யதி – பிரியதர்சினி கோபால்
வாழ்க்கையைப்பற்றிய, உறவுகளைப்பற்றிய ஒரு குழப்ப நிலையில் நான் இருக்கும் போது ஓரிரு வருடமாக என் கையில் இருந்தும் இந்த புத்தகத்தை இப்போது ஏன் வாசிக்க வேண்டும்?
அது தான் விதி.
கதை இதுதான். திருவிடந்தை நித்யபெருமாள் கோவிலுக்கு அருகில் வசிக்கிறது ஒரு பிராமணக் குடும்பம். அம்மா அப்பா, அம்மாவின் தம்பி கேசவன் மற்றும் 4 மகன்கள். விஜய், வினய், வினோத்,விமல். அன்பான குடும்பம்தான். ஆனால் சொல்லிவைத்தார்ப்போல் 4 பேருமே ஒவ்வொரு காலக்கட்டத்தில் வீட்டைவிட்டு ஓடிப்போய் சாமியார்கள் ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு மகன்களாக அவர்கள் இழந்துகொண்டே இருப்பார்கள். பின்பு தனது அம்மாவின் இறப்புக்கு 4 பேரும் ஊருக்கு திரும்ப வருகிறார்கள். அவளுடைய இறுதி யாத்திரைக்கு இருந்துவிட்டு அவர்களுடைய துறவரத்தின் இறுதி கடமையாக, உறவின் கடைசி நூலிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு கிளம்பிவிகிறார்கள். இவ்வளவு தான் கதை.
ரொம்ப சுலபமா முடிச்சிட்டேன்ல்ல. ஆனா அத்தனை சுலபம் இல்லை இந்த கதையோடு நாம் போகும் பயணம். Non linear வகையில் எழுத்தப்பட்ட நாவல் இது. கடைசி மகனான விமல் கர்னாடக மாநிலத்தில் உள்ள மடிகேரியில் ஆசிரமம் நடத்தி வருகிறான். துறவியான பின்னரும் கேசவன் மாமாவோடு தொடர்பில் அவ்வப்போது இருந்து வருவதால் அம்மாவின் மோசமான உடல்னிலைபற்றி அவர் அனுப்பிய தந்தி கிடைக்கிறது. இவன் ஒருவனாவது தாய் இறக்கும் தருவாயில் அருகில் இருக்கட்டுமே என்பது அவரது எண்ணம். அது விமல் கைக்கு சேரும்போது அவன் மத்தியப்பிரதேசத்தில் இருக்க, பின்பு 10 நாட்கள் பின்பே அவன் சென்னைக்கு ரயில் ஏறுகிறான். சொல்லப்போனால் தகவல் தெரிந்து கிளம்பியவன் இவன் ஒருவன் தான். சரி அப்போ மற்றவர்கள்?
அப்படி தொடங்கியது புத்தகம். அப்பப்பா எத்தனை எத்தனை ரகசியங்கள். ஒவ்வொரு முடிச்சும் அவிழும் தருணங்கள் அனைத்தையும் ரெண்டு ரெண்டு முறை வாசித்தேன். துறவு என்பது என்ன? உறவு என்பது என்ன? விஜய் ஏன் இறுதி வரையிலும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தான்? வினயால் எப்படி தப்பிக்க முடிந்தது? ஏற்கனவே ரெண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோர் எப்படி தன்னுடைய இழப்பையும் தாங்குவார்கள் என்று யோசித்த விமல் கூட சென்றானே ஏன்? மூவரும் ஏமாற்றிய பல நாட்களுக்கு பின் கழுத்தருப்பது போன்ற நிலையில் ஓடினானே வினோத்? கற்பனை தான் என்னால் அவனை மன்னிக்கவே முடியவில்லை. நான் மன்னித்தாலும், சித்ரா அவனை மன்னிப்பாளா, பத்மா மாமியின் கண்ணீர் அவனை மன்னிக்குமா? இல்லை அந்த நித்யக் கல்யாண பெருமாள் தான் மன்னிப்பாரா?
இதைவிட பெரிய தண்டனையை பெருமாளுக்கு பத்மா மாமியைத்தவிர வேறு யாரால் கொடுக்க முடியும். அது நடந்திருந்தால்.. அப்பா நினைத்துப்பார்க்க முடியவில்லை. என்னால் அதை வெறும் கதையாகவும் கடக்க முடியவில்லை.
இது புத்தக விமர்சனமாக இல்லாமல் இருக்கலாம். இந்த புத்தகம் வாசித்த பின்னான எனது உள்ள வெளிப்பாடாகக் கொள்ள முடியும். சித்ரா, கேசவன் மாமா, சொரிமுத்து,பத்மா மாமி, விமலின் குருஜி, அந்த பாகிஸ்தானிய பெண் என எல்லா துணை கதாப்பாத்திரமும் அத்தனை கனமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருக்கும் தனித்தனியான நியாயம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக எழுத்து சுதந்திரம் தான் 1300+ பக்கங்கள்.
கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய நடை, அடையார் கோஆப்டெக்ஸ், திருவிடந்தை, கோவளம் தர்கா, நித்யகல்யாண பெருமாள், ஸ்ரீரங்கம் மடப்பள்ளி என எந்த இடத்தை பார்த்தாலும் இனி இந்த குடும்பம் மட்டுமே நினைவில் வரும்.
பல இடங்களை சுட்டிக்காட்ட விரும்பினேன். அது சுவாரசியத்தைக் குறைக்கலாம். பல வாழ்வியல் தத்துவங்களை, உறவுகளின் காரண காரியங்களை, மனிதனின் நிஜமான அடிப்படைத் தேவைகளை, எதை நோக்கி அவன் ஓடுகிறான் என்பதை குறிப்பிட்டுக்கொண்டே செல்கிறார் ஆசிரியர். அவருடைய எழுத்து எனக்கு பிடிக்கும் என்றாலும் என்னுடைய மனதில் அவருக்கான பீடம் யதி மூலம் இன்னும் 4 படிகள் உயர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
—
குறிப்பு:
வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழுவில் என்னுடைய புத்தகங்களுக்கு இதுவரை வெளியான மதிப்புரைகளை raindrop.io மூலம் தொகுத்துப் பார்த்தேன். அவற்றில் சிலவற்றை இங்கே பிரசுரிக்கலாம் என்று தோன்றியதால், முதலில் இது. வாசிப்பை நேசிப்போம் குழுவுக்கும் மதிப்புரை எழுதியவர்களுக்கும் நன்றி. – பாரா
All rights reserved. © Pa Raghavan - 2022