பொலிக! பொலிக! 77

சேரன் மடம் பக்தர் கூட்டத்தில் நிரம்பிப் பிதுங்கிக்கொண்டிருந்தது. செய்தி பரவியதில் இருந்தே எங்கெங்கிருந்தோ வைணவர்கள் உடையவரைப் பார்க்கக் கிளம்பி வர ஆரம்பித்தார்கள். சீடர்களுக்கு நிற்க நேரமின்றி இருந்தது. ராமானுஜரைப் பார்க்க வருகிறவர்களை ஒழுங்கு படுத்தி அமர வைப்பதே பெரிய வேலையாக இருந்தது. ஒருபுறம் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் எதிரெதிரே அமர்ந்து, எழுதிய ஓலைச் சுவடிகளைப் படித்துப் பார்த்து ஒழுங்கு செய்துகொண்டிருக்க, மறுபுறம் ராமானுஜர் வந்தவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார். 


பிரம்ம சூத்திரமும் அதன் முக்கியத்துவமும். சங்கரர் தமது பிரம்ம சூத்திர உரையில் என்ன சொல்லியிருக்கிறார்? இந்நூல் எவ்விதத்தில் அதனின்று வேறுபடுகிறது? போதாயணரின் உரை. அதைப் பெற்றுவர காஷ்மீரம் சென்ற கதை. கூரத்தாழ்வானின் காந்த சித்தம் செய்த பேருதவி.


பேசி மாளவில்லை. பெரிய நம்பி வந்திருந்தார். அரையர் வந்திருந்தார். இன்னும் யார் யாரோ வந்துகொண்டிருந்தார்கள்.


‘சுவாமி, பிரம்ம சூத்திர உரை எழுதியது போதாது. வைணவ தரிசனத்தை பாரதம் முழுதும் தாங்கள்தாம் ஏந்திச் சென்று பரப்பவேண்டும். இங்கிருந்தபடி பெரிய அளவில் எதையும் சாதிக்க இயலாது!’


‘உண்மைதான். ஆனால் திருவரங்கத்தைவிட்டு எத்தனைக் காலம் ஆசாரியரால் வெளியே சுற்ற இயலும் என்று தெரியவில்லையே?’


‘போதாயணரின் உரையைப் பெற்றுவர காஷ்மீரம் வரை சென்று திரும்பியவர் அவர். அந்தப் பயணத்தின் நோக்கம் இன்று நிறைவேறியிருக்கிறது. அன்று அருளிய கலைமகளுக்கு நன்றி சொல்லவேனும் மீண்டுமொருமுறை காஷ்மீரம் வரை போய்த்தான் ஆகவேண்டும்.’


அவரவர் மனத்தில் பட்டதைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.


ராமானுஜர் மனத்தில் ஒரு திட்டம் இருந்தது. வைணவ தரிசனத்தைப் பரப்புவது என்கிற பெரும்பணியை திவ்யதேச யாத்திரையாக அமைத்துக்கொண்டு புறப்பட்டால் சரியாக இருக்கும் என்று அவர் நினைத்தார். முதலில் சோழநாட்டுத் திருப்பதிகள். பிறகு பாண்டிய நாட்டுத் திருப்பதிகள். அப்படியே மலைநாடு என்னும் கேரளம். ஆந்திரம். கர்நாடகம். அப்படியே காஷ்மீரம்வரை போய்த் திரும்பலாம். ஆனால் அனைவரும் சொல்வதுபோல எத்தனைக் காலம் ஆகும் என்றுதான் சரியாகத் தெரியவில்லை.


‘குறைந்தது ஆறேழு வருடங்கள் பிடிக்கலாம் சுவாமி.’ என்றார் எம்பார்.


அரங்கன் சன்னிதிக்குச் சென்று கண்மூடி நின்றார் ராமானுஜர். காரியம் மிகவும் பெரிது. பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதைவிட, திருவரங்கக் கோயில் பணிகள் தடையின்றி நடைபெறுவதும் அவசியம்.


‘யாரைப் பொறுப்பாக விட்டுச் செல்ல நினைத்திருக்கிறீர்கள்?’ என்று கூரத்தாழ்வான் கேட்டார்.


‘முதலியாண்டானைத் தவிர வேறு யார் பொருந்துவார்? எம்பார் அவருக்கு உடன் இருந்து உதவிகள் செய்துகொண்டிருக்கட்டும்.’


பரபரவெனக் காரியங்கள் நடந்தேறின. ஒரு நல்ல நாளில் உடையவர் தமது சீடர்களோடு பாரத யாத்திரை புறப்பட்டார். காவிரிக் கரையில் சீடர்களோடு பக்தர்களும் ஆசாரியர்களும் கூடி நின்று வழியனுப்பக் காத்திருந்தார்கள்.


‘முதலியாண்டான்..’


‘சுவாமி, கவலையின்றிச் சென்று வாருங்கள். அரங்கன் திருக்கோயில் பணிகள் எந்தத் தடையுமின்றி நடக்கும்.’


பெரிய நம்பியிடம் சொல்லிக்கொண்டார். அரையரிடம் சொல்லிக்கொண்டார். அனைவரிடமும் விடைபெற்று யாத்திரை புறப்பட்டார்.


