ஆயிரம் ரூபாய் தீவிரவாதம்

ஆயிரம் பக்கப் புத்தகங்களை நானே எழுதியிருக்கிறேன். ஆனால் ஆயிரம் ரூபாய் விலையுள்ள புத்தகத்தைப் பூமணிதான் எழுதியிருக்கிறார்.”


என்று சிலகாலம் முன்னர் ஒரு ட்விட் போட்டேன். விதி வலிது அல்லது நல்லது. மாயவலையின் புதிய செம்பதிப்பு இப்போது ஆயிரம் ரூபாய் விலையில் வெளியாகியிருக்கிறது (மதி நிலையம்). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்தனாம்பெரிய (கிட்டத்தட்ட 1300 பக்கங்கள்) குண்டு புஸ்தகத்தை மதி நிலையத்தார் ஐந்நூறு ரூபாய்ப் பதிப்பாகவே விற்றுக்கொண்டிருந்தார்கள். சற்றே சுமாரான பேப்பர், அதைவிடச் சுமாரான அட்டையில் அச்சுத்தரம் மட்டும் சிறப்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டு அந்த விலைக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாசக மகாஜனங்கள் வாங்கிக் கொண்டாடினாலும் எனக்குத்தான் அந்தப் பதிப்பு பிடிக்கவில்லை. பதிப்பகத்தாரைப் படாதபாடு படுத்தி இந்தப் பணக்கார எடிஷனைக் கொண்டு வந்த பாவமோ புண்ணியமோ என்னையே சாரும்.


mayavalai_nilam


என் அனுபவத்தில் டாலர் தேசம், மாயவலை, நிலமெல்லாம் ரத்தம், ஹிட்லர் – இந்த நாலு புத்தகங்களும் என்ன விலை வைத்தாலும் விற்கின்றன (அவற்றின் முதல் பதிப்பு தொடங்கி). இணைய உத்தமர்கள் எத்தனை ஆயிரம் திருட்டு பிடிஎஃப் சர்க்குலேட் செய்தாலும் இதன் விற்பனை பாதிக்கப்படுவதில்லை. எனவே மக்களுக்காக இரண்டு பதிப்பு போட்டால் நூலாசிரியனுக்காக ஒரு பதிப்பு என்பதில் தப்பில்லை என்று தோன்றியது.


ஜெயமோகன் வேறு வெண்முரசு செம்பதிப்பு மேளா நடாத்திக்கொண்டிருக்கிறார். தீவிர அ-இலக்கியவாதியானவன் தன் பங்குக்கு இந்தளவாவது தமிழ் மகாஜனங்களைக் கலவரப்படுத்தாவிட்டால் எப்படி?


எனவே அசத்தல் பைண்டிங், அசகாய பேப்பர், சொக்கன் பெருமூச்சுவிட கலர் கலராகப் பட்டுநூல் உள்ளிட்ட கிளுகிளு அம்சங்களுடன் அழகு கொஞ்சும் அற்புத எடிஷனாக மாயவிலை, 1000 உரூபாய் விலையில். தமிழகமெங்கும் அனைத்துப் புத்தகக் கடைகளிலும் இது கிடைக்கும். இணையத்திலும் வாங்க முடியும் (விகேன்புக்ஸ், என்னெச்செம் இன்னபிற). மதி நிலையத்துக்கு எழுதிக் கேட்டும் ([email protected]) தபாலில் பெறலாம்.


மாயவிலையோடு கூட நிலமெல்லாம் ரத்தமும் மறு பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இதுவும் கெட்டி அட்டை, உயர்ரகத் தாள் எடிஷன். விலை ரூ. 600.


ததாஸ்து.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2015 11:23
No comments have been added yet.