பொலிக! பொலிக! 34

மடத்தில் இருந்தவர்கள் திகைத்துவிட்டார்கள். முதலியாண்டான், அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியா? பெரிய நம்பியே இதனை ஒப்புக்கொள்ள மாட்டாரே?


‘இல்லை ஓய். அத்துழாய் சின்னப் பெண். அவளை சமாதானப்படுத்துவதற்காக ஜீயர் சுவாமிகள் அப்படிச் சொல்லியிருக்கிறார். வேறு ஏதாவது ஏற்பாடு செய்வார், பொறுத்திருந்து பாரும்!’


‘பாவம், சின்னப் பெண் என்று பாராமல் மாமியார் வீட்டில் படுத்துகிறார்கள் போலிருக்கிறது. பெரிய நம்பிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.’


அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு சட்டென்று அத்துழாய் வந்து நின்றாள். ‘நான் ஊருக்கு வந்தது இன்னும் அப்பாவுக்குத் தெரியாது. வீட்டுக்கே இன்னும் நான் போகவில்லை. அண்ணாவைப் பார்த்து விவரத்தைச் சொல்லிவிட்டு அதன்பின் தேவைப்பட்டால் அப்பாவைப் பார்க்கப் போகலாம் என்றிருந்தேன். வந்த காரியம் முடிந்துவிட்டதால் இப்படியே ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று பார்க்கிறேன்.’ என்று சொன்னாள்.


அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பதிலேதும் சொல்லாமல் முதலியாண்டானை நெருங்கி, ‘என்ன நடக்கிறது இங்கே? நீங்களா இந்தப் பெண்ணுடன் வேலைக்காரனாகப் போகப் போகிறீர்கள்?’


‘ஏன், அதிலென்ன பிழை? இது என் ஆசாரியர் உத்தரவு. யோசிக்க என்ன இருக்கிறது?’


‘அதில்லை சுவாமி.. தாங்கள்போய் இந்தச் சிறுமிக்கு…’


‘இவள் சாதாரண சிறுமி இல்லை ஐயா. ராமானுஜருக்கு ஒரு சமயம் கோதைப் பிராட்டியாகவே காட்சி கொடுத்தவள். பெரிய நம்பியைக் கேட்டுப் பாருங்கள். கதை கதையாகச் சொல்லுவார்!’


அவர்களுக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அத்துழாய், கோதையானாளா? அது எப்போது?


‘ஓய், வேஷமிட்டிருப்பாள் குழந்தை. அதைச் சொல்கிறார் இவர்.’


‘இல்லை ஐயா. அது வேடமில்லை. தோற்றமோ, தோற்ற மயக்கமோ இல்லை. அது ஒரு நிலை. எனது ஆசாரியரின் பரம பக்தியின் உச்ச நிலை ஒருநாள் அத்துழாயைக் கோதையாக்கிவிட்டது.’


‘சுத்தம். ஒன்றுமே புரியவில்லை ஐயா!’


முதலியாண்டானுக்குப் புன்னகை வந்தது. எண்ணிப் பார்க்கும்தோறும் சிலிர்ப்பூட்டுகிற நினைவுகள் எத்தனை எத்தனை!


அப்போது ராமானுஜர் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்திருந்த புதிது. பெரிய நம்பி அவருக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்திருந்த சமயம். ஆளவந்தாரின் நூல்களில் இருந்துதான் அவர் ஆரம்பித்திருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபந்தப் பாசுரங்கள்.


துறவு இலக்கணப்படி ராமானுஜர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்தே உண்பார். அப்படிப் பிட்சைக்குச் செல்கிற நேரம், உண்ணுகிற நேரம் தவிர மற்றப் பொழுதனைத்தும் பெரிய நம்பியுடனேயேதான் இருந்தார். நம்பியின் மகன் புண்டரீகாட்சனுக்கும், மகள் அத்துழாய்க்கும் அவர் பிரியத்துக்குரிய அண்ணா. ஜீயர் அண்ணா. ராமானுஜர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அத்துழாய்க்கு சந்தோஷம் பிடிபடாது. மணிக்கணக்கில் அவரோடு பேசிக்கொண்டிருப்பாள். ஒரு ஞானத் திருவிளக்கு தன் வீடு தேடி வந்திருக்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவரது ஆளுமையின் பிரம்மாண்டம் தெரியாது. அவரது பக்தியின் ஆழம் தெரியாது. அவரது அறிவின் வீச்சு தெரியாது. ஒன்றும் தெரியாது. ராமானுஜர் அவளது அண்ணா. சமத்து அண்ணா. நல்ல பேச்சுத்துணை. சிரிக்கச் சிரிக்கப் பேசி மகிழ வைக்கிற அண்ணா. என்னமோ காரணத்தால் வீடு வீடாகப் போய் பிட்சை எடுத்துச் சாப்பிடுகிறார். ஆனால் ஊரே அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறது. எனவே அண்ணா ரொம்பப் பெரிய ஆள்தான் என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.


