ஆன்ட்டி வெறியன்
முன்னொரு காலத்தில் அருணாவின் கண்களை ரசித்தேன். பிறகு ஜெயப்ரதா, மாதவி போன்றோரையும் அதே காரணத்துக்காக ரசித்தேன். சிலுக்கு ஸ்மிதாவைப் பார்த்த பிறகு கண் மூக்கு காது என்றெல்லாம் இல்லாமல் மொத்தமாகவே இது எம்மாதிரியான வடிவம் என்று திகைத்து நின்ற அனுபவம் ஏற்பட்டது. பாரதி ராஜாவின் என்னுயிர்த் தோழன் பார்த்தபோது அந்தப் படத்தின் கதாநாயகியைப் பிடித்தது. பிறகு சுவலட்சுமியைப் பிடித்தது. ஊர் உலகமெல்லாம் சிம்ரன் ஜோதிகாவின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தபோது என்னால் அவர்கள் இருவரையுமே ரசிக்க முடியாதிருந்தது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு எல்லா மொழி நடிகைகளும் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பார்ப்பதற்கு எல்லோருமே ஒரே மாதிரி இருப்பது போலத் தென்பட்டது. உலக அழகிகள் என்று சொல்லப்பட்டவர்களை என்னால் ரசிக்க முடியவில்லை. ஆனால் சங்கீதாவைப் பிடித்தது (பாலா படத்தில் நடித்தவர்). இங்கே பெரிய ரசிகர்கள் படை இல்லாத பூனம் பஜ்வா, நிக்கி கல்ரானி, பூஜா ஹெக்டே போன்றோரை ரசித்தேன். விஜய் டிவி சீரியல் மூலம் அறிமுகமான ஹேமாராஜ் சதீஷ், லாவண்யா, ஷாலினி போன்றோரை இன்று ரசிக்கிறேன். பெயர் தெரியாத சில விளம்பரப் பட நடிகைகள் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூப்பர் சிங்கர் போட்டியில் பார்த்த பெயர் நினைவில் இல்லாத இன்னொரு பெண் இருக்கிறாள். இவர்களையெல்லாம் நிதானம் இடறாமல் கூர்ந்து ரசிக்கிறேன்.
பெரும்பான்மை சமூகம் இவர்களை ரசிக்கிறதா, இல்லையா என்பது பற்றியெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. என் ரசனை உயர்ந்ததா, சுமாரானதா, தாழ்ந்ததா என்பது குறித்தும் அக்கறையில்லை. நான் ரசிக்கிறேன். அவ்வளவுதான்.
நிற்க. இந்த நீண்ட பட்டியலுக்கும் விளக்கத்துக்கும் பின்னால் ஒரு விவகாரம் இருக்கிறது.
என் வீட்டில் அவ்வப்போது என்னுடைய ரசனைகள் சார்ந்த தீவிர விமரிசனக் கூட்டம் நடைபெறும். அப்படியொரு தருணத்தில் என் மகள், ‘அப்பா உன் ரசனை அடிப்படையில் நீ ஒரு சரியான ஆன்ட்டி வெறியன்’ என்று சொன்னாள். அவள் இறுதி ஆண்டுப் படிப்புக்குச் செல்லவிருக்கும் பொறியியல் கல்லூரி மாணவி. அவளது வகுப்புத் தோழர்களில் சிலர் இத்தகைய ஆன்ட்டி வெறியன்களாக இருப்பதை நினைவுகூர்ந்து ஆன்ட்டி என்கிற பதத்துக்கு அவளது தலைமுறை வைத்திருக்கும் இலக்கணத்தைச் சொன்னாள். அதன் அடிப்படையில் நான் தற்போது ரசிக்கத் தொடங்கியிருக்கும் கயாடு லோஹரும் ஒரு ஆன்ட்டிதான். அவள் அதைச் சொன்னதுமே என் மனைவி ‘கயாடுவின் புஸ்ஸி ஆனந்த்’ என்று குறிப்பிட்டாள். அந்த விளியில் இருந்த நுணுக்கத்தை மிகவும் ரசித்தேன். இருவர் சொன்னதையும் எண்ணி நாளெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தேன்.
திரைப்படங்கள் சார்ந்த என்னுடைய ரசனையை மிக எளிதாக இரண்டாகப் பிரித்துவிட முடியும். ஒன்று, மிகத் தீவிரமான இரானியப் படங்கள், ஹங்கரி, பிரெஞ்சுப் படங்களைப் பார்ப்பேன். இதைப் பெரும்பாலும் அலுவலகத்தில் தனியே இருக்கும்போது மட்டுமே செய்வேன். வீட்டில் இருக்கும்போது சுந்தர் சி ரக நகைச்சுவைப் படங்களைப் பார்ப்பேன். விஜய் படம், அஜித் படம், சூர்யா படம், ரஜினி-கமல் படங்கள் போன்றவற்றில் பெரிய விருப்பம் இருந்ததில்லை. மீறிச் சில படங்களைப் பார்க்கிறேன் என்றால் அது என் மனைவிக்காகவோ மகளுக்காகவோ உடன் செல்வதாக மட்டுமே இருக்கும். கடைசியாக நானே விரும்பி புக் செய்து, சென்று பார்த்து ரசித்துவிட்டு வந்த படம் மதகஜ ராஜா என்று சொன்னால் எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன்.
