பொலிக! பொலிக! 74

காஷ்மீரத்தில் இருந்தது போதாயண உரையின் முழு வடிவமல்ல. இரண்டு லட்சம் படிகள் (படி என்பது எழுத்தைக் குறிக்கும் பழைய அளவு) கொண்ட உரையின் சுருக்கப்பட்ட வடிவம் மட்டுமே. அந்தச் சுருக்கம் இருபத்தி ஐயாயிரம் படிகள் கொண்டது. எப்போது வந்து சேர்ந்தது என்பதே தெரியாமல் பலப்பல காலமாக காஷ்மீரத்தில் காப்பாற்றப்பட்டு வந்த ஓலைச்சுவடி அது. சரஸ்வதி பீடத்தில் இருந்த அந்தச் சுவடிக்கட்டை காஷ்மீரத்து மன்னன் கண்ணேபோல் காத்து வந்தான். அங்கே அதை எடுத்துப் படிக்கிறவர்களோ, சிந்திக்கிறவர்களோ, அதன் முக்கியத்துவம் உணர்ந்தவர்களோ யாரும் இருக்கவில்லை. புராதனமான ஓர் ஓலைச்சுவடிக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே தவிர, அதில் மூழ்க யாருமில்லை.


காஷ்மீரத்தை அடைந்த ராமானுஜர் மன்னரைச் சந்தித்துத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.


‘அடியேன் ராமானுஜன். தென் திருவரங்கத்தில் இருந்து வருகிறேன்.’


மன்னனால் நம்ப முடியவில்லை. ஓர் ஓலைச்சுவடிக்காக அத்தனை தூரத்தில் இருந்து ஒருவர் வருவாரா! அவனால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.


‘அது அவசியம் மன்னா. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன விருத்தியை அடியொற்றி உரை எழுத வேண்டுமென்பது எங்கள் ஆசாரியர் ஆளவந்தாரின் விருப்பம். ஆசாரியர் உத்தரவை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பயணம் ஒரு பொருட்டா?’


மன்னருக்கு ராமானுஜரைப் பிடித்துப் போனது. சில மணி நேரம் அவரோடு உரையாடியதில் அவரது ஞானத்தின் ஆழ அகலங்கள் புலப்பட்டு, என்ன கேட்டாலும் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.


‘ஆனால் மன்னா, போதாயன விருத்தியை இவருக்குக் கொடுத்தனுப்புவது அத்தனை சுலபமல்ல. அது புனிதப் பிரதி. காலகாலமாக நமது சாரதா பீடத்தில் இருந்து வருவது. அன்னையின் உத்தரவின்றி அதை இன்னொருவரிடம் ஒப்படைக்க இயலாது’ என்றார்கள் அங்கிருந்த பண்டிதர்கள்.


ராமானுஜர் யோசித்தார். ‘ஒப்படைப்பதெல்லாம் பிறகு. ஒரு முறை வாசிக்கவேனும் எனக்கு அனுமதி தரவேண்டும்’ என்று சொன்னார்.


‘அதில் பிரச்னை இல்லை ராமானுஜரே. இந்தச் சபையிலேயே நீங்கள் அதனை வாசிக்கலாம்’ என்றான் மன்னன்.


மறுநாள் காஷ்மீரத்து மன்னனின் சபையில் அங்கிருந்த அத்தனை அத்வைத பண்டிதர்களும் சூழ்ந்திருக்க, போதாயன விருத்தியின் சுருக்கம் எடுத்து வரப்பட்டது.


‘ஆழ்வான்! நீர் அதை வாங்கிப் படியும்!’ என்று கூரத்தாழ்வானைப் பார்த்துச் சொன்னார் ராமானுஜர்.


கைபடாமல் காலகாலமாக சரஸ்வதி தேவியின் சன்னிதானத்தில் தவமிருந்த ஓலைச்சுவடியை நடுங்கும் கைகளில் கூரத்தாழ்வான் வாங்கினார். கண்ணில் ஒற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்.


ராமானுஜர் கேட்டார். மன்னர் கேட்டார். சபை முழுதும் கேட்டது.


பண்டிதர்களுக்கு உடனே புரிந்துபோனது. போதாயண விருத்தியை ராமானுஜர் பெற்றுச் சென்றால் சர்வ நிச்சயமாக அதற்கு விசிஷ்டாத்வைத அடிப்படையில் ஓர் உரை எழுதிவிடுவார். காலகாலமாக இருந்து வரும் சங்கர பாஷ்யத்துக்கு அது ஒரு போட்டியாகப் பேசப்படும். எது சிறந்தது என்ற பேச்சு வரும். ஒப்பீடுகள் எழும். எதற்கு இந்தச் சிக்கல் எல்லாம்? சாரதா பீடம் என்பது சங்கரர் உருவாக்கியது. அங்கே பாதுகாக்கப்படும் பிரதி ராமானுஜரின் கைகளுக்குப் போய்ச் சேருதல் தகாது.


