பொலிக! பொலிக! 14
யாதவப் பிரகாசரின் தாயார், வீடு சென்றடைய வெகு நேரம் ஆகிவிட்டது. பாடசாலைத் திண்ணையை ஒட்டிய சுவர் மீதிருந்த மாடத்தில் சிறு அகல் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. யாரோ படுத்திருப்பது தெரிந்தது.
‘யாரப்பா அங்கே?’
குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தது தனது மகனேதான் எனத் தெரிந்ததும் அவளுக்குச் சற்று பயமாகிவிட்டது. யாதவன் திண்ணைக்கு வந்து படுக்கிற வழக்கமில்லையே? அதுவும் விளக்கு வைத்து ஒரு நாழிகைகூட ஆகியிருக்காத சமயம். பெரும்பாலும் அந்நேரத்தில் யாதவர் முற்றத்து நிலவு வெளிச்சத்தில் அமர்ந்திருப்பார். சகாயத்துக்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு ஏதாவது சுவடி புரட்டிக்கொண்டிருப்பார். படிக்கத் தோன்றாத தினங்களில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவதும் உண்டு.
‘மகனே, என்ன ஆயிற்று உனக்கு? எதற்காக வாசலுக்கு வந்து படுத்திருக்கிறாய்?’
‘உள்ளே வரக் காலனும் தயங்குகிறானோ என்று தோன்றியது தாயே. அவனுக்கு வசதியாகத்தான் நானே வெளியே வந்து படுத்தேன்.’
அவள் பெற்றவள். சன்னியாசி என்றாலும் மகன் அல்லவா? விரக்தியின் விதவிதமான வெளிப்பாடுகளை அந்நாள்களில் அவள் யாதவப் பிரகாசரிடம் தினமும் கண்டுகொண்டிருந்தாள். என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. யோசிக்கத் தெரியாதவன் என்றால் எப்படியும் வளைத்துவிட முடியும். பண்டிதன் என்றாலும் பாசத்தால் வென்றுவிடலாம். ஆனால் துறந்தவனுக்கான சாவித்துவாரம் எது?
சட்டென்று அவள் மனக்கண்ணில் ராமானுஜர் ஒரு கணம் வந்து போனார்.
‘அம்மா நீங்கள் சாப்பிட்டீர்களா?’
‘இல்லையப்பா. நீயும் பசியோடுதான் இருப்பாய். பிரசாதங்கள் இருக்கின்றன. அதைச் சாப்பிடலாமல்லவா?’
தயங்கித்தான் கேட்டாள். துணி சுற்றி எடுத்து வந்த பிரசாதத் தொன்னைகளை முன்னால் எடுத்து வைத்தாள்.
யாதவர் அவற்றைத் தொடவில்லை. எனக்குப் பசியில்லை என்று சொன்னார். ‘காஞ்சிக்குப் போயிருந்தீர்களோ?’
அரைக் கணம் யோசித்த அந்தப் பெண்மணி, இன்று இதற்கு ஒரு முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு, ‘ஆம் மகனே. காஞ்சிக்குத்தான் போயிருந்தேன். ராமானுஜரை தரிசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொன்னாள்.
‘ராமானுஜரையா?!’
அந்தத் தாய் அப்போது தன் மகனுக்கு ஞானாசிரியனாகிப் போனாள். அத்வைத சித்தாந்தத்தில் ஊறி முறுக்கேறிய கட்டை அது. அகம் பிரம்மம் என்பதை அகம் அழித்துச் சரணாகதி அடைந்தால் மட்டுமே பிரம்மம் என்று புரியவைக்கத் தொடங்கினாள்.
‘மகனே, சாத்திரங்களில் மேலானது, தாழ்வானது என்று ஏதுமில்லை. ஆனால் நீ நிம்மதியாக இருக்கிறாயா என்று யோசித்துப் பார். உன் மனத்தில் அமைதி என்று ஒன்று தென்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று எண்ணிப் பார். துறந்தவனுக்குத் துயரமில்லை என்பது உண்மையானால் உன்னை வாட்டும் கொடுந்துயரங்களின் ஊற்றுக்கண் எது என்று சிந்தித்துப்பார்.’
அம்மா என்று உள்ளுக்குள் உடைந்தார் யாதவப் பிரகாசர்.