சுந்தர் சியைத் தாண்டி நான் வர மறுப்பதனாலேயே நானொரு பூமர் தலைமுறைப் பிரதிநிதி என்று என் மகள் சொல்வாள். பூமராக இருப்பதனால்தான் ஆன்ட்டி வெறியனாகவும் இருக்கிறேன் என்பது அவளது தரப்பு. உண்மையில், திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு போய்விட்டது. வலிந்து என்னை மாற்றிக்கொள்ள நினைத்துப் பார்க்க உட்கார்ந்தாலும் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேலே எந்தப் படத்தையும் பார்க்க முடிவதில்லை. ஆனால் சுந்தர் சியின் முத்தின கத்திரிக்கா என்ற படத்தைக் குறைந்தது இருநூறு முறை பார்த்திருப்பேன். அநேகமாக வாரம் ஒரு முறையாவது நிச்சயமாகப் பார்க்கிறேன். அது அலுப்பதில்லை. காரணம், சிந்திப்பதற்காகவோ, கற்பதற்காகவோ, எதையாவது தேடிப் பெறும் சுகத்துக்காகவோ நான் அந்த ரகப் படங்களைப் பார்ப்பதில்லை. சாப்பிட உட்காரும் நேரத்தில் பத்து நிமிடங்கள் என்னை மறந்து சிரித்து இளைப்பாறும் பொருட்டு மட்டுமே பார்க்கிறேன். அவை என்னை ஏமாற்றுவதில்லை.
அழகிகள் என்று நான் கருதும் பெண்களும் இந்த வகைமைக்குள் வருபவர்களாகத்தான் இருக்க வேண்டும். நடிகைகளின் வயதையோ நிறத்தையோ திருமணம் ஆனவர், ஆகாதவர், சினிமா நடிகை-டிவி நடிகை என்கிற பிரிவினையையோ ஒருபோதும் கருதுவதில்லை. மேலே உள்ள பட்டியலைக் கூர்ந்து பார்த்தீர்களென்றால் குண்டு – ஒல்லி பேதமும் இல்லை என்பது விளங்கும். இந்தப் பெண்களுக்கும் சுந்தர் சி படங்களுக்கும் என்னளவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. நிச்சயமாக ரசிக்கிறேன். ஆனால் எந்தக் கட்டத்திலும் நெக்குருகி நின்றதில்லை. இந்தத் தலைமுறைக்கு அவர்கள் ஆன்ட்டியாகத் தோன்றலாம். ஆனால் நிச்சயமாக நான் வெறியனெல்லாம் இல்லை.
நான் சுருண்டு விழுந்து தாள் பணிந்து கிடக்கும் இடங்கள் சில உள்ளன. சித்தர்களின் மெய்யியல், காந்தியின் நேர்மை, திருவருட்பாவின் அழகு, பழைய ஏற்பாட்டின் கவித்துவம், பிஸ்மில்லா கான், இளையராஜா போன்றோரின் இசை, பஷீர், அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றோரின் எழுத்து, ஆப்பிள் கணினியின் பயன்பாட்டு எளிமை, மினியன், ஆஸ்வல்ட் போன்ற பொம்மைப் படங்களின் அழகியல், எல்லா வகை இனிப்புகளிலும் உறைந்திருக்கும் பிரம்மத்தின் ருசி – இங்கெல்லாம் புழங்கும் நான் வேறு ஆள். இந்தச் சிறிய பட்டியலில் உள்ள எதையும் யாரையும் நான் வெறுமனே ரசிப்பதில்லை. சொல்லப் போனால் ரசித்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. மாறாக நான் – அது அல்லது அவர்கள் என்னும் இருமை நிலையைத் தகர்த்து இரண்டறக் கலந்துவிடப் பார்க்கிறேன். ஆனால், என்னைச் சுற்றி இருப்போரிடம் இருந்து கவனமாக அந்த வேறு ஆளை மறைத்து வைத்துவிடுகிறேன். அவனைப் புரிந்துகொள்ளவோ, ரசிக்கவோ, குறைந்தபட்சம் விமரிசனம் செய்யவோ, கிண்டல் செய்து மகிழவோகூட முடியாது.
சுந்தர் சி படங்களை, கயாடு லோஹரை ரசிப்பவனாக; ஒரு நல்ல பூமராக, ஆன்ட்டி வெறியனாகக் காட்சியளிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஒரு வகையில் எனது தீவிர மனம் குவியும் புள்ளிகளின் பிரத்தியேகத்தன்மையை அது காப்பாற்றித் தருகிறது. அர்த்தமற்ற கருத்துக் குவியல்களின் குப்பை அவற்றின்மீது உதிராமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அப்படி இருப்பதனால்தான் என்னால் இரண்டு ஆண்டுகளில் அதர்வ வேதத்தை அர்த்தம் புரிந்து கற்க முடிந்தது. ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லாத சலத்தை எழுத முடிந்தது.
All rights reserved. © Pa Raghavan - 2022