பொலிக! பொலிக! 03
ராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேரவேண்டும் என்பது விருப்பம். கடவுளோடு பேசுகிற நம்பி. கைங்கர்யமே வாழ்க்கையாக இருக்கிற நம்பி. அவர் சாப்பிட வந்தபோதுதான் தஞ்சம்மா அபசாரம் செய்துவிட்டாள். ஆனாலும் அவர் பெரியவர். சிறுமைகளால் சலனப்படுகிற மனிதரல்லர். தவிரவும் அவருக்கு ராமானுஜரைப் பற்றித் தெரியும். அவரது பண்பு தெரியும். பக்தி தெரியும். பணிவு தெரியும். தவறாக எடுக்க மாட்டார்.
ராமானுஜர் அவர் தாள்பணிந்து விருப்பத்தைச் சொன்னார். ‘சுவாமி, என்னைத் தாங்கள் சீடனாக ஏற்கவேண்டும். எனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க வேண்டும்.’
அவர் யோசித்தார். ‘நாளை வாருங்கள். பேரருளாளனிடம் கேட்டுச் சொல்கிறேன்’
ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தது. ‘உம்மை திருவரங்கம் பெரிய நம்பியிடம் போகச் சொல்லி அருளாளன் உத்தரவு கொடுத்திருக்கிறான்’ என்றார் திருக்கச்சி நம்பி.
‘பெரிய நம்பியா! வைணவ குலத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர் ஆளவந்தாரின் சீடரா?’
‘ஆம். அவரேதான்.’
மறுவினாடியே புறப்பட்டுவிட்டார் ராமானுஜர். வீட்டுக்குப் போகவில்லை. மனைவியிடம் சொல்லவில்லை. மாற்றுத் துணிகூட எடுத்துக்கொள்ளவில்லை. தனது குரு யாரென்று தெரிந்துவிட்ட பிறகு மற்ற அனைத்தும் அர்த்தமற்றது.
காஞ்சியில் கிளம்பி அன்று மாலைக்குள் அவர் மதுராந்தகம் வரை நடந்துவிட்டார்.
அது தேடிப் போன தெய்வம் குறுக்கே வந்த தருணம். எதிரே வருவது யார்? பெரிய நம்பியா? அவரேதானா? கடவுளே!
‘இதை என்னால் நம்பமுடியவில்லை சுவாமி. என்னைத் தேடியா நீங்கள் இங்கு வந்துகொண்டிருந்தீர்கள்?’
‘ஆம். எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. அரங்கன் சித்தம். ஆசார்ய சித்தம்.’
ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி நின்றார். அவருக்கு அனைத்தும் புரிந்தது. வைணவ உலகின் நிகரற்ற பெரும் ஆசார்யராக விளங்கிய ஆளவந்தார் காலமாகிவிட்டார். அடுத்து ஆள வருவார் யார் என்று வைணவ உலகமே எதிர்பார்த்து நின்ற வேளை. இதோ, அரங்க நகருக்கு வா என்று பெரிய நம்பி வந்து நிற்கிறார்!
‘என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு எனக்கு நீங்கள் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்துவைக்க வேண்டும். இது பேரருளாளன் சித்தம் என்று திருக்கச்சி நம்பி சொன்னார்.’
‘அதற்கென்ன? இப்போதே காஞ்சிக்குப் போவோம். அருளாளன் சன்னிதியில் நடக்கட்டும்.’
‘இல்லை சுவாமி. அந்தத் தாமதத்தைக் கூட என்னால் பொறுக்க இயலாது. இன்றே, இங்கே, இப்போதே.’
பெரிய நம்பி புன்னகை செய்தார். மதுராந்தகம் ஏரி காத்த ராமர் சன்னிதியில் அது நடந்தது.
ராமானுஜரின் மனம் பக்திப் பரவசத்தில் விம்மிக்கொண்டிருந்தது. இந்தத் தருணத்துக்காக எத்தனைக் காலம் அவர் ஏங்கிக்கொண்டிருந்தேன்! எத்தனைப் பாடுகள், எவ்வளவு இடர்கள்! எண்ணிப் பார்த்தாலே கண்கள் நிறைந்துவிடும்.
‘சுவாமி, என் இல்லத்தில் தங்கி நீங்கள் எனக்குச் சிலகாலம் பாடம் சொல்லித்தர வேண்டும்.’
‘அதற்கென்ன? செய்துவிடலாமே?’ என்றார் ஆசாரியர். தமது பத்தினியுடன் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டில் திருவாய்மொழிப் பாடம் ஆரம்பமானது. வரி வரியாகச் சொல்லி, பொருள் விளக்கி ஆசார்யர் போதித்துக்கொண்டிருந்த நாள்கள். இனிதாகவே இறுதிவரை சென்றிருக்க வேண்டும். விதி யாரை விட்டது?
