குற்றமுகங்கள் 15 பச்சைக்கண் லிஸ்டர்
1899ம் ஆண்டுப் பச்சைக்கண் லிஸ்டர் என அழைக்கப்பட்ட ஜோசப் லிஸ்டர் பெல்காமில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். நாற்பது வயதிருக்கும். தீவிர காளி பக்தராகக் கருதப்பட்ட லெஸ்டர் நெற்றியில் குங்குமம் அணிந்து கொண்டார். மாதம் ஒருமுறை விசேச காளி பூஜைகளை நடத்தியதோடு தானே சிவப்பு ஆடையைக் கட்டிக் கொண்டு காளி நடனம் ஆடியதும் உண்டு.

லெஸ்டரைத் தேடி சாமியார்களும், மாந்திரீகம் அறிந்தவர்களும் வந்து போவது வழக்கம். அவர் பழைய கோட்டையினுள் ஏதோ புதையலைத் தேடிக் கொண்டிருந்ததாக மக்கள் பேசிக் கொண்டார்கள். இயற்கையான புத்திசாலித்தனமும், அப்பாவியான தோற்றமும் கொண்டவரால் மட்டுமே மக்களை ஏமாற்ற முடியும் என லிஸ்டர் அறிந்திருந்தார்.
நகரின் முக்கிய வணிகர்கள், அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்த ஆங்கில நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வந்தார். அதன் காரணமாக லிஸ்டர் மீது நன்மதிப்பு உருவாகியிருந்தது.
ஒரு நாள் லிஸ்டரின் தவறான சிகிட்சை காரணமாக லெக்கி என்ற கர்ப்பிணிப் பெண் இறந்து போனாள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரது மருத்துவமனையை உடைத்து நொறுக்கியதோடு அவரையும் தாக்கி கையை உடைத்தார்கள்.
டாக்டர் லிஸ்டர் ஒரு போலி மருத்துவர் என அவரது உதவியாளராகப் பணியாற்றிய முனீம் வாக்குமூலம் அளித்த காரணத்தால் அவர் மீது பொதுவிசாரணை நடைபெற்றது. இதில் அவரிடம் சிகிட்சை பெற்ற நோயாளிகள் சாட்சியம் அளித்தார்கள். ஒருவன் தனது பல்லை லிஸ்டர் பிடுங்கியதில் காது கேளாமல் போய்விட்டதாகப் புகார் செய்தான். இன்னொரு பெண் தனது நாக்கின் நுனியை லிஸ்டர் வெட்டிவிட்டதாகச் சொன்னாள்.
லிஸ்டர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். நீதிமன்றமே மருத்துவர் குழுவை அவரை விசாரிப்பதற்காக நியமித்தது. அதன் தலைவராக டாக்டர் எட்வர்ட் பக்லி நியமிக்கபட்டார். விசாரணையின் போது லிஸ்டர் முன்னுக்குப் பின்னாகத் தகவல்களை வழங்கினார். அது அவர் மீதான சந்தேகத்தை அதிகமாக்கியது. லிஸ்டர் தான் உண்மையான மருத்துவர் என்பதற்கான சான்றுகள் தன்னிடமிருப்பதாகவும் கூறியதோடு ராணுவ மருத்துவமனை அளித்த நற்சான்றிதழ் ஒன்றினையும் சமர்பித்தார்.
பக்லி அதனை நம்பவில்லை. தன்னுடைய கண்முன்னால் அவர் ஒரு குடல்அறுவை சிகிட்சையை நடத்திக் காட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.
அறுவைசிகிட்சைக்கான நாள் குறிக்கபட்டது. டாக்டர் பக்லியோடு அன்று டாக்டர் ரால்ப் அலெக்ஸ்க்கும் விசாரணை அதிகாரியாகக் கலந்து கொண்டார்.
அறுவை சிகிட்சை துவங்குவதற்கு முன்பாக லிஸ்டர் தனக்கு மருத்துவம் தெரியாது என்பதை ஒத்துக் கொண்டதோடு, தான் இரண்டு ஆண்டுகள் மீரட் ராணுவ மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணியாளராக வேலை செய்த உண்மையை ஒத்துக் கொண்டார். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக அவர் வேறுவேறு ஊர்களில் மருத்துவராக நடித்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
மருத்துவ மோசடிகளை விடவும் அவர் பழைய கலைப்பொருட்களைத் திருடி விற்ற கதையும், ஏழு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விஷயமும் விசாரணையில் தெரிய வந்தது.
போலி மருத்துவர்களுக்கு என்ன தண்டனை அளிப்பது என அன்றைய சட்டத்தில் இல்லை. ஆகவே திட்டமிட்ட மோசடிக்கான அதிகபட்ச தண்டனையை அளிக்க வேண்டும் எனப் பக்லி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்

லிஸ்டர் திருமணம் செய்து கொண்ட ஏழு பெண்களும் வசதியானவர்கள். அழகிகள். அவர்கள் குடும்பத்துடன் லிஸ்டர் நெருங்கிப் பழகியிருக்கிறார். தான் கர்சன் பிரபுவின் உறவினர் என்றும் இங்கிலாந்தில் தனக்கு மிகப்பெரிய சொத்து இருப்பதாக நம்ப வைத்திருக்கிறார். அவரது காளி பக்தி மற்றும் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் பெண்வீட்டாரை நம்ப வைத்திருக்கிறது.
ஆச்சரியமானதும் ஆனால் நம்பமுடியாதது போலத் தோன்றுவதுமான செய்தி என்னவென்றால் வேறு வேறு ஆண்டுகளில் அவரது ஏழு திருமணங்களும் ஜனவரி 19 அன்றே நடந்தேறியிருக்கின்றன. திருமணம் செய்து கொண்ட பெண்ணோடு ஒன்றோ இரண்டோ ஆண்டுகள் வசித்திருக்கிறார். பின்பு இங்கிலாந்திற்கு அவசர வேலையாகச் சென்று வருவதாகக் கிளம்பியிருக்கிறார். மீண்டும் அவர்களைச் சந்திக்கவேயில்லை.
லிஸ்டர் மீதான விசாரணையின் போது அவரது ஐந்து மனைவிகள் நேரில் வந்திருந்தார்கள். வராத இருவர் அது தனது கணவரில்லை என்று மறுத்தார்கள். எந்தப் பெண்ணும் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாக லிஸ்டர் மீது புகார் தரவில்லை. லிஸ்டருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
விடுதலையாகி வந்த லிஸ்டர் இங்கிலாந்திற்குக் கப்பல் ஏறினார். அந்தக் கப்பலில் வந்த பியாரா என்ற பார்சி பணக்காரப் பெண்ணுடன் பேசிப் பழகி கப்பலிலே திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமண விபரம் குறித்து இசபெல்லா கப்பலின் பதிவேடு தெரிவிக்கிறது. ஆறு வாரங்களுக்குப் பின்பு கப்பல் லண்டனை அடைந்த போது பியாரா மட்டுமே தரையிறங்கினார். லிஸ்டரைக் காணவில்லை. கப்பலில் இருந்த லிஸ்டருக்கு என்ன ஆனது என பியாராவால் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவள் தன் வாழ்நாளின் கடைசி வரை லிஸ்டரின் மனைவியாகவே அறியப்பட்டாள்•
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
