Pa Raghavan's Blog, page 20

December 19, 2016

ருசியியல் – 02

சென்ற வாரக் கந்தாயத்திலே குறிப்பிட்ட விரோதிக்ருது வருஷத்து ஜனனதாரி பாராகவன், எனக்கு ரொம்ப நெருக்கமான சினேகிதன். எவ்வளவு நெருக்கம் என்று கேட்பீர்களானால், வங்கியில் பணமெடுக்கப் போகிறவர் நிற்கிற வரிசை நெருக்கத்தைக் காட்டிலும் பெரிய நெருக்கடி நெருக்கம். நடை உடை பாவனையில் ஆரம்பித்து, எடை இடை சோதனை வரைக்கும் என்னை அப்படியே காப்பியடிப்பது அவன் வழக்கம். ரொம்ப முக்கியம், அவனும் ஒரு சிறந்த சாப்பாட்டு ராமன்.


ஓர் உதாரணம் சொன்னால் உங்களுக்கு அவனை அல்லது என்னைப் பின் தொடரலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய உபகாரமாயிருக்கும்.


ஒரு சமயம் அவனும் நானும் உத்தியோக நிமித்தம் காஞ்சீபுரத்துக்கு சிறு பயணமொன்று மேற்கொண்டிருந்தோம். உத்தியோக நிமித்தமென்பது ஒன்றரை மணி நேர வேலையே. எனவே அதை முடித்த பிற்பாடு என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஒரு நிமிஷம் இரு என்று சொல்லிவிட்டு பாராகவன் யாருக்கோ போன் செய்தான். அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது. செட்டியார் கடை போன் தான். ஒரு ஏழெட்டு நிமிடம் பேசியிருப்பான். கவனமாக என்னிடம் காசு வாங்கி கடைக்காரருக்குக் கொடுத்துவிட்டு, ‘நாம் சில மணி நேரம் இங்கே ஊரைச் சுற்றுவோம். இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பி சின்ன காஞ்சீபுரத்துக்குப் போகிறோம்’ என்று சொன்னான். பேருக்கொரு தம்பி இருந்தென்ன? ஊருக்கே ஒரு தம்பி உண்டென்றால் அது இங்கேதான்.


மணி அப்போது மதியம் பன்னிரண்டரை என்று நினைவு. ஒன்றிரண்டு மணி நேரம் சுற்றிக்கொண்டே இருந்தோம். களைப்பாகிவிட்டது. டேய், இரவு வரை ஊர் சுற்றிக்கொண்டாவது எதற்காக அல்லது யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? திருவெஃகா யதோத்காரியைச் சேவிக்கவா? திருமழிசையாழ்வார் அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் சுமாராக எனக்கும் வெண்பா எழுத வரும். விரும்பிக் கேட்பாரானால் ஆழ்வாரைப் போல் அவர் பேருக்கொன்று எழுத ஆட்சேபணை இல்லை. எனக்காக அவர் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு நான் நின்றிருந்த அரப்பணச்சேரிக்கே வர முடிந்தால் இன்னும் விசேடமாயிற்றே? கால் வலி கொல்கிறது மகனே.


இல்லை. இது பக்தி சம்பந்தப்பட்டதில்லை. பசி சம்பந்தப்பட்டது என்று பாராகவன் சொன்னான். மாலை வரை நடந்து தீர்த்தால் பசி பிறாண்டும். அதோடு ஒரு சினிமாவுக்குப் போவோம். உள்ளூர் தியேட்டரில் என் தங்கை கல்யாணி ரிலீஸ் ஆகியிருக்கிறது. கொலைப்பசியோடு கூட உணர்ச்சி வேகங்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு சிறு பயணம் மேற்கொள்வோம். சின்ன காஞ்சீபுரம். உலகின் அதி உன்னத ஊத்தப்பமானது அங்கே உள்ள ஒரு ராயர் மெஸ்ஸில்தான் கிடைக்கும்.


ஆன்மாவுக்கு நெருக்கமானவன் யாருக்கோ போன் செய்து விசாரித்து இப்படியொரு தகவலைச் சொல்லும்போது நான் எப்படி மறுக்க முடியும்? அன்று முழுநாளும் சுற்றித் தீர்த்துவிட்டு சின்னக் காஞ்சீபுரம் ராயர் கடைக்குப் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டே முக்கால்.


அந்த மெஸ்ஸானது இருட்டிய பிறகுதான் திறக்கும். எட்டு மணிக்கு மேல்தான் கூட்டம் வரும். பதினொரு மணிக்குள் எப்படியும் முன்னூறு நாநூறு ஊத்தப்பங்கள் கபளீகரமாகிவிடும் என்றார்கள்.


இது எனக்கு வியப்பளித்தது. நானறிந்த காஞ்சீபுரமானது, இட்லிக்குப் புகழ்பெற்றது. ரெகுலர் இட்லியல்ல. காஞ்சீபுரம் இட்லி என்பது வைஷ்ணவ ருசி அடையாளங்களுள் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டது. வரதராஜப் பெருமாள் இன்றளவும் தளதளவென மின்னுபுகழ் தேக சம்பத்தோடு இருப்பதற்கு அதுவே காரணம்.


மூன்று தம்ளர் அரிசிக்கு ஒரு தம்ளர் உளுத்தம்பருப்பு. இரண்டையும் சேர்த்தே அரைக்க வேண்டும். கிரைண்டரெல்லாம் அநாசாரம். உரலில் இட்டுத்தான் அரைக்கவேண்டும். அதுவும் அரை நறநறப்புப் பதத்தோடு அரையல் நின்றுவிட வேண்டும். பிறகு சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை என ஐந்து ஐட்டங்களை அதே நறநறப்புப் பதத்தில் இடித்து அதன் தலையில் கொட்டி, மேலுக்கு அரை தம்ளர் உருக்கிய நெய், இரண்டு கரண்டி நல்லெண்ணெய் சேர்ப்பது அவசியம். உப்பு சேர்த்துக் கிளறி பொங்க வைத்துப் பிறகு இட்டு அவித்தால் இட்டவி என்கிற இட்லி தயார். எள் சேர்த்து அரைத்த மிளகாய்ப்பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் இந்தக் காஞ்சீபுரம் இட்லியைக் கிலோ கணக்கில் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். நிறுத்தத் தோன்றாது.


ஆனால் இங்கு இதனை நிறுத்திவிட்டு மேற்படி ராயர் கடை ஊத்தப்பத்துக்கு வருவோம். நான் அங்கே நான்கு ஊத்தப்பங்களுக்கு ஆணை கொடுத்தேன். காலை சாப்பிட்டதற்குப் பிறகு வேறெதையும் உண்டிராதபடியால் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. இத்தனை மெனக்கெட்டுக் காத்திருந்து வந்திருக்கும் ராயர் கடை ஏமாற்றிவிடக் கூடாது என்று தவிப்பு ஒருபுறம். பத்து மணிக்குமேல் இந்த வெண்ணைக்குச் சென்னை செல்லப் பேருந்து கிட்டுமா என்கிற பயம் ஒருபுறம்.


எல்லாம் சிறிது நேரம்தான். ஊத்தப்பங்கள் வந்தன. பொன்னிறத்துப் பெண்ணுக்கு சந்தனக்காப்பு இட்டாற்போன்றதொரு நிறம். நடுநடுவே குழித்துக்கொண்ட ஓட்டைகளில் உலகளந்த பெருமாள் உறைந்திருக்கலாம். இதிலும் நெய் – நல்லெண்ணெய் கலந்திருந்ததை நாசி காட்டிக்கொடுத்தது. தொட்டதும் சுட்டதில் ஒரு சுகமிருந்தது. விண்டெடுத்து வாயில் இட்டபோது விண்டுரைக்க முடியாத அதிருசியை அனுபவித்தேன்.


ஒரு விஷயம். தோசை மாவு புளித்தால் ஊத்தப்பம் என்பது அக்வாகார்டில் வடிகட்டிய அயோக்கியத்தனம். ஊத்தப்பத்துக்கு நிறைய மெனக்கெட வேண்டும். அதிகம் புளிக்காத மாவில் சேர்க்கப்படும் ரவையின் அளவு இதில் முக்கியம். தக்காளி, கேரட், வெங்காயம், குடைமிளகாய்த் தூவல் முக்கியம். விதை எடுத்த பச்சை மிளகாயின் நேரடி வாசனை அதிமுக்கியம். மாவில் சீரக, பெருங்காயச் சேர்மானம் அனைத்திலும் முக்கியம். இவை அனைத்துக்கும் பிறகு சமைப்பவரின் பொறுமை. வருடும் சூட்டில்தான் அடுப்புத்தீ இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்து முடிக்க இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகலாம். திருப்பிப் போட்டு மூடி வைத்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்கள்.


உலகத்தர ஊத்தப்பம் செய்வதென்பது ஆயகலை அறுபத்து நான்கைவிட அசகாயக் கலை. அதை அந்த ராயர் மெஸ்ஸில்தான் நான் உணர்ந்தேன். என்ன ருசி! எப்பேர்ப்பட்ட ருசி! கிரங்கிப் போய் உண்டுகொண்டிருந்தபோது, பொடி ஊத்தப்பம் கொண்டு வரவா என்றார் ராயர். பொடி தோசை போலப் பொடி ஊத்தப்பம் போலும். சரி அதற்கென்ன? கொண்டு வாருங்கள்.


வந்தது. ஒரு விள்ளல். அடுத்த விள்ளல். மூன்றாவது விள்ளலில் நான் அலறியேவிட்டேன். ஐயா இது என்ன பொடி? எப்படி இதில் இத்தனை ருசி?


கல்லாதாரி சிரித்தார். ‘என்ன பொடின்னு தோணறது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டார்.


அது மிளகாய்ப் பொடிதான். அதைத்தாண்டி அதில் வேறு ஏதோ கலந்திருக்கிறது. என்னவாயிருக்கும்? அவர் சொல்லவில்லை. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டு, விடைகொடுத்துவிட்டார்.


ஏற்கெனவே சுண்டலின் மேலிட்ட வண்டலின் சூட்சுமம் புரியாது குழம்பிக்கொண்டிருந்தவனுக்கு இது இரண்டாவது தாக்குதல். ஏதேது, முடியின்றி மூவுலகில்லாதது போலப் பொடியின்றி உணவின் ருசியில்லை போலிருக்கிறதே?


சரி, முதலில் பொடியைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிப் பார்த்துவிடுவோம் என்று அன்று முடிவு செய்தேன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2016 20:04

December 3, 2016

ருசியியல் – 01

இருபதாம் நூற்றாண்டின் விரோதிக்ருது வருஷத்தில் நான் பிறந்தபோது ‘ஆநிரைகளும் தாவரங்களும் உன்னைப் பசியாதிருக்கச் செய்யக்கடவன’ என்று எம்பெருமான் என் காதில் மட்டும் விழும்படியாக ஹெட்ஃபோனுக்குள் சொன்னான். அன்றுமுதல் இன்றுவரை நான் மற்றொன்றினைப் பாராதவன்.


