கொசகொச
இரண்டு நாள்களுக்கு முன்னர் என் மனைவி, எங்கள் இருவருக்கும் அறிமுகமான ஒருவரது வாட்சப் ஸ்டேடஸைப் பார்க்கச் சொல்லிக் காட்டினாள். அந்நபர் தம் மனைவியின் பிறந்த நாளுக்கு (ஒருவேளை திருமண நாளா? அதற்குள் மறந்துவிட்டது.) வாழ்த்துத் தெரிவித்து, புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.
இது ஒரு சாதாரண நடப்பு, பொருட்படுத்த ஒன்றுமில்லை என்று உலகம் கடந்துவிடும். என் விஷயம் அப்படி அல்ல. ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் தமது மொபைல் போன் முகப்பின் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டிருந்தார். பற்பல செயலிகள் அணிவகுப்பின் பின்னால் அவரது மனைவியின் புகைப்படம் இருந்தது. இதையும் என் மனைவிதான் எனக்குச் சுட்டிக்காட்டினாள். இன்னும் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தால் இத்தகைய தருணங்கள் மேலும் சில கிடைக்கும்.
முன்னொரு காலத்தில் நல்ல புருஷன்கள் தமது மனைவியின் புகைப்படத்தை டிரங்குப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தார்கள். பிறகு மணி பர்ஸில் வைத்துக்கொண்டு சுற்றினார்கள். இப்போது மொபைல் போன், வாட்சப் ஸ்டேடஸ். எக்காலத்திலும் நான் இவை எதையும் செய்திராத பெரும்பாவி என்பது மட்டுமல்ல; மனைவியின் பிறந்த நாள், எங்கள் திருமண நாள் போன்றவற்றுக்கு போட்டோ போட்டுப் பொதுவெளியில் அன்பையோ வாழ்த்தையோ மகிழ்ச்சியையோ தெரிவித்ததில்லை. தெரிவிப்பதில் ஒன்றும் பிழையில்லை. தெரிவிக்காதிருப்பதில் பெருமையோ சிறுமையோ இல்லை. இந்தச் செயலி இயங்குவதற்கு எழுதி embed செய்யப்பட்ட short code இவ்வாறாக இருக்கிறது; அவ்வளவுதான்.
வாழ்த்தைக்கூட விட்டுவிடலாம். மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லட் ஹோம் ஸ்கிரீன்களில் full screenக்குப் படம் போட்டு நிரப்புவது என்பது என் மன அமைப்புக்கு எக்காலத்திலும் ஏற்புடையதாக இருந்ததில்லை.
ஆனால் நானறிந்த பலபேர் இந்த ஹோம் ஸ்கிரீன் படங்களை அடிக்கடி மாற்றி மாற்றி வேறு போடுகிறார்கள். என் மகளின் லேப்டாப் மற்றும் மொபைலில் போதிய இடைவெளியில் மாறுகிற வால் பேப்பர்கள் என்னதென்று என்னால் இன்றுவரை சரியாகக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. பார்க்கவே கொசகொசவென்று இருக்கும். போதாக்குறைக்கு அதன்மீது நூறு கொசு அடித்துப் போட்டாற்போலக் குட்டி குட்டியாக ஃபோல்டர்கள், செயலிகள். சுட்டிக்காட்டினால் நீ பூமர் என்று சொல்லிவிடுவாள். அதனால் சொல்வதில்லை.
என் நண்பர் ஒருவர் தனது மணக்கோலப் படத்தை லேப்டாப் வால் பேப்பராக வைத்திருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு முதல் முறை இதனைக் கண்டபோது நான் அடைந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. வேறொரு நண்பர் ஒவ்வொரு முறை திறக்கும்போதும் மாறிக்கொண்டே இருக்கும்படியாக ஏதோ செட் பண்ணியிருக்கிறார். கேட்டால் லைவ் வால் பேப்பர் என்று சொன்னார்.
