இந்த இடுகையை படித்தேன்!!!!!

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு!!!!

படிப்பதற்கு தென்றல் போலவும், எண்ணிப் பார்க்கும் பொழுதினில் சூறாவளி போலவும் கடக்கும் கவிதை!!!!


message 5: by Prem (last edited Nov 15, 2020 11:22AM) (new)

Prem | 230 comments Mod
@MJV - உண்மை.. அதே சமயம் எல்லாராலும் (பெரும்பாலும் பெண்களால்) அவ்வளவு எளிதாக உடன்பட முடியாத கவிதையாகவும் இந்த "நண்பன்" கவிதை உள்ளது. கூறப்பட்டுள்ள அனைத்துப் பழக்கங்களும் பிற்காலத்தில் உடலை நோய்மையில் தள்ளும் என்று தெரிந்திருந்தாலும் அவை ஒரு நண்பனுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் சுகம் என்பது ஆண்களுக்கே (நகுலன் எழுதிய கால கட்டத்தில்) கிடைத்திருக்கும் அல்லவா.

கரோனா தொற்று காலத்தில் எழுதப்பட்ட "நகுலன் பார்வையில் நோய்மை" என்ற இக்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.


message 6: by Prem (new)

Prem | 230 comments Mod
"நகுலனின் தனிமை" என்ற "முனைவர் செளந்தர மகாதேவன்" எழுதிய கட்டுரை நகுலன் கவிதைகளில் இறந்த காலத்தையும் தனிமையையும் நகுலன் எதிர் கொண்ட விதத்தையும் அவர் கவிதைகள் வழியே எட்டிப் பார்க்கிறது.

கட்டுரையில் இருந்து சில பகுதிகள், கவிதைகள்:
* கனமான அரிசி மூட்டையை லாவக மாகக் கொக்கியால் குத்தித் தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு.

* இறந்து போன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன.

*
திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.

*
எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

*
செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்


message 7: by MJV (new)

MJV | 2 comments Prem wrote: "@MJV - உண்மை.. அதே சமயம் எல்லாராலும் (பெரும்பாலும் பெண்களால்) அவ்வளவு எளிதாக உடன்பட முடியாத கவிதையாகவும் இந்த "நண்பன்" கவிதை உள்ளது. கூறப்பட்டுள்ள அனைத்துப் பழக்கங்களும் பிற்காலத்தில் உடலை நோய்மையி..."

கண்டிப்பாக அப்படியான முரண் இருப்பது உண்மைதான்...இப்படிப்பட்ட முரண்களில்தான் இந்த கவிதையின் தடங்களின் வீச்சு இருப்பதாகவும் படுகிறது. முரண் இருப்பதுதான் இந்த இடத்தில் திரும்பி பார்க்க வைக்கிறது.


message 8: by Prem (new)

Prem | 230 comments Mod
MJV wrote: "கண்டிப்பாக அப்படியான முரண் இருப்பது உண்மைதான்...இப்படிப்பட்ட முரண்களில்தான் இந்த கவிதையின் தடங்களின் வீச்சு இருப்பதாகவும் படுகிறது. முரண் இருப்பதுதான் இந்த இடத்தில் திரும்பி பார்க்க வைக்கிறது."

நல்ல ஒரு சிந்தனை :)


message 9: by Prem (new)

Prem | 230 comments Mod
ஜ்யோவ்ராம் சுந்தர் அவரது வலைத்தளத்தில் நகுலன் பற்றி எழுதிய பதிவுகளில் இருந்து சில பகுதிகள்.

ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

இது நகுலனின் சிறுகதைகளில் ஒன்று. இதில் மலையாளம் கலந்த தமிழ் கவிதைகளும் உண்டு. கதையா, இல்லை உண்மை நிகழ்வா என்று வகைப்படுத்த முடியா எழுத்து.

பல பல நாளுகள்
ஞானொரு புழுவாய்
பவிழக் கூட்டில் உறங்கி
இருளும் வெட்டமும் அறியாதே அங்ஙனே
நாள்கள் நீங்கி
அரளிச் செடியுடே
இலைதன் அடியில்
அருமக் கிங்கிணி போலே
வீசுங் காற்றத்தில் இளகி விழாதே
அங்கனே நின்னு


இக்கவிதையின் மறுபாதி அருமையானது.

சூசிப் பெண்ணே ரோசாப் பூவே - ஒரு கவிஞரின் பார்வையில் இருந்து அவரது கவிதையை விளக்கி இருக்கிறார் நகுலன்

* நகுலனின் பேட்டியொன்று 1991ல் கல்குதிரை (நகுலன் சிறப்பிதழ்?) வந்திருந்தது. அப்பேட்டியில் அவரது கவிதையொன்றின் வரிகளைக் கொடுத்து விளக்கச் சொல்லியிருப்பார்கள்.

* காகிதம் கிறுக்கிக் கவியானேன்

* சுசீலாவின் சிறப்பு சுசீலாவில் இல்லை என்று.

* சாதாரணப் பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும்



message 10: by Prem (last edited Nov 30, 2020 03:51PM) (new)

Prem | 230 comments Mod
ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களின் நகுலன் பற்றிய பதிவுகளின் தொடர்ச்சி...