பாரத தேசத்தில் தாவர உணவாளிகளின் சதவீதம் முப்பதுக்கும் குறைவு. அதுவும் இந்த ஒரு கழுதை ஆயுட்கால வருஷங்களில் மேலும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதைப் பார்க்கிறேன். மீன் ஜல புஷ்பமாகி, முட்டை, முட்டைக்கோஸை முந்தி, காளான் தாவரமாகவே ஆகிவிட்டது. இன்னமும் சாணி போட்டு எச்சில் பிரட்டும் ஆசார பயங்கரவாதிகளின் வீடுகளில் கூட, அடுத்தத் தலைமுறையின் ஊட்டச்சத்து நலன் கருதி ‘வெளியே’ முட்டை சாப்பிட்டுக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அது முட்டையின் தாய்க்கு முன்னேற்றம் அடைவதும் காலக்கிரமத்தில் நடந்துவிடுகிறது.


ஒரு முட்டையை வைத்துக்கொண்டு எத்தனை விதமான பதார்த்தங்கள் சமைக்க முடியும் என்று என் கல்லூரி தினங்களில் வி.பி. சற்குணநாதன் என்ற நண்பனொருவன் எடுத்துச் சொன்னான். தன் இயல்பில் முட்டைக்கு ருசி கிடையாது. ஆனால் சேர்மானங்கள் சரியாக அமைந்துவிட்டால் அதை அடித்துக்கொள்ள இன்னொன்று கிடையாது என்பதும் அந்தப் புண்ணியாத்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.


ஒரு சுப தினத்தைத் தேர்ந்தெடுத்தான். இன்றைக்கு உனக்கு முட்டையின் அதி உன்னத ருசியை நான் அறிமுகப்படுத்தியே தீருவேன் என்று சொல்லியிருந்தான். எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஒரு சிறு ஆர்வமும், உடன் பாரம்பரியத் தடையுணர்வும். சரி போ, தூணிலும் துரும்பிலும் இருப்பவன் முட்டையில் மட்டும் இல்லாமலா போய்விடுவான்? அவன் நம்மை அளித்துக் காப்பான்.


வி.பி. சற்குணநாதன் என்னை அடையாறு மத்திய கைலாசத்துக்கு எதிர்ப்புறச் சாலையில் அப்போதிருந்த ஓர் அசைவ மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்றான்.


உள்ளுக்குள் எனக்கு உதறிக்கொண்டிருந்தது. ஒரு கஞ்சா அல்லது கள்ளச்சாராய அனுபவத்துக்கு முதல்முறை போகும் பதற்றம். வெளியே காட்டிக்கொள்ளாதிருக்க நிரம்ப சிரமப்பட்டேன். முன்னதாக வீட்டுக்குத் தெரியாமல் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் உறவுக்கார உத்தமோத்தமர்கள் இரண்டு பேரை மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். பித்தெனத் தொடங்கிவைத்த பிள்ளையார் சுழியர்கள். தவிரவும் அவர்கள் கட்டுடல் காளையர்கள். நானோ தர்பூசனிக்குத் தார்ப்பாலின் சுற்றியது போலிருப்பவன்.


‘அதாண்டா சங்கதியே. தயிர் சாதம் சாப்ட்டு ஒன்னால ஃபிட்டா இருக்கவே முடியாது. ந்யூட்ரிஷன் பர்சண்டேஜ் அதுல ரொம்பக் கம்மி. சொல்லப் போனா, இல்லவேயில்ல. நீ திங்கற எதுலயுமே புரோட்டின் கிடையாது. தெரியுமா ஒனக்கு?’ என்றான் சற்குண நல்லவன்.


ஒரு கலவையான உணர்வில் அன்று நானிருந்ததை இப்போது நினைத்துக்கொள்கிறேன். அதற்கு மேலே ஒரு லேயர் பயத்தின் டாப்பிங்ஸ்.


ஆச்சா? மெஸ்ஸுக்குச் சென்று உட்கார்ந்தோம். அழுக்கு பெஞ்சும் ஆடியபாத டேபிளும். ‘என்ன சாப்பிடற?’ என்றான் சற்குணநாதன். என்ன சொல்லலாம்? ஒரு ப்ளேட் மைசூர் போண்டா. ஒரு மசால் தோசை. பிறகொரு காப்பி.


சற்குணநாதன் முறைத்தான். ‘பரோட்டா சொல்றேன். முட்ட பரோட்டா. இங்க அது செம ஸ்பெஷல்’ என்றான்.


ஆர்டரே கிடைத்து விட்ட மாதிரி சப்ளையர் நகர ஆரம்பித்தபோது உயிர்க்குலை நடுங்கும் தொனியில் அலறினேன். ‘இருங்க, இருங்க’


‘என்னடா?’ என்றான் உத்தமபுத்திரன்.


‘வேணாண்டா.’


ஒரு மாதிரி பார்த்தான். போடா லூசு என்று சொல்லிவிட்டு, தனக்கு மட்டும் எடுத்து வரச் சொல்லி சாப்பிட்டு முடித்தான்.


அந்தப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் அவன் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா. நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா. கேட்டுக் கேட்டுப் பரிமாறிய சப்ளையரின் அக்கறையே அந்த உணவின் ருசியாக மாறியிருக்க வேண்டும்.


பிறகொரு சமயம் சற்குணநாதன் சொன்னான்: ‘வாழ்நாள்பூரா ஒனக்கு ருசின்னா என்னன்னே தெரியாம போயிடப் போவுது பாரு.’


அந்தச் சொல் என்னை உறுத்தியது. ருசி என்பது காற்றைப்போல், கடவுள்போல் அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்பதல்லவா? ஒவ்வொரு உணவுக்கும் ஒரு ருசி. ஒவ்வொரு உணர்வுமே ஒரு ருசிதான். இந்தப் பேருலகில் ருசியற்ற ஒன்று கிடையவே கிடையாது என்று தோன்றியது.


ஆனால் சிறந்தவற்றைத் தேடிப்பிடிப்பது ஒரு சாகசம். அது ஒரு வீர விளையாட்டு. பெரும்பாலும் காலைவாரி, எப்போதாவது காலர் தூக்கி விட்டுக்கொள்ளச் செய்கிற சுய குஸ்தி. நான் உணவில் தோயத் தொடங்கியது அதன்பிறகுதான்.


நான் வசிக்கும் பேட்டையில் அக்காலத்தில் தள்ளுவண்டி சுண்டல் வெகு பிரபலம். மணப்பாறை முறுக்கு திருநெல்வேலி அல்வா காஞ்சிபுரம் இட்லிபோல அந்தச் சுண்டலுக்கு வாழ்நாள் சந்தாதாரிகள் அதிகம். பத்திருபது கிலோ மீட்டர் பஸ்ஸேறி வந்தெல்லாம் சாப்பிட்டுப் போகிறவர்கள் இருந்தார்கள். ஒரு பிளேட் சுண்டல் ஐந்து ரூபாய். அதில் எல்லாரீஸ்வரி பொட்டு சைஸுக்கு நாலு மசால்வடைகளை உதிர்த்துப் போட்டு மேலே கொஞ்சம் வெங்காயம், புதினா, கொத்துமல்லி தூவி, அதற்கும் மேலே என்னமோ ஒரு பொடியைப் போட்டுத் தருவார்கள்.


எத்தனை விசாரித்தாலும் அந்தப் பொடியில் என்னென்ன ஐட்டங்கள் கலந்திருக்கின்றன என்பதைப் பிரகஸ்பதிகள் சொல்லமாட்டார்கள். ஆனால் அந்த அரை ஸ்பூன் பொடித்தூவல் கொடுத்த மணம் பேருந்து நிலையம் முழுவதையும் மணக்கச் செய்துவிடும்.


பிறகு வந்த துரித உணவகங்கள் சுண்டல் கடைகளைச் சாப்பிட ஆரம்பித்தன. பெரிய ஓட்டல்களின் பிராந்தியக் கிளைகள், சிறிய ஓட்டல்களோடு சேர்த்துத் துரித உணவகங்களை விழுங்கத் தொடங்கின. பீட்சாக்காரர்கள் வந்தார்கள். டோர் டெலிவரி சௌகரியத்தில் ஓட்டல்காரர்களின் பிழைப்பில் அரைப்பிடி மண்ணைப் போட்டார்கள்.


ஆயிற்று முப்பது வருஷம். அந்தத் தள்ளுவண்டி சுண்டல் கடை பொடியின் நெடி மட்டும் என் நாசியில் அப்படியே தேங்கிவிட்டது.


இடைப்பட்ட காலத்தில் நானொரு உணவுத் தீவிரவாதியாக மாறியிருந்தேன். உடலைத் தாங்கி நிற்பது நாக்கு என்று முடிவு செய்து சகட்டு மேனிக்குச் சாப்பிடத் தொடங்கினேன். இனிப்பென்றால் குவிண்டாலில். காரமெனில் கிலோவில். பட்சண பலகாரம் எதுவானாலும் பத்துக்குக் கீழே தொட்டதே கிடையாது.


சொகுசுக்கு பங்கமின்றி என்னளவு தின்று தீர்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கென்யாவிலிருந்து மொடொகெ (Moteke – ஒரு பிரமாதமான வாழைப்பழ டிஷ்), ஜப்பானில் இருந்து யூபா (சோயா பாலில் படியும் ஏடிலிருந்து செய்யப்படுவது) அரபு நிலத்திலிருந்து ஒட்டகப்பால், ஸ்விச்சர்லாந்திலிருந்து சாக்லெட், சைனாவில் இருந்து தேயிலைத்தூள், ஆஸ்திரேலியாவிலிருந்து அசகாய சீஸ் என்று தேடித் தேடி வரவழைத்துத் தின்ற ஜாதி நான்.


ஊறிய ருசிக்கு முன்னால் ஏறிய கலோரிகள் எம்மாத்திரம்? ஆனால் அனைத்தையும் நிறுத்திய நாளில்தான் எனக்கு அந்த சுண்டலுக்கு மேலே போட்ட வண்டலின் சூட்சுமம் பிடிபட்டது.


இது பேசித் தீராத கதை. மெல்லப் பேசுவோம்.


(தி ஹிந்து.தமிழில் 03/12/16 அன்று வெளியானது)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2016 09:04

December 2, 2016

ருசியியல்

தமிழ் ஹிந்து நாளிதழில் நாளை முதல் (03/12/16) ஒரு பத்தி தொடங்குகிறேன். ருசியியல் என்ற தலைப்பில். சமையலின் ருசியும் வாழ்வின் ருசியும் வேறுவேறல்ல என்பது என் தீர்மானம். அந்தந்த தினத்தின் மனநிலையே அன்றன்றைய சமையலின் ருசியைத் தீர்மானிக்கிறது என்பதைப் பன்னெடுங்காலமாக கவனித்து வந்திருக்கிறேன்.


வாழ்வையும் உணவையும் மனமார நேசிப்பவன் நான். தவிரவும் உண்ணும் விஷயத்தில் ஒரு முழு வட்டம் சுற்றி மீண்ட அனுபவம் உள்ளபடியால் இதனை எழுதுவது எனக்குத் தனித்த சந்தோஷம்.