கொடுமை என்னவென்றால், மொபைலைவிட லேப்டாப் வால் பேப்பர்களில் ஊரில் உள்ள அத்தனை வண்ணங்களையும் தாளித்துக் கொட்டிவிடுகிறார்கள். போதாக்குறைக்குப் பிரபலமான கட்டடங்கள், நீர் வீழ்ச்சி, செவ்வாய் கிரகம், கடலடி உலகம் என்று என்னென்னவோ வருகிறது.
படமே ஒரு கொசகொசா. அதன்மீது ஃபைல்களையும் போல்டர்களையும் போட்டு வைத்தால் சட்டென்று எப்படி அடையாளம் தெரியும்? தவிர இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தால் கண் வலிக்காதா?
நான் பயன்படுத்தும் ஆப்பிள் கருவிகளிலும் பல வித வண்ணங்களில் ஏராளமான வால் பேப்பர்கள் இருக்கின்றன. நினைவு தெரிந்து என்றுமே நான் அவற்றைப் பயன்படுத்தியதில்லை. புதிதாக ஒரு லேப்டாப் வாங்கினால் முன்பெல்லாம் முதல் வேலையாகத் திரை வண்ணத்தை #376191க்கு மாற்றுவேன். இப்போது சில காலமாக உள்ளம் உருகாதபோதும் கண்களில் நீர் வழிவதால் நீலம் உள்பட அனைத்து வண்ணங்களையும் தவிர்த்துவிட்டு, உறை பிரித்ததுமே டெஸ்க்டாப் நிறத்தை க்ரே ஸ்கேலுக்கு மாற்றி வைத்துவிடுகிறேன். கணினி, போன், ஐபேட் அனைத்தையும் டார்க் மோடில் வைத்துக்கொண்டு, குறைந்த திரை ஒளியில் வேலை பார்ப்பதே வசதியாக இருக்கிறது.
இதில் இன்னொரு சௌகரியம், என்ன குப்பை போட்டாலும் பளிச்சென்று தெரியும். மற்றபடி லேப்டாப்பைத் திறந்ததும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேலை தொடங்க வசதியாகச் சிறிய அளவில் ஒரு கோரக்கர் படம். வேறு அலங்காரங்கள் கிடையாது. இதைச் சொன்னால், பூமர் என்பார்கள்.
பள்ளி நாள்களில் நோட்டுப் புத்தகங்களுக்கு காக்கி நிற அட்டை போட்டு மேலே லேபிள் ஒட்டும்போதுகூட பொம்மை போட்ட லேபிள்களைப் பயன்படுத்தியதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. என் தந்தை தலைமை ஆசிரியர் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து அனைத்து வகுப்புகளின் அனைத்துப் பாடப் புத்தகங்களுக்குமான நோட்ஸுக்கும் சாம்பிள் பிரதிகளை அனுப்புவார்கள். அவற்றுள் கங்கா கைடு என்றொரு நிறுவனம், அனுப்புகிற மாதிரிப் பிரதிகளுடன் ஒன்றிரண்டு செட் லேபில்களையும் சேர்த்து அனுப்பும். வெளிர் நீலத் தாளில் சிவப்பு நிறத்தில் மூன்று கோடுகள் மட்டும் போட்டிருக்கும். பின்புறம் பசை தடவி ஒட்டிப் பெயரை எழுதினால் முடிந்தது.
எளிமை என்கிறேன். நேரடித்தன்மை என்கிறேன். உறுத்தாமை என்கிறேன். மண்டைக்குள் சுழலும் செயலி ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் இவற்றையெல்லாம் கொண்டுவந்துவிட முடிகிறது. கட்டற்றுச் சீறிப் பாய்ந்து குப்பை சேர்க்கும் புத்தியை இப்படிச் சுத்திகரித்து வைத்துக்கொள்ள முடிந்துவிட்டால் டெஸ்க்டாப் எப்படி இருந்தாலும் பொருட்படுத்த மாட்டேனோ என்னவோ.
All rights reserved. © Pa Raghavan - 2022