எதைத் தடுக்க வேண்டும் என்று காஷ்மீரத்துக்கு வெளியே இருந்த அத்வைத பண்டிதர்கள் தவித்துக்கொண்டிருந்தார்களோ, அதையேதான் காஷ்மீரத்துப் பண்டிதர்களும் நினைத்தார்கள். எனவே மன்னரிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள்.


‘இவர் ஒருமுறை கேட்டுவிட்டார் அல்லவா? இது போதும் மன்னா. சுவடியைக் கொடுத்தனுப்புவதெல்லாம் முடியாத காரியம்.’


ராமானுஜருக்குப் புரிந்தது. இது வாதம் செய்யும் இடமல்ல. வந்த காரியம் நல்லபடியாக நடந்தேறவேண்டும். அதற்கு மன்னனின் சகாயம் முக்கியம். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.


‘மன்னா, நான் இங்கே கிளம்பி வந்ததே தெய்வசித்தம்தான். இது நிகழவேண்டும் என்று பரம்பொருள் விரும்பும்போது கூடாதென்று தடுப்பது முறையா?’


‘இது தெய்வ சித்தம் என்பதை நான் எப்படி அறிவது? ஒன்று செய்யுங்கள். இப்போது உங்கள் சீடர் வாசித்ததன் சாரத்தை நீங்கள் உள்வாங்கியபடி எழுதிக் கொடுங்கள். சரஸ்வதி தேவி அதை ஒப்புக்கொள்கிறாளா பார்ப்போம்!’ என்றான்.


‘ஓ, அது செய்யலாமே!’ என்று அப்போதே கிளம்பிச் சென்று எழுத உட்கார்ந்தார். விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.


மறுநாள் மீண்டும் சபை கூடியபோது போதாயன விருத்தியைத் தாம் உள்வாங்கிய விதத்தில் எழுதிக் கொண்டு வந்திருந்த ராமானுஜர், அந்தச் சுவடிகளை மன்னனிடம் அளித்தார்.


‘பண்டிதர்களே, இந்தச் சுவடியை சரஸ்வதி தேவியின் பாதங்களில் கொண்டு வையுங்கள். சன்னிதியை இழுத்து மூடுங்கள். நாளைக் காலை திறந்து பார்ப்போம். தேவி ஏற்றாலும் நிராகரித்தாலும் ஏதேனும் ஒரு விதத்தில் நமக்குத் தெரியப்படுத்துவாள்’ என்று சொன்னான்.


மன்னன் சொன்னபடி அரசவைக் காவலர்கள் முன்னிலையில் ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலைச் சுவடிகள் சரஸ்வதி பீடத்தில் வைக்கப்பட்டு, சன்னிதி சாத்தப்பட்டது. மறுநாள் திறந்து பார்த்தபோது, தேவியின் பாதங்களில் வைக்கப்பட்ட சுவடிகள் அவளது சிரசின்மீது இருந்தது!


திகைத்துப் போனான் மன்னன். ‘இவர் மகா பண்டிதர். சரஸ்வதி தேவியே அங்கீகரித்துவிட்ட பிறகு நாம் சொல்ல ஒன்றுமில்லை’ என்று அறிவித்துவிட்டு போதாயண உரைச் சுருக்கத்தை ராமானுஜரிடம் ஒப்படைத்தான்.


உடையவரும் கூரத்தாழ்வானும் பிற சீடர்களும் மகிழ்ச்சியோடு அங்கிருந்து திருவரங்கம் கிளம்பினார்கள்.


ஆனால் காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்கு மன்னனின் செயல் பிடிக்கவில்லை. ‘இது தகாது. ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுத போதாயண விருத்தி உதவக்கூடாது! அத்வைதபரமான உரையைத் தவிர இன்னொரு தத்துவம் சார்ந்த விளக்கம் வரவே கூடாது!’ என்று முடிவு செய்தார்கள். அன்றிரவே ஆள்களை அனுப்பி ராமானுஜர் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஓலைச் சுவடிகளைத் திருடிக்கொண்டு போனார்கள்.


மறுநாள் கண் விழித்துப் பார்த்த உடையவர், ஓலைச்சுவடிகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ந்து போனார்.


‘ஐயோ, இத்தனைப் பாடு பட்டு வாங்கி வந்த சுவடிகள் களவு போய்விட்டனவே! ஒரே ஒருமுறை கேட்டதை வைத்து எப்படி நான் உரை எழுதுவேன்!’ என்று திகைத்து நின்றார்.


சீடர்கள் குழப்பமும் கலக்கமுமாக அவரையே பார்த்துக்கொண்டிருக்க, கூரத்தாழ்வான் பணிவான குரலில் சொன்னார், ‘சுவாமி, கவலைப் படாதீர்கள். வாசித்த உரை எனக்கு மனப்பாடமாகிவிட்டது!’


‘என்ன சொல்கிறீர் ஆழ்வானே?! முழுதும் மனப்பாடமா!’


‘ஆம் சுவாமி. அத்திறமையும் தங்கள் அருளால்தான்!’


அப்படியே கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2017 09:30
No comments have been added yet.