முன்னர் குமுதம் ரிப்போர்ட்டரில் உணவின் வரலாறு எழுதியதை நினைவுகூர்கிறேன். அதற்காக நிறைய உழைத்தேன். எக்கச்சக்கமாகப் படித்தேன். பலபேரிடம் பேசி, பேட்டி கண்டு என்னென்னவோ செய்தேன். பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு ஆவணத் தொடருக்கு எழுதியபோதும் இப்படித்தான்.


இப்போது இந்தத் தொடருக்கு அதெல்லாம் இல்லை. இது முற்றிலும் சொந்த அனுபவம் சார்ந்த வெளிப்பாடாகவே இருக்கும்.


தொடரைப் பற்றிய உங்கள் கருத்துகளை எனக்கு எழுதுங்கள். எழுத்தின் ருசி, வாசிப்பவர் திருப்தியில்தான் பூரணமெய்துகிறது.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2016 08:55

December 1, 2016

கிழக்கில் பாரா; கிண்டிலில் கிழக்கு

நீண்ட நெடுநாள்களாக எதிபார்க்கப்பட்ட சங்கதி இது. பிராந்திய மொழி நூல்கள் கிண்டில் பதிப்பாக எப்போது வரும்?


இப்போது வரத் தொடங்கிவிட்டது.


நான் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல என்னுடைய அனைத்துப் புத்தகங்களும் இனி கிழக்கு மூலம் வெளிவரும். ஜனவரி புத்தகக் காட்சியில் நீங்கள் என் புத்தகங்களின் புதிய பதிப்பைக் கிழக்கு அரங்கில் காணலாம்.


அவ்வண்ணமே, என் புத்தகங்களின் மின் நூல் வடிவம் இப்போது கிழக்கு வாயிலாகவே அமேசான் – கிண்டிலில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அச்சுப்புத்தகங்களைவிடக் கணிசமாக விலை குறைவு.


எப்போது மறு பதிப்பு, அச்சில் ஏன் இல்லை, ஏன் இத்தனை விலை என்ற பேச்சுக்கெல்லாம் இனி இடமில்லை. உங்களிடம் ஒரு மின் நூல் படிப்பானோ, அல்லது உங்கள் மொபைலில் கிண்டில் செயலியோ இருந்தால் போதும். நீங்கள் விரும்பிய புத்தகத்தை, விரும்பிய கணத்தில் வாங்கி வாசிக்கலாம்! அச்சு நூல்களைவிடக் கணிசமாகக் குறைந்த விலை. நீங்கள் கிண்டில் அன்லிமிடட் சந்தாதாரி என்றால் பெரும்பாலான நூல்களை இலவசமாகவே தரவிறக்கி வாசிக்க முடியும்.


திருட்டு பிடிஎஃப்கள் நிறைந்த பேருலகில் அதிகாரபூர்வ தமிழ் மின்னூல்களுக்கு இது தொடக்ககாலம்தான். ஆனால் சிறப்பானதொரு தொடக்கமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


சென்ற 2016ம் வருட சென்னைப் புத்தகக் காட்சியில் கிண்டில் அரங்கைக் கண்டபோதே இது விரைவில் சாத்தியமாகவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இன்று நடந்திருக்கிறது.


சாத்தியமாக்கிய கிழக்குக்கு என் வாழ்த்தும் நன்றியும்.


கிண்டிலில் பதிப்பாகத் தற்போது கிடைக்கும் என் நூல்கள் இவை. விரைவில் அனைத்து நூல்களும் இங்கே இருக்கும்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2016 05:24

November 26, 2016

காகிதங்களைக் கடந்து..

பழைய ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்திருக்கும் இந்நேரத்தில் இதனை எழுதுவது பொருந்துமென நினைக்கிறேன்.


மேற்படி ரூபாய்த் தாள்கள் இரண்டும் இனி செல்லாதென (டெக்னிகலாக இது தவறு. செல்லுபடியாகும் இடங்கள் குறைக்கப்பட்டன; அவ்வளவே. படிப்படியாக அது இனி முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படும்) அறிவிக்கப்பட்ட தினம் என் வீட்டில் இருந்த தொகையின் மதிப்பு, வருமான வரி நோட்டீஸ் வர இயலாத அளவே.


அதை உடனே வங்கியில் செலுத்திவிட்டோம். வீட்டுச் செலவுக்காக என் மனைவி பத்தாயிரம் மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்தார். நான்கு இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களுடன் மிச்சத்துக்கு நூறு ரூபாய்த் தாள்கள். நான் அதைத் தொடவில்லை. என்னிடம் எண்ணூறு ரூபாய்க்கு நூறு ரூபாய்த் தாள்கள் இருந்தன. அதை வைத்து சமாளித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.


என் செலவுகளாவன:


1. வாகன எரிபொருள்

2. வெளியே போனால் ஓட்டல் உணவு

3. (ப்ரோபயாடிக், ஆர்கானிக்) மாவா

4. ஏதாவது கேட்ஜட் கண்ணில் பட்டுக் கவர்ந்தால் உடனே வாங்கிவிடுவது

5. புத்தகங்கள்


என்ன யோசித்தாலும் வேறு ஏதும் தோன்றவில்லை.


இதில் கடந்த மூன்று மாதங்களாக மாவா கிடைப்பதில் ஏகப்பட்ட கெடுபிடி, சிக்கல். சேட்டுகள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டுவிட்டதில் கலைச்சேவையே கெட்டுப் போகுமளவுக்கு நிலவரம் கலவரம்.


சரி பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்தேன். ஒரு மாதம் ஓடியே விட்டது. சற்றுமுன் என் பர்ஸைப் பரிசோதித்தேன். நான் வைத்திருந்த எண்ணூறில் ஐந்நூறு மிச்சம் இருக்கிறது. செலவான சொற்பமும் கலைச்சேவை சார்ந்த செலவுதான்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2016 09:55

November 13, 2016

நட!

நடப்பது என்பது எனக்கு என்றுமே நடக்கிற காரியமாக இருந்ததில்லை. அடிப்படையில் நான் ஒரு ப்யூரிஃபைட் சோம்பேறி. சைக்கிள் இருந்த காலத்தில் சைக்கிள், டூ வீலர் காலத்தில் டூ வீலர், கார்காலத்தில் கார். அது கந்தஹாருக்குப் போவதானாலும் சரி; கருவேப்பிலை வாங்கப் போவதானாலும் சரி.


இந்த ‘போவது’ என்பதே எப்போதாவது நடப்பதுதான். பெரும்பாலும் இருந்த இடத்தில் எனக்குத் தேவையானதை வரவழைத்துக்கொள்வதற்கு ‘ஸ்மார்ட் ஒர்க்’ என்று பேரளித்து மகிழ்ந்துகொண்டிருந்தேன்.


உடம்பை அசைக்காதிருப்பதற்கு ஒரு மனிதனுக்குக் கோடி காரணங்கள் சொல்லக் கிடைக்கும். நான் எப்போதும் சொல்வது: எனக்கு வேலை இருக்கிறது.


உட்கார்ந்து மணிக்கணக்கில் எழுதுவதில் எனக்குப் பிரச்னை இல்லை. என் பத்து விரல் நுனிகளும் ஒரு நாளைக்குக் குறைந்தது பதினெட்டு மணிநேரம் உழைக்கும். அதில் கலோரி செலவானால்தான் உண்டு. மற்றபடி இந்தத் தேர் அசையாது.


சுமார் எட்டு அல்லது ஒன்பது வருடங்களுக்கு முன்பு கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சமயம் எனக்கு டயட் இருக்கும் மூட் வந்தது. தோதாக அப்போது எனக்கு மூன்று சகாக்கள் சிக்கினார்கள். நாகராஜன், ச.ந. கண்ணன், வைதேகி. இவர்கள் என் டயட் பார்ட்னர்கள். அரிசி சாப்பாட்டைக் குறைத்து, காய்கறி கீரை போன்றவற்றை அதிகரித்து, சைனாவிலிருந்து (ஆம். சைனா.) ஊலாங் என்ற கருப்புத் தேயிலைத் தூளைக் கிலோ கணக்கில் வரவழைத்துப் பங்குபோட்டுக் குடித்து அந்த டயட் திருவிழாவைக் கொண்டாடத் தொடங்கினோம்.


இதில் நடக்கலாம் என்று ஆரம்பித்தது ச.ந. கண்ணன். நாங்கள் இருவரும் போட் க்ளப் சாலை, மெரினா கடற்கரை எனப் பல இடங்களில் நடந்து பழகினோம். எடைக் குறைப்பு வெறி அதிகமாக இருந்தபடியால் நடை அப்போது சிரமமாக இல்லை. தவிரவும் கண்ணன் எப்போதும் உற்சாகமாக இருப்பவன். அவனோடு பேசிக்கொண்டு நடந்தால் இடுப்பு வலி தெரியாது. எனவே நடந்தேன்.


அதே சமயம் குரோம்பேட்டையில் ஹில்டன் நீச்சல் குளம் திறந்தார்கள். சட்டென்று நான் நீச்சலுக்கு மாறினேன். நடையைவிட நீச்சல் சுலபம் என்று தோன்றியதால்தான் அப்படிச் செய்தேன். தவிரவும் நீச்சலில் அதிகக் கலோரி எரிப்பு சாத்தியமானது.


என்ன சிக்கலென்றால் நான் அப்போது எடுத்த டயட்டில் எப்போதும் பசி இருந்தபடியே இருக்கும். நாம் குறைவாகச் சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் மெலிதான திகிலை அளித்துக்கொண்டே இருக்கும்.


சுமார் ஓராண்டுக காலம் படாதபாடுபட்டு பதினாறு கிலோ அப்போது குறைத்தேன். (92 கிலோவில் இருந்து 76)


எந்தப் பரதேசி கண்ணு போட்டானோ, ஒரு ஜனவரி மாத இரவு வள்ளுவர் கோட்டம் எதிரே ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தபோது விபத்தானது. வலது கால் உடைந்துவிட்டது. பெரிதாகக் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டில் கிடந்தேன்.


அப்போது டயட் போனது. நடை போனது. ஏற்கெனவே குரோம்பேட்டையில் இருந்து கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்திருந்ததால், நீச்சலும் போனது. பழையபடி போண்டா பஜ்ஜி பால்கோவா ரசகுல்லா வகையறாக்களில் எடைக்குறைப்பு சாத்தியமா என்று தேட ஆரம்பித்துவிட்டேன்.


அதன்பின் டயட் என்று ஏனோ நினைக்கவே தோன்றவில்லை. அப்படியே விட்டுவிட்டு, காலக்கிரமத்தில் குறைத்த எழுபத்தியாறை நூறுக்கு நகர்த்தி அதற்கும் மேலே கையைப் பிடித்து அழைத்துப் போகத் தொடங்கினேன்.


