காலத்தால் அழியாத உண்மை
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சிக்ரிட் அன்ட்செட் எழுதிய கிறிஸ்டின் லாவ்ரான்ஸ்டேட்டர் நாவல் ஆயிரம் பக்கங்களுக்கும் மேலானது. மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளது. நாவலில் வரும் கிறிஸ்டியன், சிக்ரிட்டின் மாற்றுவடிவம் போலவே சித்தரிக்கபடுகிறாள். சிக்ரிட்டின் சொந்த வாழ்க்கை அவரது நாவலை விடவும் திருப்பங்களைக் கொண்டது. துயரத்தால் நிரம்பியது.

14ம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. மலைகிராமம் ஒன்றில் வாழும் லாவ்ரான்ஸின் மகளான கிறிஸ்டின் விளையாட்டுதனமானவள். ஒரு நாள் தனது தங்கை உல்விட்டோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் சரிந்து விழுந்துவிடவே உல்விட் காயமடைகிறாள். அதில் அவள் உயிர் பிழைக்கமாட்டாள் என்ற நிலை உருவாகிறது.
கிறிஸ்டின் அம்மா சூனியக்காரி ஆஷில்ட்டை அழைத்து வந்து மகளைக் குணப்படுத்தப் போவதாகச் சொல்கிறாள். கடவுளால் தன் மகளைக் காப்பாற்ற முடியாவிட்டால் தான் சாத்தனின் கதவையும் தட்டுவேன் என்கிறாள்.
தனது கணவனை விஷம் கொடுத்துக் கொன்றதாக ஊர்விலக்கம் செய்யப்பட்டுத் தனியே வாழ்ந்து வரும் ஆஷில்ட்டை அழைத்து வருகிறார்கள். அவள் மருந்து கொடுத்து உல்விட்டைக் குணப்படுத்துகிறாள். கட்டையை ஊன்றி நடக்குமளவு உல்விட் தயாராகிறாள்.. திருமணத்திற்கு முன்பே கிறிஸ்டின் தனது கன்னித்தன்மையை இழந்திருக்கிறாள். அதைச் சூனியக்காரி ஆஷில்ட் அறிந்திருக்கிறாள். அது குறித்து கிறிஸ்டினிடம் பேசுகிறாள். பரிகசிக்கிறாள்.
சைமன் டாரேவை கிறிஸ்டின் திருமணம் செய்து கொள்ளப் போகும் போது எதிர்பாராத பிரச்சனை உருவாகி தடைஏற்படுகிறது. இதற்கிடையில் அவளைப் பண்ணையில் வேலை செய்யும் ஒருவன் பலவந்தமாகப் பாலியல் உறவு கொள்ள முற்படுகிறான். அவனைக் கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடுகிறாள் கிறிஸ்டின். இதைப் பற்றி அவதூறு பேசியவனுடன் ஆர்னே சண்டையிடும் போது எதிர்பாராமல் கொல்லப்படுகிறான். நிலச்சரிவு போல எதிர்பாராமல் அவளது வாழ்க்கையின் உறுதி தகர்ந்து போகிறது.
துயரத்திலிருந்து விடுபடுவதற்காக ஒராண்டு காலம் கிறிஸ்டின் ஒஸ்லோவில் அமைந்துள்ள பெனடிக்டைன் மடாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியாக சேருகிறாள். அங்கே புதிய தோழிகள் அறிமுகமாகிறார்கள்.
ஒரு நாள் எதிர்பாராதவிதமாக எர்லெண்ட் என்ற படைத் தளபதியை சந்திக்கிறாள். அவர்களுக்குள் காதல் அரும்புகிறது. வாழ்வின் இனிமையை மீண்டும் அறியத் துவங்குகிறாள். எர்லெண்ட் நீதிபதியின் மனைவியான எலைனுடன் சேர்ந்து வாழுகிறவன். அவனுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் போது அதிர்ச்சி அடைகிறாள்.
ஆனாலும் அவன் மீதான காதலில் இணைந்து வாழ்வது எனமுடிவு செய்கிறாள். எர்லெண்டுடன் அவனது ஹுசாபி எஸ்டேட்டுக்கு செல்கிறார். அது மோசமாக நிர்வகிக்கப்படுவதைக் கிறிஸ்டின் கண்டுபிடிக்கிறாள். தானே பொறுப்பேற்று அதை ஒழுங்கமைக்கத் தொடங்குகிறாள் அவர்கள் புதிய வாழ்வினை துவங்குகிறார்கள். கிறிஸ்டினுக்குக் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
இந்நிலையில் அரசிற்கு எதிராக எர்லெண்ட் சதி செய்கிறான். அந்த முயற்சி தோல்வி அடையவே அவனது சொத்துகள் யாவும் பறி முதல் செய்யப்படுகின்றன. எல்லாவற்றையும் இழந்த கிறிஸ்டின் மீண்டும் தனது தந்தையின் பண்ணைக்குத் திரும்புகிறாள். அங்கேயும் எர்லெண்டால் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
காலம் ஒடுகிறது. அவளது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். அவர்களின் திருமணம் நடக்கிறது. தனது மூன்றாவது மகனிடம் பண்ணையை ஒப்படைத்த பிறகு, கிறிஸ்டின் ட்ரொன்ட்ஹெய்முக்குத் திரும்புகிறாள்
நாடெங்கும் பிளேக் நோய் பரவுகிறது. நோய் பாதித்தவர்களுக்குச் சிகிட்சை அளிக்கும் பணியில் ஈடுபடுகிறாள். கடைசியில் அவளையும் பிளேக் தொற்றுகிறது. மரணத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறாள்.