அன்றைக்குத் தஞ்சம்மாவும் குரு பத்தினி விஜயாவும் ஒன்றாகக் கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். குரு பத்தினியின் குடத்தில் இருந்து சில சொட்டு நீர்த் துளிகள் தஞ்சம்மாவின் குடத்துக்குள் விழுந்து வைத்ததில் ஆரம்பித்தது பிரச்னை.
‘என்ன நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஆசாரம் தெரியாதா உங்களுக்கு? என் குடத்தில் உங்கள் குடத்து நீர்த்துளிகள் விழுந்துவிட்டன பாருங்கள்! ஜாதி வித்தியாசம் பாராமல் யார் யாரையோ வீட்டுக்கு அழைத்து வந்து உட்கார வைத்தால் இப்படித்தான் அபத்தமாகும்’ வெடித்துக் குமுறிவிட்டாள் தஞ்சம்மா.
அழுக்கு முதல் பாவம் வரை அனைத்தையும் கரைக்கிற நீர். அது நிறமற்றது. மணமற்றது. அனாதியானது. அள்ளி எடுக்கும்போது மட்டும் எனது, உனது. என்ன விசித்திரம்!
‘நாம் இதற்குமேலும் இங்கே இருக்கத்தான் வேண்டுமா?’ விஜயா தமது கணவரிடம் கேட்டபோது பெரிய நம்பி யோசித்தார். சம்பவம் நடந்தபோது ராமானுஜர் வீட்டில் இல்லை. நடந்திருப்பது குரு அபசாரம். சர்வ நிச்சயமாக ராமானுஜரால் இதனைத் தாங்கிக்கொள்ள முடியாது.
‘நாம் கிளம்பிச் சென்றுவிட்டால் தஞ்சம்மா இந்தச் சம்பவத்தை அவரிடம் சொல்லாமலே இருந்துவிடுவாள். அவர்களுக்குள் பிரச்னை வராது’ என்றார் அவரது மனைவி.
‘ஆம். நீ சொல்வது சரி.’
கிளம்பிவிட்டார்கள்.
வீட்டுக்கு ராமானுஜர் வந்தபோது குருவும் இல்லை, குரு பத்தினியும் இல்லை.
‘தஞ்சம்மா, நம்பிகள் எங்கே சென்றுவிட்டார்?’
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சொற்கள் கைவிட்ட தருணம். ஒரு மாதிரி தன்னை திடப்படுத்திக்கொண்டு, ‘நாம் என்ன ஜாதி, அவர்கள் என்ன ஜாதி? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? கிணற்றிலிருந்து நீர் இறைக்கக்கூடத் தெரியவில்லை உங்கள் குரு பத்தினிக்கு.’
நடந்த சம்பவம் அவளது விவரிப்பில் மீண்டும் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனார் ராமானுஜர்.
‘உன்னைத் திருத்திவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால் ஜாதி வெறி உன் ரத்தத்தில் ஊறிவிட்டது தஞ்சம்மா. தேடி வந்த ஞானக்கடலைத் திருப்பி அனுப்பியிருக்கிறாய். இந்தப் பாவத்தில் என் பங்கைக் களைய நான் எத்தனை பிறப்பு எடுத்துப் பிராயச்சித்தம் செய்தாலும் போதாது.’
அந்த விரக்திதான் அவரைத் துறவு நோக்கித் திருப்பியது. அந்தக் கோபம்தான் அவரை வீட்டைவிட்டு வெளியே போகவைத்தது. அந்த இயலாமை தந்த அவமான உணர்வுதான் அவரை வீறுகொண்ட இரும்பு மனிதராக்கியது.
விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். பேரருளாளப் பெருமாள் சன்னிதியில் திருக்கச்சி நம்பி கைங்கர்யத்தில் இருந்தார். இழுத்து நிறுத்தி, தடாலென்று காலில் விழுந்தார்.
‘சுவாமி, எனக்கு சன்னியாச ஆசிரமத்தை வழங்கி அருளுங்கள்.’
அது நடந்தேவிட்டது.
அத்தி வரதர் உறங்கும் அனந்த புஷ்கரணியில் அவர் குளித்தெழுந்தார். தூய காவியுடை தரித்து முக்கோல் பிடித்தார். துறந்தேன், துறந்தேன், துறந்தேன் என்று மூன்று முறை சொல்லி முற்றிலும் வேறொருவராக மாறிப் போனார்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)