பொன்னான வாக்கு – 45

வக்கணையாக எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதத் தெரிந்த எனக்குப் படிவங்களை நிரப்புவது என்பது ஒரு பெரிய பிரச்னை. குட்டிக் கட்டங்கள் போட்ட வங்கிப் படிவங்கள் என்றால் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடுவேன். அகலமாகக் கோடு போட்ட, சற்றே தாராளப் படிவங்களென்றாலும் ஏழெட்டு அடித்தல் இல்லாமல் எழுத முடியாது. பெரும்பாலும் படிவங்களில் நான் தவறு செய்யும் இடம், முகவரியாக இருக்கும். வீட்டின் கதவு எண் காலகாலமாக இருப்பதுதான் என்றாலும் நிரப்பும் நேரத்தில் தப்பாகவே வந்து விழும். கதவு எண்ணுக்குப் பிறகு தொலைபேசி எண். அடுத்தது நிரந்தரக் கணக்கு எண். இதுவரை பெயரில் மட்டும்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்ததில்லை. இது கருவின் குற்றமல்ல. கடவுளின் குற்றமேதான்.



நிற்க. நேற்றைக்கு இந்த மாதிரி ஒரு படிவத்தை நிரப்பவேண்டி நேர்ந்தது. அதில் சொந்த ஊர் என்னும் கட்டத்தில் சென்னை என்று எழுதிவிட்டு, சொந்த மாநிலம் என்ற கட்டத்துக்கு வந்தபோது குழப்பமாகிவிட்டது. சென்னை ஆந்திரத்தில் இருக்கிறதா? சட்டீஸ்கரில் இருக்கிறதா? ஒருவேளை உத்தர்கண்டாக இருக்குமோ? கண்டிப்பாகத் தமிழகமாக இருக்க முடியாது. ஏனென்றால் தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது. நான் படிவம் நிரப்பிக்கொண்டிருந்ததோ மெழுகுவர்த்தி வெளிச்சத்தில். ராத்திரி பத்து மணிக்குப் போன கரண்ட், பதினொன்றரை ஆகியும் வராத அவஸ்தையில் யாரையாவது பழிவாங்க உத்தேசித்துத்தான் அந்தப் படிவத்தைக் கையில் எடுத்தேன். ஏனெனில் சுய பழிவாங்கல்தான் பாதுகாப்பானது.


‘ஏன் சார் இருட்டுல உக்காந்து எழுதிட்டிருக்கிங்க? எந்திரிச்சி வெளிய வாங்களேன்?’ என்றார் பக்கத்து ஃப்ளாட்காரர். எங்கோ ஊருக்குப் போகிறவர் மாதிரி பேண்ட் சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு தயாராயிருந்தார்.


‘இந்த நேரத்துல எங்க சார் கெளம்பிட்டிங்க? ரோட் லைட் கூட எரியலியே’ என்றேன்.


‘சும்மா வெளிய நிக்கத்தான். வாங்களேன்?’ என்றார் மீண்டும்.


சும்மா வெளியே நிற்பதற்கு இஸ்திரி போட்ட சட்டை எதற்கு? புரியவில்லை. இருப்பினும் அவரது இம்சை தாங்காமல் படிவத்தை வைத்துவிட்டு வெளியே வந்தேன்.


‘இது ஒரு சிக்னல் சார். பவர கட் பண்ணிட்டு பணம் குடுக்கறாங்க’ என்றார் நண்பர். திடுக்கிட்டுப் போனேன். ஏனென்றால் எனது க்ஷேத்திரத்தில் வருஷத்தில் பாதி நாள் பவரானது பல் பிடுங்கிய பாம்பாகத்தான் இருக்கும். எப்போது போகும், எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. பிடுங்கப்படாத காலங்களில் டிரான்ஸ்பார்மர் வெடிக்கும். என்னவாவது ஓர் அசம்பாவிதம் எப்போதும் நடக்கும். பவரைப் பிடுங்கும் பொழுதெல்லாம் பணம் கொடுப்பதென்றால் இந்நேரம் நான் பல கோடீஸ்வரனாகியிருப்பேன்.


