ருசியியல் – 13
இன்றைக்குச் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புவரை உணவைப் பற்றிய எனது புரிதல் ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக மட்டுமே இருந்தது. அதாவது, உணவு என்பது நாவை சந்தோஷப்படுத்தி, வயிற்றில் சென்று சேருகிற வஸ்து. அது நல்ல உணவா, நாராச உணவா, உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா, கொள்ளாதா, நமக்கு ஏற்றதா, இல்லையா, இது அவசியமா, பிந்நாளைய உபத்திரவங்களுக்கு அச்சாரமா என்றெல்லாம் யோசித்தே பார்க்க மாட்டேன். எந்தப் பேட்டையிலாவது என்னவாவது ஒரு பலகாரம் பிரமாதமாக இருக்கிறது என்று யாராவது சொன்னால் போதும். உடனே என் மூஞ்சூறு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன்.
ருசி மிகுந்த ஒரு மலாய் பாலை அருந்துவதற்காக தர்ம க்ஷேத்திரமாம் குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து மண்ணடியை அடைவேன். குறிப்பிட்ட சேட்டுக்கடையானது விளக்கு வைத்து ஓரிரு மணிநேரங்களுக்குப் பிறகே திறக்கப்படும். அதன்பிறகு விறகடுப்பை மூட்டி அண்டாவில் பாலைக் கொட்டி அதன் தலைமீது வைத்துக் காயவிட்டு, அவர் வியாபாரத்தைத் தொடங்க அநேகமாக ஒன்பதரை, பத்து மணியாகிவிடும். ஜிலேபி, கலர் பூந்தி, பால்கோவா என்று அந்தக் கடையில் வேறு சில வஸ்துக்களும் கிடைக்குமென்றாலும் அங்கே மொய்க்கிற கூட்டமெல்லாம் அந்த மலாய் பாலுக்காகத்தான் வரும்.
எனக்குத் தெரிந்து பாலில் உண்மையிலேயே சுத்தமான காஷ்மீரத்துக் குங்குமப்பூ சேர்த்த ஒரே நல்ல சேட்டு அவர்தான். ஏலக்காய் போடுவார். சிட்டிகை பச்சைக் கற்பூரம் போடுவார். முந்திரி பாதாம் பிஸ்தா வகையறாக்களைப் பொடி செய்து போடுவார். கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்ப்பார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உலர்ந்த வெள்ளரி விதைகளை ஒரு தகர டப்பியில் இருந்து இரு கைகளாலும் அள்ளி அள்ளி எடுத்து அதன் தலையில் கொட்டுவார்.
மேற்படி சேர்மானங்களெல்லாம் ஜீவாத்ம சொரூபம். பாலானது பரமாத்ம சொரூபம். இரண்டும் உல்லாசமாக ஊறியபடிக்கு விசிஷ்டாத்வைதபரமாக விறகடுப்பில் கொதித்துக் கிடக்கும். சேட்டானவர் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய கரண்டியைப் போட்டு நாலு கிளறு கிளறிவிடுவார். பிராந்தியத்தையே சுண்டி இழுக்கிற மணம் ஒன்று அதன்பின் வரும். அப்போதுதான் வியாபாரம் ஆரம்பமாகும்.
அந்த மலாய் பால், ஒருவேளை முழு உணவை நிகர்த்த கலோரி மிக்கது என்பதறியாமல், மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு அந்தப் பாலுக்காகப் போய் நிற்பேன். அது ஒரு காலம்.
மேற்படி மண்ணடி சேட்டு மலாய் பால், கற்பகாம்பாள் மெஸ் ரவா ரோஸ்ட், மைலாப்பூர் ஜன்னல் கடை பொங்கல் வடை, வெங்கட்ரமணா தேங்காய் போளி என்று பிராந்தியத்துக்கொரு பலகார அடையாளமாகவே தருமமிகு சென்னை என் மனத்தில் பதிந்திருந்தது.
ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் என் நண்பர் பத்ரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் அதுவரை போயிராத இடம். மெடிமிக்ஸ் ஆயுர்வேத சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்துகிற உணவகம். சஞ்சீவனம் என்று பேர்.
வழக்கமான உணவகம்தான். ஆனால் அங்கே தனிச்சிறப்பான முழுச் சாப்பாடு ஒன்று உண்டு. இயற்கை மருத்துவ நெறிக்கு (நேச்சுரோபதி) உட்பட்டுத் தயாரிக்கப்படுகிற உணவு என்று சொன்னார்கள்.
போய் உட்கார்ந்ததும் முதலில் மைல் நீள வாழையிலையின் ஒரு ஓரத்தில் ஒரு துண்டு நேந்திரம்பழத்துண்டு வைப்பார்கள். அதன்மீது ஒரு ஸ்பூன் தேங்காய்ப் பூ தூவுவார்கள். அடேய், நான் மலையாளி என்பது அதன் அர்த்தம். அதன்பிறகு சொப்பு சாமான் சைஸில் ஐந்து கண்ணாடிக் கிண்ணங்களில் வண்ணமயமான ஐந்து பானங்கள் வரும். ஒன்றில் கீரைச் சாறு. இன்னொன்றில் புதினா அரைத்துவிட்ட மோர். பிறகு ஏதேனுமொரு கொட்டைப் பயிரில் தயாரித்த சாறு. வாழைத்தண்டு சாறு. சாஸ்திரத்துக்கு ஒரு பழச்சாறு.
