ஒரு ஊரில் ஒரு சிறுவன்
கோவூருக்குச் சென்றிருந்தேன்.
குறிப்பிட்ட காரணம் ஒன்றுமில்லை. அந்த ஊர்க் கோயிலுக்குச் சென்று வரலாம் என்று தோன்றியது. கடந்த புதன் கிழமை காலை மெட்ராஸ் பேப்பர் வெளியானதும் மனைவியுடன் புறப்பட்டேன்.
நான் வசிக்கும் இடத்தில் இருந்து கோவூர் தொலைவில்லை. திருநீர்மலை – குன்றத்தூர் – கோவூர் என்று நேர் வழி. போக வர அதிகபட்சம் இருபத்தைந்து கிலோ மீட்டர். 1985லிருந்து குரோம்பேட்டையில் வசிப்பவனுக்கு இந்த எண்ணம் வர இத்தனைக் காலம் ஆகியிருக்கிறது. இடையில் எழுதிய ஒன்றிரண்டு கதைகளில் கோவூர் வந்திருக்கிறது. ஒரு சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சாத்தானின் கடவுளில் ஓர் அத்தியாயம் முழுவதுமே கோவூரில்தான் நடக்கும். அந்த ஊரில்தான் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வகுப்புகள்வரை படித்தேன். பிறகு கேளம்பாக்கத்துக்குச் சென்றுவிட்டோம்.
நினைவில் நிற்கும் இடம் என்ற அளவில் கேளம்பாக்கம் அளவுக்குக் கோவூர் கிடையாது. ஆனால் மிகச் சிறு வயதில் மனத்தில் பதிந்த காட்சிகள் அப்படியேதான் இருக்கின்றன. இன்றைக்கு எனக்கு ஐம்பத்து நான்கு வயது. ஆறு முதல் எட்டு வயது வரை கோவூரில் இருந்திருக்கிறேன் எனக் கொண்டால், அந்தக் கோவூரின் நிறம் பச்சை. ஊரைச் சுற்றி வயல் வெளி இருக்கும். ஊருக்குள் எங்கு பார்த்தாலும் மரங்கள் அடர்ந்திருக்கும். கோவூரின் அடையாளமான சுந்தரேசுவரர் கோயில் இருக்கும் வீதியின் இரு புறமும் அடர்த்தியாக அசோக மரங்கள் நிறைந்து கவிந்திருக்கும். அந்தச் சிறிய கோபுரமும் அணி வகுத்த அசோக மரங்களும் பிராந்தியத்தில் வேறெங்குமே காண முடியாத அதிசயம் என்று அப்போது தோன்றும். நான் நினைப்பது சரி என்று நிரூபிப்பது போல, ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு திரைப்படப் படப்பிடிப்பு அந்த இடத்தில் நடந்துகொண்டே இருக்கும்.
நாங்கள் அப்போது சந்நிதித் தெருவிலேயே, கோயிலுக்கு மிக அருகில் இருந்த ஒரு வீட்டில்தான் குடியிருந்தோம். எங்கள் வீட்டின் வாசலில் இருந்து, சாலை உள்ள தொலைவுக்கு இடையே சிறிது வெற்றிடம் இருக்கும். படப்பிடிப்பு இடைவேளைகளில் யாராவது ஏழெட்டுப் பேர் அங்கே ஒயர் வேய்ந்த அலுமினிய நாற்காலிகளை இழுத்து வந்து போட்டு அமர்வார்கள். உடனே அவர்கள் முதுகுக்குப் பின்னால் இன்னும் யாராவது சிலர் ஒரு மின்விசிறியைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போவார்கள்.
கந்தன் கருணை என்ற படத்தின் சில காட்சிகளை அங்கே எடுத்தார்கள். ஶ்ரீதேவியைக் குழந்தை நட்சத்திரமாகப் பார்த்திருக்கிறேன். பசி என்ற படத்தின் படப்பிடிப்பு அங்கே நடந்தபோது கௌபாய் தொப்பி அணிந்த அதன் இயக்குநர் நாளெல்லாம் இங்குமங்கும் ஓடிக்கொண்டே இருந்த காட்சியும், அமர்ந்து உண்ண நேரமின்றி, வீதியில் நடந்த வாக்கில் நாலு கவளம் அள்ளிப் போட்டுக்கொண்டு விரைந்த காட்சியும் நினைவில் இருக்கின்றன.
