NTFS-3G பிரச்னை

இரண்டாண்டுகளுக்கு முன்னால் விண்டோஸைத் தலைமுழுகிவிட்டு ஆப்பிள் கணினிக்கு மாறியபோது எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்த ஒரே விஷயம், என் பாகவதர் காலத்து ஹார்ட் டிரைவ்களை எப்படி இதன் சின்னவீடாக செட்டப் செய்வது என்பதுதான்.


என் மாக்குப் புத்தகக் காற்று ஏற்கும் நவீன அடைசல் டப்பாக்களைப் புதிதாக வாங்குவது எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் என் பழைய டப்பாக்களுக்குள் இருப்பதை கணினிக்குள் கடத்துவது எப்படி? அனைத்தையும் மாக்குப் புத்தகத்தில் சேகரித்து வைக்கவும் முடியாது. இடம் காணாது.


குறிப்பாக ஒரு டப்பா முழுதும் பல நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் உள்ளன. இன்னொரு டப்பாவில் அவற்றிலிருந்து நான் தனியே எடுத்து சேகரித்த முக்கியமான படங்கள் மட்டும் இருந்தன. இவற்றை மட்டுமாவது காப்பாற்ற முடிந்தால் தேவலை என்று தோன்றியது.


ஆனால் ஆப்பிளோ பழைய டப்பாக்களை உள்ளே சேர்க்க மாட்டேனென்றது. எத்தனை முயற்சி செய்தாலும் எரர். NTFS எரர். சில டப்பாக்களுக்கு NTFS 3G எரர். என்னை மாக்குக்கு மாற்றிய கோகுலே ஒருநாள் முயற்சி செய்து பார்த்தார். அவரது அலுவலக விற்பன்னர்கள் ஒரு சிலரும் அம்முயற்சியில் அப்போது பங்கேற்றனர். என்னென்னவோ டவுன்லோடு செய்து ரன் செய்து பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. வெறுத்துப் போய் விட்டுவிட்டேன்.


1பிறகு படம் பார்ப்பதற்கென்று தனியே ஒரு Mitsun வாங்கி என் பிரத்தியேக தியேட்டரை கணினிக்கு அருகிலேயே அமைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் ஓர் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. என்னவாவது செய்யவேண்டும். ஏதாவது ஒரு வழி கிடைக்காமல் போகாது.


நேரம் கிடைக்கும்போதெல்லாம் இணையத்தில் NTFS 3G குறித்து ஏராளமாகப் படித்தேன். ஒரு வரியும் புரியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் பிரச்னை எனக்கு மட்டுமல்ல, மேவரிக்ஸ் காலம் தொட்டு மாக்குப் புத்தக உபயோகிப்பாளர்கள் அத்தனை பேருமே இந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று பல ஃபோரங்களில் கண்ட புலம்பல்கள் மூலம் அறிந்தேன்.


ஆப்பரேடிங் சிஸ்டம் அப்கிரேடு ஆகும்போது பழைய தாத்தாக்களைத் தூக்கி உடைப்பில் போட்டுவிடுகிறது. இது எட்டர்னல் பிரச்னை. என்னவாவது செய்துதான் தீரவேண்டும். ஆனால், என்ன செய்யலாம்?


ஆப்பிள் ஃபோரங்களில் பலபேர் அவ்வப்போது சிபாரிசு செய்த NTFS பேக்கேஜ்களைத் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓடவிட்டுப் பார்த்தேன். பேக்கேஜெல்லாம் இறங்கிவிடுகிறது. ஆனால் டப்பாதான் செட்டு சேர மறுத்தது. குறைந்தது எட்டு முறை படுதோல்வி கண்டிருப்பேன். இன்ஸ்டால் செய்த பேக்கேஜ்களை எப்படி அன் இன்ஸ்டால் செய்வது என்றே தெரியாதபடிக்கு என் அப்ளிகேஷன் ஃபோல்டரில் ஒரே NTFS கோப்புகளாக இருந்தன. பல வர்ஷன்கள்.


ஒருவழியாக இப்போது இதற்கொரு தீர்வு பிடித்துவிட்டேன். இன்று என் மாக்குப் புத்தகக் காற்று என் பாகவதர் காலத்து பஃபல்லோ டப்பாவைத் திருமணம் செய்துகொண்டது. சாந்தி முகூர்த்தமும் சிறப்பாக நடந்தேறிவிட்டது.


என்ன செய்தேன் என்று சொல்லுகிறேன்.