நகுலன் - அவரைப் பற்றிய, அவரது கவிதைகளைப் பற்றிய சிறு குறிப்பு

* கவிதை பற்றிப் பேச்சு வந்தால் நகுலன் வராமல் இருக்க மாட்டார்.

வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
நாலாபுறமும் வார்த்தைகள்
சொல்லில் சிக்காது
சொல்லாமல் தீராது
***
கடல் இருக்கும் வரை
அலைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன்


நகுலன் கவிதைகள்

எல்லைகள்

அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
***
இவைகள்

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு
***
வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு
****
மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்



message 11: by Prem (new)

Prem | 230 comments Mod
நகுலன் அவர்களின் "மஞ்சள்நிறப் பூனை" என்ற சிறு புத்தகம் அதிகாரப் பூர்வ மின்புத்தக வெளியீடாக இந்த இணைப்பில் கிடைக்கின்றது. ஆர்வம் உள்ளவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.

காவிரி சிற்றிதழ் என்ற வலைப்பூவில் இருந்து இதைப் பெற்றுக் கொண்டேன்.

புத்தகம் பற்றி அந்த வலைப்பதிவில் இருந்து

சின்னஞ்சிறு அரிய நூல் வரிசை - 1

யாவராலும் அதிகம் வாசிக்கப்படாத, நகுலனின் அந்த மஞ்சள்நிறப் பூனையின் பிரதி இங்கு வெளியிடப்படுகிறது. அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்டில் நகுலனின் நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. அதன் முன்னிட்டு விரைவில் நகுலனின் சில படைப்புகள் வெளியாகும். இந்நூலினை வடிவமைத்தும் வெளியிட அனுமதியும் தந்து உதவிய கவிஞர் ராணிதிலக்கிற்கு காவிரி இதழின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

விக்ரம், ஆசிரியர்



message 12: by Prem (last edited Jan 16, 2021 08:59PM) (new)

Prem | 230 comments Mod
"நகுலன் படைப்புலகம்" என்ற கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன் எழுதிய (2002-ல் ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் எழுத்து வடிவம்) சிறு குறிப்பு நகுலன் பற்றிய ஒரு ஆழமான கருத்தாக்கத்தையும், நவீன கவிதை பாணியை பற்றியும் பேசுகிறது.

கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
* வெயிலும், ஊமைப்பனியும் தலைக்குள் இறங்கத் தொடங்கிய பொழுது அது. அப்போது நண்பனின் கடிதத்தில் நகுலனின் கவிதை வரி ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வெயில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன


என்ற வரி அது. இவ்வரி தான் நகுலனை நோக்கி என்னை ஈர்த்தது.

* 'யாருமற்ற இடத்தில்
என்ன நடக்கிறது
எல்லாம்'


நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம்.


இக்கவிதையும் விளக்கமும் படிக்கும் போது தற்காலத்தில் பேசப்படும் "Fear of Missing Out (FOMO)" என்ற பதம்தான் நினைவில் வந்தது. அந்த நிலையின் வேறு வடிவம்தான் இக்கவிதையில் பேசப்படுகிறதோ?

*ஊர் பற்றி எந்த ஒட்டுதலும் விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு நகுலனின் ஜன்னலில் இருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது.

* கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி ரகசியத் தன்மையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும் மரணமும் பெற்ற தருணம் அது

* நவீன கவிதை புனைவின் சாயல்களை ஒரே கணத்தில் நடந்து வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்



message 13: by Prem (last edited Jan 16, 2021 09:25PM) (new)

Prem | 230 comments Mod
nagulan

சி.மோகன் அவர்களின் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் மிக அருமையானவை. அவர் நகுலன் பற்றி எழுதிய கட்டுரை "நகுலன்: மன நிலத்தின் புதிர் மொழி". நகுலனின் ஆரம்ப நாட்கள், பிற்காலத்தில் எழுத்தாளர் நாடோடி கோணங்கி அவர்கள் எப்படி நகுலனின் பெருமையை இலக்கிய உலகிற்கு வெளிக்கொணர்ந்தார் மற்றும் நகுலனின் பல் புத்தகங்கள், தொகுப்புகள் குறித்து இக்கட்டுரையில் கூறியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்

* காலம், வாழ்க்கை, மனிதர்கள், தருணங்கள், வார்த்தைகள் ஆகியவற்றில் மாறாத திகைப்பும் வியப்பும் கொண்டியங்கிய கலை மனம் இவரது (நகுலனது).
* மனமெனும் புதிர் நிலத்தில் விளையும் மொழியின் கொடையே நகுலனின் கவிதைகள்.
* எளிய வார்த்தைகளின் திகைப்பூட்டும் சேர்மானங்களில் கவித்துவம் கொள்ளும் கவிதைகள் இவருடையவை. எவ்வித ஒப்பனையும் அலங்காரமும் அற்றவை. எனினும், அவை தன்னியல்பாகக் கொள்ளும் தத்துவ உள்ளுறையும் தொனியும் பிரமிக்க வைப்பவை.

‘வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?’


