குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன்
அவனை கட்டைக்கை பரந்தன் என்று அழைத்தார்கள். இருபத்திரெண்டு வயதிருக்கும். கற்சிலையைப் போல உறுதியான உடல் கொண்டிருந்தான்.

அவனது வலது கை அளவில் சிறியது. பிறக்கும் போதே அந்தக் கையின் அளவு அப்படியிருந்தது. எழுதிக் கொண்டிருக்கும் போது பென்சிலின் நுனி உடைந்துவிடுவது போல அவனை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது கடவுள் வைத்திருந்த களிமண் தீர்ந்துவிட்டது என்று வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் கேலி செய்தார். மாணவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள். அது தான் பரந்தன் பள்ளிக்குச் சென்ற கடைசி நாள். அதன்பிறகு அவன் நாள் முழுவதும் தெருவில் சுற்றியலைத் துவங்கினான்.
தெருவில் என்பதுகூட தவறு. ஊருக்குள் என்றே சொல்ல வேண்டும். எதற்காக அலைகிறோம் என்ற நோக்கமே இல்லாமல் தெருத்தெருவாகச் சுற்றினான். எங்காவது ஆட்கள் அமர்ந்து வெட்டிக்கதை பேசிக் கொண்டிருந்தால் அருகில் அமர்ந்து பேச்சைக் கேட்பான். மீன்சந்தைக்குப் போய் யார் என்ன மீன் வாங்குகிறார்கள் என வேடிக்கை பார்ப்பான். கோவில் யானை வீதிவலம் வரும் போது கூடவே நடப்பான்.
இப்படி இரவிலும் சுற்றியலைந்த போது தான் அவனுக்கு திருடர்களின் சகவாசம் கிடைத்தது. இரவில் முளைக்கும் நட்சத்திரங்களைப் போன்றவர்களே திருடர்கள். அவர்களை பகலில் காண முடியாது. ஒருவேளை பார்க்க முடிந்தாலும் அடையாளம் தெரியாது.
திருடர்கள் அவனிடம் உன்னுடைய குரல் வித்தியாசமாக இருக்கிறது. நீ நாயைப் போல குலைத்துக் காட்டு என்றார்கள். அவன் நாயைப் போல குரைத்தான். நிஜமான நாய் ஒன்று பதில் கொடுத்தது. திருடப் போகிற வீட்டை நம்ப வைப்பதற்காக அவன் நாய் போல பொய்க் குரல் கொடுப்பவனாக மாறினான். அந்த சப்தம் கேட்டால் பாதுகாப்பாக இருக்கிறோம் என வீட்டோர் நினைத்துக் கொண்டார்கள். அப்படி நாய்க்குரல் கொடுப்பதற்காக அவனுக்கு திருட்டில் சிறுபங்கை அளித்தார்கள். அதுவே அவனுக்கு போதுமானதாகயிருந்தது.
திருடப் போகிற இடம் எது என தெரியாத காரணத்தால் பகலில் அதைப் பற்றி கற்பனை செய்து கொண்டிருப்பான். திருடப் போன வீட்டின் பின்புறம் அமர்ந்து சில நேரம் இருட்டுப்பூச்சியின் குரலை வெளிப்படுத்தினான்.. பொய்க்குரல் திருட்டிற்கு உதவியாக இருந்தது. திருடர்கள் சுவரில் ஏறுவதற்கு உடும்பை கொண்டு செல்வது போல அவனை போகும் இடமெல்லாம் அழைத்துப் போனார்கள்.

அப்படி ஒரு திருட்டிற்குப் போன போது வீட்டிற்குள்ளிருந்து “வந்துட்டயா யாகா.. வந்துட்டயா யாகா“ என்ற பெண்குரலை கேட்டாள். “யார் அந்த யாகா“ எனத் தெரியவில்லை.
திருடர்களின் ஒருவன் சொன்னான்.
“இந்த வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு பார்வை கிடையாது. ஆகவே அவளிடம் இரவில் திருட வேண்டாம். பகலில் திருடுவோம்“.
அது தான் திருடர்களின் இயல்பு.
அவர்கள் புறப்படும் போது மறுபடியும் அதே குரல் கேட்டது “வந்துட்டயா யாகா“. இந்த முறை கட்டைக்கை பரந்தனால் அந்த குரலின் பரிதவிப்பை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
“வந்துட்டேன்“ என்று பதில் சொன்னான்.
