அஞ்சலி: ரேவதி (என்கிற) ஈ.எஸ். ஹரிஹரன்
ரேவதி என்கிற ஈ.எஸ். ஹரிஹரன் நேற்றிரவு காலமானார் என்று இன்று காலை தகவல் வந்தது. வாழ்வில் யார் யார் இல்லாவிட்டால் இன்றைய நான் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். அந்தச் சிறிய பட்டியலில் அவர் இருந்தார்.
டிசம்பர் 6, 1992 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல நாள் என்று பார்த்ததால், ஞாயிறு என்று பார்க்கவில்லை. அலுவல் நேரம், விடுமுறை நாள் போன்றவற்றில் அரசு அலுவலகங்களைப் போலவே துல்லியம் கடைப்பிடித்தாலும், கல்கி என் விஷயத்தில் அதற்குச் சம்மதித்ததன் காரணம் மிக எளிமையானது. ஆசிரியர் கி. ராஜேந்திரனின் இயல்பே அதுதான். எதையும் மறுக்க மாட்டார். அன்றைக்கு ஈக்காடுதாங்கலில் கல்கி அலுவலகத்துக்குச் சென்று வேலையில் சேர்ந்தேன். கிரா என்னை எடிட்டோரியலுக்கு அழைத்துச் சென்று ஓர் இருக்கையில் அமரச் சொன்னார். ‘கொஞ்ச நேரம் எதுனா எழுதிட்டிருங்க. இன்னிக்கி அது போதும். நாளைலேருந்து கரெக்டா பத்து மணிக்கு வந்துருங்க’ என்று சொன்னார்.
மறுநாள் எனக்கு ஹரிஹரன் சார் அறிமுகமானார். அவர் கோகுலத்தின் ஆசிரியர். காய்ச்சிய பாலின் மீது படியும் ஆடை போன்ற தோற்றம் அவருக்கு. குணமும் குரலும்கூட அதே மிருது. எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லோரிடமும் ஒரே விதமான தொனியில்தான் பேசுவார். அது கீழ்க்குரல் இல்லை. ஓங்கியும் ஒலிக்காது. வால்யூம் பட்டனை எப்போதும் ஒன்றில் வைத்தால் எப்படி ஒலிக்குமோ அப்படி. இந்த மனிதருக்கு கோபம், வெறுப்பு, சலிப்பு இதெல்லாம் வரவே வராதா என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வராது. விடுமுறை நாள்களில் விளையாடித் தீர்த்த பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் இங்குமங்கும் அலைந்து திரியும் சிறு குழந்தையைப் போலத்தான் எப்போதும் இருப்பார்.
கல்கியில் முதல் முதலில் என்னை அவருக்குத்தான் உதவியாளனாக அமர்த்தினார்கள். சின்னப்பையன் என்று அலட்சியம் காட்ட மாட்டார். மிகவும் மரியாதையோடு நடத்துவார். ‘இதைச் செய்’ என்று சொல்ல மாட்டார். ‘செய்ய முடியுமா? நேரம் இருக்கா?’ என்றுதான் கேட்பார். கோகுலத்துக்கு வருகிற கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். கதைகளில் இடம் பெறும் ஒரு சொல்கூடப் பன்னிரண்டு வயதுச் சிறுவர் சிறுமியருக்குப் புரியாமல் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
‘குழந்தைகளுக்கு எழுதற கதைல என்ன இருக்கணும்? ஒண்ணு சிரிப்பு வரணும். இல்லேன்னா எதாவது ஒண்ண புதுசா தெரிஞ்சிக்கணும். இந்த ரெண்டும் இல்லேன்னா அது சரியா இல்லேன்னு அர்த்தம்’ என்பார்.
‘அதாவது ரிஜெக்ட் பண்ணிடலாம். கரெக்டா சார்?’ என்று அழுத்திக் கேட்டாலும், ‘திருத்தி சரி பண்ண முடியறதான்னு பாக்கலாம்’ என்றுதான் சொல்வாரே தவிர, எதையும் யாரையும் எதன் பொருட்டும் நிராகரிக்கும் மனம் அடிப்படையிலேயே அவருக்குக் கிடையாது.
கோகுலத்தின் முதலாசிரியர் அழ. வள்ளியப்பாவின் காலத்தில் நான் எட்டாம் வகுப்புச் சிறுவன். அப்போதே கோகுலத்தில் எழுதியிருக்கிறேன். ஹரிஹரன் சாருக்கு அது தெரியும். எனவே என்னை கோகுலத்துக்கு மீண்டும் நிறைய எழுதும்படிச் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், அந்நாள்களில் என் கவனமெல்லாம் கல்கியில் எழுதுவது சார்ந்தே இருந்தது. வேலை பார்ப்பது கோகுலத்துக்காக இருந்தாலும் வாரம் ஒரு சிறுகதையாவது கல்கிக்கு எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். சிறுகதை பிரசுரமாகாவிட்டால் ஏதாவது கட்டுரை எழுதுவேன். சினிமா விமரிசனம் எழுதுவேன். டிவி விமரிசனம் எழுதுவேன். ஏதோ ஒன்று. கல்கியில் வாரம் தவறாமல் என் பெயர் வருகிறதா என்பதில் அப்படியொரு வெறி.