அது 110க்கு வந்தது எப்போது என்று எனக்குத் தெரியாது. எடையெல்லாம் பார்க்கிற வழக்கத்தை விட்டொழித்துப் பலகாலம் ஆகிவிட்டது. வடையைப் பார்ப்பேன். அடையைப் பார்ப்பேன். பலகாரக் கடையில் விற்கும் பலதையும் பார்ப்பேன். பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி என்று தாயுமானவர் பரம்பொருளைச் சொன்னால் எனக்குப் பலகாரங்களே பரம்பொருளாகத் தெரிந்தன.


அதெல்லாம் கெட்ட கனவுக்காலம்.


விஷயத்துக்கு இப்போது வருகிறேன். மீண்டும் நான் நடக்கிறேன். ஆரம்பத்தில் மிகுந்த சிரமமாக இருந்தது. தெரு முனை வரை (498 அடிகள்) நடந்தாலே நாக்குத் தள்ளிவிடும். அங்கே இரண்டு நிமிடங்கள் நின்று ஓய்வெடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவேன். இப்படிப் பத்து நாள்கள் போயின.


அதன்பின் என் தெருவைத் தாண்டி பக்கத்துத் தெரு வரை நடந்து போய்த் திரும்ப ஆரம்பித்தேன். இதுவே பீமபுஷ்டி லேகியம் சாப்பிட்ட தெம்பைக் கொடுத்தது (1130 அடிகள்). பிறகு இதை மெல்ல மெல்ல உயர்த்தத் தொடங்கினேன். இரண்டாயிரம் அடிகள். இரண்டாயிரத்தி ஐந்நூறு. மூவாயிரம். நாலாயிரம்.


நாலாயிரத்தில் சுமார் ஒரு மாத காலம் ஓட்டினேன். அதற்குமேல் நடக்க முடியும் என்று தோன்றினாலும், திரும்பி வர கஷ்டமாக இருக்குமோ என்கிற பயத்தாலேயே தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தேன். ஒருநாள் என் வீட்டில் இருந்து பாலாஜி பவன் வரை (அங்குதான் எடை பார்க்கும் இயந்திரம் உண்டு.) எப்படியோ நடந்து சென்று எடை பார்த்துவிட்டேன். நான் குறையத் தொடங்கிவிட்டதை அந்த இயந்திரம் உறுதி செய்தது. அதே இயந்திரம்தான் முன்னதாக என்னை 110 கிலோ என்று சுட்டிக்காட்டி ஏளனம் செய்தது. வீட்டுக்கு வந்து ஸ்டெப்ஸ் கணக்குப் பார்த்தபோது கிட்டத்தட்ட 5500 தப்படிகள்.


ஒரு மாதிரி கிறுகிறுத்துப் போய்விட்டேன். பரவாயில்லை; நமக்கு நடக்க முடிகிறது என்று தெம்பு வந்தது அதன்பிறகுதான்.


குரோம்பேட்டை, சானடோரியம், கோடம்பாக்கம் என்று மூன்று க்ஷேத்திரங்களில் எங்காவது ஓரிடத்தில் இப்போது தினசரி ஒரு மணி நேரம் நடக்கிறேன். தோராயமாக தினசரி பத்தாயிரம் தப்படிகள் கணக்குத் தேறிவிடுகிறது. ஒரு சில நாள்கள் முடிவதில்லைதான். ஆனாலும் அடுத்த நாள் கணக்குத் தீர்த்துவிடுகிறேன்.


இது ப்ரிஸ்க் வாக் இல்லை. சாதாரண நடை. கடைக்குப் போகிற வேகத்தில் நடப்பது. என் இப்போதைய உணவு முறை, நடையில் வருகிற இயல்பான களைப்பை இல்லாமல் செய்துவிடுவதால் இது எளிதாக இருக்கிறது. பழைய பின் இடுப்பு வலி இப்போது அறவே இல்லை. நடக்க ஆரம்பித்த பிறகுதான் எனது ரத்தக்கொதிப்பின் அளவு சீராகி வருவதை உணரத் தொடங்கினேன். சரியான உணவும் மிதமான நடையும் தவிர ஆரோக்கியத்துக்கு வேறு எளிய உபாயமில்லை என்பது புரிந்தது. உடல் இயக்கம் ஒழுங்காகும்போது உளத்தெளிவும் சேர்த்து சித்திக்கிறது. பதற்றங்கள், பயங்கள் வருவதில்லை. செயலில் மிகுந்த நிதானம் கூடுகிறது. இதனை தியானத்துக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் என்று சொல்வேன். என் அனுபவம் அப்படிக் கூறவைக்கிறது.


ஒரு நல்ல பார்ட்னரைப் பிடியுங்கள். மனைவி அல்லது கணவராகவே இருந்தால் அருமை. பேசிக்கொண்டே நடக்கலாம். ஒரு நாளில் ஒரு மணி நேரம் பேச முடிந்துவிட்டால் குடும்ப சுனாமிகள் அடங்கிவிடும். பெண்களுக்குக் காலை நேரம் நடைப்பயிற்சி செய்வதில் நிறையச் சிக்கல்கள் உண்டு. அவர்கள் குழந்தைகளைக் கிளப்பவேண்டும். சமைக்க வேண்டும். அடுப்பில் இட்லி குக்கர் நேரத்தில் கேஸ் தீர்ந்துவிடும். சிலிண்டர் உருட்டி வந்து மாற்ற வேண்டும். கஷ்டம்தான். அவர்களோடு மாலையில் முயற்சி செய்யலாம். காலை விட்ட கணக்கை அப்போது முடிக்கலாம்.


எனக்கு ஒரு புரொபசர் சிக்கியிருக்கிறார். வேதியல் புரொபசர். அவரோடு நடக்கும்போது கவனமாக அறிவியல் நீங்கலான விஷயங்களை மட்டுமே பேசுகிறேன். நான் அறிவியல் பேச ஆரம்பித்து, அது அவர் தலைக்குள் ஏறினால் அவருக்கு வேலை போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதே காரணம்.


ஆளே இல்லையா? காற்றைப் போல், கடவுள்போல் இருக்கவே இருக்கிறது இளையராஜாவின் இசை. ஒரு ஹெட்போன் மாட்டிக்கொண்டால் தீர்ந்தது. முழு ஒரு மணி நேர நடைக்குப் பிறகு உடலுக்கு சிறகு முளைத்த மாதிரி ஓர் உணர்வு உண்டாகிறது. நம் எடை என்னவாக இருந்தாலும் லேசாகிவிட்டதுபோலத் தோன்றுவது வேறு எதில் சாத்தியம்?


இன்று எனக்கு ஓய்வுநாள். பதிமூன்றாயிரம் அடிகள் இலக்கு வைத்தேன். ஆனால் சாத்தியமானது 12921தான். எண்பது குறைச்சல். அதனாலென்ன? அடுத்த ஓய்வு நாளில் 14000 அடிகள் இலக்கு வைத்து 13921ஐக் கண்டிப்பாகத் தொடுவேன்.


மனமிருந்தால் மார்க்கபந்து.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2016 06:39

October 30, 2016

அன்சைஸ் – பாகம் 2

கீழுள்ள குறிப்பை வாசிப்பதற்குமுன் இந்தக் கட்டுரையை ஒருமுறை மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டிவிடுங்கள்.


0


நான்கு மாதங்களுக்கு முன் மூன்று பேண்ட் தைத்தேன். அப்போதைய இடுப்பளவெல்லாம் நினைவில்லை. பொதுவாக இம்மாதிரி கெட்ட விஷயங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை.


தைத்த ஒரு மாதம் அவற்றைப் போட்டுக்கொண்டிருந்தேன். அதன்பின் பேண்ட்டானது எனக்கும் இடுப்புக்கும் சம்மந்தமில்லை என்று கதற ஆரம்பித்து, பெல்ட் போட்டுப் பார்க்கத் தொடங்கினேன் (எனக்கு என்றுமே பெல்ட் போடும் வழக்கம் இருந்ததில்லை). அதுவும் சரிப்பட்டு வராமல், கடந்த இரு மாதங்களாக பேண்ட் அணிவதை அறவே தவிர்த்துவிட்டேன்.


எங்கு போவதென்றாலும் நாடா வைத்த ஷார்ட்ஸ்தான். மீட்டிங்குகள், கதை விவாதக் கூட்டமென்றாலும் அரை டிராயரில்தான் போனேன். இந்த தீபாவளிக்குக் கூட பேண்ட் கிடையாது; ஷார்ட்ஸ்தான்.


ரொம்ப நாள் இப்படியே தொடரமுடியாது என்பதால் இன்று ஐந்து பேண்ட்களை எடுத்துக்கொண்டு டெய்லரிடம் சென்று, ‘இவற்றின் இடுப்பளவு எவ்வளவு என்று அளந்து சொல்லுங்கள்’ என்றேன். தைத்தவர் அவர்தான். என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அளந்தார். ‘நாப்பத்தாறு புள்ளி அஞ்சு சார்’ என்று சொன்னார்.


‘சரி, என் இப்போதைய இடுப்பளவை அளந்து சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன். அளந்தார்.


‘எவ்ளோ?’


‘நாப்பத்தி ஒண்ணு புள்ளி அஞ்சு இருக்கு சார்’ என்றார்.


ஆக, சரியாக ஐந்து இஞ்ச் இடுப்பு குறைந்திருக்கிறது!


எதற்கு விட்டு வைப்பானேன் என்று தோள் பட்டை சைஸையும் அளக்கச் சொன்னேன். நாற்பத்தி மூன்று இஞ்ச் என்று கணக்கு சொன்னார். (என் பழைய சைஸ் 6xlக்கும் 5xlக்கும் இடைப்பட்டது.)


எடையும் உடையும் மாறும் நேரம். சந்தோஷம்தான். ஆனால் இப்படி நாற்பத்தி ஒன்று புள்ளி ஐந்து, நாற்பத்தி மூன்று என்றெல்லாம் அளவுகள் வருமானால் இப்போதும் எனக்கு ரெடிமேட் கிடைப்பது சிரமமாகத்தான் இருக்கப் போகிறது.


ரவுண்டாக இரட்டைப்படை அளவுக்கு எப்போது வரப் போகிறேன் என்று தெரியவில்லை. கடைசி வரை மார்க்கெட் சைஸுக்குப் பொருந்தாதவனாகவே இருந்துவிட்டுப் போவேனோ என்னமோ?


என்னவானாலும் ஜனவரியில் ஒரு திருப்பூர் பயணம் நிச்சயம். நண்பர் சவடன் உடன் வருவதாகச் சொல்லியிருக்கிறார். என் நித்ய அன்சைசுக்கு ஏற்ற பின்னலாடை அங்கு இல்லாவிட்டாலும் அளவெடுத்துத் தைத்தாவது ஒரு லாரி லோடுடன் அனுப்பிவைக்க வேண்டிய பொறுப்பு மனோஜுடையது.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2016 22:57

October 15, 2016

பேட்டா

இன்றைக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்று தணிகாசலம் சொல்லியிருந்தான். எத்தனை நாள் பேட்டா என்று உடனே கேட்கத் தோன்றியதைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ரொம்ப நன்றி சார் என்று மட்டும் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தான் சுப்பிரமணி.


