ருசியியல் – 08

தமிழர்களால் மிக அதிகம் தூற்றப்பட்ட ஓர் உணவு உண்டென்றால் அது உப்புமாவாகத்தான் இருக்க முடியும். எனக்கு உப்புமா பிடிக்கும் என்று சொல்கிற பிரகஸ்பதிகள் ஒப்பீட்டளவில் வெகு சொற்பமே.


உப்புமா மீதான இந்த துவேஷம் நமக்கு எப்படி உண்டானது என்று யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில்களில் ஒரே ஒரு காரணம்தான் நியாயமானதாக இருக்கும். அது, உப்புமாவை வெகு சீக்கிரம் சமைத்துவிட முடியும் என்பதுதான்! உடனே கிடைத்துவிடும் எதற்கும் அத்தனை மதிப்பு சேராது என்பது இயற்கையின் விதி. அவ்வகையில் உப்புமா ஒரு பாவப்பட்ட சிற்றுண்டி.


ஆனால் முற்றிலும் மாறுபட்ட கல்யாண குணங்களால் வடிவமைக்கப்பட்ட ஜீவராசியான எனக்கு, உப்புமா என்பது மிகவும் பிடித்தமான உணவு. அதன்மீதான நீங்காத விருப்பத்தை மிகச் சிறு வயதுகளில் என் பாட்டி உருவாக்கினார். விடுமுறை நாள்களில் சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் இருந்த பாட்டி வீட்டுக்குப் போகும்போதெல்லாம் உப்புமா ப்ராப்தம் சித்திக்கும்.


பாட்டியானவருக்கு அன்றைய தேதியில் ஒரு டஜனுக்குச் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ பேரப் பிள்ளைகள் இருந்தார்கள். நாலைந்து மகள்கள், இரண்டு மூன்று மகன்களைக் கொண்ட பிரம்மாண்ட குடும்ப இஸ்திரி அவர். எப்போதேனும்தான் நடக்கும் என்றாலும் மொத்தக் குடும்பமும் ஒன்றுகூடுகிற நாள்களில் அவருக்கு மூச்சுத் திணறிவிடும். அத்தனை பேரையும் உட்கார வைத்து தோசை வார்த்துப் போடுவதோ, பூரிக் கடை திறப்பதோ நடைமுறை சாத்தியமற்றது. தவிரவும் பகாசுர வம்சத்தில் உதித்தோர் யாரும் ஒன்றிரண்டுடன் திருப்தி கொள்பவர்களும் அல்லர்.


எனவே பாட்டி உப்புமா என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துவிடுவார். பிள்ளைகளா, இன்று அரிசி உப்புமா.


பாட்டியின் அரிசி உப்புமா வேள்வியானது அரிசியை நனைத்து உலர்த்தி மாவு மெஷினுக்கு எடுத்துச் செல்வதில் தொடங்கும். அரிசிப் பதமும் இல்லாமல், ரவைப் பதமும் இல்லாமல் அவருக்கென ஒரு திரிசங்கு பதம் உண்டு. காசித் துண்டால் பரபரவென முதுகு தேய்க்கிற பதம் அது. அந்தப் பதத்தில் அதை அரைத்து எடுத்து வருவார். பரம தரித்திர சிகாமணியான என் தாத்தா, வீட்டுச் செலவுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடுத்த பணத்தோடு சரி. பாட்டி அதன்பிறகு எப்படிச் சமாளித்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது.


எனவே அரிசி உப்புமாவுக்கு அலங்கார விசேஷங்கள் ஏதும் இருக்காது. வெண்கலப் பானையில் அதிகம் எண்ணெய் காணாத, சும்மா தாளித்த வெறும் அரிசி உப்புமா. உண்மையில் அதைத் தின்னுவது சிரம சாத்தியம்தான். ஆனாலும் பாட்டியெனும் புத்திசாலி ஒரு காரியம் செய்வாள். சமைத்து இறக்கிய அரிசி உப்புமாவின் மீது ஒரு சிறு ஸ்பூன் அளவுக்கு நெய்யை ஊற்றி கப்பென்று மூடி வைத்துவிடுவாள்.


பத்திருபது நிமிஷங்களுக்குப் பிறகு அந்த உப்புமா பாத்திரத்தைத் திறந்தால் அடிக்கும் பாருங்கள் ஒரு மணம்! அந்த மணம்தான் அந்த உப்புமாவின் ருசியாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது. தோட்டத்தில் பறித்த பாதாம் இலைகளைக் கழுவி, ஆளுக்கு இரண்டு கரண்டி உப்புமாவைப் போட்டு, ஓரத்தில் ஒரு துண்டு மாங்காய் ஊறுகாயை வைத்துத் தருவார் பாட்டி.


என் சிறு வயதுகளில் உண்ட அந்த அரிசி உப்புமா இன்று வரை நாவில் நிற்கிறது.


பின்னாளில் வந்து சேர்ந்த என் தர்மபத்தினி, கோதுமை ரவை உப்புமாவில் ஒரு புரட்சி செய்யும் முடிவுடன் வீட்டில் சாம்பார் வைக்கும் அனைத்து தினங்களிலும் இரவு உணவு கோதுமை ரவை உப்புமா என்றொரு சட்டம் கொண்டு வந்தார். இக்கலவரமானது எந்தளவுக்குச் சென்றது என்றால், காலை சமையல் கட்டில் இருந்து சாம்பார் வாசனை வரத் தொடங்கினாலே, ‘அப்பா இன்னிக்கு நைட் டின்னருக்கு ஓட்டலுக்குப் போலாமா?’ என்று என் மகள் கேட்க ஆரம்பித்தாள்.


