இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான்.
குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எதற்காகவாவது format செய்யவேண்டி நேர்ந்து அதிலும் பல அழிந்து போனது. Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஜிமெயில் காலத்துக்குப் பிறகுதான் எழுதியவை இல்லாது போகவாய்ப்பில்லை என்றானது. அக்காலம் வந்தபோது நான் சிறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.
எதிலும் ஒழுங்கில்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என் ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகிப் போனது எம்பெருமான் சித்தம். பெரிய இழப்பு ஒன்றுமில்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலில்லை.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பிலும் இல்லை. கல்கி, அமுதசுரபி, குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. சில கதைகள் எனது இணையத் தளத்தில் மட்டுமே பிரசுரமானவை. பிரசுரம் சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதிர்ந்துபோனபிறகு எழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கிறது. இலக்கிய ரப்பர் ஸ்டாம்புகளுக்காகவோ, விருது கிளுகிளுப்புகளுக்காகவோ எழுதாமல் முற்றிலும் என் சொந்த சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதிய கதைகள் இவை.
உங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காது போனாலும் பிரச்னையில்லை.
ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமிழில், குறிப்பாக என்னுடைய தலைமுறையில் என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக எழுதக்கூடிய எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிட்டாத சில அபூர்வ நல்வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரில் பேசிப் பழக முடிந்திருக்கிறது. கடிதத் தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. உட்கார்ந்து அரட்டையடிக்க முடிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதிக்கு மீறியவை. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சிறந்த இலக்கியமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தியமும் இல்லை. மாதம் பிறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும், படுத்த வினாடி வருகிற உறக்கமும், பிரச்னையற்ற சூழலும், சுக சௌகரியங்களும் அனுபவிக்கக் கிடைக்கும் வாழ்விலிருந்து இலக்கியம் பிறக்காது.
அதற்குச் செருப்படி படவேண்டும். வலி மிகுந்த வாழ்விலிருந்தே பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்கி பட்ட பாடுகளை இன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்தி காட்டும் உலகை இன்னொருத்தன் காட்டிவிட முடியுமா. அசலான இலக்கியமென்றால் அது. நான் அந்த ரகமல்ல. வேறெந்த ரகமும் அல்ல.
என் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது விஷயம்
[விரைவில் வெளிவரவுள்ள யாளி முட்டை சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை].
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)