மனித மனம்தான் எத்தனை விசித்திரங்கள் நிறைந்தது! மூன்றாண்டு காலமாக வேலையே இல்லை. வீட்டில் சும்மா படுத்துக் கிடந்ததில் நாடி நரம்புகளெல்லாம் உலர்த்தாமல் சுருட்டிப் போட்ட ஈரத்துணி போலாகிவிட்டிருந்தது. நாறுதுடா.. கிட்ட வரவே முடியல; போய்க்குளியேன் என்று அவ்வப்போது அம்மா சொல்லுவாள். சுப்பிரமணிக்கு அதென்னவோ குளிக்காததால் எழுகிற துர்நாற்றமாகத் தோன்றியதில்லை. வெளியே காண்பிக்க முடியாத துக்கத்துக்கு ஒரு வாடையுண்டு. துக்கம் வெளிப்பட்டு விடக்கூடாது என்று மேலுக்குப் பூசியெழுப்பும் சவடால்களின் பர்ஃப்யூம் வாடை அதனோடு சேரும்போது மேலும் சகிக்கமுடியாததாகிவிடும். என்றாவது ஒருநாள் எனக்கும் விடியும் என்று எத்தனை காலமாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். சரியாக நினைவில்லை.


2013 பிப்ரவரி 27ம் தேதி சுப்பிரமணிக்கு ஒரு குறைந்த பட்ஜெட் படத்தில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஏழெட்டு மாத அலைச்சலுக்குப் பிறகு யாரோ சொல்லி யாரோ வழி மொழிந்து எப்படியோ கிடைத்துவிட்ட கடைசி உதவியாளன் வேலை. கிளாப் அடிக்கிற பணிகூட இல்லை. இயக்குநரின் கைப்பையை எப்போதும் தன் கையில் வைத்துக்கொண்டு அவர் அருகே நிற்கிற வேலை. அவர் வலக்கையை நீட்டினால் வியர்வை துடைத்துக்கொள்ள கர்ச்சிப் எடுத்துத் தரவேண்டும். இடக்கையை நீட்டினால் சிகரெட். டேய் என்று குரல் மட்டும் கொடுத்தால் ரத்தக்கொதிப்பு மாத்திரை. எங்க அவன் என்று யாரிடமாவது கேட்டால் சாப்பாட்டு கேரியரை எடுத்துப் பிரித்து வைத்து இலை போட்டுத் தயாராக வேண்டும். முதலில் அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவன் இரண்டு வருடங்கள் ஒரு தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றியிருக்கிறான். காஸ்ட்யூம் அசிஸ்டெண்ட்டாகப் பணி. அது கெட்டுப் போனதிலிருந்து வேறு வாய்ப்பில்லாமல் அலைந்து களைத்து விழுந்தவன் தான். மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. தற்செயலாகக் கிட்டிய வாய்ப்பு இது. உண்மையிலேயே பெரிய விஷயம்.


இயக்குநர் நல்ல மனிதர்தான். நடு வயதுக்குப் பிறகு இயக்குநராகி சுமாரான ஒன்றிரண்டு வெற்றிப் படங்களை அளித்தவர். அதற்குப் பிந்தைய ஒரு பெரும் தோல்வி அவரை மீண்டும் அறிமுக இயக்குநராக்கிவிட்டது. இந்தப் படம் எப்படியாவது ஓடவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் மதிய உணவின்போது. இது ஓடினா எனக்கில்லடா; உங்க எல்லாருக்குமே இதான் லைஃப் என்பார்.


லைஃப் என்றால் என்னவென்று சுப்பிரமணி அப்போதெல்லாம் தீவிரமாக சிந்திப்பான். இந்தப் படம் ஓடினால் இயக்குநருக்கு அடுத்த வாய்ப்புக் கிடைக்கலாம். அதில் சுப்பிரமணி கிளாப் அசிஸ்டெண்ட் தரத்துக்கு உயரலாம். சம்பளமெல்லாம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும் தினசரி பேட்டா நிச்சயம். ஒரு நாளைக்கு நூறு ரூபாய். படப்பிடிப்பு தினமென்றால் மாலையே கிடைத்துவிடும். டிஸ்கஷன் சமயம் என்றால்தான் சிக்கல். தினமும் அலுவலகத்துக்குப் போய் கதை விவாதம் செய்வதை வேடிக்கை பார்த்து, இண்டு இக்கு எடுபிடிப் பணிகளைச் செவ்வனே செய்து முடித்து இரவு ஒன்பது ஒன்பதரைக்குக் கிளம்பும்போது அக்கவுண்டண்ட் இருக்கமாட்டார்.


நீ வாங்கலியா சுப்பிரமணி? அக்கவுண்டண்டு நாலரைக்கே பேட்டா குடுத்துட்டாரே.. நாங்கல்லாம் வாங்கிட்டோம். நீ நாளைக்கு சேத்து வாங்கிடு என்று சொல்லிவிட்டு மூத்த உதவியாளர்கள் போய்விடுவார்கள். தனக்குத் தெரியாமல் இவர்கள் மட்டும் எப்போது சென்று பேட்டா வாங்கி வருகிறார்கள் என்பது சுப்பிரமணிக்குப் புரிந்ததே இல்லை. இயக்குநரிடம் சொல்லலாம். சார் எனக்கு நாலு நாளா பேட்டா அமௌண்ட் வரல சார். அவர் ஏற இறங்க ஒரு பார்வை பார்ப்பார். பிறகு ஏதாவது சொல்லியாகவேண்டும் என்று தோன்றினால், நாளைக்கு வாங்கிரு என்பார்.


கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. இந்த வாய்ப்புக்கு நூறு பேர் வெளியே காத்திருக்கிறார்கள். யாரும் சம்பளத்தை எண்ணிக்கொண்டு உதவி இயக்குநர் வேலைக்கு வருவதில்லை. கனவு போல என்னவோ. சுப்பிரமணியும் அப்படி வந்தவன் தான். ஆனாலும் இயக்குநரிடம் சேர்ந்த முதல் வாரமே தனக்கும் பேட்டா கொடுப்பார்களா என்கிற ஆவலாதி எழுந்துவிட்டது.


மெதுவாகத் தன் சீனியர் ஒருவனிடம் இது குறித்துக் கேட்டபோது, என்ன இப்படி கேக்கற? நீ அசிஸ்டெண்டுதான? கண்டிப்பா உண்டு சுப்பிரமணி. ப்ரொடக்‌ஷன் மேனேஜர்ட்ட டைரக்டர் ஒரு வார்த்த சொல்லிட்டா போதும் என்ற பதில் வந்தது.


டைரக்டர் சொல்லவேண்டும். ஆனால் அவர் எப்போது சொல்லுவார்?


அவரிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. அவரே நாற்பதாயிரம் அட்வான்ஸ் கேட்டு, அது இன்னும் கிடைக்காத கடுப்பில் இருப்பதாக வேறொரு சீனியர் சொல்லியிருந்தான். டைரக்டருக்கேவா என்று சுப்பிரமணி ஆச்சரியப்பட்டான். அட நீ வேறய்யா. இந்த ப்ராஜக்டுல தலைவருக்கு சம்பளமே மூணார்ரூவாதான். தெரியுமா ஒனக்கு? என்று அவன் கேட்டபோது சுப்பிரமணி வாயடைத்துப் போய்விட்டான்.


இரண்டு சுமார் ரக வெற்றிப்படங்களுக்குப் பிறகு ஒரு பெரும் தோல்விப்படம். அடுத்த படியாகக் கிடைத்த ப்ராஜக்டில் வெறும் மூன்றரை லட்சம் சம்பளம். படம் ஆறு மாதத்தில் முடியலாம். ஒரு வருடமாகலாம். மேலும்கூட இழுக்கலாம். முடிந்த பிறகு வெளியாக வேண்டும். அதன்பின் ஓடவேண்டும். மூன்றரை லட்சம்.


சுப்பிரமணி அதன்பின் டைரக்டரிடம் தனது பேட்டா குறித்துக் கேட்பதில்லை என்று முடிவு செய்துகொண்டான். எப்படியோ டைரக்டருக்கே இந்த விவகாரம் மனத்தில் பட்டிருக்கவேண்டும். அவனுக்கே தெரியாத ஏதோ ஒரு நாள் அவர் அக்கவுண்டிடம் சுப்பிரமணியும் தனது உதவியாளன் தான்; புதிதாகச் சேர்ந்தவன் என்று சொல்லிவைக்க, ஒரு வெள்ளிக்கிழமை மாலை அக்கவுண்டண்ட் அவனை அழைத்து, இந்தாப்பா ஒனக்கும் இனி பேட்டா உண்டு என்று நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அவன் கையில் வைத்தார்.


அன்றிரவெல்லாம் சுப்பிரமணியின் மனத்தில் டைரக்டர் ஒரு தெய்வமாகத் தெரிந்தார். சாகும்வரை அவரைவிட்டு விலகவே கூடாது என்றெல்லாம் எண்ணிக்கொண்டான்.


எல்லாம் ஒரு சில தினங்களுக்குத்தான். இடையில் நாலு நாள் ஷூட்டிங் போட்டுவிட்டு திரும்பவும் ஒரு பிரேக் விட்டார்கள். நாளைலேருந்து ஆபீஸ் வந்துருங்கடா என்று சொல்லிவிட்டு டைரக்டர் போய்விட்டார். ஓரிரு வாரங்களில் ஒரு பத்து நாள் ஷெட்யூல் இருக்கும் என்று மூத்த உதவி இயக்குநர் சொல்லியிருந்தபடியால் சுப்பிரமணி மறுநாள் முதல் உற்சாகமாக அலுவலகத்துக்குப் போய்வரத் தொடங்கினான்.


ஆனால் பேட்டா வரவில்லை. முதல் நாலைந்து நாள் சாப்பாட்டுக் காசு மட்டும் மொத்தமாகக் கொடுத்தார்கள். அதன்பிறகு மதிய வேளைகளில் அக்கவுண்டண்ட் தன் இருக்கையில் இருப்பதில்லை. பெரும்பாலும் அவர் தயாரிப்பாளரின் அறையில் இருந்தார். இயக்குநர் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வர ஆரம்பித்தார். அவர் வந்துவிட்டால் உதவியாளர்கள் அவரோடு உட்கார்ந்துவிட வேண்டியது. சாப்ட்டிங்களா என்று சும்மா ஒரு வார்த்தை கேட்டுவிட்டு அவர் கதை பேசத் தொடங்கிவிடுவார். அக்கவுண்டண்ட் அப்போதுதான் தன் இருக்கைக்கு வருவார்.


அவனுக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஒன்பதாயிரம் என்று இயக்குநர் சொல்லியிருந்தார். முதல் மாதம் மட்டும் அந்தச் சம்பளம் சரியாக வந்துவிட்டது. அதன்பின் சம்பளம் என்ற ஒன்றை யாரும் நினைப்பதில்லை. இயக்குநரின் நான்கு உதவியாளர்களுக்குமே ஐந்து மாதங்களாகச் சம்பளம் கிடையாது. இயக்குநருக்கு இந்த சங்கதி தெரியும். இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கடா. நமக்கு இந்த ப்ராஜக்ட் சக்சஸ் ஆவுறதுதான் முக்கியம். அடுத்ததுல சேத்து வெச்சி அள்ளிரலாம் என்றார். அது ஒன்றும் நம்பிக்கை தரத்தக்க சொல்லாக யாருக்குமே தோன்றியதில்லை. ஆனாலும் தினசரி பேட்டா உண்டு. ஒரு மனிதன் ஒருநாள் உயிர் வாழ நூறு ரூபாய் போதும்.


