ருசியியல் – 05

காலப் பெருவெளியில் கணக்கற்ற ரக சாத்தியங்களை உள்ளடக்கிய சமையற்கலையில் எனக்கு முத்தான மூன்று பணிகள் மட்டும் செவ்வனே செய்ய வரும். அவையாவன:


வெந்நீர் வைத்தல். பால் காய்ச்சுதல். மோர் தயாரித்தல்.


கொஞ்சம் மெனக்கெட்டு அரிசி களைந்து குக்கரில் வைத்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் ஒரு தம்ளர் அரிசிக்கு மூன்று தம்ளர் தண்ணீரா, இரண்டரைதானா என்பது குழப்பும். உதிர்சாத வகையறாக்களுக்கென்றால் தண்ணீரைச் சற்றுக் குறைத்து வைக்கவேண்டுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எவ்வளவு குறைத்து?


தவிரவும் அந்தக் குக்கரின் தலைக்கு கனபரிமாணம் சேர்க்கும் விஷயத்தில் எப்போதும் குழப்பமுண்டு. பரிசுத்த ஆவி எழுப்பப்பட்ட பிறகு வெய்ட் போடவேண்டுமா, அதற்கு முன்னாலேவா? இதுவே இட்லியென்றால் தலைக்கனம் கிடையாது. அதற்கென்ன காரணம்? அதுவும் தெரியாது.


வீட்டில் இத்தகு சந்தேகாஸ்பதங்களைக் கேட்டுத் தெளிய எப்போதும் உள்ளுணர்வு தடுத்துக்கொண்டே இருக்கும். துறையைத் தூக்கி நமது தலையில் கிடத்திவிட பெண்குலமானது உலகெங்கும் தயாராயிருக்கும். வம்பா நமக்கு? எனவே, உண்ண மட்டும் அறிந்தவனாகவே உடல் வளர்த்தாகிவிட்டது.


யோசித்துப் பார்த்தால், சமையல் என்பதே ஆண்களின் கலையாகத்தான் காலம்தோறும் இருந்துவந்திருக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற சமையற்கலைஞர்கள் அனைவரும் ஆண்கள். மகாபாரதத்தில் பீமன் சமைப்பான். நள சரித்திரத்தில் நளனே சமைப்பான். புராணத்தை விடுங்கள். நாளது தேதியில் ஒரு வெங்கடேஷ் பட், ஒரு தாமு, ஒரு நடராஜன் அளவுக்கு எந்த மகாராணி இங்கு ஆள்கிறார்? நமது பிராந்தியம்தான் என்றில்லை. உலக அளவிலேயே சமையல் என்பது ஆண்களின் கோட்டையாகத்தான் இருக்கிறது. மெக்சிகோவைச் சேர்ந்த ஒராபெஸா, பெருவின் காஸ்டன் அக்யூரியோ, எகிப்தில் வசிக்கிற ஒசாமா எல் சயீத், இங்கிலாந்தின் கார்டன் ரம்ஸே போன்ற மடைக்கலை மன்னர்களெல்லாம் மில்லியனில் சம்பளம் வாங்கும் வல்லிய விற்பன்னர்கள். அட அத்தனை தூரம் ஏன்? நமது திருமணங்கள் எதற்காவது பெண்கள் சமைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அங்கே அவர்கள் காய்கறி நறுக்குவார்கள். சுற்றுவேலைகள் செய்வார்கள். அடுப்படி ராஜ்ஜியம் ஆண்களுக்கு மட்டும்தான்.


விசேஷ சமையலுக்கு ஆணென்றும் வீட்டுச் சமையலுக்குப் பெண்ணென்றும் விதிக்கப்பட்டதன் பின்னால் சில உளவியல் காரணங்கள் இருக்கின்றன. எடுத்துப் போட்டு விளக்கினால் நாளை முதல் எனது தர்ம பத்தினியானவள் என்னை அதர்ம பட்டினி போட்டுவிடும் அபாயம் உள்ளது. எனவே இங்கிதனை நிறுத்திக்கொள்கிறேன். நமது கதைக்கு வரலாம்.


