வீட்டுச் சிறை
அர்ஜெண்டைனாவின் முன்னாள் அதிபர் ஒருவரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள். இது செய்தி. வீட்டுச் சிறையில் எதற்கெல்லாம் அனுமதி உண்டு? எதற்கெல்லாம் இல்லை? இது அடுத்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் சரண்யா எழுதவிருக்கும் கட்டுரை. அவர் எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும். இந்தக் கட்டுரையை எழுதியதற்கு மறுநாளில் இருந்து இக்கணம் வரை நான் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறேன். இப்படிச் சொல்வது வினோதமாகத் தெரியலாம். உண்மை சில சமயங்களில் அப்படியும் தெரியும்.
எழுதுவதற்கு இடைஞ்சலான எது ஒன்றையும் இனி செய்வதில்லை என்று அன்றைக்கு முடிவெடுத்தேன். டிவிக்கு எழுதலாம், சினிமாவுக்குப் போகலாம் என்றெல்லாம் நினைக்கவேயில்லை. எழுதலாம். அவ்வளவுதான். என் மனைவியிடம் மட்டும் சொன்னேன். அவள் மறுப்புச் சொல்லவில்லை. வேறு யாரிடமும் சொல்லவோ கருத்துக் கேட்கவோ அவசியமில்லை என்று நினைத்தேன். எனக்கு மிக நன்றாகத் தெரியும், யாரிடம் சொன்னாலும் முடிந்தவரை அச்சுறுத்துவார்கள். எழுத்து சோறு போடுமா என்ற அதே புராதனமான தேய்ந்த கீதத்தை இசைப்பார்கள்.
அடிப்படையில் எனக்கு ஒரு குணம் உண்டு. சாத்தியமே இல்லாததைக் கூட முயன்று பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று நினைப்பேன். முடியாது, வேண்டாம், பிரச்னை வரும், அடிபடும் என்று கருமை பூசிச் சிந்திப்போரிடம் இருந்து விலகி நிற்கவே விரும்புவேன். எனவே, யாருக்கும் சொல்லவில்லை. ஆகஸ்ட் 29, 2011 காலை முதல் வீட்டில் இருக்கத் தொடங்கினேன்.
உலகில் எத்தனையோ முழு நேர எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வீட்டில் இல்லாமல் வீதியிலா கிடக்கிறார்கள் என்று தோன்றலாம். வீட்டில் இருத்தல் என்று நான் குறிப்பிடுவது வேலை பார்க்கவென்று வெளியே போகாதிருப்பதை அல்ல. எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லாதிருப்பது. வீட்டிலேயேகூட என் அறையை விட்டுப் பெரும்பாலும் வெளியே வராதிருப்பது.
புரியவில்லை அல்லவா? சிறிது விளக்கினால் புரிந்துவிடும்.
முன்னொரு காலத்தில் நான் வீடு தங்காதவனாக இருந்தேன். குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்குச் சென்றதில்லை. மற்றபடி இந்தியாவின் பிற அனைத்து மாநிலங்களிலும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றியிருக்கிறேன். வேறு வேறு காலக்கட்டங்கள். வேறு வேறு காரணங்கள். காரணமேகூட இல்லாமல் சில இடங்களுக்கு அடிக்கடி சென்று சும்மா உட்கார்ந்துவிட்டு வருவேன். அப்போதெல்லாம் உணவோ, தங்குமிடமோ ஒரு பொருட்டே கிடையாது. என்னால் எங்கும் இருக்க முடியும், எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்துக்கொள்ள முடியும்.
அப்படி அலைந்து திரிந்தவன், வேலைக்காகக்கூட வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்று முடிவெடுத்தால் வேறெப்படி இருப்பான்?
2004 ஆம் ஆண்டிலிருந்தே தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன் என்றாலும் 2012 ஆம் ஆண்டில் இருந்து 2019 வரையிலான எட்டாண்டுக் காலம் முழு மூச்சாக அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தேன். ஒரே சமயத்தில் ஐந்து-ஆறு தொடர்களுக்குக் கூட வசனம் எழுதியிருக்கிறேன். ஒருபோதும் இரண்டு தொடர்களுக்குக் குறைவாக எழுதியதே இல்லை. பேய் பிடித்தாற்போல எழுதிக் குவித்த அந்நாள்களில் ஒரு நாள்கூடப் படப்பிடிப்புத் தளங்களுக்கு நேரில் சென்றதில்லை. ஸ்பாட்டுக்கு வந்து எழுத விரும்புவோர் என்னைக் கூப்பிடாதீர்கள் என்றே சொல்லி வைத்திருந்தேன்.
என்னால் மறக்கவே முடியாத தருணம் ஒன்று உண்டு. முதல் முதலில் ராடனுக்கு என்னை எழுதக் கூப்பிட்டபோது, ‘இங்கே உங்கள் நிபந்தனை செல்லுபடி ஆகாது. மேடம் (திருமதி ராதிகா சரத்குமார்) நீங்கள் ஸ்பாட்டில் இருக்க வேண்டுமென்று நிச்சயமாக விரும்புவார். ரைட்டர் அருகே இல்லாமல் அவரது படப்பிடிப்புகள் நடக்கவே நடக்காது’ என்று சொன்னார்கள்.