‘என்ன ரைட்டரோ போங்க. உங்களுக்கு விவரமே பத்தலியே சார். நேத்து நைட் இந்நேரம் பவர் கட் ஆயிருந்திச்சில்ல? அப்ப பாளையக்காரன் தெரு வரைக்கும் டிஸ்டிரிப்யூஷன் நடந்திருக்கு. காலைல பால்காரம்மா சொன்னாங்க. இன்னிக்கு இந்த சைடுதான் வருவாங்க. வெயிட் பண்ணுங்க’ என்றார் நண்பர். என்னமோ கள்ளக்கடத்தல் கோஷ்டிக்கு டார்ச் அடித்து சிக்னல் கொடுத்துக் காத்திருக்கும் பரபரப்புடன் நண்பர் அந்த முகம் தெரியாத யாருக்காகவோ காத்திருக்கத் தொடங்கினார்.


பதினொன்றே முக்காலுக்கு கரண்ட் வந்துவிட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த யாரும் வரவில்லை. மிகவும் சோர்வாகிவிட்டார். இப்போது அவருக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டுமா அல்லது மறுநாள் பவர்கட்டாக வாழ்த்து சொல்ல வேண்டுமா என்று யோசித்தேன். படுத்து தூங்குங்க சார் என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.


வருத்தமாக இருந்தது. மிஞ்சிப் போனால் என்ன தருவார்கள்? ஒரு ஆயிரம்? ஐந்தாயிரம்? அட பத்தாயிரம்? ஐந்து வருட ஆட்சி அதிகாரத்தைத் தூக்கிக் கொடுப்பதற்கு இதுதான் விலையா? படித்தவர்கள், பாமரர்கள் என்னும் பேதமின்றி இந்த விஷயத்தில் மக்கள் நாக்கைச் சப்புக்கொட்டுகிற வழக்கம் ஒழிந்தாலொழிய அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை. இந்த ரவுண்டில் இதுவரை தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்திருக்கும் தொகை நமது மக்கள் தொகையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. இங்கே அங்கே என்றில்லாமல் பரம்பொருள் மாதிரி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது லஞ்சம். இந்த ஆயிரம் இரண்டாயிரத்தை வெட்கமின்றி வாங்குவதன் விளைவுதான் ஒண்ணாங்கிளாஸ் அட்மிஷனில் இருந்து, தொட்ட இடத்திலெல்லாம் கொட்டி அழ வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கலாம். இப்படி லஞ்சமாகக் கொடுக்கிற தொகையையெல்லாம் நாளைக்கு ஜெயித்து அதிகாரத்துக்கு வந்ததும் மீட்டர் வட்டி போட்டு நம்மிடமிருந்தேதான் திரும்ப எடுப்பார்கள் என்பதையும் சேர்த்து நினைக்கலாம்.


வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தில் மக்களுக்குக் கிடைக்கிற ஆகப்பெரிய கௌரவம், அதிகாரம். நம்மை ஆள்பவரை நாமே தேர்ந்தெடுக்கிற சுதந்தரம் எத்தனை மகத்தானது! பிடிக்காவிட்டால் ஆறாவது வருஷம் தூக்கிக் கடாசிவிட்டு வேறு ஆளை உட்கார வைக்கலாம். அட, அரசாங்கத்துக்கு இப்படி ஒரு அதிகாரம் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். பிடிக்காத அதிகாரியை அமைச்சர் பெருமான் டிரான்ஸ்பர் வேண்டுமானால் செய்யலாம். வேலையை விட்டுத் தூக்க முடியுமா? ஆனால் வாக்காளர் நினைத்தால் அமைச்சரைத் தூக்கலாம். ஆட்சியையே தூக்கலாம்.


இந்த கௌரவத்தை மலினப்படுத்திக்கொள்ளாதிருப்பதே தேசத்துக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய தொண்டு.


இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு. மிகப் பெரிய வாய்ப்பு. ஒரு நாள் லீவு போட்டுவிட்டு உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். நம் விருப்பத்துக்குரிய, நமக்காக உழைக்கக்கூடிய, நமது நலனை சிந்திக்கக்கூடிய, கொள்ளையடிப்பதில் விருப்பமற்ற ஒருவரை இந்த முறை தேர்ந்தெடுப்போம். கட்சிகளைப் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் தொகுதிக்கு ஓர் உத்தமரைத் தேர்ந்தெடுங்கள். அத்தனைத் தொகுதி வாக்காளர்களும் இப்படிச் சிந்தித்து, மிகச் சரியான நபரைத் தேர்ந்தெடுத்தால், அமையும் ஆட்சி அற்புதமாக அல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்?


(இந்தப் பத்தி இன்றோடு முற்றும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2016 19:53
No comments have been added yet.