மை வைத்த சூனியம்

Pa Raghavan

தமிழ்ச் சூழலில் மைபோட்டு சூனியம் வைப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறது. கேட்டால், இதெல்லாம் வழமைதானே என்கிறார்கள்.

எனக்குள்ள சொற்ப இலக்கண அறிவின்படி, பண்புத் தொகைப் பயன்பாட்டில் ‘மை’ சேரும். வெண்மை, பசுமை போல. நன்மை, தீமை போல. பழையது-பழைமை. ஏழை வாழ்க்கை – ஏழைமை. 

ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் என்று ஆண்டாள் எழுதியிருக்கிறாள். 

ஆனால் நம்மக்கள் ஏழைமையில் ஏழரை சேர்த்து ஏழமை என்று எழுதுவார்கள். பழைமையைப் பழமை என்பார்கள். வழக்கத்துக்கு மாறான வழமையை மட்டும் வக்கணையாகக் கொண்டு சொருகிவிடுவார்கள்.

வழக்கம்தான் வழமை என்றால் பழக்கம் பழமையாகிவிடுமா? அப்படியானால் முதுமை என்பதைக் கிழமை என்று சொல்லிவிடுவார்களா? 

வழக்கம் என்பது பயன்பாட்டில் உள்ள சொல். இதனை வழப்பம் என்றும் சொல்லலாம். இரண்டுமே சரியான சொற்கள். ஆனால் இந்த வழமைக் கொடுங்கோன்மைதான் வையத்தைப் பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டிக்கொண்டிருக்கிறது.

நேற்று ஒரு தீவிரமான வழமைக் கொலையைக் கண்டு கடுப்பாகி இது குறித்துச் சிறிது படித்தேன். சண்முகம் பிள்ளை அகராதி முதல் என் கைவசம் உள்ள எந்தப் பழம்பிரதியிலும்  வழமை என்ற சொல்லைக் கண்ட நினைவில்லை. இலங்கைத் தமிழ் நாளிதழ்களின் ஆன்லைன் பதிப்பில் இதனை அதிகமாகப் பார்க்க முடிகிறது. அப்படியானாலும் அதை வட்டாரப் பயன்பாடாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாது. 

ஹரிகிருஷ்ணன், மகுடேசுவரன் போன்ற தூய தமிழ் வல்லுநர்கள் ‘வழமை’ ஓர் அபத்தம் என்றே சொல்கிறார்கள். மகுடு என்ன எழுதினாலும் மாய்ந்து மாய்ந்து படிக்கும் சமூகம், அவர் ஓரிடத்திலாவது இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறாரா என்று பார்க்கலாம்.

விடுங்கள். இதெல்லாம் வெட்டிப் பேச்சு. நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன். நீங்கள் உங்கள்  வழமைப்படி வாழுங்கள்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2025 06:56
No comments have been added yet.