முடிந்ததா? இந்த ஐந்து பானங்களை அருந்தியானதும் ஐந்து விதமான பச்சைக் காய்கறிகளைக் கொண்டு வந்து வைப்பார்கள். சாலட் என்கிற காய்க்கலவை அல்ல. தனித்தனியே ஐந்து பச்சைக் காய்கறிகள். அதைச் சாப்பிட்ட பிற்பாடு, அரை வேக்காட்டுப் பதத்தில் மேலும் ஐந்து காய்கறிகள் வரும். அதையும் உண்டு தீர்த்த பிறகு முழுதும் வெந்த காய்கறிகள் இன்னொரு ஐந்து ரகம். கண்டிப்பாக ஒரு கீரை இருக்கும்.
ஆக மொத்தம் பதினைந்து காய்கறிகள் மற்றும் ஐந்து பானங்கள். உண்மையில் இவ்வளவுதான் உணவே. ஆனால் நமக்கெல்லாம் சோறின்றி அமையாது உணவு. எனவே கேரளத்து சிவப்பு குண்டு அரிசிச் சோறும் பருப்பும் கேட்டால் கொடுப்பார்கள். அதெல்லாம் முடியாது; எனக்கு சாம்பார் ரசம் இல்லாமல் ஜென்ம சாபல்யம் அடையாது என்பீர்களானால் அதுவும் கிடைக்கும்.
எதற்குமே அளவு கிடையாது என்பது முக்கியம். எதிலுமே குண்டு மிளகாயோ, வெங்காயமோ, பூண்டோ, எண்ணெயோ, புளியோ கிடையாது என்பது அதிமுக்கியம். இந்த ராஜபோஜனத்தை முழுதாக உண்டு முடித்தால் ஆயிரம் கலோரி சேரும். இது ஒரு நாளில் நமக்குத் தேவையான மொத்த கலோரியில் கிட்டத்தட்ட சரிபாதி.
விஷயம் அதுவல்ல. இதே ஆயிரம் கலோரிக்கு நீங்கள் வேறு என்ன சாப்பிட்டாலும் வயிறு புளிப்பானை போலாகிவிடும். ஆனால் இந்தக் குறிப்பிட்ட சாப்பாடு பசியைத் தீர்க்குமே தவிர வயிற்றை அடைக்காது. உண்ட உணர்வே இன்றி பசியழிப்புச் சேவையாற்றும் அந்நூதன உணவு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. திரும்பத் திரும்ப அந்த உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுப் பார்த்தேன். கூடவே ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறையைப் பற்றிப் படிக்கவும் ஆரம்பித்தேன்.
அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆயுர்வேதம் என்பது சித்த வைத்தியத்துக்கு அண்ணனா தம்பியா என்றொரு விவாதம் ரொம்ப காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்னவானாலும் இரண்டும் சகோதர ஜாதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆயுர்வேதம் என்பது சுக வாழ்க்கை, சொகுசு வாழ்க்கைக்கான அறிதல் முறை. வெறும் மருத்துவமாக மட்டுமே அறியப்பட்டிருந்தாலும் இதில் வேறு பல சங்கதிகள் இருக்கின்றன. சமையல் கலையைப் பற்றி ஆயுர்வேதம் பேசும். சாப்பாட்டு முறை பற்றிப் பாடம் எடுக்கும். சட்டென்று அங்கிருந்து கிளம்பி விவசாயம் செய்வதைக் குறித்து விளக்கம் சொல்லும். கொஞ்சம் அறிவியல் வாசனை காட்டும். தடாலென்று தடம் மாறி ஜோதிட விளக்கம் சொல்லும். இன்னதுதான் என்று கிடையாது. மனுஷனாகப் பட்டவன் சௌக்கியமாக வாழவேண்டும். அதற்கு என்னெல்லாம் தேவையோ அதெல்லாம் இதில் உண்டு.
அடிப்படையில் ஆயுர்வேதம் சுட்டிக்காட்டுகிற ஒரு முக்கியமான சங்கதி என்னவென்றால், இப்புவியில் நம் கண்ணுக்குத் தென்படுகிற அத்தனைத் தாவரங்களுமே ஏதோ ஒரு விதத்தில் மருத்துவ குணம் கொண்டதுதான். சிலவற்றின் பயன்பாடு நமக்குத் தெரிந்திருக்கிறது. இன்னும் தெரியாத ரகசியங்கள் எவ்வளவோ உள்ளன. ஆரோக்கியமானது, நமது உடலுக்குள் உற்பத்தியாகிற சமாசாரம். இத்தாவரங்கள் அதைப் போஷித்து பீமபுஷ்டி அடைய வைக்க உதவுபவை.
சஞ்சீவனத்தில் உண்ட உணவும் இங்குமங்குமாகப் படித்த சில விஷயங்களும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ண ஆரம்பித்தன. அதுவரை எனக்கு எண்ணமெல்லாம் எண்ணெய்ப் பதார்த்தங்களாகவே இருந்தது. இனிப்பு என்றால் கிலோவில்தான் உண்ணவே ஆரம்பிப்பேன். அது டன்னிலும் குவிண்டாலிலும் போய் நிற்கும். பரோட்டாவில் ஆரம்பித்து பீட்சா வரை தேக ஹானிக்கு ஆதாரமான சகலமான உணவினங்களையும் ஒரு வேள்வியேபோல் தின்று தீர்த்துக்கொண்டிருந்தேன்.
சட்டென்று ஒருநாள் போதும் என்று தோன்றியது. அன்றைக்குத்தான் இரண்டு முழு திருப்பதி லட்டுகளை ஒரே மூச்சில் கபளீகரம் செய்திருந்தேன்.
(ருசிக்கலாம்…)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)