இதற்காக திருடர்கள் அவனை கோவித்துக் கொண்டார்கள்.
அந்தப் பெண் “யாகா நீ வெளியே நிக்குறயா“ எனக் குரல் கொடுத்தாள். ஆனால் மறுமொழி சொல்வதற்கு பரந்தன் அங்கேயில்லை. அவனை இழுத்துக் கொண்டு போயிருந்தார்கள்.
மறுநாளின் பகலில் பரந்தன் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொண்டான். உள்ளே பெண் குரல் கேட்கவில்லை. ஒருவேளை உறங்கிக் கொண்டிருக்க கூடும். அவளது வீட்டின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தான். குரல் கேட்கவேயில்லை.
அந்த வீடு பர்மா செட்டியுடையது. அவர்கள் குடும்பத்துடன் மலேயா போயிருக்கிறார்கள். காவலுக்கு வைத்திருந்த ஆளும் தனது சொந்த கிராமத்திற்கு போய்விட்டிருந்தான் என அறிந்து கொண்டான்
இரண்டு நாட்கள் இப்படி காலையும் மதியமும் அந்த வீட்டை சுற்றிவந்தான் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு நாள் பின்மதியம் அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டில் யாருமில்லை. ஒவ்வொரு அறையாக தேடிய போதும் அங்கே எவருமில்லை. பெண் குரல் கேட்டதே. அவள் எங்கே போயிருப்பாள் என தேடினான். பல மாதமாக பூட்டியிருந்த வீடு போல தூசிபடிந்து போயிருந்தது.
அப்படியானல் உள்ளே இருந்து குரல் கொடுத்து தங்களைப் போல திருட வந்த இன்னொருவன். அவன் தன்னைப் போலவே பொய் குரலில் சப்தம் கொடுத்திருக்கிறான்.
அந்த பெண் குரலில் இருந்த தவிப்பு உண்மையாக இருந்தது. யார் அந்த பொய்க்குரலோன், அவனைப் பார்க்க வேண்டும் என பரந்தனுக்கு ஆசை உருவானது.
பெண்குரல் கேட்ட வீட்டிலிருந்து எந்த பொருளையும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெளியேறும் போது ஒருவர் திருடன் திருடன் எனக் கத்திக் கூப்பாடு போடவே பரந்தன் ஒடத்துவங்கினான். மக்கள் சுற்றிவளைத்து பிடித்துவிட்டார்கள். காவல்துறை வீடு புகுந்து திருடினான் என்று கைது செய்தார்கள்.
1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் தேசம் எங்கும் உருவானது. அதை ஒடுக்குவதற்காக காவலர்கள் முழுமுயற்சி எடுத்தார்கள். சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. இந்த நெருக்கடியின் போது சிறிய குற்றங்களை உடனே விசாரித்து தண்டனை கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பரந்தன் விசாரணை கைதியாகவே நீண்டகாலம் சிறையில் இருந்தான்.
இறுதி விசாரணையின் போது அவன் நாயைப் போல குரைத்துக் காட்டினான். பூச்சியினைப் போல சப்தம் எழுப்பினான். நீதிமன்றம் அதனை வேடிக்கை மட்டுமே பார்த்தது. முடிவில் திருட்டிற்காக ஆறுமாதம் சிறைதண்டனை கிடைத்தது.
தண்டனை காலம் முடிந்து வெளிவந்தவுடனே பெண் குரல் கொடுக்கும் திருடனைத் தேட ஆரம்பித்தான். கண்டுபிடிக்க முடியவேயில்லை. ஆண்டுகள் உருண்டோடின. வீதியில் சந்தையில் நின்றபடியே அவன் “வந்துட்டயா யாகா“ என பெண்குரலோனைப் போலவே சப்தமிடத் துவங்கினான். பித்தேறிவிட்டதாக அவனைத் துரத்தினார்கள்.
அதன்பிறகான நாட்களில் ஊரின் ஏதோவொரு தெருவில் “வந்துட்டயா யாகா“ என்ற குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிறுவர்கள் அந்தக் குரலை கேலி செய்து விளையாடினார்கள். சில நேரம் அப்படி குரல் கொடுக்கும் பரந்தன் மீது கல்லெறிந்து மகிழ்ந்தார்கள்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