NTFS 3Gயை ஒரு மாக்கு எழுதவேண்டுமானால் அதற்கு MacFuse உறுதுணை அவசியம். இதிலேயே உங்கள் சிப் இண்டல்லாக இருந்தால் ஒரு ரகம், மற்றதாக இருந்தால் வேறு ரகம். என்னுடையது இண்டல்.


எனவே இங்கிருந்து அதனை எடுத்தேன். திறமூலம்தான். இதுவே காசுக்கும் கிடைக்கிறது. நமக்கெதற்கு அதெல்லாம்?


ஆச்சா? முதலில் Fuseஐப் போட்டுவிட்டேன். பிறகு NTFS 3Gஐ இங்கிருந்து இறக்கினேன்.


இந்த இரண்டையும் இன்ஸ்டால் செய்து ஓடவிட்ட பிறகு அதுவே ஒருமுறை ரீஸ்டார்ட் கேட்கும். கேட்டால் கொடுத்துவிடுங்கள்.


இதன் பிறகு காலாவதியான பழைய ஹார்ட் டிரைவ்களை மேக்கில் சொருகினாலும் ஒரு அச்சுறுத்தல் உண்டு. அது கீழ்க்கண்டவாறு தெரியும் மெசேஜ்.


Screen Shot 2015-02-08 at 9.36.23 pm


ntfs3gntfs3gntfs3gகண்டுகொள்ளாதீர்கள். மெசேஜ் மட்டும் விட்டகுறை தொட்ட குறையாக வருமே தவிர உங்கள் ஹார்ட் டிரைவை மேக் அதற்குள் படித்து, எழுதி முடித்திருக்கும்! என்ன ஒரே பிரச்னை, உங்கள் டிரைவுக்கு ஒரு பேர் கொடுத்திருந்தீர்கள் என்றால் அந்தப் பெயர் வராது. பதிலாக பெயரில்லா டப்பா என்று பக்கவாட்டில் காட்டும்.


Screen Shot 2015-02-08 at 9.39.01 pm


பெயரில் என்ன இருக்கிறது? நமக்குக் காரியம் ஆனால் சரி.


நண்பர்களே, எனக்குத் தொழில்நுட்பக் கட்டுரைகளை எப்படி எழுதுவதென்று தெரியாது. நான் எழுதிய இந்தக் குறிப்பு சர்வ நாராசமானது என்று உங்களுக்குத் தோன்றுமானால் மன்னியுங்கள். ஆனால் என்னளவில் இது ஒரு மகத்தான கண்டடைவு. NTFS 3G பிரச்னை தீர முதலில் MacFuse இன்ஸ்டால் செய்யவேண்டும் என்பதை இதிலிருந்து அறிந்துகொண்டேன். டப்பாக்களைப் பயன்படுத்துவதற்காகவென்றே விண்டோஸ் மடினியொன்றை இடுப்பில் முடிந்துகொண்டு போகும் அவஸ்தையில் இருந்து இன்றுமுதல் விடுதலை பெற்றேன்.


நான் பெற்ற இன்பம் இதர மாக்குப் புத்தகக் காற்றாளர்களுக்கும் (புரோ ஆசாமிகளுக்கு இது உதவுமா என்று தெரியாது.) கிடைப்பதற்காக இங்கு எழுதி வைக்கிறேன். யாராவது இதன் அபத்தங்களைச் சரி செய்து சுத்தமான தொழில் மொழியில் எழுதி, பொதுவில் போட்டு வைத்தால் அதுவும் ஒரு சமூக சேவையென்றே கருதப்படும்.


பிகு: ஹார்ட் டிரைவ்களை – சேகரிப்பான்களை விண்டோஸ் கணினியில் சொருகிப் பயன்படுத்தும்போது சரியாக அன் – மௌண்ட் செய்யாமல் அப்படியே ஒயரைப் பிடுங்கும் வழக்கம் நம்மில் பலருக்குண்டு. அப்படி திடீர்ப் பிடுங்கல்களுக்கு ஆட்படும் டப்பாக்களை மாக்குப் புத்தகம் ஏற்பதில்லை. அனைத்திலும் ஒரு ஒழுக்கம் வேண்டும் என்று கேட்கிறது. என்னதான் NTFS 3G இன்ஸ்டால் செய்து ரன் செய்து பாதையை ஒழுங்கு படுத்தினாலும் ஒரு முறை விண்டோஸ் கணியில் உன் டப்பாவைச் சொருகி ஒழுங்காக அன் – மௌண்ட் பண்ணிவிட்டு வா என்று உத்தரவிடுகிறது. கவனமாக அதனையும் ஒருமுறை செய்துவிடுங்கள்!


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2015 08:13
No comments have been added yet.