DND

சார் எங்க இருக்கிங்க? அர்ஜெண்ட்டா உங்கள பாக்கணும்.


ஒரு தொலைபேசி உரையாடலின் முதல் வரி இப்படியாகத் தொடங்கினால் எதிர்முனையாளர் ஏதேனும் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் இருந்து அழைக்கிறார் என்று பொருள்.


இன்னிக்கு செவன் தர்ட்டி நியூஸுக்கு ஒரு பைட் வேணும் சார் என்பது இரண்டாவது வரி.


எந்தத் தாலிபனாவது எங்காவது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பான். இல்லாவிட்டால் இராக்கில் எவனாவது மசூதியிலோ பாலத்திலோ தூதரகத்திலோ குண்டு வைத்திருப்பான். இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் ஆரம்பித்திருக்கும். ஏதோ ஒன்று. என்னவானாலும் அஞ்சு நிமிஷ பைட்.


விவகாரம் சற்றுப் பெரிது (என்றால் பலி எண்ணிக்கை 15க்குமேல் என்று பொருள்) என்றால் உடனே ஒரு விவாதம். நாலைந்து கருத்து கந்தசாமிகளுடன் கலந்துரையாட வருவீர்.


எப்போது? இப்பவே சார். அல்லது மதியம் மூன்று மணிக்கு. ஆறு மணிக்கு ஏர்ல போகணும் சார்.


முன்பெல்லாம் இத்தகு பைட் சேவைகளை நட்புக்காகச் செய்து வந்தேன். ஒரு கட்டத்தில் இது என் அன்றாடப் பணிகளை மிகவும் கெடுக்கத் தொடங்கியது. கேமராவுக்கு உட்கார நேரமில்லை என்றாலும் பரவாயில்லை; போனில் கருத்து சொல்லுங்கள்; பதிவு செய்து புகைப்படத்துடன் போட்டுவிடுவோம் என்றார்கள்.


இது ஏதடா வம்பாப் போச்சே என்று தப்பிக்க ஒரு வழி கண்டுபிடித்தேன். பைட் கேட்கும் அனைவரிடமும் டீஃபால்ட்டாக பத்ரி, மருதன், சொக்கன் போன்ற சிலரின் எண்களை (அவரவர் சப்ஜெக்டுக்கேற்ப) கொடுத்துவிடுவேன். நான் ஊரில் இல்லை என்றோ, வேலை அதிகம் என்றோ சொல்லி போனை வைத்துவிடுவேன். அவர்கள் என் நண்பர்களை அழைத்தார்களா, இவர்கள் போய்ப் பேசினார்களா என்றெல்லாம் கவலைப்பட்டதேயில்லை. இதற்குக் கூட உதவாவிட்டால் அப்புறமென்ன நண்பர்கள்!


முதலில் என் பிரச்னை நேரம் சார்ந்ததாயிருந்தது. ஐந்து நிமிட பைட்டுக்கு நான் குறைந்தது ஒரு மணி நேரமாவது முன் தயாரிப்பு செய்ய வேண்டியது அவசியம். அத்தனை நேரம் கூடுதலாகக் கிட்டுமானால் இன்பமாகத் தூங்கிக் கழிக்கவே விரும்புவேன். இதனை நேரடியாகவே பலரிடம் சொல்லிப் பார்த்துவிட்டேன். யாரும் கேட்கத் தயாராயில்லை. பட்டனை அழுத்தினால் கருத்து கொட்டிவிடும் என்று நினைக்கிறார்கள் போல. நான் அதற்கு லாயக்கில்லை.


இரண்டாவது காரணம், இந்த ‘பைட்’டர்களுக்கு சம்மந்தப்பட்ட பிரச்னை அல்லது செய்தி குறித்த அடிப்படைத் தகவலறிவுகூட இருக்காது. செய்தி நிறுவனம் தரும் ஒருவரிக் குறிப்பைப் பார்த்துவிட்டு உடனே ஒரு மேட்டர் பண்ணக் கிளம்பிவிடுகிறார்கள். ஒரே ஒரு கேள்வி கேட்பார்கள். அது தொடக்கம். அதை வைத்துக்கொண்டு முழு பிரச்னையையும் விளக்கி, தீர்வையும் சொல்லிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.


டிவி என்று சொன்னால் மாட்டேன் என்று யாரும் சொல்லமாட்டார்கள் என்ற மனப்பான்மை இதில் மிகத் தீவிரமாக இயங்குவதையும் பார்க்கிறேன். பிசியா இருக்கேன் சார் என்றால் ஹாஃபனவர் கழிச்சி வரட்டுமா சார் என்று உடனே கேட்பார்கள்.


என்றைக்கு அந்த முடிவெடுத்தேன் என்று நினைவில்லை. இப்போதெல்லாம் யார் போன் செய்து ‘பைட்’ கேட்டாலும் முடியாது என்று கூசாமல் சொல்லிவிடுகிறேன். என்ன நினைத்துக்கொண்டாலும் கவலையில்லை.


பேசுவது என் தொழிலல்ல. கருத்து சொல்வது எனக்குக் கடமையும் அல்ல. எழுதுவது ஒன்றே என் சுதர்மம். நானாக எங்காவது பேசினால் அது என் சொந்த விருப்பம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.


ஒன்றைச் சொல்லி முடித்துவிடுகிறேன். வெகு சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். புதிதாகத் தொடங்கவிருக்கும் சமையல் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாகப் பல்வேறு விதமான உணவுப் பொருள்களின் வரலாறு குறித்துப் பேசக் கேட்டார். ஏற்கெனவே நான் எழுதியது, புதிய தலைமுறை டிவியில் டாக்குமெண்டரியாகவும் செய்ததுதான். இருப்பினும் நான் முன்னர் எழுதியவை தவிர மிச்சமுள்ள உணவுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாகச் செய்யலாம் என்றார்.


யோசிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். நண்பர் விடாமல் சில நாள்கள் அழைத்துப் பேசிக்கொண்டே இருந்தார். இறுதியில் ஒரு நாள் நேரில் அழைத்து, பதினைந்து நிமிட நிகழ்ச்சிக்கு நான் படித்துத் தயாரிப்பது என்றால் என்ன, அதை எழுதுகிற பணி எத்தகையது, எடுத்துக்கொண்டு வந்து ஸ்டுடியோவில் அதை நானே ப்ரசண்ட் செய்கிற திருப்பணி எம்மாதிரியானது ஆகியவற்றை விலாவாரியாக விளக்கி இதற்கு ஒவ்வொரு எபிசோடுக்கும் எவ்வளவு தருவார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.


இதென்ன பிரமாதம், எங்கள் ப்ரொட்யூசருடன் ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணுகிறேன், வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனவர்தான். ஆளைக் காணோம்.


அடடே இது நல்ல உத்தியாக உள்ளதே என்று எண்ணிக்கொண்டேன். இனி இதேபோல் பைட்டுக்கு அழைப்போரிடமும் ஒரு டாரிஃப் கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன். அல் காயிதா சம்மந்தமென்றால் அஞ்சாயிரம். ஐ.எஸ்.ஐ.எஸ். என்றால் ஏழாயிரம். அமெரிக்கா என்றால் பத்தாயிரம். ஏதாவது புதிய இயக்கப் புறப்பாடு என்றால் கொஞ்சம் டிஸ்கவுண்ட்டும் கொடுக்கலாம், தப்பில்லை.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2014 00:29
No comments have been added yet.