அப்படியா என்று கேட்டுக்கொண்டேன். எங்கள் முதல் சந்திப்பு ஏற்பாடானபோது அவரிடம் கேட்டேன், ‘என்னை எதற்காக அழைத்திருக்கிறீர்கள்?’
‘நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். மொழி புதிதாக இருக்கிறது’ என்று சொன்னார்.
‘எது நல்ல எழுத்து என்று கண்டறிய முடிந்தவர்கள் வலுக்கட்டாயமாக அதை மாற்ற விரும்பமாட்டார்கள் அல்லவா?’
‘நிச்சயமாக.’
‘எனக்கு என் இடத்தில் இருந்து எழுதுவதுதான் வசதி. பரிச்சயமில்லாத வேறெந்த இடத்திலும் எழுத வராது.’
‘அதனால் பரவாயில்லை.’
‘ஆனால் நீங்கள் ரைட்டர் நிச்சயமாக ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்று சொல்வீர்கள் என்றார்கள்.’
‘ஸ்பாட்டில் திருத்தங்கள் தேவைப்படும். அதற்காகச் சொல்வது.’
‘என் எழுத்தில் திருத்தம் தேவைப்படாது.’
‘அப்படியானால் நான் ஏன் அழைக்கப் போகிறேன்?’
ஏழு வருடங்கள் இடைவெளியின்றி அவருக்கு எழுதினேன். ஒரே ஒரு நாள்கூட அவர் ஸ்பாட்டுக்கு அழைத்ததில்லை. அந்தத் தரத்தில் நானும் எழுதியதில்லை.
மிகத் தீவிரமாகத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் பூனைக்கதை எழுதினேன். யதி எழுதினேன். இறவான் எழுதினேன். இதெல்லாம் சாத்தியமானதற்கு நான் ஒரு காரணம் என்றால் வீடு அதனினும் பெரிய காரணம்.
மிகப்பல வருடங்களுக்கு முன்பு அஸ்ஸாமில் உள்ள காமாக்யா கோயில் அருகே நான் சந்தித்த சாது ஒருவர், ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்தார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மனம் அலைபாயும் தருணங்களில் உடலை ஓரிடத்தில் போட்டுவிட வேண்டும் என்பது அவர் சொன்னதன் சாரம். புத்தி அலைந்து திரியலாம், அல்லது உடல் அலைந்து திரியலாம். இரண்டும் ஒன்றாக அலையும்போது விளைவு தரமாக இராது. புத்தியை அலையவிட்டுப் பேருண்மையை எட்டிப் பிடிப்பதற்காகவே சாதுக்கள் ஆண்டுக்கொரு முறை அப்படி ஓரிடமாகச் சென்று உடலைக் கிடத்திக்கொள்வார்கள். பெரும்பாலும் ஆற்றங்கரைகளில், ஏரிக் கரைகளில் அவர்கள் தங்குவார்கள். தவம் புரிய அந்தச் சூழலே வசதி என்பது காரணம்.
எனக்கு, என் பணி என்று நான் எடுத்துக்கொண்ட எழுத்தைத் தவிர வேறு எதன்மீதும் அக்கறை கிடையாது. அக்கறை இல்லாத எது ஒன்றிலும் நேர்த்தி இராது. தேர்ச்சி கூடாது. இது திருமணமான புதிதிலேயே என் மனைவிக்குப் புரிந்துவிட்டதால் வீட்டுப் பொறுப்பை அவள் எடுத்துக்கொண்டாள். அதனால் என்னால் நிம்மதியாக எழுதவும் படிக்கவும் முடிந்தது. சலிப்பு உண்டாகும்போது திட்டுவாள். எதிலும் ஒழுங்கில்லாததைச் சுட்டிக்காட்டுவாள். பொறுப்பின்மையை விமரிசிப்பாள். எல்லாமே உண்மையான குற்றச்சாட்டுகள் என்பதால் வாக்குவாதம் செய்ய மாட்டேன். அமைதியாக இருப்பேன். பேசாமலேயே இருப்பதைச் சுட்டிக்காட்டி மேலும் திட்டுவாள். அதையும் கேட்டுக்கொள்வேன்.
ஏனெனில், நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த வாழ்க்கை முறையில் கோபம், விரோதம், வாதம்-விவாதம், துக்கம், கண்ணீர் போன்றவற்றுக்கு இடம் கிடையாது. அவை உள்ளே வந்தால் வேலை கெட்டுவிடும். எந்தப் பணிக்காக வீட்டுச் சிறையை விரும்பி ஏற்றுக்கொண்டேனோ, அதைக் கெடுத்துக்கொண்டு என்ன சாதிக்க முடியும்?
சாதுக்களுக்கு ஆண்டுக்கு நான்கு மாதம் போதும். சாமானியனுக்கு ஆண்டு முழுவதுமே அது தேவை. சொன்னேனே, நீர்நிலை நாடித் தவமிருக்கச் செல்வார்கள் என்று?
சிறை என்ற சொல்லுக்கு நீர்நிலை என்றொரு பொருள் உண்டு. என் வீடு, என் நீர்நிலை.
All rights reserved. © Pa Raghavan - 2022