புத்தகங்களின் எதிர்காலம்


பத்ரியின் இந்தக் குறிப்பைப் படித்தது முதல் திரும்பத் திரும்ப இதே சிந்தனையாக இருக்கிறது. அவர் சொல்லியிருப்பது சரி. ரயில், பஸ் பயணங்களில் யாரும் புத்தகம் படிப்பதில்லை இந்நாள்களில். கிண்டில் கருவி என்பது தமிழ்ச் சூழலில் இன்னும் மிகச் சிறுபான்மையினருடைய ஆடம்பரமாகவே கருதப்படுகிறது. கிண்டில் கருவியையாவது காசு கொடுத்து வாங்க வேண்டும். கிண்டில் அளிக்கும் இலவச ஆப்களில் கருவியில் உள்ள சகல வசதிகளுடனும் உங்கள் மொபைல் அல்லது டேபில் படிக்க முடியும். டெஸ்க்டாப்பில் படிக்கலாம். லேப்டாப்பில் படிக்கலாம். எல்லாக் கதவுகளும் படிப்பதற்குத் திறந்தேதான் இருக்கின்றன. இருந்தாலும் ஏன் யாரும் படிக்க விரும்புவதில்லை? இது கால மாற்றத்தில் நிகழும் தேக்கம் என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதா?


ஆனால் பிற மொழிகளில் நிலைமை இத்தனை மோசமில்லை என்றே தெரிகிறது. ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் கிண்டில் மின் நூல்களின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்தியாவிலும் அந்த உயரங்களைச் சுட்டிக்காட்டுவதன் பொருட்டுத்தான் அமேசான் போட்டிகள் வைக்கிறது. லட்சக்கணக்கான பரிசுகள் தருகிறது. வாங்கிப் படிப்போருக்கு வசதியாக அன்லிமிடெட் போன்ற வாய்ப்புகளைத் தருகிறது. அமேசானின் திடீர் டீல்கள், இன்றைய தள்ளுபடி, இவ்வாரத் தள்ளுபடி, இம்மாதத் தள்ளுபடி என்று வாசகர்களுக்கும் நிறையத்தான் கிடைக்கிறது.


இருந்தாலும் புத்தகங்கள் விற்பதில்லை. யாரும் படிப்பதில்லை. ஃபேஸ்புக், வாட்சப், யுட்யூப் போதும்.


அவலமும் அபாயமும் மிகுந்த இப்பிரச்னை எங்கிருந்து உருவாக ஆரம்பித்தது என்று யோசித்துப் பார்க்கலாம். ‘எம்பிள்ளைய நான் இங்கிலீஷ் மீடியத்துல போட்டிருக்கென்‘ என்று என்றோ ஒரு தகப்பன் பெருமையுடன் சொன்ன அந்த எல்கேஜி மாணவன் இன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் இருக்கிறான். நிறையப் படிக்கிறான். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள். நாவல்கள். புதிர் நூல்கள். கிண்டிலும் கையுமாகவே அலைகிறான்.


எண்ணிப் பார்த்தால் குறைந்தது பதினெட்டு வருடப் படிப்புக் காலம். இதனை முற்றிலும் ஆங்கில வழியில் அவன் கடந்திருக்கிறான். இனியும் அவ்வழியே அவனுக்கு வசதியானது. எளிதானது. அவன் அப்படித்தான் போவான். ‘என்னடா சாப்பிடற?’ என்று கேட்டால், ‘ரெண்டு இட்லி போதும்மா‘ என்று நல்ல தமிழில் நிச்சயம் பதில் சொல்வான். ஆனால் அவனால் தமிழ் நூல் ஒன்று இட்லியைவிட ருசியாக இருந்தாலும் பொருந்திப் படிக்க முடியாது. இவ்வளவு எழுதுகிற என்னாலேயே, தேவைக்காக அல்லாமல் வெறும் ஆர்வத்துக்காக ஒரு ஆங்கில நூலை முழுமையாகப் படிக்க முடிந்ததில்லை. நான் படித்த ஆங்கில நூல்கள் அனைத்துமே என் தொழில் சார்ந்த ஆய்வுகளுக்காகவும் தேவைகளுக்காகவும் படித்தவை மட்டுமே. ஓரான் பாமுக்கையும் மார்க்குவேஸையும் முரகாமியையும் தமிழில் படிக்கும் சாத்தியங்கள் வந்துவிட்டபடியால் அவர்களைப் பங்காளிகளாக்கி வைத்துக்கொள்வதுதான் வசதி.