திருவரங்கத்தில் கிளம்பிய குழு நேரே குடந்தை நகருக்கு வந்து சேர்ந்தது. அங்கே ஆராவமுதன். ஆழ்வார் பாசுரங்களால் நாவினிக்கப் பாடி மகிழ்ந்து வரிசையாக ஒவ்வொரு சோழநாட்டுத் திருப்பதியாகச் சேவித்துக்கொண்டே போனார். ஒவ்வொரு ஊரிலும் கொத்துக் கொத்தாக அவருக்குச் சீடர்கள் சேர ஆரம்பித்தார்கள். பத்திருபது பேருடன் புறப்பட்ட யாத்திரைக் குழு, சோழநாட்டைக் கடந்து பாண்டிய நாட்டுத் திருப்பதிகளைத் தொடும்போது பெருங்கூட்டமாகியிருந்தது.


திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதிக்கு உடையவர் வந்து சேர்ந்தபோது, கிடாம்பி ஆச்சானைப் பார்த்து ‘ஏதேனும் ஒரு சுலோகம் சொல்லும் ஆச்சானே!’ என்றார்.


சட்டென்று கிடாம்பி ஆச்சான் சொல்லத் தொடங்கியது ஆளவந்தார் அருளிய ஒரு சுலோகம். ‘பல்லாயிரம் குற்றங்கள் புரிந்து பாவக்கடலில் விழுந்து கிடக்கிற அகதி நான். எம்பெருமானே, உன்னைத் தவிர இப்பாவிக்கு அடைக்கலம் தர யாருமில்லை. உன் கருணைக் குடையை விரித்துக்காட்டு’ என்ற பொருளில் வருகிற சமஸ்கிருத சுலோகம் அது.


அவர் பக்தியுடன் கைகூப்பி அதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது சன்னிதியில் இருந்த அர்ச்சகர், ‘நிறுத்தும்!’ என்று குரல் கொடுத்தார்.


கூட்டம் திடுக்கிட்டுப் போனது. சொன்னது அர்ச்சகர்தாம். ஆனால் வந்தது அர்ச்சகரின் குரல் இல்லை. இது வேறு. யாரும் கேட்டிராதது. அபூர்வமான குரல். ஒரு அசரீரியின் தன்மை அதில் இருந்தது.


‘ஓய் கிடாம்பி ஆச்சானே! அகதி என்றும் பாவி என்றும் எதற்காக இப்படிச் சொல்லிக்கொள்கிறீர்? எம்பெருமானார் அருகே இருப்பவர்கள் யாரும் அகதியுமல்ல; பாவியுமல்ல.’


வெலவெலத்துப் போனது கூட்டம். அவர்களுக்குப் புரிந்துவிட்டது. கோயில் அர்ச்சகர் வாய்வழியே குரல் கொடுத்தது கள்ளழகரேதான். பரவசத்தில் கரம் கூப்பிக் கண்ணீர் மல்க அப்படியே சிலையாகி நின்றார்கள். வாழ்வின் ஆகப்பெரிய சாதனை, ஒரு சரியான குருவைக் கண்டடைவது. அது முயற்சியால் கூடுவதல்ல. அதிர்ஷ்டத்தால் நேர்வதல்ல. அது ஒரு தரிசனம். தவத்தின் இறுதி விளைவு. இதற்குமேல் ஒன்றுமில்லை; எடுத்துப் போ என்று எம்பெருமான் அள்ளிக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகிற தருணம்.


‘எம்பெருமானாரே!’ என்று அத்தனை பேரும் உடையவர் தாள் பணிந்தார்கள்.


திருமாலிருஞ்சோலையில் இருந்து கிளம்பி திருப்புல்லாணிக்குச் சென்று சேவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார் திருநகரிக்கு வந்து சேர்ந்தார் ராமானுஜர். நம்மாழ்வாரின் அவதாரத் தலம். பொலிக பொலிக என்று உடையவரின் பிறப்பை என்றோ முன்னறிவித்த மூதாதை.


ராமானுஜருக்கு அம்மண்ணில் கால் வைத்தபோதே சிலிர்த்தது. தெய்வத் தமிழ் என்பது திருவாய்மொழியைத் தவிர வேறில்லை என்பதில் அவருக்கு மறு கருத்தே கிடையாது. வேதம் தமிழ் செய்த மாறனின் திருவாய்மொழிக்கு ஒரு சிறந்த உரை படைக்க வேண்டுமென்ற ஆளவந்தாரின் மூன்றாவது நிறைவேறாக் கனவை அவர் எண்ணிப் பார்த்தார்.


மறுநாள் கோயிலுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து அன்று இரவெல்லாம் உள்ளூரில் ஒரு மடத்தில் தங்கி இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். உறக்கம் வரவில்லை. மனத்தில் திருவாய்மொழியின் வரிகள் தன்னிச்சையாகப் பொங்கி வந்து நிறைத்துக்கொண்டிருந்தன.


அறைக்கதவு லேசாக மூடியிருந்தது. வெளியே ஏதோ காரியமாக வேகமாக நடந்துபோன சீடன் பிள்ளான் சட்டென ஒரு கணம் நின்றான். முகத்தில் ஒரு முறுவல். கதவைத் திறந்து, ‘என்ன சுவாமி, உள்ளே ஓடிக்கொண்டிருப்பது திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்ன – பாசுரம்தானே?’ என்று கேட்டான்.


திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2017 09:30
No comments have been added yet.