இன்னொரு படம், விஜயகுமார் நடித்தது. பெயர் மறந்துவிட்டது. அந்தப் படத்தில் விஜயகுமார் ஒரு கல்லூரிப் பேராசிரியர். மாணவர்களுக்காக நிர்வாகத்திடம் சண்டையிட்டு உரிமைகளையோ, வேறெதையோ மீட்டுத் தருவார் என்று நினைவு. ஒரு காட்சியில் அவர் தனக்குப் பின்னால் அணி வகுக்கும் மாணவர்களை இருபுறமும் கைகளை நீட்டித் தடுத்து நிறுத்தியபடியே எதிரே உள்ள நடிகரிடம் பேச வேண்டும். ரெடி என்ற குரல் வந்தபோது விஜயகுமார் பாதி சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். அதனோடே எழுந்து ஷாட்டுக்கு வந்து நின்று சிகரெட் புகையும் கையையே இறக்கை போல விரித்துக்கொண்டு நின்று வசனம் பேசியதைக் கண்டு ஊரே இரண்டொரு நாள்களுக்கு அங்கலாய்த்துக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. இத்தனைக்கும் அந்தக் காட்சி முடிந்ததும் யூனிட்டைச் சேர்ந்தவர்கள், ‘அது வெறும் மானிட்டர்தான். படத்தில் வராது’ என்று சொன்னார்கள். அதெல்லாம் யாருக்குப் பொருட்டு?
‘வாத்தியான் இப்பிடி இருந்தா வெளங்கிரும்’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அந்தப் படம் ஓடியதாக நினைவில்லை.
கோவூர் அரசுப் பள்ளியில் என் அப்பா தலைமை ஆசிரியராக இருந்தார். அவரது முயற்சியின்பேரில் அன்றைக்கு ஊருக்கு ஒரு குடிநீர்க் குழாய் வந்தது. அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. குடிநீர்க் குழாய்த் திறப்பு விழா நாள். யாரோ ஒரு அமைச்சர் வந்து திறந்து வைத்த போட்டோ நெடுங்காலம் எங்கள் வீட்டில் இருந்தது. அந்தக் குழாய், கோவூர் இசைதாசன் என்ற கவிஞர் வீட்டு வாசலில் அமைக்கப்பட்டது.
அன்றைக்கு மிஞ்சிப் போனால் கோவூரின் மக்கள் தொகை சில நூறாக இருக்கக்கூடும். எங்கெங்கும் எருமை மாடுகளும் பசு மாடுகளும்தான் நிறைந்திருக்கும். அவ்வளவு குறைவான மக்களுக்கு அவ்வளவு அதிகமான கால்நடைகள் எதற்கு என்று நிச்சயமாகத் தோன்றும்.
கோவூர் நினைவுகளில் என்னால் மறக்கவே முடியாத ஒன்றுண்டு. யாரோ ஒரு மாந்திரிகன், வீடு வீடாகப் பிச்சை எடுத்து வருவான். பலமுறை அவனைப் பார்த்திருக்கிறேன். பல்வேறு இடங்களில் பார்த்திருக்கிறேன். சந்நிதித் தெருவுக்கும் வருவான் என்றாலும் பெரும்பாலும் அங்கே அவன் எந்த வீட்டுக் கதவையும் தட்டிய நினைவில்லை.

முதல் முறையாக அந்தச் சம்பவம் நடந்த இடம் எங்கள் வீடாக இருந்தது. வீட்டில் அப்போது அப்பா இல்லை. அம்மாவிடம் அவன் ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொண்டு வரச் சொன்னான். முன்னதாக அவன் செய்து காட்டிய வித்தைகளில் திகைத்துவிட்டிருந்த என் அம்மா, அவன் சொன்னபடி பத்து ரூபாய்த் தாளைக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அதை உள்ளங்கையில் மடித்து வைத்து விரித்துக் காட்டினான். அந்தப் பணம் தானே மெல்ல நகர்ந்து அவனது முழங்கையில் ஏறித் தோள்பட்டை வரை சென்று பிறகு காணாமலாகிவிட்டது. புறப்படுவதற்கு முன்னால், மறைத்து வைத்த பணத்தை அவன் எடுத்துக் கொடுத்துவிட்டுத் தான் தருவதற்குத் தயாராக இருந்த ஒரு ரூபாய் நாணயத்தைப் பெற்றுச் செல்வான் என்று அம்மா எதிர்பார்த்திருக்க வேண்டும். அது மட்டும் நடக்கவில்லை. அன்றைக்குப் பத்து ரூபாய் என்பது எங்களுக்குப் பெரும்பணம். அந்த நஷ்டத்தை அம்மா நெடுநாள் சொல்லிச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது.
47-48 வருடங்களுக்குப் பிறகு கோவூருக்குச் சென்றபோது துண்டுத் துண்டாக இந்தக் காட்சிகள்தாம் நினைவில் வந்தன. அன்றைய கோவூர் இன்று இருக்காது என்று தெரியும். ஆனால் மண்ணடி-சவுக்கார்பேட்டை போல அக்கிராமம் உருமாறியிருக்கும் என்று நினைக்கவில்லை. ஊரில் அந்தக் கோயிலடி தவிர வேறெங்கும் மருந்துக்கும் மரம் இல்லை. கோயில் வாசல் அசோக மரங்களும்கூட விரல் விட்டு எண்ணும்படியாகவே இருந்தன. ஆனாலும் அவை இருந்தன. எனக்கு அதுவே மகிழ்ச்சியாக இருந்தது.