அன்றைக்கும் ராமானுஜர் பிட்சைக்குக் கிளம்பினார். நாளுக்கொரு வீதி. வீதிக்கொரு பாசுரம். உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருந்தாலும் உள்ளம் அரங்கனின் பாதாரவிந்தங்களில் மட்டுமே நிலைத்திருக்கும். பிட்சைக்குக் கிளம்பி, பாட ஆரம்பித்துவிட்டால் ராமானுஜருக்கு உலகம் மறந்துவிடும். பாசுரங்களின் பொருளோடு இரண்டறக் கலந்து தன்னை இழந்துவிடுவார்.


அன்று அவர் பாடியபடி நடந்தபோது குறுக்கே பந்தோடு ஓடி வந்தது ஒரு விளையாட்டு குழந்தை. அது அத்துழாய். அது பெரிய நம்பியின் வீடிருந்த வீதியேதான்.


திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரமான ‘உந்துமதகளிற்றன்’ அவரது உதடு திறந்து உதித்துக்கொண்டிருந்தது. அதிலே ஒரு வரி, ‘பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட’ என்று வரும். செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் என்று முடித்திருப்பாள் ஆண்டாள்.


ராமானுஜர் பந்தார் விரலியைப் பாடி வந்த சமயம் செந்தாமரைக் கையில் சீரார் வளையொலிக்க அத்துழாய் பந்தோடு குறுக்கே ஓடி வந்ததும் அவருக்குப் புல்லரித்துப் போய்விட்டது. அவர் கண்ணுக்கு அவள் அத்துழாயாகத் தெரியவில்லை. ஆண்டாளாகவேதான் தெரிந்தாள்.


‘ஆஹா, என்ன தவம் செய்துவிட்டேன்! உன்னைத்தானே அம்மா எண்ணிக்கொண்டே வருகிறேன். என்னைப் பார்க்க நீயே வீதிக்கு வந்துவிட்டாயா? இச்சிறியவன்மீது அப்படியொரு கருணையா?’


பரவசத்தில் கண்கள் நீர் சொரிய, நடுச்சாலையில் அவள் பாதங்களைத் தொட்டு அப்படியே விழுந்து சேவித்தார். மயக்கமாகிப் போனார்.


திகைத்துவிட்டாள் அத்துழாய். ‘ஐயோ அண்ணா, என்ன காரியம் இதெல்லாம்? அப்பா.. அப்பா..’ என்று அழைத்தபடியே வீட்டுக்குள் ஓடினாள்.


‘என்ன அத்துழாய்?’


‘பிட்சைக்குப் போய்க்கொண்டிருந்த ஜீயர் அண்ணா என் காலில் போய் விழுந்துவிட்டார் அப்பா. என்ன ஆகிவிட்டது அவருக்கு? ஓடி வந்து பாருங்களேன்!’


பெரிய நம்பி அவள் கையில் வைத்திருந்த பந்தைப் பார்த்தார். ஒரு கணம் கண்மூடி யோசித்தார்.


‘ம்ம்.. ராமானுஜர் உந்துமதகளிற்றன் பாடிக்கொண்டு வந்தாரோ?’


‘ஆமாம் அப்பா. உங்களுக்கு எப்படித் தெரியும்?’


புன்னகையுடன் எழுந்து வீதிக்கு வந்தார் பெரிய நம்பி. மயக்கமுற்றிருந்த ராமானுஜரைத் தெளிவித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.


‘உம்மைப் போல் திருப்பாவையில் கரைந்து போகிற பாக்கியம் எனக்கென்று இல்லை; யாருக்குமே வாய்க்கவில்லை ராமானுஜரே. ஓதுவதும் உணர்வதுமா பக்தி? வரிகளின் வீரியத்தில் தன் வசமிழந்து போகிறீர் பாரும். அதுதான் ஐயா பக்தி! நீர் வெறும் ஜீயரல்லர். இன்றுமுதல் நீர் திருப்பாவை ஜீயர்!’


கரம் கூப்பி நின்றார் ராமானுஜர்.


‘நீர் பிட்சைக்குச் சென்றுகொண்டிருக்கிறீர். வழியில் நான் உள்ளே இழுத்துவந்துவிட்டபடியால் வெறும் கையுடன் அனுப்ப முடியாது. ஒரு நிமிடம் பொறுங்கள்’ என்றவர் தன் மகன் புண்டரீகாட்சனையும் அத்துழாயையும் அழைத்து ராமானுஜரின் கரங்களில் ஒப்படைத்தார்.


‘உம்மைக்காட்டிலும் ஓர் உயர்ந்த ஆசாரியர் எனது குழந்தைகளுக்கு வாய்க்கமாட்டார்கள். இனி இவர்கள் உம் பொறுப்பு!’ என்றார்.


முதலியாண்டான் இச்சம்பவத்தை நினைவுகூர்ந்து அவர்களிடம் சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.


‘ஐயா, ஆண்டாளாகவே என் ஆசாரியருக்குத் தோன்றியவளுக்கு சீதன வெள்ளாட்டியாகப் போவது என் பாக்கியமல்லவா?’ என்று கேட்டான்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2017 08:30
No comments have been added yet.