கிறிஸ்டினின் வாழ்க்கைச் சரிதம் போல எழுதப்பட்டுள்ள இந்த நாவல் நார்வேயின் அரசியல், சமூக, வரலாற்று நிகழ்வுகளையும் கதையின் ஊடாகப் பேசுகிறது. குறிப்பாகக் கிறிஸ்துவச் சமயம் முன்வைக்கும் நம்பிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நாவல் விவாதிக்கிறது.
கிறிஸ்டின் சைமனைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு இன்னொருவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். அவளால் யாரைத் திருமணம் செய்வது என முடிவு செய்ய முடியவில்லை. அவளுக்காக இறந்த காதலனின் நினைவிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறாள். அச்சமும் ஆசைகளுமே நம்மை வழிநடத்துகின்றன என்கிறாள் கிறிஸ்டின்
மடாலய வாழ்க்கை அவளுக்குப் பொருந்தவில்லை. அவள் எர்லெண்டை காதலிக்க ஆரம்பிக்கிறாள். அந்தக் காதலும் அவள் விரும்பிய வாழ்க்கையை அளிக்கவில்லை. கிறிஸ்டினின் குற்றவுணர்வு நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

கிறிஸ்டினின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் பாதிக்கும் மேலாகச் சிக்ரிட் அன்ட்செட் வாழ்வில் நடந்திருக்கிறது. அவளும் இது போலக் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். கணவனால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். கைக்குழந்தையோடு தனியே வாழ ஆரம்பித்துத் தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கிறிஸ்டினின் சிறுவயதில் பண்ணையில் நடைபெறும் நிகழ்வுகள். மதநம்பிக்கைகள். சைமனைத் திருமணம் செய்து கொள்வதற்கான நிச்சயம் செய்யும் போது நடக்கும் சடங்குகள். புனித ஒலாவ் பண்டிகை, கிராமப்புற நம்பிக்கைகள். சூனியக்காரிகளுக்கு எந்த வாக்குறுதியும் தந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை. கிறிஸ்துவ மடாலயத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எனப் பல்வேறு ஊடுஇழைகளைக் கொண்டு நாவலை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்
கிறிஸ்டின் லாவ்ரான்ஸ்டேட்டர் போன்ற செவ்வியல் நாவல் வெறும் கதையை மட்டும் சொல்வதில்லை. மாறாக வாழ்வின் உண்மையான அர்த்தம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. நாம் ஆசைப்படுவதற்கும் நமக்குக் கிடைப்பதற்குமான இடைவெளியை விவாதிக்கிறது. வாழ்வின் போக்கினை யார் தீர்மானிப்பது. அது காட்டாறு போலத் தன்னியல்பாகச் செல்லக்கூடியதா என்ற விசாரணையை மேற்கொள்கிறது. நன்மையும் தீமையும் பிரிக்க முடியாத படி ஒன்று கலந்திருப்பதாகக் நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. தாமஸ் ஹார்டியின் நாவல்களில் வரும் பெண் கதாபாத்திரம் போன்ற சாயலில் கிறிஸ்டின் உருவாக்கபட்டிருக்கிறார். கன்னித்தன்மை என்பதை பற்றிய விவாதத்தை கிறிஸ்டின் வழியாக சிக்ரிட் முன்னெடுக்கிறார்.
நாவலில் கிறிஸ்டினின் கனவுகள் எதுவும் நிறைவேறுவதில்லை. ஆனால் அவள் மகிழ்ச்சியான தருணங்களைத் தானே உருவாக்கிக் கொள்கிறாள். அது நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆனால் அவளது மகிழ்ச்சி நீடிப்பதில்லை. இயற்கை சதா மாறிக் கொண்டேயிருப்பது போலவே அவளது வாழ்வும் மாற்றம் கொள்கிறது.
மகள், காதலி, மனைவி, தாய் என்ற நான்கு நிலைகளில் கிறிஸ்டினிடம் வெளிப்படும் உணர்வுகளையும் அவளது மனப்போராட்டங்களை நாவல் மிகவும் சிறப்பாகச் சித்தரித்துள்ளது.
பெரிய நாவல்களை வாசிப்பதென்பது இன்றைய காலத்தின் வேகவாசிப்பிற்கு மாற்றானது. இது போன்ற நாவல்கள் மலையேற்றதைப் போல நம்மைச் சோதிக்கின்றன. ஆனால் மலையின் உச்சியை அடையும் போது நாம் காணும் விரிந்த, முழுமையான காட்சிகளைப் போல வாழ்வின் பிரம்மாண்டத்தை நாவல் முடியும் போது உணர முடிகிறது. நார்வேயில்,அதுவும் 14ம்நூற்றாண்டில் நடக்கும் கதை என்றாலும் கதையில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகள் தமிழ் வாழ்க்கையோடு பொருந்திப் போகின்றன. கிறிஸ்டினின் அன்னை மற்றும் தந்தை நம் ஊரின் மனிதர்களைப் போலவே நெருக்கம் கொள்கிறார்கள்.
கிறிஸ்துவ நம்பிக்கைகள். பைபிள் கதைகள். நார்வேயின் தொல்கதைகள். புராணங்கள். உண்மையான வரலாற்று நிகழ்வுகள், பிளேக் பாதித்த நாட்கள் என நாவலைப் பல்வேறு பின்னல்களால் உருவாக்கியுள்ளார். கதையை வளர்த்துச் செல்வதிலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டினை எழுதுவதிலும். அபூர்வமான தருணங்களை உருவாக்குவதிலும் சிக்ரிட் அன்செட் மிகச் சிறந்த நாவலாசிரியராக மின்னுகிறார்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
