பொலிக! பொலிக! 23
வரதராஜர் கோயிலில் அப்போது உற்சவம் நடந்துகொண்டிருந்தது. திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கும் அத்தி வரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை வெளிப்பட்டுக் காட்சியளிக்கும் பரவசத் திருவிழா. அக்கம்பக்கத்து தேசங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகக் காஞ்சியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். கோயிலில் நிற்க இடம் கிடையாது. எங்கும் பக்தர்கள். எல்லா பக்கங்களிலும் பிரபந்த பாராயணம். வாண வேடிக்கைகளும் மங்கல வாத்திய முழக்கங்களுமாக நான்கு வாரங்களுக்கு நீண்டுகொண்டிருந்த உற்சவம்.
உற்சவ களேபரங்களில் பெருமாளுக்கான நித்தியப்படி நியமங்கள் தினமுமே சற்றுத் தாமதமாகிக்கொண்டிருந்தன. பக்தர்களின் சந்தோஷத்துக்கு முன்னால் தனது நேர ஒழுங்கை அவன் அத்தனை பெரிதாகக் கருதாதவன்தான். ஆனாலும் அன்று அது நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது.
இரவு பெருமாளுக்குத் திருவாராதனம் முடியத் தாமதமாகிப் போனது. வீதி உலா போயிருந்த உற்சவர் இன்னும் சன்னிதிக்குத் திரும்பியபாடில்லை. ஆனால் கதவு அடைக்கப்படும் சத்தம் கேட்டு, வரதனுக்குக் குழப்பமாகிவிட்டது.
‘இதென்ன நம்பிகளே, விசித்திரமாக இருக்கிறதே. இன்னும் நமக்குத் திருவாராதனமே ஆகவில்லை. அதற்குள் ஏன் கோயில் நடை சாத்தப்படுகிறது?’ என்று திருக்கச்சி நம்பியிடம் கேட்டான் பெருமான்.
‘பெருமானே, அது கோயில் நடை சாத்தும் சத்தமல்ல. கூரத்தில் கூரேசனின் அன்ன சத்திரக் கதவு அடைக்கப்படுகிற சத்தம். இப்போது இன்னொரு சத்தம் வரும் கேளுங்கள்’ என்றார் திருக்கச்சி நம்பி.
வரதன் கவனித்துக்கொண்டிருந்தான். சொல்லி வைத்த மாதிரி கலகலவென்று பொன்னும் மணியும் சிதறும் பெரும் சத்தம்.
‘ஆ, இது என்ன?’
‘இன்று தானதருமங்களை முடித்தபிறகு மிச்சம் இருப்பதை அளந்து கொட்டிக்கொண்டிருக்கிறார் கூரேசர். நாளைப் பொழுது விடிந்ததும் மீண்டும் தருமங்களைத் தொடங்க இப்போதே ஆயத்தம் செய்துவிட்டுத்தான் அவர் படுக்கப் போவது வழக்கம்.’
ஒரு கணம் திகைத்துவிட்டான் எம்பெருமான். ‘அத்தனை செல்வமா கூரேசனிடம்!’
மறுநாள் திருக்கச்சி நம்பி கூரேசனைச் சந்தித்து இந்த விவரத்தைச் சொன்னார். ‘அப்பனே, அருளாளப் பெருமானையே உனது ஐஸ்வர்யம் மயக்கிவிட்டதப்பா!’
தனக்குள் சிறுத்துப் போனார் கூரேசன்.
‘எம்பெருமானே! இந்தப் பொன்னின் ஒலி உன்னையே மயக்குகிறதென்றால், இத்தனைக் காலம் இதனை வைத்திருந்த பெரும் பாவத்தையல்லவா நான் செய்திருக்கிறேன்! உன் பேரருளையும் பெருங்கருணையையும் தவிர வேறு எதற்கும் கட்டிப்போடும் சக்தி இருந்துவிடக் கூடாது. முடிந்தது இன்றோடு!’
ஆண்டாளைக் கூப்பிட்டான் கூரேசன். ‘இதோ பார் ஆண்டாள்! நீ என்ன செய்வாய் என்று எனக்குத் தெரியாது. இன்றோடு நமது சொத்து சுகம் அத்தனையும் வெளியே போயாகவேண்டும். நாளைக் காலை நாம் காஞ்சிக்குக் கிளம்புகிறோம். அங்கு ராமானுஜரைச் சந்தித்து, அவரோடு ஐக்கியமாகிவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பொன் மூட்டைகளின் சுமையில் நாம் மூச்சடைத்து இறந்துவிடுவோம்.’
‘ஆகட்டும் சுவாமி’ என்றாள் ஆண்டாள்.
