அப்பா பக்கம்
நேற்று, திரை உலக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு நூலின் மொழிபெயர்ப்பு குறித்துப் பேச்சு வந்தது. அந்நூலின் இரண்டு பாகங்களையும் மொழிபெயர்த்தவர் என் தந்தைதான் என்று நான் சொன்னபோது அவர் சிறிது திகைத்தார். அவரைக் குறித்து மேலும் சில விவரங்கள் கேட்டறிந்த பிறகு, ‘நீங்கள் அவரைக் குறித்து எழுதியிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
அப்பாவைப் பற்றி நான் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். (பார்த்தசாரதிகளின் கதை | ஒரே ஒரு அறிவுரை.) மற்றபடி தேவைப்படும் இடங்களில் துண்டுத் துண்டாகச் சில தகவல்கள் சேர்த்திருப்பேன். சில கதைகளில் அவர் கதாபாத்திரமாக வருவார். அவ்வளவுதான். (மிருது நாவலில் வருகிற அப்பாவில் சுமார் அறுபது சதவீதம் அவர்தான்.)
அவருக்கொரு இணையப்பக்கம் ஆரம்பிக்கலாம் என்று முன்னர் நினைத்து அதற்காக முயற்சி செய்தேன். சில தொழில்நுட்பக் காரணங்களால் அது கெட்டது. அப்படியே விடுபட்டுவிட்டது. நேற்று நண்பர் நினைவூட்டியதால், பழைய இணையப் பக்கத்தில் இருந்த கட்டுரையைச் சீர்திருத்தி, அவரது புத்தகங்களின் பட்டியலைச் சேர்த்து (முழுமையானதல்ல), இந்தத் தளத்திலேயே அவருக்கொரு பக்கம் உருவாக்கினேன். அது இங்கே உள்ளது:
வாழ்க்கைக் குறிப்புபுத்தகப் பட்டியல்
இந்தத் தளத்தின் side bar இல் இனி இது எப்போதும் இருக்கும்.
அவருடைய புத்தகங்கள் அனைத்தையும் தேடித் தொகுத்து, செம்மையாக எடிட் செய்து ஒரே இடமாகப் பதிப்பிக்க வேண்டும் என்று அடிக்கடித் தோன்றும். வேலை நெருக்கடிகளால் அது தள்ளிக்கொண்டே போகிறது.
தனது வாழ்நாளில் பல பதிப்பாளர்களால் காலம்தோறும் கலாபூர்வமாக ஏமாற்றப்பட்டவர் அவர். ஓர் எழுத்தாளராக ராயல்டி என்ற ஒன்றை அவர் ஒழுங்காகப் பார்த்தது கிழக்கு பதிப்பகத்தில் மட்டும்தான். இன்றுவரை அங்கே அவரது புத்தகங்கள் விற்றுக்கொண்டிருக்கின்றன. அம்மாவுக்கு ராயல்டியும் வருகிறது.
ஜூலை 17, 2017 அன்று அவர் காலமானார். அடுத்த ஆண்டு ஜூலைக்குள் எப்படியாவது அவரது புத்தகங்களுக்குக் கிண்டில் பதிப்புகளையேனும் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
அவராவது அவனாவது ஒத்துழைக்க வேண்டும்.
All rights reserved. © Pa Raghavan - 2022