அவருடன் மட்டுமே அவர் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அறையில், மன மொழி புரியும் விந்தைகளில் அவரது வாழ்வும் எழுத்தும் சுடர்கொண்டிருந்தன.

மற்றுமொரு நான்-சுசீலா கவிதை!

நேற்றுப்
பிற்பகல் 4:30
சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன் போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.



message 14: by Prem (last edited Jan 16, 2021 09:35PM) (new)

Prem | 230 comments Mod
நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்கள் சில: விகடனில் வந்த நகுலன் கவிதைகள் கட்டுரையில் இருந்து!






message 15: by Prem (last edited Jan 16, 2021 09:41PM) (new)

Prem | 230 comments Mod
தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி.

நகுலன் கவிதைகள் என்ற விகடன் கட்டுரையில் வந்த சில கவிதைகள்:

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
*********************************
மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!
*********************************
வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
*********************************
நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!
*********************************
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!
*********************************
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!



message 16: by Prem (new)

Prem | 230 comments Mod
நகுலன் அவர்களின் நூற்றாண்டு இம்மாதம் (ஆகஸ்ட் 21) வருகின்றது. சாம்பல் சிற்றிதழில் சூத்திரதாரி எழுதிய "நகுலனின் வீட்டுப் புத்தகங்களைக் கரையான்கள் வாசிக்கின்றன" என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள்..

* வழக்கமான அவரது மூன்றடுக்கு நினைவுகளின் எந்த அடுக்கில் அவர் அங்கே உலவிக் கொண்டிருந்தார் என்பது பார்வையாளர்களால் கண்டு கொள்ள இயலாததாகவே இருந்தது.

* மூன்று அடுக்குகளில் தாவித் தாவிப் பயணித்தபடி இருந்த அவரது இருப்பின் முன்னால் தாளமாட்டாதவைகள் போல் புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன . கரையான்கள் அரித்துவிட்ட பக்கங்களுடன் சாய்ந்து நிற்கும் மர அலமாரிகளிலும் , பெஞ்சுகளிலும் குவிந்துள்ள புத்தகங்களைக் கையால் தொடுவதற்கே பயமாயிருந்தது.

* கரையான் அரித்த புத்தகங்களுக்கு நடுவில் மங்கிய விளக்கொளியில் நின்றிருந்த அந்த உருவமும் , அவரது சிரிப்பும் காலத்தின் அவசரத்தை கேலி செய்வது போலிருந்தது.

விடைபெற்றுக் கொண்டு படியிறங்குகையில் , தோட்டத்தின் இருளினூடே இலைகளின் சலசலப்பு , லேசான குளிர் , எதையும் அறியாத உறைதன்மையுடன் வீற்றிருந்த வீட்டினுள் நகுலனின் தளர்ந்த உருவம் எங்களையே பார்த்துக்கொண்டு நிற்கிறது – அவரது எழுத்துக்களைப் போல !


message 17: by Prem (last edited Aug 13, 2021 10:41AM) (new)

Prem | 230 comments Mod
நகுலனின் பிரசுரமாகாத இரு கவிதைகள் என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் இருந்து இக்கவிதைகள். இவை நகுலன் எழுதி பிரசுரம் ஆகாத கவிதைகள். வைகறை ராமகிரிஷ்ணன் /பொள்ளாச்சி அவர்கள் 1995-ல் ரா பாலகிருஷ்ணன் என்பவருக்கு கொடுத்ததாக இக்கட்டுரையில் உள்ளது.

தாங்கள்
சொர்க்கத்தில் இருந்து கொண்டு
பிறர் வாழ்வை
நாசமாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்
இப்படியும் சிலர்
**********************************

-- இக்கவிதை சமூக அவலத்தை கேள்வி கேட்கும் தொனியில் அமைந்துள்ளது.

வந்த
சுசீலா
கேட்டாள்
இன்று
யாரெல்லாம்
உன்னைப் பார்க்க
வந்தார்கள்
க நா சு
வள்ளுவரும் தாமசும்
வண்ணங்கள்
ராபர்ட் ம்யுனில்
யுவன் டோர்லஸ்
ஜெயடேவி
பூனை என்ற
அந்த சிறுகதை
பிறகு
நன் சற்று
தயங்கினேன்
என் தயங்குகிறாய்?
இன்னும் யார் சொல்?
நான் சற்று நேரம் சென்றவுடன்
நீ என்றேன்
சொன்னாள்
இப்படி எல்லாம்
எப்படி யோசிக்க
உன்னால் முடிகிறது ?
சொன்னேன்
யோசிப்பதை
நிறுத்திவிட்டு
நாட்கள் பல
சென்று விட்டன
அவள் என்னைக்
கண் வாங்காமல்
சற்று நேரம் உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தாள்
**********************************

--தனிமையில் இருந்த நகுலனுக்கு எழுத்து, புத்தகங்கள், எழுத்தாளர்கள், சிறுகதைகள், சுசிலாதான் துணையாக இருந்தன(ர்) என்பதை பற்றி பேசும் தொனியில் உள்ளது.


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread


Authors mentioned in this topic

S. Ramakrishnan (other topics)
நகுலன் (other topics)