உண்மையில் கோதுமை ரவை உப்புமாவும் ஒரு நல்ல சிற்றுண்டிதான். சேர்மானங்கள் அதில் முக்கியம். உப்புமாவின் ருசி என்பது அதில் இடித்துச் சேர்க்கப்படும் இஞ்சியால் பூரணமெய்துவது. நீங்கள் எண்ணெயைப் பீப்பாயில் கொண்டு கொட்டுங்கள். மணக்க மணக்க நெய்யூற்றித் தாளியுங்கள். காய்கறிகள் சேருங்கள். வேர்க்கடலையோ, முந்திரியோ வறுத்துத் தூவுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உப்புமா ருசிப்பது இஞ்சியால் மட்டுமே. எவ்வளவு அதிகம் இஞ்சி சேருகிறதோ, அவ்வளவு அதிக ருசி.


என் நண்பர் ஈரோடு செந்தில்குமார் ஒரு ருசிகண்டபூரணர். திடீரென்று இருபத்தி நாலு மணிநேர உண்ணாவிரதம், நாற்பத்தியெட்டு மணிநேர உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு வெறுந்தண்ணீர் குடித்துக்கொண்டு கிடப்பார். விரதம் முடிகிற நேரம் நெருங்குகிறபோது வீறுகொண்டு எழுந்துவிடுவார்.


‘சுவாமி! என்னோட இன்னிய மெனு சொல்றேன் கேளும். ஆறு முட்டை. முன்னூத்தம்பது கிராம் பன்னீர் உப்புமா. நூத்தம்பது கீரை. நூத்தம்பது வாழத்தண்டு. நூறு தயிர், ரெண்டு க்யூப் சீஸ். பத்தாதோன்னு எழுவது கிராம் வெண்ணெயும் முப்பது கிராம் நெய்யும் சேத்துக்கிட்டேன்.’


மனைவியை இம்சிக்காத உத்தமோத்தமர் அவர். தனக்கு வேண்டியதைத் தானே சமைத்துக்கொள்கிற சமத்து ரகம்.


ஒருநாள் நட்டநடு ராத்திரி பன்னெண்டே காலுக்கு போனில் அழைத்தார். அப்போதுதான் விரதம் முடித்து, விருந்தை ருசித்திருப்பார் போலிருக்கிறது.


‘சுவாமி, உமக்கு அமிர்தத்தோட ருசி தெரியுமா? சொல்றேன் கேட்டுக்கங்க. நாலு கரண்டி நல்லெண்ணெய் எடுத்துக்கங்க. கடாய்ல ஊத்திக் காயவிட்டு ரெண்டு கரண்டி சாம்பார் மொளவொடி சேரும். காரம் சுருக்குனு இருந்தாத்தான் ருசிக்கும். ஆச்சா? அப்பறம், வரமொளவொடித் தூள் நாலு கரண்டி. வரமல்லி வாசம் பிடிக்கும்னா சாம்பார்த் தூள் அரகரண்டி எக்ஸ்டிரா. உப்பு பெருங்காயம் உம்ம இஷ்டம். இதெல்லாம் வரிசையா போட்டா தளபுள தளபுளன்னு எண்ண கொதி வந்துரும். அடங்கறப்ப ஆஃப் பண்ணீரும். அஞ்சு நிமிஷம் மூடி வெச்சிட்டு அப்பறம் எடுத்து பன்னீர் உப்புமாவுக்குத் தொட்டு சாப்ட்டுப் பாரும். எங்க ஊர்ல மீன வறுத்து வெச்சிக்கிட்டு இதத் தொட்டு சாப்டுவாங்க. மீனவிட இது பனீருக்குத்தான் அருமையாச் சேரும்.’


பல வருஷங்களுக்கு முன்னால் டெல்லியில் கணபதி என்று எனக்கொரு நண்பர் இருந்தார். இப்போது இல்லை. காலமாகிவிட்டார். யுஎன்ஐ செய்தி நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர். ஒருநாள் அவர் எனக்கு கீரை உப்புமாவை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அது உத்திரபிரதேசத்தில் குருட்சேத்திரத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறு டவுன். இப்போது பேர் மறந்துவிட்டது.


ரவையுடன் பாலக் கீரையைச் சேர்த்து வேகவைத்திருந்தார்கள். மிளகாய் சேர்மானம் கிடையாது. குறுமிளகுதான். நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய். விசேடம் அதுவல்ல. கேரட்டுடன் பொடிப்பொடியாக நறுக்கிய கொய்யாக்காயை அந்த உப்புமா முழுதும் தூவிக் கொடுத்தார்கள். ருசியென்றால் அப்படியொரு ருசி.


உப்புமாவுக்கு இம்மாதிரியாகக் கொஞ்சம் கேனத்தனமான, அல்லது கலை மனத்துடன் அலங்கார வினோதங்கள் செய்தால் அது ஓர் உன்னதமான பட்சணமாகிவிடுகிறது.


சர்க்கரை தூவிய உப்புமாவை என்றாவது மசால் தோசைக்குள் வைத்து ருசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு மினியேச்சர் சொர்க்கம்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2017 08:47
No comments have been added yet.