நடமாடும் சினிமா
நான்ஸி நிமிபுட்ரின் இயக்கியுள்ள ONCE UPON A STAR என்ற தாய்லாந்து திரைப்படத்தைக் காணும் போது எனது சிறுவயது நினைவுகள் பீறிட்டன.

எனது கிராமத்தில் பீடிக்கம்பெனி சார்பாக இலவசமாகத் திரையிடப்படும் திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன். ஒரு வேனில் பீடி விளம்பரம் செய்தபடியே கிராமத்தை சுற்றிவருபவர்கள் இரவில் ஊர் மைதானத்தில் திரைக்கட்டி படம் போடுவார்கள். 16mm ஃபிலிம் புரொஜெக்டர் பயன்படுத்துவார்கள். எம்.ஜி.ஆர் படமா, சிவாஜி படமா என்பது எந்தப் பீடிக்கம்பெனி என்பதற்கு ஏற்ப மாறுபடும்.
வா ராஜா வா, கோமாதா என் குலமாதா, காவல்காரன். தாய்க்கு தலைமகன், சவாலே சமாளி போன்ற திரைப்படங்களைத் திரையிட்டுப் பார்த்திருக்கிறேன்.
மாலை ஆறு மணிக்கெல்லாம் திரைக்கட்டி விடுவார்கள். ஆனால் என்ன படம் என்று சொல்ல மாட்டார்கள். பீடி விளம்பரத்திற்கான நோட்டீஸ். இலவச பீடி விநியோகம் நடந்து முடிந்த பின்பே படத்தைத் திரையிடுவார்கள். ஆபரேட்டர் அருகில் அமர்ந்து கொண்டு ஓடி முடித்த ரீல்களைப் பத்திரமாக மரப்பெட்டிக்குள் வைப்பதற்கு உதவி செய்வான் கூடப் படித்த முத்துராமன். இதற்காக அவனுக்கு எட்டணா கிடைக்கும்.
படம் ஆரம்பிக்கும் முன்பாக இடம் பிடிக்க ஊர்மக்கள் பாய் அல்லது சாக்குக் கொண்டு வந்து விரித்துவிடுவார்கள். மாட்டுவண்டியை ஒரமாகப் போட்டு அதில் அமர்ந்து படம் பார்ப்பவர்களும் உண்டு. சைக்கிளில் அமர்ந்து பார்ப்பவர் உண்டு. கயிற்றுகட்டிலைக் கொண்டு வருகிறவர்கள் ஒரமாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டுப்பாடு. பீடி விளம்பரத்திற்கும் கோமாதா என் குலமாதாவிற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. அதை நிறைய முறை போட்டிருக்கிறார்கள்.
ஒருமுறை மின்சாரம் துண்டிக்கபட்ட போது இருட்டிற்குள் யாரோ ஒரு ரீலைத் திருடிக் கொண்டுபோய்விட்டார்கள். பீடிக் கம்பெனி ஆட்கள் ஊர் முழுவதும் தேடியும் அந்த ரீல் கிடைக்கவில்லை. அந்த வருஷத்தோடு அந்த பீடிக்கம்பெனி வருவது நின்று போனது.
மருந்துக் கம்பெனி விளம்பரத்திற்காக ஊர் ஊராகச் சென்று படம் காட்டும் குழுவினரைப் பற்றியதே ONCE UPON A STAR திரைப்படம்.
இன்று திரைப்படங்களில் ஒரு நடிகருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசுவது போல இவர்கள் மௌனப் படத்தைத் திரையிட்டு அதில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். பெண் குரலில் கூட ஆணே பேசுகிறான்.

ஒரு பழைய வேன். அதற்குள் ஒரு 16mm ஃபிலிம் புரொஜெக்டர், படப்பெட்டி, மைக், திரை மற்றும் இதர உபகரணங்கள். விற்பனைக்கான மருந்துகள். நான்கு பேர் அதில் தொலை தூர கிராமங்களை நோக்கி பயணம் செய்கிறார்கள்.
காவோ, மனித் மற்றும் மேன் என மூவர் அந்தப் பயணக்குழுவில் இருக்கிறார்கள். மூவரில் மனித் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்கிறான். அவன் திறமைசாலி. சினிமாவில் சாதிக்க வேண்டும் எனக் கனவு காணுகிறவன்.
புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மித்ர் சாய்பாஞ்சா படங்களை அதிகம் காட்டுகிறார்கள். அவருக்கு மனித் குரல் கொடுக்கிறான் இலவசமாகத் திரையிடப்படும் படத்தின் இடைவேளையில் தங்களின் மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். அதன் வசூலுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.
மருந்துக் கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் எந்த நடிகருக்கு யார் சிறப்பாகக் குரல் கொடுப்பவர். எந்தப் படத்திற்குக் கூட்டம் அதிகமாகச் சேர்கிறது என்பதில் பலத்த போட்டி ஏற்படுகிறது.

மனித்தின் குழுவில் ருவாங்கே என்ற இளம்பெண் இணைந்து கொள்கிறாள். கதாநாயகிக்கு குரல் கொடுக்கிறாள். அது மிகுந்த வரவேற்பை பெறுகிறது. அதன்பிறகு அவர்கள் ஜோடியாகச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். தன்னை யாரும் நெருங்க கூடாது என்பதற்காகத் தனக்குச் சிபிலிஸ் நோய் இருப்பதாகப் பொய் சொல்கிறாள் கே.
காவோவும் மனித்தும் கேயைக் காதலிக்கிறார்கள், அவள் யாரை விரும்புகிறாள் என்பதை அறிந்து கொள்ளத் தனித்தனியாக அணுகுகிறார்கள், கே தனது எதிர்காலத்திற்கெனத் திட்டம் வைத்திருக்கிறாள். அதை அறிந்து கொள்ளும் மனித் அவள் தனது விருப்பத்தின்படி செயல்பட அனுமதிக்கிறான்.

நால்வரின் பயண அனுபவமும், அவர்களுக்குள் ருவாங்கேயை காதலிப்பதில் ஏற்படும் போட்டியும், திரையிடுவதில் ஏற்படும் பிரச்சனையும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தீரவத் ருஜிந்தமின் ஒளிப்பதிவும் மனித் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுகோல்லாவத் கனாரோட் நடிப்பும் சிறப்பானது.
1960களின் பிற்பகுதியில் தாய்லாந்தின் கிராமப்புற பார்வையாளர்கள் எப்படியிருந்தார்கள். அன்றைய திரையுலகம் எவ்வாறு இயங்கியது என்பதைப் படம் உண்மையாக விவரிக்கிறது. திரை நட்சத்திரத்தின் வாழ்க்கையும் குரல் கொடுப்பவரின் வாழ்க்கையும் ஒரே புள்ளியில் இணைகின்றன.
தாய்லாந்தின் அழகிய கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்லும் இந்தச் சினிமா பயணம் தாய்லாந்து சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திரம் மித்ர் சாய்பாஞ்சாவுக்குச் சிறப்பான அஞ்சலியை செலுத்துகிறது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
