இந்த வருடம் என்ன செய்தேன்?

கடந்த பத்தாண்டுகளில் இந்த வருடம்தான் மிக அதிகமாகப் படித்தேன் என்று நினைக்கிறேன். எப்படியும் நூறு புத்தகங்களுக்குக் குறையாது. தினசரி படுக்கப் போகுமுன் கண்டிப்பாக ஐம்பது பக்கங்கள் என்று கணக்கு வைத்துக்கொண்டேன். அதே மாதிரி சந்தியா காலங்களில் தலா இருபத்தி ஐந்து பக்கங்கள். திருக்குறளுக்கான பரிமேலழகர் உரையை முழுதாக வாசித்து முடித்தேன். ஆனால் அவ்வப்போது எடுத்து வைத்த குறிப்புகளில் ஒன்றைக்கூடப் புரட்டிப் பார்க்க நேரம் கிட்டவில்லை. இந்த வருடம் சினிமா தொடர்பாக நிறைய புத்தகங்கள் படிக்க நேர்ந்தது. ஆனால் பெரிதாக எதுவும் மனத்தில் நிற்கவில்லை. வாசித்ததில், தமது தந்தையாரைக் குறித்து ஏவிஎம் குமரன் எழுதிய புத்தகம் மகத்தான ஏமாற்றமளித்ததைச் சொல்லவேண்டும். இதைக் காட்டிலும் ஏவிஎம்மே எழுதிய (அவர் சொல்லி, பால்யூ எழுதிய) தன் வரலாறு அருமையாக இருக்கும். மணிரத்னத்தின் சினிமா படிக்க ஆரம்பித்துப் பாதியில் நின்றுவிட்டது. முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. மகாத்மா காந்தி நூல்களின் முழுத்தொகுப்பு வாங்கியிருக்கிறேன். ஜனவரி முதல் அதுதான். அடுத்த வருடம் முழுவதற்கும்.


O


சென்ற வருடம் மானாவாரியாக ஏகப்பட்ட சீரியல்கள் செய்துகொண்டிருந்தேன். இவ்வருடம் அவற்றைக் கணிசமாகக் குறைத்தேன். அப்படியும் நேரம் போதாத அவஸ்தை தொடரவே செய்கிறது. ஆறு சீரியல்களுக்கு எழுதிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இப்போது இரண்டு, மூன்று எழுதவே நாக்கு தள்ளுகிறது. கடந்த மே முதல் இன்றுவரை ஐந்து அழைப்புகளை மரியாதையுடன் வேண்டாமென்று நிராகரித்திருக்கிறேன். இதனால்தான் கொஞ்சமாவது படிக்க முடிந்திருக்கிறது என்பதை விழிப்புடன் கவனிக்கிறேன்.


ajanthaஇந்த வருடப் படுதோல்வி என்றால் செல்லக்கிளி. கிளி ஏன் பாதியில் செத்தது என்று இன்றுவரை புரியவில்லை. சீரியல் நன்றாகவும் ரேட்டிங் ஒழுங்காகவும் இருந்தும் ஏனோ நூறு எபிசோட்களில் முடித்துவிடச் சொல்லிவிட்டார்கள். அத்தனை அதிகாலை ஸ்லாட்டிலும் நிறையப் பேரை நிமிர்ந்து உட்காரச் செய்த இயக்குநர் செந்தில்குமாரின் தொடர்பும் நட்பும்தான் அதன் ஒரே மகிழ்ச்சி.


இந்த வருடம் புதிதாக ஒப்புக்கொண்டு, இன்றுவரை சிறப்பாகப் போய்க்கொண்டிருப்பது கல்யாணப் பரிசு. பகல் நேரத் தொடர்களில் அது முதலிடத்தை பிடித்திருப்பது டிசம்பரின் மகிழ்ச்சி.


இரண்டு வருடங்களைக் கடக்கும் வாணி ராணியில் அதே உற்சாகத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். பூரண சுதந்தரமென்பது இங்கு கிடைப்பதுதான். இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரம், அஜந்தா டிவி அவார்ட்ஸின் இந்த வருட சிறந்த வசனகர்த்தா விருது வாணி ராணிக்காக எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி வந்திருக்கிறது. வாணி ராணி வசனத்துக்குக் கிடைக்கும் இரண்டாவது விருது இது.


O


நவம்பர் வரை ஒரு படம் கூடப் பார்க்க முடியவில்லை. சென்ற மாதம் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒரு மாத கல்யாணப் பரிசுக்கான காட்சிகளை ஒரே மூச்சில் எழுதி அனுப்பிவிட முடிந்ததால் சேர்ந்தாற்போல் ஒரு ஏழெட்டு நாள் ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் சில படங்கள் பார்த்தேன். பார்த்ததில் பிடித்தது திருடன் போலிஸ். அடுத்தபடியாக அப்புச்சி கிராமம். எப்படியும் முகமூடி பார்த்துவிடுவேன். நான் போவதற்குள் அது போய்விடாதிருக்க வேண்டும்.


O


வருடம் முழுதும் ஒரு வெளியூர்ப் பயணம் கூட இல்லை என்பது மிகுந்த வருத்தம் தருகிறது. சென்ற முழு வருடப் பரீட்சை முடிந்ததும் எங்காவது போகலாமா என்று மகள் கேட்டாள். பதில்கூடச் சொல்ல முடியாமல் ரொம்ப வெட்கப்பட்டேன். அடுத்த வருடம் இம்மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.