‘மூவுலகையும் ஆளும் நாராயணனின் திருவடிக் கமலங்களின் பிரகாசத்தை நான் ராமானுஜரின் முகத்தில் கண்டேன் மகனே. தெளிவு என்றால் அது. தீர்மானம் என்றால் அது. எத்தனை அமைதி, எவ்வளவு விவேகம்! நூறு நூறு பேராக, ஆயிரம் ஆயிரம் பேராக மக்கள் அவரை அண்டிச் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். சாஸ்திரங்களில் நீ ஆண்டுக்கணக்கில் பூச்சி பிடித்து மூளை மரத்துப் போய்விட்டாய். பக்தி எளிமையானது. சாலையில் செல்லும் சிறு குழந்தை தன் தாயின் விரல் பிடித்து நடப்பது போல, அவன் தாளைப் பற்றிக்கொள்ள வழி காட்டுகிறார் ராமானுஜர். சரணாகதிக்குக் கால தேச நியமனங்கள் கிடையாது. நீ தகுதியுள்ளவன், நீ தகுதியற்றவன் என்ற பேதம் கிடையாது. இதற்குத்தான் இறைவனை நாடலாம், இன்னின்ன காரணங்களுக்குக் கூடாது என்ற சட்டதிட்டம் கிடையாது…’
‘ராமானுஜர் அப்படிச் சொன்னாரா?’
‘ஆம் மகனே. உயிர் போகும் நேரத்தில் தன்னைக் கூவியழைத்த கஜேந்திர யானைக்கு அவர் எதைக் கொடுத்தாரோ, அதையேதான் மானம் போகும் நேரத்தில் அழைத்த பாஞ்சாலிக்கும் கொடுத்தார். அது நிபந்தனையற்ற அன்பு. கட்டற்ற பெருங்கருணை.’
‘ஆனால் அம்மா, சாஸ்திரங்கள் போட்டுத்தருகிற பாதையில் போவதுதானே எனது தருமம்? நான் நம்பிய சித்தாந்தத்துக்காக என் குலம் துறந்தவன் நான். எனக்குக் குடுமி கிடையாது. பூணூல் கிடையாது. ஏகதண்ட சன்னியாசியாக எத்தனைக் காலமாக இருந்துவிட்டேன்!’
‘புரிகிறது மகனே. இது எதுவுமே அவசியமில்லை என்கிறார் ராமானுஜர். உன்னால் தலைக்குமேலே கைகளைத் தூக்க முடிந்தால் போதும். தூக்கிய கரங்களைக் குவித்தால் போதும். உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம் என்று அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டால் போதும். மற்ற அனைத்தும் அநாவசியம் மகனே.’
யாதவர் குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தார். நினைவு தெரிந்த நாள்முதல் அவர் பின்பற்றிய சித்தாந்தத்தை ஒன்றுமில்லை என்று அவரைப் பெற்ற தாயே விவரித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். சரிதான். என் சித்தாந்தம் எனக்கு என்ன சேர்த்தது? அகம்பாவத்தையும் பொறாமைத் தீயையும் பொங்கிய துவேஷத்தையும் சுமந்துகொண்டுதானே காலம் முழுதும் திரிந்திருக்கிறேன்? கண்ணெதிரே ராமானுஜர் கடைத்தேற ஒரு வழி காட்டுகிறார். ஜாதி பேதமற்ற ஒரு மாபெரும் சமூகம். திருமால் அடியார் என்னும் ஒற்றை அடைமொழி.
‘அதுதான் மகனே விஷயம். மனத்தைப் பொதி சுமக்கும் கழுதையாக்கிக்கொண்டுவிட்டாய் நீ. அவர் இறக்கி வைத்துவிட்டு சிறகு விரித்துப் பறக்கச் சொல்லுகிறார். என்ன கஷ்டம் உனக்கு?’
அன்றிரவு முழுதும் அந்தத் தாய் தன் மகனுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது விருப்பமெல்லாம் மிக எளிதானது. அந்திமக் காலத்தில் இருக்கிற தனது மகன், கண்மூடும்போதாவது கவலைகளற்று நிம்மதியாக இருக்க வேண்டும்.
‘நாராயணன் உனக்கு அந்த நிம்மதியைக் கொடுப்பான். ராமானுஜர் உன்னை அந்த நாரணனுக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று நிறுத்தக்கூடியவர். இது உன்னைப் பெற்றவள் கருத்து. இதற்குமேல் உன் விருப்பம். நேரமாகிவிட்டது. கொஞ்சமாவது தூங்கு.’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
மறுநாள் யாதவப் பிரகாசர் விடியும் நேரம் கிளம்பிவிட்டார்.
‘போகிறபோது எங்கே என்று கேட்கக்கூடாது. நீயே சொல்லிவிட்டுப் போ’ என்றாள் அவரது தாயார்.
‘எனக்கு இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன அம்மா. நான் ராமானுஜரைப் பார்த்து விளக்கம் கேட்கப் போகிறேன்.’
அவளுக்குப் புரிந்துவிட்டது. புன்னகை செய்தாள். ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)