செத்தான்யா!
வழக்கமாக என்னைப் பார்க்க வரும் நண்பர், நண்பரொருவர் இன்று மாலை மிகுந்த ஆவேசமுடன் வந்தார். அவர் வந்த நேரம் நான் முந்தானை முடிச்சு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரேமாவின் சதித் திட்டங்கள் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.
‘வாங்க. இன்னிக்கி அமர்க்களமான எபிசோட். உக்காருங்க’ என்றேன்.
‘சீ! என்ன மனுஷன் நீ. ருத்ரய்யா செத்துப் போயிட்டார். இப்படி சீரியல் பாத்துட்டிருக்கியே, வெக்கமா இல்ல ஒனக்கு?’ என்றார்.
எனக்கு அவரது தர்மாவேசத்தின் காரணம் புரிவதற்கும் அவர் ருத்ரய்யாவைக் குறித்துச் சிலபல சொல்லாடல்கள் நிகழ்த்தித் தன் துயரத்தைத் தணித்துக்கொள்ளவும்தான் வந்திருக்கிறார் என்பது புரிவதற்கும் சில வினாடிகள் ஆயின.
நல்லவேளையாக Ad break போட்டான். நான் வால்யூமை ம்யூட் செய்துவிட்டு அவர் பக்கம் திரும்பினேன். ‘காப்பி சாப்பிடறிங்களா சார்?’ என்று கேட்டேன்.
‘எனக்கு விஷயம் கேள்விப்பட்டதுலேருந்து சோறு தண்ணி இறங்கலய்யா. எப்பேர்ப்பட்ட கலைஞன். சே. ஒரு படம் போதும்யா. பின்னி பெடலெடுத்துட்டான்’ என்று சுவரின் இரண்டு பக்கங்கள் சேரும் கார்னரைப் பார்த்தபடி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
‘அவர் இன்னொரு படம் எடுத்திருக்கார் சார். கிராமத்து அத்தியாயம். பாத்திருக்கிங்களா?’
நண்பரொருவர் இப்படி திடுக்கிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘ஓ.. கிராமத்து அத்தியாயம்… கேள்விப்பட்டிருக்கேன். அவரோடதா அது? அப்ப அதுவும் நல்லாத்தான் இருக்கும்.’ என்று சொல்லி சில வினாடிகள் அமைதியாக இருந்தார். மீண்டும், ‘ஆனாலும் அவள் அப்படித்தான் மாதிரி ஒரு படம் தமிழ்ல வரவேயில்லய்யா.. டைட்டில் கார்டுலேருந்தே டைரக்டோரியல் டச் காட்டுவாரு.’
ருத்ரய்யா டைட்டில் கார்டில் என்ன டச் காட்டினார் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். கருப்பு வெள்ளை கார்டு. பின்னணியில் ஷூட்டிங் ஸ்பாட் குரல்கள் ஆங்காங்கே தூவப்பட்ட நினைவு. கமலஹாசன் குரல் கொஞ்சம் பெரிதாகக் கேட்கும். இது ரஷ்தான்; மெயின் பிக்சர் இல்லை என்று ஏதோ சொல்லுவார்.
‘அதான்யா! அதத்தான்யா சொல்றேன்! தன்னோட எண்ட் ரிய எப்படி எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டான் பாத்தியா? உலகத்தரத்துல ஒரு படத்த குடுக்கறவன் தன் படத்த ரஷ்னு சொல்றான்னா என்ன ஒரு தன்னடக்கம் பாரு!’
நான் யோசிக்கத் தொடங்கினேன். ஏனெனில், இந்த இடத்தில் ஏதாவது பேசினால் அவர் அதற்கு ஒரு கவுண்ட்டர் கொடுக்க ஆரம்பிப்பார். Ad break முடிவடையும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
‘மாற்று சினிமாவ முன்னெடுத்தவங்கள்ள இந்தாளு பெரிய முன்னோடிய்யா. வண்ணநிலவன எல்லாம் வேற யாரு சினிமாவுக்கு இழுத்துட்டு வருவாங்க?’
‘கே. ராஜேஷ்வர கண்டெடுத்தவரும் அவர்தான் சார்! எதோ ஒரு படத்துல யாரோ ஒருத்தி புடவைய இழுத்து விட்டுக்கிட்டு தொடைய காட்டிக்கிட்டு மசாலா அரைக்கற மாதிரி ஒரு ஷாட் வெச்சிருப்பாரு.. சிங்கிள் ஷாட்டு சார்! அவ ஏன் இட்லிக்கு அரைக்காம மசாலா அரைக்கறான்னு மட்டும் யோசிச்சிட்டா போதும். டோட்டல் கதையே கன்வே ஆயிரும். பெரிய கலைஞன். சே.’ என்றேன் அவரைப் போலவே.
நண்பரொருவர் திடுக்கிட்டுப் பார்த்தார். நான் சொன்னதன் சாராம்சம் ரொம்ப மெதுவாக அவருக்குள் இறங்கிக்கொண்டிருக்க வேண்டும். பிடிக்கவில்லையோ என்னமோ.
‘ருத்ரய்யாட்ட அதெல்லாம் கிடையாது. க்ளியரா அந்தாளு ஒரு கலைஞன்.’
‘அந்தப் படத்துல கூட ஒருத்திய குத்தாட்டம் போட வெச்சி கமல் ஷூட் பண்ணுவாரு இல்ல?’ – இது நான்.
நண்பரொருவருக்கு சுரீரென்று கோபம் வந்துவிட்டது. நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு எழுந்தார். ‘என்ன பேசற நீ? நீ படத்த பாத்தியா இல்லியா? ஒனக்கு புரிஞ்சிதா இல்லியா? தமிழ்ல பெண்கள் பெருமைப்பட்டுக்கற மாதிரி எடுக்கப்பட்ட ஒரே படம் அதுதான்! அதப் போயி அசிங்கமா விமர்சனம் பண்ணிக்கிட்டு. சுத்த நான்சென்சா இருக்கியே?’
எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சாரி சார் என்று அவசரமாகச் சொன்னேன். Ad break முடிந்து சீரியல் தொடங்கிவிட்டதை கவனித்தேன். ஆனால் இன்று பார்க்க முடியாது. மனம் கனக்க தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டு என் லேப்டாப்பை எடுத்து வந்து விரித்தேன்.
‘என்ன பண்ற?’ என்றார் நண்பரொருவர்.
‘ருத்ரய்யாவ ஞாபகப்படுத்திட்டிங்க. யூட்யூப்ல அந்தப் படம் ஃபுல்லா இருக்கு. ஒரு தடவ பாத்துரலாம்னு…’
நண்பரொருவர் சுவாரசியமாகிவிட்டார். ‘முழுப்படமும் நெட்ல பாப்பியா? துட்டு பழுத்துராது?’
‘சேச்சே. ப்ராட்பேண்ட் கனெக்ஷன் இருக்கு சார். முப்பது ஜிபி லிமிட்டு. ருத்ரய்யாவுக்காகக் கொஞ்சம் போனா தப்பில்ல.’
அவர் தனது நாற்காலியை என் நாற்காலிக்கு நெருக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து ஒரு குழந்தையின் ஆர்வத்துடன், ‘அப்படின்னா கத்தி படம் இருந்தா போடேன். வீட்ல என் சன் பாத்துட்டிருந்தான்.. பிக்சர் குவாலிடி நல்லால்ல. நெட்ல ஹெச்டி வர்ஷன் வந்திருக்கும்ல?’
Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)