O


roomபல்லாண்டுகாலக் கனவு இந்த வருடம் நனவானது. புண்ணிய க்ஷேத்திரமாம் குரோம்பேட்டையில் சொந்தமாக ஒரு ஃப்ளாட் வாங்கிக் குடிபோனேன். என் உத்தியோகத்துக்குக் கோடம்பாக்கம்தான் சரி என்றாலும் வம்படியாக இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். வாரத்தில் ஓரிரு தினங்களாவது வீட்டில் தங்கமுடியாமல் போகிறது. இருப்பினும் என் விருப்பத்துக்கேற்ற வசதிகளுடன் அமைத்துக்கொண்ட இந்த எழுதும் அறை என்னளவில் ஒரு சாதனை.


O


அடித்துப் பிடித்து ஜனவரிக்கு மூன்று புதிய புத்தகங்களைக் கொண்டுவந்துவிடுகிறேன். சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி, கால் கிலோ காதல் அரை கிலோ கனவு. தவிரவும் இரு மறு பதிப்புகள் வருகின்றன. அடுத்த வருடம் ஒரு நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது. எந்த ப்ரொட்யூசர் என்னை ஏரோப்ளேன் ஏற்றி இஸ்தான்புல்லுக்கு அனுப்பிவைக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.


O


உடலுழைப்போ, உடற்பயிற்சியோ சுத்தமாக இல்லை. முதல்முதலாக அது குறித்த மெல்லிய கவலை வந்திருக்கிறது. ஆனால் என்ன செய்வதென்றுதான் புரியவில்லை. குரோம்பேட்டைக்கு வந்தால் வீட்டுக்குப் பக்கத்தில் நீச்சல் குளம் இருக்கிறது. உடனடியாக ஓடிப் போய் குதித்து ஒரே மாதத்தில் தமன்னா போலாகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டதில் ஒன்றும் குறைச்சலில்லை. ஆனால் ஒருநாள்கூடப் போக முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். அடுத்த வருடம் ராக்கூத்தடிப்பதைத் தவிர்க்க நினைத்திருக்கிறேன். மதியத் தூக்கத்தைத் தவிர்த்து அப்போதும் எழுதி, ராத்திரி ஒழுங்காகப் பத்து மணிக்குப் படுத்துவிட்டால் காலை ஆறு மணிக்கு எழுந்து நீச்சலுக்குப் போக முடியும். முயற்சி செய்து பார்க்கவேண்டும்.


O


கே. பாலசந்தர், கைலாசம், விகடன் பாலசுப்பிரமணியன், கூத்தபிரான். இந்த நால்வரும் வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு காலக்கட்டங்களில் என்னை மிகவும் பாதித்த ஆளுமைகள். இவர்கள் நால்வரும் இந்த ஆண்டு காலமானது என்னளவில் பெரிய துக்கம். விகடன் பாலசுப்பிரமணியன் அவர்களுடன் எனக்கு நேரடிப் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் அவரது ஆசிரியத்துவத்தின் நேர்த்தி கண்டு பல சமயம் பிரமித்திருக்கிறேன். என் விகடன் நண்பர்கள் அவரைப் பற்றிச் சொன்ன பல கதைகளைக் கேட்டு மானசீகத்தில் அவரைப் பலமுறை வணங்கியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் ஒரு பெரும் நல்ல தலைமுறையை உருவாக்கியவர். அவர் கை வைத்துத் துலக்கிய எந்தப் பாத்திரமும் ஜொலிக்காது போகவில்லை என்பதை விழிப்புணர்வுடன் கவனிக்கிறேன்.


திரு கூத்தபிரானை பன்னிரண்டு வயதில் முதல் முதலில் சந்தித்தேன். வானொலி அண்ணாவாக, ரேடியோ ஸ்டேஷனில் எனக்கு முதல் முதலில் வாய்ப்புக் கொடுத்தவர். மிகப் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் மைலாப்பூர் ஆர்ட்ஸின் விருதளிப்பு நிகழ்ச்சியில் அவரை மீண்டும் சந்தித்தபோது கையைப் பிடித்துக்கொண்டு வெகுநேரம் பேசினார். என் பல வசனங்களை அவர் நினைவுகூர்ந்து மனப்பாடமாகச் சொன்னது உண்மையில் பிரமிப்பாக இருந்தது. உங்களிடமிருந்துதான் தொடங்கினேன் என்று நான் சொன்னபோது ஒரு குழந்தை போலவே சந்தோஷப்பட்டார். நல்ல ஆத்மா.


கே. பாலசந்தர். இப்போது எழுதினால் உடைந்துவிடுவேன். என்றாவது ஒருநாள் தனியே எழுதுகிறேன். அவரும் சரி, கைலாசமும் சரி. தனித்தனியே எனக்கு நிறைய செய்திருக்கிறார்கள். இருவருமே இன்றில்லை என்பதை ஜீரணிக்க மிகுந்த சிரமமாக உள்ளது.


O


பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் ஓய்வுக்காக மிகவும் ஏங்கினேன். ஆனால் ஒருநாளும் அது கிடைக்கவில்லை. வழக்கத்தைக் காட்டிலும் அதிக சோர்வை உணர்கிறேன். 2015ல் எப்படியாவது தினசரி ஆறு மணிநேரமாவது ஒழுங்காகத் தூங்கிவிடவேண்டும் என்பது வீர சபதம்.


O


நண்பர்கள் அனைவருக்கும் முன் தேதியிட்ட புத்தாண்டு – பொங்கல் நல்வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2014 11:56
No comments have been added yet.