நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்

Pa Raghavan

இது காலம் கருதி ஆரம்பிக்கப்படுகிற தொடர். வரலாற்றால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் மறுமலர்ச்சி சரித்திரம்.

நமக்குப் பாலஸ்தீனப் பிரச்னை தெரிந்த அளவுக்குக் குர்திஸ்தான் பிரச்னை தெரியாது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிவோம். ஆனால் உய்குர் படுகொலைகள் பற்றி அறியமாட்டோம். அப்படித்தான், காஷ்மீர் பிரச்னையில் செலுத்தும் கவனத்தை பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தத் தவறினோம்.

இரண்டுக்கும் சம வயது. இரண்டுக்கும் காரணம் பாகிஸ்தான். ஒரே வித்தியாசம், காஷ்மீர் ஒன்றுபட்ட இந்தியாவின் ஓர் அங்கம். பலூசிஸ்தான் வஞ்சகத்தால் பாகிஸ்தானுடன் ஒட்ட வைக்கப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இனத்தவரின் மண். தனது சுதந்தரத்துக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான், காஷ்மீர் மீது படையெடுத்து எப்படி அதன் ஒரு பகுதியை அபகரித்ததோ, அதையேதான் பலூசிஸ்தானிலும் செய்தது. ஆனால்  ஒரு பகுதியல்ல. பலூச் மக்களின் மொத்த நிலத்தையும் எடுத்து விழுங்கிவிட்டது.

ஒரு வகையில் அது பிரிட்டனின் கூட்டுச் சதி. இன்னொரு வகையில் பாகிஸ்தானின் பிரத்தியேக சூழ்ச்சி வலை. எப்படியானாலும் இன்றுவரை பலூசிஸ்தான் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியா தம் பக்கம் நிற்க வேண்டும் என்று இன்றைக்குக் கோரிக்கை வைத்து, சுதந்தரப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

இம்மாதம் (மே 2025) இரண்டாம் தேதி தொடங்கிய பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஒன்பதாம் தேதி அதன் உச்சத்தைத் தொட்டு, சுதந்தர பலூசிஸ்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகம் திகைக்க ஒரு நாளாக அன்று ஆகிப் போனது. உண்மையில் பலூசிஸ்தானை நாம் பொருட்படுத்திக் கவனிக்கத் தொடங்கியதே அதன் பிறகுதான். ஆனால் அந்த ஓர் அறிவிப்பின் பின்னால் எழுபத்தேழு ஆண்டுக் கால அடக்குமுறையும் மிதிபட்ட வேதனையும் வதைபட்ட வலியும் இழப்பின் கண்ணீர்க் கறையும் உண்டு.

பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம் அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது. நியாய தருமங்களைச் சற்றும் கருதாதது. பலூசிஸ்தான் மக்கள் அதைத்தான் இத்தனை ஆண்டுக் காலமாகவும் கண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். இது அவர்கள் விடுபடத் துடிக்கும் காலம்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் வரலாற்றை எழுத நேர்ந்தபோது பலூசிஸ்தான் விவகாரம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன்.  ஆனால் காஷ்மீரை மையப் புள்ளியாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மற்றும் பகையின் கதையாக அது விரிந்தபோது பலூசிஸ்தான் பிரச்னை இயல்பாகவே அந்தக் கண்ணியில் விடுபட்டுப் போனது. இப்போது அதற்கு நேரம் அமைகிறது.

வரும் திங்கள்கிழமை முதல் (மே 19) மெட்ராஸ் பேப்பரில் நாள்தோறும் இதனை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். எப்போதும் என் உடன் இருக்கும் வாசக நண்பர்களை இப்போதும் வாசித்துக் கருத்துச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2025 17:30
No comments have been added yet.