பொலிக! பொலிக! 95
தொண்டனூர் ஆலயத்தில், நரசிம்மர் சன்னிதியில் அவர்கள் கூடியிருந்தார்கள். பன்னிரண்டாயிரம் சமணர்கள் ஒரு புறம். ராமானுஜரும் அவரது சீடர்களும் ஒருபுறம். வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒரு புறம். மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவனது பரிவாரங்களும் ஒரு புறம்.
‘பன்னிரண்டாயிரம் பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா?’ சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.
‘கண்டிப்பாக. எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்’ என்றார்கள் சமணர்கள்.
‘சொல்கிறேன். நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்’ என்றார் ராமானுஜர்.
திரையின் ஒரு புறம் ராமானுஜர் இருக்க, மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்.
‘யார் முதல் வினாவைக் கேட்கப் போவது, அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா?’
‘அதெல்லாம் கிடையாது. அனைவரும் கேட்போம். ஒரே சமயத்தில் கேட்போம். ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா. அத்தனை பேருக்கும் இவர் பதில் சொல்லியாக வேண்டும். அது எங்களுக்குத் திருப்தியாக இருக்க வேண்டும்.’
இது எப்படி சாத்தியம் என்று மன்னனுக்குப் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. சமணர்களுடன் அவர்கள் பேசிப் பார்த்தார்கள். ‘உங்கள் வினாக்களை எழுதிக் கொடுத்துவிடலாமே? ஒவ்வொன்றாக அவர் பதில் சொல்ல வசதியாக இருக்குமல்லவா? பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் வைத்து பதில் சொல்லுவது எப்படி சாத்தியம்?’
‘அவருக்குத்தான் சரஸ்வதி தேவியே அருள் புரிந்து ஹயக்ரீவர் விக்ரகம் பரிசளித்திருக்கிறாளாமே? அதெல்லாம் அவரால் முடியும். வாதத்தைத் தொடங்கலாமா?’
சரி என்றார் உடையவர்.
திரையிட்ட மறைப்பில் பத்மாசனமிட்டு அமர்ந்தார். கண்களை மூடினார். ஓம் நமோ நாராயணாய.
காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்சபூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப்போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன.
‘ம், ஆரம்பியுங்கள்!’ சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.
நாராயணா! நாராயணா! என்று உடையவரின் சீடர்கள் சடாரென எழுந்து நின்று கரம் கூப்பினார்கள். கணப் பொழுதில் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. சப்த ரிஷிகளுள் ஒருவரான காஸ்யபர், அதிதியுடன் சேர்ந்து இந்திரனையும் அக்னியையும் பெற்றார். திதியுடன் சேர்ந்து அசுரர்களில் ஒரு பிரிவினரான தைத்தியர்களைப் பெற்றார். வினதாவுக்கு கருடனைப் பெற்றார். முனியுடன் இணைந்து அரம்பையரைப் பெற்றார். கத்ருவுடன் சேர்ந்து சேஷனைப் பெற்றார்.
ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளியமரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். ‘பொலிக! பொலிக!’ என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, ‘இதோ புறப்பட்டுவிட்டேன்’ என்று ராமானுஜராக வந்துதித்தார்.
‘ஆஹா! எப்பேர்ப்பட்ட தருணம்! உடையவர் இந்த சமணர் சபையில் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கு இது புரியாது. அவர்களால் உணர முடியாது. திரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்தது என்பதைக் கூட அவர்கள் அறியமாட்டார்கள். எழுந்து நிறைந்த பேரொளியைக் காண முடியாமல் கணப் பொழுது கண்ணை மூடிக்கொண்டவர்கள். ஆதிசேஷனின் மூச்சுக்காற்றின் சீற்றத்தில் மணந்த துளசியின் வாசம் உணர்ந்திருப்பார்களா! சந்தேகம்தான்.’ முதலியாண்டான் பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்.
மறுபுறம் சமணர்கள் பன்னீராயிரம் பேரின் வினாக்களுக்கு உடையவர் தமது ஆதி அவதார வடிவில் ஆயிரம் நாக்குகளால் தங்கு தடையற்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்றே மன்னனுக்குப் புரியவில்லை. ஒரு திரை. அதற்கு அப்பால் ராமானுஜர் இருக்கிறார். ஒரே ஒருவர்தான் அங்கே இருப்பது. அதில் சந்தேகமில்லை. வெளிப்பட்டு வருவதும் ஒரு குரல்தான். ஆனால் அதெப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் பதில்கள் வருகின்றன? மொத்தம் பன்னிரண்டு முறை ஆதிசேஷன் திருவாய் மலர்ந்தார். பன்னிரண்டாயிரம் வினாக்களுக்கான பதில்கள். முடிந்தது.
திகைத்துப் போனார்கள் சமணர்கள். ‘உடையவரே, நாங்கள் தோற்றோம். கேட்கும் தகுதி எங்களுக்கு இல்லை. உம்மைச் சரணடைவது ஒன்றே மிச்சமிருக்கும் பணி. எழுந்து வெளியே வாருங்கள்!’ என்று கரம் கூப்பி நின்றார்கள்.
சில வினாடிகள் பெரும் நிசப்தம். திரைக்கு அப்பால் எழுந்தருளியிருந்த ஆதிசேஷன் உடையவராக மாறினார். திரை அசைந்தது. அதை விலக்கி ராமானுஜர் வெளியே வந்தார். தாள் பணிந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும் வைணவத்தை ஏற்றார்கள். ராமானுஜர் அவர்களுக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்துவைத்தார். அன்று ஹொய்சள மண்ணில் சமணம் இல்லாது போயிற்று.
தொண்டனூரிலேயே அவர் சிறிது காலம் தஙக்வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
‘அதற்கென்ன? இந்த நரசிம்மப் பெருமாள் கோயிலே அற்புதமாக இருக்கிறது. இங்கேயே தங்குவோம்!’ என்றார் ராமானுஜர். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் சேர்ந்துவிட, அவர்கள் அனைவருக்கும் திருமண் காப்பு சேர்க்க என்ன செய்வது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. அது பெருமானின் பாதாரவிந்தம். அதை நெற்றியில் ஏந்தியிருப்பதே வைணவருக்கு அழகு என்பார் ராமானுஜர்.
ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால் இப்போது ராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. இத்தனை பேருக்கும் திருமண் வேண்டும். அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்?
உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்.
அன்றிரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பெருமான் தோன்றினான். ‘உடையவரே, கவலைப்படாதீர்கள். நேரே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேதபுஷ்கரணி என்றொரு குளம் உண்டு. அதன் வடமேற்கு மூலையில் நீங்கள் தேடுவது கிடைக்கும்!’
தேடியது மட்டுமல்ல; தேடாத ஒன்றும் சேர்த்துக் கிடைக்கப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)