கோவூர் சுந்தரேசுவரர் கோயில் என்பது சிறியதொரு ஆலயம்தான். என்னதான் புதன் பரிகார ஸ்தலம் என்று இப்போது புதிய பிராண்டிங் இருந்தாலும் நான் சென்றிருந்தபோது பெரிய கூட்டம் இல்லை. கோயிலுக்குச் சென்றுவிட்டு, சந்நிதித் தெருவில் நாங்கள் வசித்த வீடு இருந்த இடத்துக்குச் சென்றேன். கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. இருந்தது வேறு வீடுதான் என்றாலும் இடம் எனக்குத் தெரிந்ததுதானே? அந்த வீட்டை அடுத்த வீதியில் நான்காவதாக எனக்குப் பாடம் சொல்லித் தந்த டீச்சரின் வீடு இருக்கும். அவர் பெயர் மறந்துவிட்டது. அங்கே போய்ச் சில விநாடிகள் நின்றேன். உள்ளே போய் விசாரிக்கலாம் என்ற ஆசை எழுந்து, வேண்டாம் என்று உடனே தோன்றிவிட்டது. இருப்பாரென்றால் குறைந்தது தொண்ணூறு வயதாகியிருக்கும். நானெல்லாம் நினைவில் இருக்க வாய்ப்பே இல்லை. அவர் காலம் முடிந்துவிட்டது என்று யாராவது சொன்னால் அதுவும் சங்கடமாக இருக்கும். எதற்கு? என் நினைவில் அழிவற்றவர்கள் என்றும் அப்படியே இருக்கட்டும் என்று எண்ணிக்கொண்டு இசைதாசன் வீட்டருகே சென்று நின்றேன்.
ஒரு காலத்தில் பிராந்தியத்தில் அவர் அறியப்பட்ட கவிஞர். பள்ளிக்கூட விழாக்கள், பால்வாடி திறப்பு விழாக்கள், கோயில் திருவிழாக்களில் பேசுவார். அன்றாடம் பேப்பர் படித்துவிட்டு என் அப்பாவுடன் உலக விஷயங்களை விவாதிப்பார். வெள்ளைச் சட்டையின் மீது சிவப்புத் துண்டு போட்டிருப்பார். கம்யூனிஸ்டாக இருந்திருக்கலாம். அந்த வயதில் எனக்கு அதெல்லாம் தெரியாது.

நான் சென்ற நேரம் அந்த வீடு மூடியிருந்தது. சிறிது நேரம் நின்று அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பார்வை தழைந்து தரைக்கு வந்தபோது திகைத்துப் போனேன். கோவூர் ஆயிரம் மாறியிருக்கலாம். ஆனால் அந்தக் குடிநீர்க் குழாய் அங்கே இன்னும் இருந்தது. என் தந்தையின் முயற்சியால் ஊருக்கு வந்த குழாய். அதைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நெருங்கித் தொட்டுப் பார்த்தேன். அப்பாவைத் தொடுவது போலவே இருந்தது.
வீடு திரும்பிய பிறகு, கோவூரில் எடுத்த புகைப்படங்களை நண்பர் குப்புசாமிக்கு அனுப்பினேன். அதற்கொரு காரணம் இருந்தது.
சாத்தானின் கடவுளை நான் மெட்ராஸ் பேப்பரில் எழுதிக்கொண்டிருந்தபோது அத்தியாயங்களுக்குத் தேவைப்பட்ட படங்களைச் செய்யறிவில் உருவாக்கி அளித்தவர் அவர். அந்தத் தொடரில் கோவூர் அத்தியாயம் வந்தபோது அவரிடம் அந்த சந்நிதித் தெருவையும் அசோக மரங்கள் அணி வகுத்திருக்கும் காட்சியையும் கோயிலின் முகப்பில் உள்ள சிறிய கோபுரத்தையும் அதன் எதிரே படப்பிடிப்பு நடக்கும் சூழலையும் போனில் விவரித்தேன். பிறகு அத்தியாயத்தையும் படித்துவிட்டு அவர் ஒரு படத்தை உருவாக்கி அனுப்பிவைத்தார். குப்புசாமி ஏஐயில் உருவாக்கிய படத்தையும் நேற்று நான் நேரில் கண்ட கோவூர் சந்நிதித் தெருவின் படத்தையும் மேலே முகப்பில் பார்க்கலாம்.
ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சி. புகைப்படமும் செய்யறிவு தந்த புனைபடமும் தொண்ணூற்று ஒன்பது சதம் ஒத்துப் போவதல்ல. நாற்பத்தேழு வருடங்களுக்குப் பிறகும் அந்த ஊரின் தோற்றம் என் மனத்தில் உருக்குலையாமல் நிலைத்திருப்பது சார்ந்த மகிழ்ச்சி அது. நான் சரியாக உள்வாங்கியிருக்கிறேன். சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேன்.
போதும்.
All rights reserved. © Pa Raghavan - 2022