கால வழு
படுத்து ஒரு ஜாமம் கழிந்தும் வியாசருக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு பார்த்தார். மேல் துண்டை இழுத்து முகத்தைச் சுற்றி மூடிக்கொண்டு தூங்கப் பார்த்தார். ஒரு பத்து நிமிடம் எழுந்து உட்கார்ந்து தியானம் செய்தால் ஒருவேளை தூக்கம் வருமோ என்று அதையும் முயற்சி செய்தார். ரொம்ப ஃப்ரெஷ்ஷாகிவிட்டது போலத் தோன்றியது.
அவருக்கு ரொம்ப பயமாகிவிட்டது. இப்படியே விட்டால் வாழ்நாளில் உறக்கம் என்பதே இல்லாமல் போய்விடக் கூடும். ஏதாவது செய்தே ஆகவேண்டும். சரேலென்று எழுந்தார். வேகவேகமாக நதி தீரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
சரியான இருட்டு. பாதை தெரியாத அளவுக்கு இருட்டு. ஆனாலும் பழகிய பாதங்களுக்கு இருளும் ஒளியும் ஒன்றுதான். கால் கரெக்டாகத்தான் செயல்படுகிறது. மனம்தான் பேஜார் பண்ணுகிறது.
‘மாப்ள.. இப்படியே விட்டன்னா நாளைக்கு வியாசன்னு ஒருத்தன் இருந்தான்னு சொன்னாக்கூட யாரும் நம்பமாட்டாங்க.. உன் தரிசனம், கற்பனை, கவித்துவம், புண்ணாக்கு எல்லாத்தையும் காலாவதியாயிருச்சின்னு சொல்லி கடாசிருவாங்க.. முழிச்சிக்கடா’ என்று சக முனித் தோழர் சொன்னது நினைவில் நிழலாடியது.
பதற்றம் அதிகரிப்பது போலிருந்தது. கேஸ் போட்டுப் பார்க்கலாமா என்று யோசித்தார். ஆனால் காலம் கடந்த பிரதிகளுக்கான காப்பிரைட் சட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. தவிரவும் தமிழ்நாட்டில் எந்தக் கதாசிரியனும் கேஸ் போட்டு ஜெயிக்க முடியாது. நாலு நாளைக்கு ஃபேஸ்புக்கில் வேணுமானால் பிரபலமாக இருக்கலாம். சே. இத்தனை யுகங்களுக்குப் பிறகு இப்படியொரு பிராணாவஸ்தை நேருமென்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
இத்தனை புகழும் பிராபல்யமும் தான் எழுதிய காலத்தில் தனக்கு வந்திருக்க வேண்டியது. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து யாருக்கோ சொத்தெழுதிக் கொடுத்துவிட்ட மாதிரியல்லவா இருக்கிறது? இதை அனுமதிக்க முடியாது. சும்மா ஒரு வணக்கம் போட்டுவிட்டு அனைத்தையும் லவட்டிக்கொண்டுவிட்டான். என்னவாவது செய்துதான் தீரவேண்டும்.
உறுதிபூண்டபின் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மறுநாளே ரயிலேறிவிட்டார்.
வருகிற வழியில்தான் என்ன செய்யலாம் என்று தெளிவான ஒரு முடிவுக்கு அவரால் வரமுடிந்தது. கொஞ்சம் குரூரம்தான். ஆனால் வேறு வழியில்லை. இதெல்லாம் டார்த்தீனிய வகையறா. விட்டுவைத்தால் காடாகி அழித்துவிடும். இந்த நாடும் நாட்டு மக்களும் நம்மை ஒரு வில்லனாகவே பார்த்தாலும் பரவாயில்லை. இதை மட்டும் சும்மா விடக்கூடாது. படைப்பாளிக்கு அவன் முக்கியமல்ல. படைப்புதான் முக்கியம்.
சென்னை செண்ட்ரலில் ரயில் பெரும் சத்தமுடன் நுழைந்தது. வியாசர் தனது ஜோல்னாப் பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு இறங்கினார். எந்தப் பக்கம் போவது என்று ஒரே குழப்பமாக இருந்தது. ரயில் வே ஸ்டேஷனே ஒரு ஊர் மாதிரி இருந்தது. சில வினாடிகள் திருதிருவென்று விழித்தார். பிறகு குத்து மதிப்பாக முடிவு செய்து, இறங்கிய இடத்திலிருந்து இடப்பக்கமாக நடக்க ஆரம்பித்தார்.
பத்தடி கூட நடந்திருக்க மாட்டார். யாரோ தபதபவென்று அவரை நோக்கி ஓடி வருவது போலத் தோன்ற, திரும்பிப் பார்த்தார். தோன்றியது பிழையில்லை. ஒருத்தரில்லை. நாலைந்து பேர். பாய்ந்து வந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘நீங்கள்தானே வியாசர்?’ என்றார் நாலைந்தில் ஒருவர்.
வியாசர் திகைத்துவிட்டார். உடம்பெல்லாம் சிலிர்ப்பது போலிருந்தது. அது படைப்பாளிக்கே உரிய எளிய உணர்ச்சிவசப்படல். உடனே அவரது கண்ணில் கனிவும் பேரன்பும் பெருக ஆமென்று மெல்லத் தலையசைத்தார்.
‘உங்களத்தான் சார் தேடிட்டிருந்தோம். எங்க நல்லநேரம் நீங்களே வந்துட்டிங்க.’
‘நீங்க…’ என்று சீரியல் அப்பா மாதிரி செண்டன்ஸை முடிக்காமல் வியாசர் இழுக்க,
‘நாங்க விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துலேருந்து வரோம் சார். இந்த வருஷ அவார்டு உங்களுக்குத்தான்!’ என்றபடி கையைப் பிடித்துக் குலுக்கினார் நாலைந்தில் இன்னொருவர்.
வியாசருக்கு ஒரு கணம் மூச்சடைத்தது. நிதானத்துக்கு வர மிகவும் சிரமப்பட்டார். பிறகு தன்னைத் தொகுத்துக்கொண்டு, ‘விழா கோயமுத்தூர்லதான?’ என்று கேட்டார்.
Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)