அதற்கும் பிரச்னை வந்தபோதுதான் சுப்பிரமணிக்குப் பதற்றமானது. அவனது சம்பாத்தியம் குறித்து வீட்டில் அம்மா அதுவரை கேட்டதில்லை. மூன்று வருடங்களாக எந்த வாய்ப்புமின்றி சும்மா கிடந்தவன் வேலை என்ற ஒன்றில் இருப்பதே போதும் என்று நினைத்தாள். அடுத்த வருடம் எப்படியாவது தங்கைக்குக் கல்யாணம் செய்துவிடவேண்டும் என்று அவ்வப்போது அவள் அறிவிக்கும்போதுதான் அவனுக்கு அடி வயிற்றில் பயம் திரண்டு எழும்.


இருபத்தியெட்ட வயதாகிவிட்டது. இதுவே மிகவும் தாமதம். இன்னும் தள்ளிப் போட்டுக்கொண்டிருப்பது அபத்தம். ஆனால் ஒரு கல்யாணம் என்பது பெரும் செலவு. வீதி வாழ் மக்களுக்கு அம்மா ரவிக்கை தைத்துக் கொடுத்து, பார்டர் அடித்துக்கொடுத்து சம்பாதிக்கும் பணமெல்லாம் கல்யாணச் செலவுக்குக் காணாது. அவன் பங்குக்கு என்னவாவது செய்ய முடிந்தால் நல்லதுதான். அம்மா இதுவரை வாய் திறந்து கேட்டதில்லை. தங்கையும் குத்திக்காட்டிப் பேசியதில்லை. எல்லோரும் ரொம்ப நல்லவர்களாக இருப்பதே ஒரு பிரச்னைதான்.


சுப்பிரமணியே ஒரு நாள் தன் அம்மாவிடம் சொன்னான். இந்தப் படம் நல்ல சப்ஜெக்டும்மா. கண்டிப்பா இருவது நாள் ஓடிடும். அடுத்த படத்துல எனக்கு இருவதாயிரம் சம்பளமாச்சும் கன்ஃபர்மா இருக்கும்.


அவனது அம்மா பதிலேதும் சொல்லவில்லை. சாப்பிட வா என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.


0


ஓரிரு வாரங்களில் ஆரம்பமாகிவிடும் என்று சொல்லப்பட்ட அந்த பத்து நாள் ஷெட்யூல் தள்ளிப் போனது. தயாரிப்பாளர் ஃபாரின் போயிருக்கிறார் என்று முதலில் காரணம் சொன்னார்கள். அதன்பின் ஹீரோயின் டேட் பிரச்னை என்றார்கள். இயக்குநருக்கு டெங்கு காய்ச்சல் வந்து மூன்று வாரங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். அந்த நாள்களிலெல்லாம் சுப்பிரமணி அவரோடுகூட மருத்துவமனையிலேயே இருந்தான். அவரது மனைவி, மகள் இருவரும் பழக்கமானது தவிர சொல்லிக்கொள்ளும்படியான சாதனை ஏதும் அப்போது அவனால் செய்ய முடியவில்லை.


இயக்குநருக்கு காய்ச்சல் சரியாகி வீட்டுக்குப் புறப்பட்டபோது வழக்கத்தில் இல்லாத விதமாக அவனைப் பார்த்து மிகவும் சிநேகபாவத்துடன் ஒரு புன்னகை செய்தார். தோளில் மெல்லத் தட்டிக் கொடுத்தார். இரண்டில் எது சம்பளம் எது பேட்டா என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டு நாளில் மீண்டும் வேலை ஆரம்பித்துவிடலாம் என்று அவர் சொன்னார்.


மீண்டும் சுப்பிரமணி அலுவலகத்துக்குப் போகத் தொடங்கினான். டேய் அடுத்த ஃப்ரைடேலேருந்து ஷூட்டிங்டா. பன்னெண்டு நாள் கண்டின்யுவஸா போறோம். முடிச்சா அப்பறம் ஒரு சாங்கு. ஒரு ஃபைட்டு. படம் ஓவர் என்றான் சீனியர் உதவியாளன். மிச்சமுள்ள காட்சிகளை அக்குவேறு ஆணி வேராக அலசி ஆராய்ந்து செப்பனிடும் பணிகள் வெறித்தனமாக நடக்கத் தொடங்கின. இம்முறை சாப்பாட்டுக் காசு ஒழுங்காகக் கொடுக்க ஆரம்பித்தார்கள். சார் பேட்டா என்றபோதுதான் மொத்தமா சேத்து வாங்கிக்கப்பா என்ற பதில் வந்தது.


சுப்பிரமணி கணக்குப் போட்டுப் பார்த்தான். இந்த பிரேக்கில் இதுவரை அனைவரும் இருபத்தி ஒன்பது நாள் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்கள். இரண்டாயிரத்தித் தொள்ளாயிரம் ரூபாய் என்பது பெரிய பணம். மொத்தமாகக் கிடைத்தால் அப்படியே அம்மாவிடம் கொடுக்கலாம். வீட்டுக்குப் பணம் கொடுத்துப் பலகாலமாகிவிட்டது அவன் நினைவுக்கு வந்தது. உறுத்தியது.


ஆஸ்பத்திரியில் இயக்குநரோடுகூட இருந்த நெருக்கத்தில் இதைப் பற்றி மெதுவாக ஒருநாள் அவரிடம் பேச்செடுத்தான். ஆமால்ல? நானே கேக்கணுன்னு நெனச்சேன். இரு வரேன் என்று சொல்லிவிட்டு அவரே அக்கவுண்டண்டின் அறைக்குப் போனபோது சுப்பிரமணிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.


ஆனால் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த இயக்குநர் போன காரியத்தைப் பற்றி ஏதும் சொல்லாமல் ஹீரோயினுக்குத் தைக்கும் டெய்லரை உடனே தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டார். அவனுக்கு அழுகை வந்தது. தன் இயலாமை குறித்த சுய இரக்கம் மேலோங்கிவிட்டிருந்தது. எதிர்காலத்தில் தன்னாலும் ஓர் இயக்குநராகிவிட முடியும் என்று அநேகமாக தினமும் எண்ணிக்கொண்டிருந்தது போக, தங்கை திருமணம் முடிகிற வரைக்குமாவது இந்த சனியனை விட்டு விலகி வேறு ஏதாவது வேலைக்குப் போகலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்.


எத்தனை நேரம் அங்கேயே அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தோம் என்று அவனுக்கே தெரியவில்லை. சுய நினைவு திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தபோது அனைவருமே வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். சுப்பிரமணி அவசரமாக கர்ச்சிப்பை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு எழுந்தான். அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தபோது அக்கவுண்டண்ட்டும் அப்போதுதான் வெளியே வந்தார்.


சுப்பிரமணி, ஒரு நிமிஷம்.


சார் என்று பதைப்போடு அவர் அருகே ஓடினான்.


வீட்டுக்கா போற? நீ சாலிக்கிராமம்தான?


ஆமா சார்.


போற வழில என்னை டிராப் பண்ணிடுறியா.. வண்டி இருக்கில்ல?


வண்டி உண்டு. அது இயக்குநரின் பழைய மோட்டார் சைக்கிள். அவசர எடுபிடிப் பணிகளுக்காக அவனிடம் அதை அளித்திருந்தார்.


வண்டி இருக்கு சார். வாங்க சார்..


போகிற வழியில் அக்கவுண்டண்ட் அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தார். முப்பத்தி ஐந்து வயதாகியும் இன்னும் அவருக்குத் திருமணமாகவில்லை. ஏதேதோ காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. சம்மந்தம் பேச வருகிறவர்களெல்லாம் சினிமா கம்பெனி என்றால் ஓடிவிடுகிறார்கள். சம்பளம் பதினையாயிரம்தான் என்றால் தலைக்குமேலே கும்பிடு போட்டுவிடுகிறார்கள்.


பிரச்னைதான் சார் என்றான் சுப்பிரமணி.


இப்ப ஒரு ஜாதகம் வந்திருக்கு சுப்பிரமணி. பொண்ணுக்கு இருவத்தியெட்டு வயசாயிருக்குதாம். ரொம்ப சுமாரான ஃபேமிலிதான். அவங்கம்மா டெய்லரிங் பண்றாங்களாம். அண்ணன் ஒருத்தன் இருக்கானாம். அவன் சினிமாவுல இருக்கறாப்பல. அதனால இந்த சம்மந்தம் ஒர்க் அவுட் ஆயிரும்னு எங்கம்மா நினைக்கறாங்க..


ஒரு கணம் சுப்பிரமணிக்குத் தலை சுற்றியது. தன் கட்டுப்பாட்டை மீறி ஏதேதோ பேசிவிடுவோமோ என்று பயந்தான். அடக்கிக்கொண்டு, நிதானமாக, பொண்ணு பேர் என்ன சார் என்றான்


சரியா ஞாபகமில்லப்பா.. ரத்னாவோ என்னமோ சொன்னாங்க எங்கம்மா.


சந்தேகமே இல்லை. இருப்பினும் அவன் மேலும் உறுதிப்படுத்திக்கொள்வதன்பொருட்டு, அவங்கம்மா பேரு? என்று கேட்டான்.


சரஸ்வதின்னு சொன்னாங்கன்னு ஞாபகம்.


இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது என்று அக்கவுண்டண்ட் சொன்னார். சுப்பிரமணி வண்டியை நிறுத்தினான். அவனும் இறங்கினான்.


ரொம்ப தேங்ஸ்ப்பா. என் வண்டி சர்வீசுக்கு குடுத்திருக்கேன். அதான்..


பரவால்ல சார். உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். தப்பா நினைக்கமாட்டிங்கன்னா சொல்லுவேன்.


சொல்லு சுப்பிரமணி


எனக்கு இருவத்தொம்பது நாள் பேட்டா பாக்கி இருக்கு சார். வீட்ல ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு பதினஞ்சு நாள் அமௌண்ட்டாச்சும் ரிலீஸ் பன்ணிங்கன்னா நல்லாருக்கும் என்றான்.


0


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  1 comment  •  flag
Share on Twitter
Published on October 15, 2016 20:50

October 4, 2016

எனது புத்தகங்கள் – ஓர் அறிவிப்பு

கடையில் இல்லை, ஆன்லைனில் இல்லை, மின் நூலாக இல்லை, பதிப்பில் உள்ளதா, உங்களிடம் பிரதி கிடைக்குமா – என் புத்தகங்களைக் குறித்து சில காலமாகத் தொடர்ந்து என்னிடம் கேட்கப்பட்டு வருகிற இவ்வினாக்களுக்கு இங்கே விடை.