ஏப்ரன் வாங்கினேன் என்று போன வாரம் சொன்னேன் அல்லவா? அதை ஒருநாள் வீட்டில் மனைவி இல்லாதபோது ரகசியமாக அணிந்து பார்த்தேன். எனக்கென்னமோ அது பனியனைத் திருப்பிப் போட்டுக்கொண்ட மாதிரியே இருந்தது. நிலைக்கண்ணாடியில் பார்த்தபோது பதினான்காம் லூயிக்குப் பைத்தியம் பிடித்துப் பாதி ஆடையைக் கிழித்துவிட்டுக் கொண்டாற்போலவும் தோன்றியது. தவிரவும் கழுத்து, தோள்பட்டைப் பிராந்தியங்களை அது மூடவில்லை. நமக்கு மூக்கு அரித்தாலும் சரி, நெற்றியில் வியர்வை சிந்தினாலும் சரி, உடனே வலக்கரம்தான் மேல் நோக்கி எழும். தோள்பட்டையில் ஒரு தேய். முடிந்தது கதை. அதற்குதவாத ஏப்ரனால் வேறென்ன லாபமிருந்து என்ன பயன்?


சரி, வாங்கியாகிவிட்டது. இனி சிந்திப்பது இம்சை.


ஆனால் சுயமாக சமைக்கிற முடிவில் பின்வாங்கத் தயாரில்லை என்பதால் ஆயத்தங்களில் இறங்கினேன். வாணலி தயார். வெண்ணெய் தயார். பனீர் தயார். தயிர் தயார். அதி ருசியாக ஒரு பனீர் டிக்கா செய்துவிடுவது எனது திட்டம்.


வேறு வழியில்லை. எனது புதிய உணவு முறைக்கு வடவர் சரக்குகள்தாம் ஒத்து வரக்கூடியவை. தனித்தமிழ்த் தயாரிப்புகளில் கார்போஹைட்ரேட் ஆதிக்கம் அதிகம். எனவே மனத்தளவில் தமிழனாகவும் வயிற்றளவில் வடவனாகவும் இருந்தாக வேண்டியது என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதிய புதிய விதி. பனீர் டிக்கா. பாலக் பனீர். பனீர் மஞ்சூரியன். பனீர் பட்டர் மசாலா. முழுக்கொழுப்பெடுத்தவனின் முக்கிய ஆகாரம் இப்படியானவை.


ஆச்சா? பனீர் டிக்கா. அதைச் செய்வது எப்படி? முன்னதாக ஏழெட்டு சமையல் குறிப்புகளைப் படித்து ஒப்பீட்டாய்வு செய்துவைத்திருந்தேன்.


அதன்படி ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துக்கொண்டேன். மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி, சீரகப்பொடி. கொட்டு அதன் தலையில். உப்புப் போடும்போது ஒரு கணம் தயங்கினேன். உப்பின் அளவு தயிரின் அளவுக்கானதா? பனீரின் அளவுக்கானதா? இரண்டுக்கும் சேர்த்தா? எம்பெருமானை வேண்டிக்கொண்டு ஒரு குத்து மதிப்பாக அள்ளிப் போட்டுக் கிளறி வைத்தேன்.


பிறகு பனீரைச் சதுரங்களாக்குதல்.


கத்தியைக் கையில் எடுத்தபோது எங்கிருந்தோ உக்கிரமானதொரு பின்னணி இசை கேட்டது. மானசீகப் பண்பலையின் மான சேத முன்னறிவிப்பா அது? பழகிய சவரக்கத்தியில் கூட நமக்குச் சரியாகச் சிரைக்க வராது. இதுவோ மின்னும் புதுக்கத்தி. வெண்ணை வெட்டியின் கன்னி முயற்சி படுதோல்வி கண்டால் பெரிய அவமானமாகிவிடுமல்லவா?