மறுநாள் முழுதும் அவர்கள் அன்ன சத்திரத்தின் வாசலிலேயே நின்றுகொண்டார்கள். வாயிற்கதவின் இருபுறமும் மூட்டை மூட்டையாகப் பொற்காசுகள், அணிகலன்கள், சேர்த்து வைத்த பெரும் சொத்துகள். சாப்பிடப் போகிற அனைவரையும் வேண்டிய அளவுக்கு எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒரே ஒரு நிபந்தனை. சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது, முதலில் எடுத்த அதே அளவுக்கு மீண்டும் எடுத்தாக வேண்டும்.
கூரேசனின் மனம் அப்படிப்பட்டது. அவனுக்கு வாய்த்தவள் அவனைவிட சுத்த ஆத்மா.
முதலியாண்டான் இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபடியே கூரத்தாழ்வானுடன் திருவரங்க எல்லை வரை நடந்து போனான்.
‘தாசரதி! நீ மடத்துக்குத் திரும்பிவிடு. ஆசாரியர் அங்கே தனியாக இருப்பார். நான் வரும்வரை அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு’ என்றார் கூரேசர்.
முதலியாண்டானுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஆசாரியர் தனியாக இருப்பதா? திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்த நாள் முதல் ஒரு கணம் கூட அப்படி ஒரு சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்ததே இல்லை. எப்போதும் அவரைச் சுற்றி நூறு பேர் இருந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் புறப்பட்டால் அடுத்த வரிசையில் இன்னும் நூறு பேர்.
‘எனக்கு வாசிக்கவே நேரமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதப்பா!’ என்று எத்தனை முறை கவலைப்பட்டிருக்கிறார்!
‘கூரேசரே, நீங்கள் தமது பத்தினியை அழைத்துக்கொண்டு சீக்கிரம் திரும்பும் வழியைப் பாருங்கள். நீங்கள் வந்து சேரும்வரை நமது ஆசாரியருக்கு இருப்புக் கொள்ளாது.’
முதலியாண்டான் மடத்துக்குத் திரும்பிவிட, கூரேசர் காஞ்சியை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
இரு வாரங்களில் அவர் கூரத்தை அடைந்து வீடு சேர்ந்தார்.
‘வாருங்கள். ஆசாரியர் நலமாக உள்ளாரா?’
‘போகிற வழியில் பேசிக்கொள்வோமே? நீ உடனே கிளம்பிவிடு ஆண்டாள்!’
வேறு ஒரு வார்த்தை கிடையாது. வாசற்படியிலேயே நின்றபடிக்குத்தான் கூரேசர் சொன்னார்.
‘ஒரு நிமிடம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பத்து வினாடிகளில் திரும்பிய ஆண்டாள், ‘கிளம்பலாம்’ என்று சொல்லிவிட்டாள்.
கதவைப் பூட்டவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. எத்தனை நாள் பயணம், எங்கே போகிறோம், எப்போது திரும்புவோம் அல்லது திரும்புவோமா – எதுவுமே கேட்கவில்லை. கிளம்பு என்றால் கிளம்புவது மட்டுமே கடன்.
அன்றிரவு அவர்கள் மதுராந்தகத்தைக் கடந்து ஒரு காட்டு வழியே போகவேண்டியிருந்தது.
‘இந்தக் காட்டைக் கடக்காமல் போகமுடியாதா?’ என்று கவலையுடன் கேட்டாள் ஆண்டாள்.
‘ஏன் கேட்கிறாய்? காட்டைக் கண்டால் பயமா?’
அவள் மெல்லத் தலையசைத்தாள். ‘காட்டில் கள்வர் நடமாட்டம் இருக்குமல்லவா?’
‘பைத்தியமே. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம். நம்மிடம் என்ன இருக்கிறது?’
ஆண்டாள் தயங்கியபடி தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு சிறு பொன் வட்டிலை எடுத்துக்காட்டினாள். ‘பயணம் எத்தனை நாளாகுமோ தெரியவில்லை. நீங்கள் சாப்பிடுவதற்கு ஒரு பாத்திரம் கூட எடுத்துக்கொள்ளாவிட்டால் எப்படி? அதுதான்..’
கூரேசர் புன்னகை செய்தார். அன்போடு அந்த வட்டிலை வாங்கித் தூரப் போட்டார்.
‘ஆண்டாள், இந்தப் பொன் செய்யும் மாயத்தைக் கண்டாயா? அகந்தையைக் கொடுக்கிற பொருள் அச்சத்தையும் தருகிறது. நமக்கெதற்கு அது? ஆசாரியரின் திருவடியை எப்போதும் மனத்துக்குள் ஏந்தியிருப்போம். நிரந்தரமான நிதி என்பது அதுதான். வா, போகலாம்!’ என்று அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அடுத்த பதினைந்து தினங்களில் அவர்கள் திருவரங்கத்துக்குச் சென்று சேர்ந்தார்கள்.
‘அப்பாடா! வந்துவிட்டீர்களா! இனி நான் நிம்மதியாகப் படிக்கப் போவேன்!’ என்றார் ராமானுஜர்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)