ஹரிஹரன் சாருக்கு நான் கோகுலத்தின்மீது ஆர்வமில்லாமல் இருந்ததில் உண்மையிலேயே மிகுந்த வருத்தம். அது எனக்கு நன்றாகத் தெரியும். என்னை எப்படியும் கல்கிக்கு மாற்றிக்கொண்டுவிடுவார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தாலும் விடாப்பிடியாக என்னைச் சிறுவர்களுக்கு எழுதச் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அடிப்படை டெஸ்க் வேலைகளில் அவர்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். கல்கியில் அப்போது சில பக்கங்கள் மட்டும் வண்ணத்தில் வரும். சில பக்கங்கள் இரண்டு வண்ணங்களில் வரும். அதற்கேற்பக் கதை-கட்டுரைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, எதற்கு நான்கு வண்ணம் தேவை, எதற்கு இரண்டு வண்ணங்கள் (கறுப்பு + நீலம் அல்லது கறுப்பு + மெஜந்தா) போதும், இந்த வண்ண வேறுபாடு வாசகரை உறுத்தாத விதத்தில் எப்படிப் பக்கங்களை வடிவமைப்பது என்பதையெல்லாம் அவரிடம்தான் கற்றேன். ஏனோ, நான் கோகுலத்தில் இருந்த ஆறேழு மாதங்களில் ஒரு கதையோ, பாடலோ, துணுக்கோகூட அதில் எழுதவேயில்லை. அப்போது எனக்கு அது குறித்து வருத்தமே ஏற்படவில்லை. ஆனால் அவருக்கு அது பெரிய குறையாகத் தோன்றியிருக்கிறது என்பது பிறகு புரிந்தது. அவரே பல முறை என்னிடம் அது குறித்து வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.
பயிற்சி முடிந்து என்னைக் கல்கிக்கு மாற்றினார்கள். அதன் பிறகும் ஹரிஹரன் சாரை தினமும் பார்ப்பேன், பேசுவேன், சீண்டுவேன் எல்லாம் செய்வேனே தவிர, அவர் இருந்த காலம் வரை கோகுலத்துக்கு எதையுமே எழுதவில்லை. கல்கி அப்போது எண்பது பக்கங்கள். எண்பதில் இருபது பக்கங்களையாவது நான் எழுதிவிட வேண்டும் என்று வெறி கொண்டு வேலை செய்வேன். கண்டேபிடிக்க முடியாதபடி ஒரே இதழில் நான்கைந்து வேறு வேறு மொழி நடைகளிலெல்லாம் எழுதியிருக்கிறேன்.
எனக்குப் பிறகு அவருக்கு உதவி ஆசிரியராக சுஜாதா வந்து சேர்ந்தார் (இப்போது இந்து தமிழ் திசையில் இருக்கிறார்). ஹரிஹரன் சார் ஓய்வு பெறவிருந்த சமயம் அது. தன் குழந்தையை இன்னொரு குழந்தையின் பொறுப்பில் விட்டுவிட்டுக் கடை வீதிக்கு அவசரமாகப் புறப்பட்டுப் போகும் ஒரு தாயைப் போல அவர் சுஜாதாவுக்கு ‘கோகுலத்தைக் கற்பித்த’ காட்சிகள் இன்னும் எனக்கு நினைவிருக்கின்றன.
விடைபெற்ற நாளிலும் அவர் எனக்குச் சொன்னது ஒன்றுதான். ‘கோகுலத்துக்கு எழுதணும். மறந்துடக்கூடாது.’
நான் கோகுலத்தையோ அவரையோ உயிருள்ளவரை மறக்க முடியாது. ஆனால் என் ஆத்திரங்கள், பதற்றங்கள், ஆவேசம் அனைத்தும் தணிந்து, அந்தப் பத்திரிகையில் எழுத வருவதற்கு மேலும் பத்தாண்டுகள் தேவைப்பட்டன. கோகுலத்தில் நான் ‘புதையல் தீவு’ எழுதிய நாள்களில் இதழ் வெளியானதும் எனக்கு வருகிற முதல் போன் ஹரிஹரன் சாருடையதாகத்தான் இருக்கும். ‘ஐஸ் க்ரீம் பூதம்’ எழுதியபோது ஒரு முறை சொன்னார்,
‘எனக்குத் தெரியும், என்னிக்காவது இந்தப் பக்கம் வந்துடுவிங்கன்னு.’
அந்தக் குரலில் இருந்த குதூகலத்தை இப்போது எண்ணிக்கொள்கிறேன். மிக நிச்சயமாக ஒரு குழந்தைக்கு மட்டுமே சாத்தியமான வெளிப்பாட்டு விதம் அது. அவரது வாழ்த்தை ஆசியாக எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன்.
கற்றுக்கொடுப்போரைத் தவிர, பிற அனைவருக்கும் நாம் படுகிற கடன்களை எப்படியாவது அடைத்துவிட முடியும். தீராக்கடன் என்பது ஆசிரியர்களிடம் படுவது ஒன்றே. ஹரிஹரன் சார், இறுதிவரை என்னைக் கடன்காரனாக வைத்திருக்கப் போகும் மிகச் சிலருள் ஒருவர்.
அஞ்சலி.
All rights reserved. © Pa Raghavan - 2022