பிரச்னை பள்ளி வளாகத்தில் தொடங்குகிறது. ஆங்கில வழிப் படிப்பில் உள்ளோருக்கு ஒப்புக்கு ஒரு பாடம் தமிழ் இருக்கும். தமிழ் அல்லது இந்தி என்ற வாய்ப்பு இருக்கும். இதனாலெல்லாம் தமிழ் பின்னால் போய்விடுகிறது. பள்ளி முடித்த புத்துணர்ச்சியுடன் வாசிப்புலகுக்கு வருகிற மாணவன், அதுவரை வாசித்ததெல்லாம் வேறு. ஆங்கில ஜாங்கிரி இலக்கியங்கள். சுவாரசிய மாயதந்திரக் கதைகள். கடவுள் பாதி மனிதன் பாதி ஃபேண்டஸிக் காவியங்கள். அவனிடம் பொன்னியின் செல்வனைக் கொடுத்தால்கூடப் பத்து பக்கங்களுக்குமேல் படிக்க முடிவதில்லை. காரணம், வாசிப்பு வேகம் தமிழில் அவர்களுக்கு அறவே இல்லை. நீங்கள் கவனித்துப் பாருங்கள். இவ்வருடம் 10வது, 12வது முடித்து வெளியே வரும் எந்த ஒரு பையனும் பெண்ணும் தமிழ்ப் புத்தகங்களை விரும்பி வாசிக்ககூடியவர்களாக இருக்க மாட்டார்கள். தவறி ஒன்றிரண்டு பேர் இருந்தால் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாக இருப்பார்கள்.


இவர்கள்தாம் எதிர்கால வாசகர்கள் என்னும்போது தமிழில் கதைகளையும் கட்டுரை நூல்களையும் அச்சிட்டு வைத்துக்கொண்டிருப்பது அபத்தம் என்று தோன்றுவதில் வியப்பில்லை.


கிண்டில் ஒரு மாற்றா?


ஓரளவுக்கு ஆம் என்று சொல்வேன். கிண்டிலை நான் தொலைக்காட்சித் தொடர்களுடன் ஒப்பிட விரும்புகிறேன். இந்தத் தலைமுறைக்கு முந்தைய, அதற்கும் முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு வரை ஒழுங்காகத் தமிழ் படித்த, வீட்டில் வாங்கும் கல்கி குமுதம் விகடன்களை விடாமல் படித்த பெண்கள் கிண்டிலில் வாசிக்க விரும்புகிறார்கள். அது பெண்களால் பெண்களுக்கும் ஆண்களால் பெண் பெயரில் பெண்களுக்கும் எழுதப்படும் குடும்ப / காதல் / குற்றக் கதைகள். அரை மணி நேரத்தில் படித்து முடித்துவிட்டு உடனே மறந்துவிடலாம். அடுத்ததை எடுத்துவிடலாம். மாதம் 165 ரூபாய் சந்தா கட்டினால் போதும். பத்துப் பத்தாக எத்தனைப் புத்தகங்களையும் எடுத்துப் படிக்கலாம். அன்லிமிடெட் சாத்தியங்கள். கடந்த சில மாதங்களாக இந்த இயலை மிகத் தீவிரமாக கவனித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். பிரபல எழுத்தாளர்கள் நம்பவே முடியாத அளவுக்கு இங்கே புதிய பிரபலங்கள் பலர் உதித்திருக்கிறார்கள். அன்லிமிடெடில் வெளியிட்டு ஐந்து நாள் இலவசம் கொடுத்து ஐம்பதாயிரம் ஒரு லட்சம் தொடு எண்ணிக்கை பெற்று சம்பாதிக்கும் எழுத்தாளர்கள். அவர்களுக்கு அங்கே தனியொரு வாசகர் கூட்டம் சேர்கிறது. இக்கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகித்து வையுங்கள். அடுத்த சனிக்கிழமை வெளியாகும் இதன் இரண்டாம் பாகத்தில் முடிவு தெரியும் என்று புத்தகப் பக்கத்தில் எழுதி விளம்பரம் வைக்கிறார்கள். பத்திரிகைகள் தொடர் அத்தியாயங்களை வெளியிட்டு இறுதியில் அது ஒரு நாவல் புத்தகமாக அச்சாகும் முன்பெல்லாம். இப்போது ஒரு நாவலை வெளியிட்டு, இரண்டாம் பாகத்தை அடுத்த அத்தியாயமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் இந்தப் புதிய அலை எழுத்தாளர்கள்.


இவற்றை யார் படிக்கிறார்கள்?


மிக நிச்சயமாக 28 வயதுக்கு மேற்பட்ட பெண்கள். மாத நாவல்களை வாங்கிப் படித்துக்கொண்டிருந்தவர்கள். இப்போது மொபைல் போனிலேயே அதைப் படித்துவிட முடிகிற மகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்கள். இதே வயது ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் எண்ணிக்கை குறைவு. அவர்கள் அன்லிமிடெட் சந்தாவையும் தவிர்த்துப் படிக்க வழி தேடி ஏடகம் போன்ற இடங்களில் அடைந்துவிடுகிறார்கள். மட்டரகமான பிடிஎஃப், பக்கம்தோறும் வாட்டர் மார்க் இருந்தாலும் ஒரு புத்தகம் ஓசியில் கிடைக்கிறது என்றால் விடத் தோன்றுமா. ஆனால் டவுன்லோட் செய்து வைக்கும் இந்தத் திருட்டு பிடிஎஃப்களை அவர்களில் எத்தனைப் பேர் முழுதாகப் படிக்கிறார்கள் என்று தெரியாது.


கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு விஷயம் கவனித்தேன். புத்தகம் வாங்கிச் சென்றவர்களுள் பெரும்பாலானவர்கள் 50க்கு மேற்பட்ட வயதினர். என் மதிப்புக்குரிய எழுத்தாளர் நண்பர் ஒருவர் (70+ வயது) உடல் நலம் சரியில்லாத போதும் வண்டி வைத்துக்கொண்டு வந்து அள்ளிப் போட்டுக்கொண்டு போனதைக் கண்டேன். அவர்களுக்குக் கிண்டில் தெரியாது; புரியாது. வாசிப்பு என்றால் அச்சுப் புத்தகம்தான்.


ஆனால் இனி வரும் தலைமுறை அச்சு நூல்களை அவ்வளவாக விரும்பாது என்றே தோன்றுகிறது. தவிர, வாசக விருப்பம் என்பதும் கணிசமாக மாறிவிட்டிருக்கிறது. நீண்ட படைப்புகளைப் பலர் இப்போது விரும்புவதில்லை. எடுத்தால் உடனே முடித்துவிடக்கூடியதாக இருக்க வேண்டியது முக்கியம். அவர்களுக்கு முன்னுரை முகவுரைகள்கூட வேண்டாம். முதல் வரியில் கதை. நாற்பத்து ஐந்து பக்கத்தில் முற்றும். அவ்வளவுதான்.


இரண்டாயிரமாண்டுத் தொடக்கத்தில் தமிழில் புனைவு அல்லாத அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அபுனை நூல்கள் நிறைய வெளிவர ஒரு விதத்தில் நான் காரணமாக இருந்தேன். அந்தப் புத்தகங்கள் அப்போது நன்றாக விற்கவும் செய்தன. இன்றுவரை அவற்றின் மறுபதிப்புகள் செல்லுபடியாகிக்கொண்டிருப்பதையும் அறிவேன்.


ஆனால் என்ன விசித்திரம் என்றால் அச்சு நூல்களாகப் பெருவெற்றி கண்ட இத்தகைய பல புத்தகங்கள் மின்நூல் வடிவில் விற்பதே இல்லை. அபுனை நூல் வாசிக்க கிண்டில் ஒரு சரியான கருவியில்லை என்று ஏன் தோன்றுகிறது? இது புரியவில்லை. நான் எனது கிண்டிலில் பெரும்பாலும் புனைவல்லாத புத்தகங்களைத்தான் வைத்திருக்கிறேன்; வாசிக்கிறேன். எனக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் என்னை வைத்து எடை போட முடியாது; கூடாது. பொதுப் பார்வையில் எளிய கதைகளை வாசிக்க கிண்டில் உதவும் என்ற எண்ணம் பலருக்கு உண்டாகியிருக்கிறது. அதற்குச் சேவை செய்யும் கரங்கள் பல புதிதாக முளைத்திருக்கின்றன. ஒளிவுகளற்ற அமேசானின் தளத்தில் இந்த வியாபாரத்துக்கான சாத்தியங்கள் எளிதாக உள்ளன. எனவே அங்கு எளிய குடும்ப நாவல்கள் நிறைய விலை போகின்றன. இலக்கியம் என்னும் சிறுபான்மை வரையறைக்குள் வருபவையும் அன்லிமிடெடில் போனால் சில புதிய வாசகர்களைப் பெறுகின்றன. ஆசிரியருக்குச் சிறிது பணமும் வருகிறது. (அன்லிமிடெடில் போனால் அங்கிருந்து நேரே டெலிகிராம் திருட்டு பிடிஎஃப் சேனல்களுக்குப் போய்விடும் என்பதைச் சொல்ல வேண்டாமல்லவா? அதற்கும் இடம் கொடுத்துத்தான் இதனை முயற்சி செய்ய வேண்டும்.)


எப்படி யோசித்தாலும் பதிப்புத் தொழில் நிலைபெற வாசகர் தேவை. பள்ளி நாள்களில் இருந்து தாய்மொழி முக்கியம் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கக்கூடிய ஆசிரியர்கள் தேவை. தமிழ்ப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கிக் கொடுத்துப் படிக்க வைக்கும் பெற்றோர் தேவை. இந்த மூன்றும் சரியாக இருந்தால்தான் எதிர்காலத்தில் இப்போதுள்ள சிறுபான்மை வாசகர்களாவது எண்ணிக்கைக் குறையாதிருப்பார்கள். என் கவலை இதுவெல்லாம்கூட அல்ல.


Annaikku kaalaila aaru mani irukkum. Kozhi kokkarakoooonnu koovuhi. En pondaatti thalai niraiya malliya poo veccikkittu vandhu ennai usuppuna.


என்று தொடங்கி ஒரு முழுநீள கிண்டில் புத்தகம் அன்லிமிடெடில் வந்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. அப்போது அதை ஆடியோவில் கேட்கும் வசதி சேரும். அதைக் கேட்கத் தொடங்குவோம். மீண்டும் பாட்டி கதை சொன்ன காலத்துக்குப் போய்ச் சேருவோம்.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
3 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2019 11:44
No comments have been added yet.