இனி என்னுடைய அனைத்து நூல்களும் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியிடப்படும். எப்போதும் அச்சில் இருக்கும். மிக விரைவில் மின் நூல்களாகவும் கிட்டும்.


இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஜனவரி 2017 சென்னை புத்தகக் காட்சியில் கிழக்கு அரங்கில் வழக்கம்போல் இனி என் புத்தகங்களை நீங்கள் காணலாம், வாங்கலாம்.


முதல் கட்டமாக நான்கு புத்தகங்கள் இப்போது கிட்டத்தட்ட தயாராகிவிட்டன. மிக விரைவில் கிழக்கு மறுபதிப்பாக இவை வெளிவரும். தொடர்ந்து மற்றவை.


மேல் விவரங்களுக்கு பிரசன்னாவைப் பிடியுங்கள். அல்லது மருதன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2016 22:43

September 27, 2016

வெஜ் பேலியோ

எம்பெருமான் ஆதியிலே பூமியையும் பாதியிலே என்னையும் உருண்டையாகப் படைத்தான். பூமிக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. ஆனால் நமக்கு சதையும் வதையும் மட்டும்தான் என்பதால் சங்கடங்கள் நிறைய இருந்தன. இந்த எடைச் சனியனைக் கொஞ்சம் குறைத்துப் பார்த்தால் என்ன என்று அநேகமாக என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதிலிருந்தே அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். ஆனால் எங்கே முடிகிறது?


நமக்கு உயரம் நாலடி என்றால் நாக்கு நாலரை அடி. இட்லிக்குக் கூட நாலு விதமாகத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால்தான் உள்ளே இறங்கும். ஒரு முழுச் சாப்பாடு என்றால் அதில் நானாவித அம்சங்களும் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அள்ளித் தின்ற பஜ்ஜி பக்கோடா வகையறாக்களுக்கும் சொல்லிச் சொல்லி உள்ளே தள்ளிய ஐஸ் க்ரீம் ரகங்களுக்கும் கணக்கு வழக்கே இல்லை. சவுக்கார்பேட்டை சேட்டுக்கடை ஒன்றில் இரவு ஒன்பது மணிக்குமேல் பாவ்பாஜி, மலாய் பால் பிரமாதமாக இருக்கும் என்று யாரோ சொன்னார்களென்று குரோம்பேட்டையில் இருந்து ஏழு மணிக்கு பஸ் பிடித்து பாரிமுனைக்குச் சென்று இறங்கி சவுக்கார்பேட்டை சேட்டுக் கடையை விசாரித்துக்கொண்டு பத்தே முக்காலுக்குப் போய் நின்று தின்றுவிட்டு, திரும்பி வர பஸ் கிடைக்காமல் மறுநாள் காலை வீடு திரும்பிய மகாத்மா அல்லது மகாபாவியாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறேன்.


அதெல்லாம் இருபது வயது சரித்திரம். பிறகும் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சவுக்கார்பேட்டைக்குத்தான் போகவில்லையே தவிர சாப்பாட்டு விஷயத்தில் எந்தக் குறையும் எப்போதும் வைத்ததில்லை. பறித்த காய்கறிகளைவிட பொரித்த பட்சணங்களில் என் பொழுதைக் கழித்தேன். வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கைப் பார்த்தால், அது காய் வகை, கிழங்கு வகை என்றே தோன்றாது. பஜ்ஜி வகை என்றுதான் புத்தி சொல்லும். எங்காவது மாவு அரைபடும் சத்தம் கேட்டால், இட்லி தோசைக்கு அரைக்கிறார்கள் என்றுதான் சாதாரண மனிதர்களுக்குத் தோன்றும். எனக்கோ, யாரோ வடைக்கு அரைக்கிறார்கள் என்று அஞ்ஞான திருஷ்டி சொல்லும். அப்பளத்தைச் சுட்டு சாப்பிடலாம், ஒரு தப்புமில்லை என்று எத்தனையோ பேர், எத்தனையோ காலமாகச் சொல்லிவிட்டார்கள். கேட்பேனா? வாணலியில் புத்தம்புது எண்ணெய் ஊற்றி, பளிச்சென்று பொறித்தெடுத்தால்தான் எனக்கு அப்பளம், அப்பளமாகும். குழம்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என்று அனைத்துச் சாதங்களுக்கும் தலா இரண்டு அப்பளங்களை நொறுக்கிப் போட்டுச் சாப்பிட்டால்தான் சாப்பாடு இறங்கும்.


இதுதான் பிரச்னை என்றில்லை. இன்னும் ஏராளம் உண்டு. மோர் பிடிக்காது. தயிர் பிடிக்கும். பால் பிடிக்காது. அதன்மீது படரும் ஏடு பிடிக்கும். வெண்ணெய் பிடிக்கும். நெய் அதைவிடப் பிடிக்கும். ஐஸ்க்ரீம், ரசமலாய், பால்கோவா, அல்வா, அப்பம், அதிரசம் – கணக்கு வழக்கே கிடையாது. குலோப் ஜாமூன் பிடிக்கும், ஜாங்கிரி பிடிக்கும், ஜிலேபி பிடிக்கும். மாதம் ஓரிரு தினங்கள் மதிய உணவு சமயத்தில் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குச் சென்று கால் கிலோ மைசூர்பா வாங்கித் தின்றுவிட்டு வந்த உணவுத் தீவிரவாதியாக இருந்தவன் நான்.


நல்லவேளை சர்க்கரை நோய் வரவில்லை. ஆனால் உடலானது பணம்போல் வீங்கிக்கொண்டே போகத் தொடங்கியது. படித்த காலத்தில் பாடங்களில் ஒருபோதும் நான் வாங்காத எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு வகையறா மதிப்பெண்களெல்லாம் எடை விஷயத்தில் அநாயாசமாக வந்து சேரத் தொடங்கியது. உடல் உழைப்பு என்பது அறவே கிடையாது. பத்தடி தூரத்தில் உள்ள கடைக்குப் போகவேண்டுமென்றாலும் கூசாமல் வண்டி எடுக்கிற ஜாதி. சோம்பேறித்தனத்துக்கு ஒரு அளவே கிடையாது. யாராவது கேட்டால், சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் எல்லா ஊரிலும் எல்லா காலக்கட்டங்களிலும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட நாலு ஒப்புக்குச் சப்பாணி உதாரணங்களை எப்போதும் கைவசம் வைத்திருப்பேன்.


நான் இப்படித்தான்; இறுதிவரை இப்படித்தான் என்றுதான் கடந்த ஜூலை மாதம் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். இருபது வருடங்களாக மிகவும் மௌனமாக இவ்விஷயத்தில் என்னோடு துவந்த யுத்தம் செய்துகொண்டிருந்த என் மனைவி எதிர்பாராத ஒரு நாளில் ஃபேஸ்புக்கில் எனக்கு ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டினார். என் வாழ்வின் மகத்தான ஒரு பெரும் மாறுதல் நிகழ்ந்த தருணம் அது. அவர் சுட்டிக்காட்டியது, ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமப் பக்கம்.


உணவைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். நான் சொல்லுவது சாப்பிடுவதைப் பற்றியல்ல. உணவின் அறிவியல். உணவின் வரலாறு. எந்த உணவு உடலுக்குள் சென்றால் என்ன வினை நிகழும் என்கிற விஷயம். பல வருடங்களுக்கு முன்னர் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் உணவின் வரலாறு என்றொரு தொடர் எழுதியபோது இதற்காக நிறையப் படித்தேன். இயல்பாகவே அது எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்பதால் ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமத்தின் போஸ்ட்களை சுவாரசியமாகப் படிக்கத் தொடங்கினேன்.


மேலோட்டமான வாசிப்பில் என் கவனத்தை முதலில் ஈர்த்த அம்சம், இந்த ஆதி மனிதன் உணவு முறையில் சில மாறுதல்கள் செய்து சுத்த சைவ, சுத்த வைஷ்ணவ விசுவாசிகளும் இதனைப் பின்பற்ற முடியும் என்கிற நம்பிக்கையூட்டல். அதே சமயம், பேலியோவாகவே இருந்தாலும் மரக்கறி உணவு மட்டுமே உண்பவர்களுக்கு எடை இழப்பு மெதுவாகவே நடக்கும் என்கிற தகவல். அதுவும் பெண்களென்றால் சுத்தம். கீதையிலே எம்பெருமான் சொல்வது போல கடமையைச் சரியாகச் செய்துவிட்டு பலனை நினைக்காமல் படுத்துத் தூங்கடி பாரதபுத்ரி என்று பாட்டாகவே படித்தார்கள்.


இதுதான். இந்த அம்சம்தான் என்னை இதனுள் நுழைந்து பார்க்கத் தூண்டியது. காய்கறிகளால் முடியாததா? பால் பொருள்களால் முடியாததா? பேலியோவின் ஆதி புருஷனான பகவான் கிருஷ்ண பரமாத்மா வெண்ணெய் பால் தயிர் பனீர் சீஸ் மட்டுமே சாப்பிட்டு எத்தனை கிளாமராக என்.டி. ராமாராவ் போலவே இருந்திருக்கிறார்? ஒரு ஓவியத்திலாவது சிற்பத்திலாவது குண்டான கிருஷ்ணரைப் பார்த்திருக்கிறோமா? அவனால் முடியுமென்றால் இவனாலும் முடியும் என்று ஆரம்பித்ததுதான் இது.


நாற்பத்தைந்து நாள்களுக்கு முன்னர் நான் பேலியோ தொடங்குவதற்கு முதல் நாள் 110 கிலோ எடையில் இருந்தேன். என் ஸ்கூட்டரைவிட என் கனம் அதிகமாக இருந்தது. ஏறி நின்றால் எடை மெஷின் நடுங்கியது. நாலைந்து வினாடிகள் திகைத்து, மிரண்டு தறிகெட்டு ஓடி நின்று ஓர் எண்ணைக் காட்டும். அது சதவீதங்களை மென்று விழுங்கி மேலேறி நிற்கும். ஆனால் இந்த நாற்பத்தைந்து நாள்களில் என்னால் பதிமூன்று கிலோ எடை குறைக்க முடிந்திருக்கிறது என்பது நானே எதிர்பாராதது.


உணவு முறை மாற்றம் ஒன்றைத் தவிர இதற்காக நான் வேறெந்த சிறப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இயல்பில் நான் முட்டைகூடத் தொடாதவன். கல்லூரி நாள்களில் மதிப்பெண்களில் மட்டுமே அது எனக்குப் பரிச்சயம். இந்தளவு வீர வெஜிடேரியனிசம் எடைக்குறைப்புக்கு உதவாது என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். அதற்காக என்னை மாற்றிக்கொள்ள நான் எப்போதுமே தயாரில்லை.


படிப்பேன். நியாண்டர் செல்வன் எழுதும் பேகன் சமையல் குறிப்புகள், செந்தழல் ரவியின் சிவப்பு மாமிச சிலாகிப்புகள், அணில் கறி உண்ணலாமா, ஆட்டுக்காலில் அல்வா சமைக்கலாமா போன்ற பொது அறிவு வினா விடைகள் ஒன்று விடாமல் வாசித்துத் தீர்ப்பேன். ஆனால் நான் உண்ணுவது முட்டைக்கோசும் பெங்களூர் கத்திரிக்காயும் வெண்டைக்காய் சுரைக்காய் காலி ஃப்ளவர் வகையறாக்களைத்தான்.