இஷ்ட தெய்வங்களையெல்லாம் கஷ்ட சகாயத்துக்குக் கூப்பிட்டுக்கொண்டபடிக்கு பனீரை நறுக்கத் தொடங்கினேன். பாதகமில்லை. சதுரமானது சமயத்தில் அறுகோண, எழுகோண வடிவம் கொண்டதே தவிர துண்டுகள் தேறிவிட்டன.


அதைத் தூக்கி தயிர்க் கலவையில் போட்டேன். ஊறட்டும் சரக்கு. ஏறட்டும் மிடுக்கு.


அடுப்பில் தோசைக்கல்லை ஏற்றினேன். சட்டென்று ஒரு குழப்பம் வந்தது. வீட்டில் இரும்பு தோசைக்கல் ஒன்று இருக்கிறது. இண்டாலியத்தில் ஒன்று. நான் ஸ்டிக் ஒன்று. தோசைக்கொன்று, சப்பாத்திக்கொன்று, பழைய மாவென்றால் ஒன்று, புதிதாக அரைத்ததென்றால் மற்றொன்று என்று பெண் தெய்வம் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். என் பனீருக்கு கதிமோட்சம் தரவல்லது இதில் எது?


தெரியவில்லை. இனி யோசித்துப் பயனுமில்லை. கல்லில் கொஞ்சம் வெண்ணெய் விட்டு இளக்கி, தயிரில் தோய்த்த பன்னீர்த் துண்டுகள் நாலை எடுத்து அதில் வைத்தேன். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தபோதுதான் சதிதர்மிணியின் அசரீரிக் குரல் ஒலித்தது. பனீர் டிக்காவுக்கு தோசைக்கல் சரிப்படாது. அதை அவனில் வைத்து க்ரில் செய்வதே சிறப்பு.


இந்த மைக்ரோவேவ் சனியனில் எனக்கு வெந்நீர் வைக்க மட்டும்தான் தெரியும். க்ரில் என்றால் பால்கனியில் வைப்பது என்றும் தெரியும். பனீர் டிக்காவை க்ரில் செய்வது என்றால் என்ன?


ஒரு மாதிரி ஆகிவிட்டது. பாதி முயற்சியில் புறமுதுகிடவும் விருப்பமில்லை. சரி போ, இன்றெனக்கு என்ன வருகிறதோ அதுதான் பனீர் டிக்கா.


ஒரு தீவிரவாதியின் உக்கிரத்துடன் அத்தனைத் துண்டுகளையும் அடுத்தடுத்து தோசைக்கல்லில் சுட்டுத் தீர்த்தேன். தயிரில் ஊறிய பனீர், அந்த தோசைக்கல்லை சர்வநாசமாக்கியிருந்தது. சுரண்டி எடுக்கப் பலமணிநேரம் பிடிக்கக்கூடும். அதனாலென்ன? நான் முக்கால்வாசி ஜெயித்திருந்தேன்.


பிறகு வெங்காயம் குடைமிளகாய் வதக்கல்கள். தக்காளி வரிசைகளில் அவற்றை இடைசொருகி, பனீர்த் துண்டுகளின்மீது அலங்கரித்து, பல்குத்தும் குச்சியால் உச்சந்தலையில் ஓங்கி ஒரு குத்து. முடிந்தது மாபெரும் கலை முயற்சி.


அன்றெனக்குப் புரிந்தது. அடிப்படைகூடத் தெரியாதவன் என்றாலும் ஓர் ஆண் சமைக்கப் புகுந்தால் தனி ருசியொன்று தன்னால் சேரும்.


அந்த பனீர் டிக்கா உண்மையிலேயே நன்றாக இருந்ததாக என் மனைவி சொன்னார். ஒரே கிளுகிளுப்பாகிவிட்டது. அன்றெல்லாம் வெங்கடேஷ் பட்டைப் புறமுதுகிடச் செய்ய வேறென்னென்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தேன்.


என்ன ஒன்று, இத்தனை களேபரத்தில், எடுத்து வைத்த ஏப்ரனைத்தான் மாட்டிக்கொள்ள மறந்துவிட்டிருந்தேன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2016 20:47
No comments have been added yet.