உண்ணாதிருத்தல்

தினசரி மூன்று வேளை உணவு என்பதை மறந்து ஆறு மாதங்களாகின்றன. இப்போதெல்லாம் மதியமும் இரவும் மட்டுமே சாப்பாடு. மதியம் பனீருடன் ஏதேனும் ஒரு காய்கறிப் பொரியல். இரவு எழுபது பாதாம். அதாவது, பதினாறு மணி நேரம் உண்ணாதிருந்துவிட்டு, மீதி எட்டு மணி நேரத்தில் இரு உணவுகளை உட்கொள்கிறேன்.


சட்டென்று ஒருநாள் ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தோன்றி, மாதம் இருநாள் இருபத்தி நான்கு மணி நேர விரதம் இருக்க ஆரம்பித்தேன். கொழுப்பு உணவு முறையில் பசி இருக்காது என்பது ஒரு வசதி. ஓரிரு மாதங்கள் பிரச்னை ஏதுமின்றி முழு நாள் உண்ணாதிருக்க முடிந்ததால், அதையே சற்று நீட்டித்து வாரம் ஒருமுறை என்று ஆக்கினேன். உணவின் மீதான இச்சையும், ருசி பற்றிய நினைவும் மறந்து வேலையில் ஆழ்வது வசதியாக இருக்கிறது. களைப்போ, சோர்வோ இருந்தால் இது சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். அப்படியேதும் இதுவரை இல்லை என்பதால் விரதத்தை உற்சாகமாகவே கடைப்பிடிக்க முடிகிறது.


இதைச் செய்யும்போதுதான் அந்நாளில் ரிஷிகளும் யோகிகளும் எப்படி மாதக்கணக்கில் உண்ணாதிருந்து தவம் இயற்றியிருப்பார்கள் என்பது புரிகிறது.


உடலின் இயல்பான தேவை என்பது ஒன்று. மூன்று வேளை உணவு என்பது இயல்பாகிவிடுவது மற்றொன்று. உண்மையில் நாம் அத்தனை உண்ண அவசியமே இல்லை. செயல்படுவதற்குத் தேவையான அளவு உண்ணுவது என்னும் வழக்கத்தைக் கொண்டுவிட்டால் வியாதிகளில் இருந்து விடுதலை பெற்றுவிடலாம்.


விரதம் இருக்கத் தொடங்கியபிறகு நான் முன்னெப்போதையும்விடப் புத்துணர்ச்சியாக இருக்கிறேன். முன்பைவிட நெடுநேரம் கண்விழிக்க முடிகிறது. சலிப்பின்றிப் பல மணி நேரங்கள் தொடர்ந்து எழுத முடிகிறது. அனைத்தையும்விட புத்தி கூர்மைப்படுவதை உணர முடிகிறது. படிக்கிறவற்றை உள்வாங்குவது சுலபமாக உள்ளது. நினைவாற்றலும் சற்றுக் கூடியிருப்பதாகத் தோன்றுகிறது (இது மட்டும் பிரமையாக இருக்கலாம்).


உண்மையில் எடைக் குறைப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்த வழக்கம் இது. எடைக்குறைப்பு நின்றாலும் இது தொடரும் என்றே நினைக்கிறேன்.


மூன்று நாள்களுக்கு முன்னர் இவ்வாரத்துக்கான விரத தினம் வந்தது. அன்று முழுநாள் உண்ணாதிருந்துவிட்டு இருபத்தி நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு உணவு உட்கொண்டேன். என்னமோ தோன்றியது. அன்றும் விரதத்தைத் தொடர்ந்தால் என்ன? எனவே, இரண்டாம் நாளும் விரதம். மறுபடி ஒரு இருபத்தி நான்கு மணி நேரம் உண்ணாமல் இருந்து மீண்டும் ஓர் உணவு.


தொடர்ச்சியாக மூன்று தினங்களில் மொத்தமாக மூன்று வேளை மட்டுமே உட்கொண்டு பார்த்தும் சோர்வு என்ற ஒன்று வரவேயில்லை. இது எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது. நான் ஒரு நாளைக்கு மூன்றல்ல; நான்கு அல்லது ஐந்து வேளை உண்ட காலங்கள் உண்டு. எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகள், ஐஸ் க்ரீம், ஜூஸ் வகைகள் என்று என்னென்னவோ சாப்பிடுவேன். என் நாவின் அளவுகோலைத் தாண்டி வேறெதையும் பொருட்படுத்தியதே இல்லை.


இன்று எனக்கு என் நாக்கு அடிமையாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து விரும்பி உண்ட எதையும் சர்வ சாதாரணமாக விலக்கி வைக்க முடிகிறது. எப்பேர்ப்பட்ட உணவகத்துக்குச் சென்றாலும் எனக்குச் சரியான உணவைத் தாண்டி ருசிக்கென்று இன்னொன்றைக் கேட்பதில்லை. மனிதன் பழக்கத்தின் அடிமை. தேவையற்றதை நிராகரிப்பதும் ஒரு பழக்கமே.


உண்மையில் விரதம் பழக்கமான பிறகு உடல் மற்றும் மன ரீதியில் நான் அனுபவிக்கும் மாற்றங்கள் மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. இருபத்தி நான்கு மணி நேரம் சாப்பிடாதிருப்பது என்பது இயலாத காரியமல்ல. அந்த இருபத்தி நான்கு மணி நேரங்களில் உடல் இயந்திரத்துக்கு ஓய்வு கிடைக்கிறது. செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியை ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை எரிப்பதன்மூலம் அது எடுத்துக்கொள்கிறது. வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது போல உள்ளுக்குள் ஒரு சுத்திகரிப்பு நிகழ்கிறது. அதன்பின் உண்டு, உறங்கி எழுந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தால் ராட்சச பலம் வந்தது போல் இருக்கிறது.


இதன் இன்னொரு லாபம், விரதம் முடித்து உணவு உட்கொள்ளும்போது உணவு மேலும் ருசிக்கும். நிறுத்தி நிதானமாக உண்ணும் பொழுதே ஒரு தியானமாகும். உண்டு முடித்ததும் வருகிற நிறைவு அபாரமாக இருக்கிறது.


நான் உடலுழைப்பு இல்லாதவன். எனக்கு இத்தகைய உணவு முறை அல்லது உணவற்ற முறைதான் சரி என்று தோன்றுகிறது. இது புத்தியில் படிந்து, செயலாக உருப்பெற நாற்பத்தைந்து வருடங்களாகியிருக்கின்றன.


இன்னும் ஒரு மணி நேரத்தில் இன்றைய விரதம் நிறைவடையப் போகிறது. அதன்பின் அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தால் விடியும்வரை வேலை செய்யலாம். உலகம் உறங்கும் நேரத்தில் எப்போதும் நான் விழித்திருக்கிறேன். விழித்திருப்பது என்பது எனக்கு விழிப்புடன் இருப்பது.


இது உறங்கும்போதும் சாத்தியமானால் ஞானியாகிவிடலாம்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2017 23:56
No comments have been added yet.