சோறு பழகிய வாய்க்கு இதெல்லாம் ரொம்ப நாள் தாங்காது என்றார்கள். அப்படியா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. குழுவில் பரிந்துரைக்கும் காளிஃப்ளவர் சாதத்தை ஒருநாள்கூட நான் முயற்சி செய்து பார்க்கவில்லை. எனக்கு அது தேவைப்படவும் இல்லை.


விஷயம் மிகவும் எளிமையானது நண்பர்களே!


நம் மூதாதையர் – அம்மாக்கள், பாட்டிமார்கள், கொள்ளுப்பாட்டிமார்கள், அத்தைகள், சித்திகள் தமது அன்பை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்த ஒரு வழி, உணவை வயிற்றில் திணிப்பது என்பது. இன்னும் ஒரு வாய், இன்னும் ஒரு வாய் என்று எத்தனை இன்னும் ஒரு வாய் உணவு உள்ளே போயிருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். உண்மையில் நாம் பசிக்கோ ருசிக்கோ சாப்பிடுவதே இல்லை. பழக்கத்துக்குச் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். அரிசிச் சோறு இல்லாத ஓர் உணவை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். உண்மையில் பேலியோவுக்கு மாறியபிறகு ஒரு மனிதனுக்கு அரிசியின் அவசியம்தான் என்ன என்கிற வினாவே எனக்குப் பெரிதாக எழுந்து நிற்கிறது.


இதே காய்கறிகளைத்தான் முன்பும் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இதே வெண்ணெய் நெய் அப்போதும் உண்டு. இதிலேயே பசி போய்விடுகிறபோது அந்தச் சாதமும் குழம்பும் ரசமும் மற்றவையும் எதற்காக?


இனிப்பைச் சொல்கிறீர்களா? ஒப்புக்கொள்கிறேன். அது ஒரு சவால்தான். நான் கிலோ கணக்கில் இனிப்பு சாப்பிட்டவன். எத்தனை மூட்டை சர்க்கரை தின்றாலும் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை என்பதால் சகட்டு மேனிக்குத் தின்று தீர்த்துக்கொண்டிருந்தவன். அரிசி உப்புமாவைப் போல கேசரி கிண்டி வைத்துச் சாப்பிட்டுப் பழகியவன். ஆனால் பேலியோ தொடங்கிய முதல் நாள் முதல் இந்த வினாடிவரை ஒரு கல் சர்க்கரைகூட என் நாவில் பட அனுமதிக்கவில்லை. இதற்குப் பெரிய மன உறுதியெல்லாம் வேண்டாம். மனித குலத்துக்கே இயல்பான ஞாபக மறதி போதும்!


கேவலம் நமக்காக, நமது நலனுக்காக நாம் மேற்கொள்ளும் சிறு முயற்சி இது. அரிசி, சர்க்கரை – இந்த இரண்டையும் நமது உணவில் இருந்து நீக்கிவிட்டாலே பாதி வியாதிகள் குணமாகிவிடுகின்றன. மீதி வியாதிகளையும் விரட்டியடிக்க மீதமுள்ள தானியங்களையும் தவிர்க்கச் சொல்கிறது பேலியோ. இருக்கவே இருக்கிறது பாதாம், பிஸ்தா, வால்நட். இந்தப் பணக்காரர்களின் நொறுக்குத் தீனியை நாம் நமது அன்றாட உணவாக்கிக்கொண்டு அவர்களையும் பழிவாங்கி நமக்கும் நல்லது செய்துகொள்ள இது ஒரு வாய்ப்பல்லவா?


இந்த டயட்டை ஆரம்பித்த சில நாள்களில் என் அம்மா, இது எத்தனை நாளைக்கு என்று கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இனி இதுதான் வாழ்க்கை என்று சொன்னால் அவரால் ஜீரணிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். நான் பதில் சொல்லவில்லை. ஆனால் எண்ணி ஒரு மாதத்தில் எனக்கு இருந்த ரத்தக் கொதிப்புப் பிரச்னை சீரானதையும் என் நடவடிக்கை மாற்றங்களையும் பார்த்தபோது அவரது கவலை சற்றுக் குறைந்ததைக் கண்டேன். இதெல்லாம் பெரிய ரிஸ்க், உடனடி ஹார்ட் அட்டாக் என்று அச்சுறுத்திய நண்பர்கள், முன்னைக்காட்டிலும் இன்று நான் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதைக் கண்டு வியக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பத்தடி நடப்பதற்குள் நிறைமாத கர்ப்பிணிபோல் இடுப்பில் கைவைத்துவிடுகிற வழக்கம் உள்ளவன் நான். இன்று சர்வ சாதாரணமாக என்னால் நான்கு கிலோமீட்டர் வரை நடக்க முடிகிறது. இது அடுத்த மாதத்துக்குள் பத்து கிலோ மீட்டராகும். ஆறு மாதங்களில் இருபதாகலாம். தமிழகத்தில் உள்ள என் வீட்டில் இருந்து ஆந்திர எல்லையில் இருக்கும் சங்கர்ஜியின் வீட்டுக்கு நடந்தே போய்வருவது என்று ஒரு செயல்திட்டம் வைத்திருக்கிறேன். அது சாத்தியமாகும் நாளில் நானும் ஓர் ஆண் இலியானாவாகியிருப்பேன்!


இன்னொன்று சொல்ல வேண்டும். வெஜிடேரியன் பேலியோவில் வெரைட்டி இல்லை. திரும்பத் திரும்ப நாலு காய், நாலு கூட்டு. விரைவில் போரடித்துவிடுகிறது என்கிறார்கள். நானும் ஆரம்பத்தில் இது பற்றிக் கொஞ்சம் கவலைப்பட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தால் இத்தனை வருட காலமாகவும் நாம் ஒரே குழம்பு ரசத்தைத்தான் லிட்டர் லிட்டராகக் குடித்திருக்கிறோம். என்ன பெரிய வெரைட்டி வாழ்ந்திருக்கிறது?


நண்பர்களே, ருசி என்பது நாவில் இல்லை. திருப்தி என்கிற மனத்தின் ஒரு உணர்வுதான் ருசியாகவும் வாசனையாகவும் இன்னபிறவாகவும் நமது வாழ்வில் களிப்பூட்டும் கணங்களை உருவாக்குகிறது. என்னைக் கேட்டால் முன்பு நான் உண்டுகொண்டிருந்ததைக் காட்டிலும் இப்போது ருசியாகவே உண்கிறேன். திருப்தியாகவும் உண்கிறேன். பசி என்கிற உணர்வு எனக்கு அறவே இல்லை. இது எனக்கே வியப்பூட்டும் விஷயமாக இருக்கிறது.


சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் ஓர் ஓட்டல் அதிபர் சொல்லியிருந்தார். நல்ல உணவு என்பது சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பசியைத் தூண்டவேண்டும்!


எத்தனை அக்கிரமம் இது! என் இப்போதைய பேலியோ இரவு உணவு மறுநாள் மதியம் ஒரு மணி வரை தாங்குகிறது. செல்வன், சவடன் போன்றவர்கள் இதைத்தான் மறுநாள் இரவு வரை நீட்டித்து, ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை வேளை சாப்பிடுகிறோம் என்பது பொருட்டே அல்ல. எப்படி சாப்பிடுகிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது சூட்சுமம். உண்ணாதிருக்கும் நேரங்களில் நமது உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது என்கிறது அறிவியல். முள்ளை முள்ளால் எடுக்கிற, நெருப்பை நெருப்பால் அணைக்கிற இந்த பேலியோ என்கிற விஞ்ஞானபூர்வமான உணவு முறை நமது ஆரோக்கியத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது புரிந்துவிட்டால் போதும். இந்த மனத்தடைகளைக் கடப்பது மிகவும் எளிது.


இறுதியாக ஒரு விஷயம். நான் கேள்விப்பட்ட, சந்தித்த ஓரிரு அசைவ பேலியோ நண்பர்களுக்கும் எடைக்குறைப்பு மெதுவாக நிகழ்வதாகத் தெரிந்தது. வெஜிடேரியன் பேலியோவில் சர்வநிச்சயமாக அப்படித்தான் என்று அனைவருமே அடித்துச் சொன்னார்கள். நான், வெஜிடேரியன் தான். ஆனால் எனக்கு இது நிகழும் வேகம் என்னாலேயே நம்பமுடியாததாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்தேன்.


எளிய பதில்தான்! பேலியோவில் பிரச்னை இல்லை. இடையிடையே நாம் நம் உடலை எவ்வளவு ஏமாற்றுகிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது விஷயம். அசைவமோ சைவமோ – கொடுக்கப்படுகிற டயட்டை மட்டும் துல்லியமாகக் கடைப்பிடித்தால் ரிசல்ட் சரியாக இருக்கும். பாதாம் சாப்பிடலாம், நெய் சாப்பிடலாம், பாதாம் அல்வா சாப்பிட்டால் என்ன என்று ஆரம்பித்தால் முடிந்தது கதை. அதே போலத்தான் கோழி சாப்பிடலாம், முட்டை சாப்பிடலாம் பிரியாணி கூடாதா என்று அவ்வப்போது தொட்டுப் பார்த்தாலும் ஆட்டம் க்ளோஸ்.


வெறும் நூறு நாள்களுக்கு இதில் முழுத் தீவிரமாக, சற்றும் ஏமாற்றாமல் இருந்து பார்த்துவிடுவதில் என்ன கஷ்டம்? நூற்றி ஒன்றாவது நாளில் இருந்து இதுவே நமது வாழ்க்கை முறையாகிவிட்டிருக்கும்! அட, உயிரே போனாலும் பரவாயில்லை என்று இறங்கி அடிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக உயிர் போகாது என்பதுதான் மனித வாழ்வின் ஆகப்பெரிய சூட்சுமம் என்பது உங்களுக்கா தெரியாது?


நண்பர்களே! மரணமற்ற பெருவாழ்வு என்பது ஓர் அழகான பெருங்கனவு. பேலியோ என்பது மரணத்தை வெகுவாக ஒத்திப்போட வைக்கும் ஓர் உணவு முறை. நாம் உண்பதற்காக வாழ்கிறோமா, வாழ்வதற்காக உண்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டு மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலைக் கண்டுபிடித்து விடுவோமென்றால் மனத்தடைகள் நம்மை விட்டுப் போய்விடும்.


நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமுடன் நல்வாழ்வு வாழ என் மனமார்ந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். அடுத்த முறை நாம் சந்திக்கும்போது நான் மனோஜ் விஜயகுமாரின் தம்பிபோல் இருப்பேன். அப்போது நான் பேசவேண்டி இராது. என் தோற்றம் உங்களிடம் பேசும்.


நன்றி, வணக்கம்.


(திருப்பூர் பேலியோ மாநாட்டில் வெஜ் பேலியோ குறித்து நான் நிகழ்த்திய உரை.)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2016 07:01