அஞ்சலி: பால கைலாசம்
பால கைலாசம் மறைந்துவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியுற மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
கைலாசம் என்னைவிடப் பத்து வயது மூத்தவர். ஆனால் எப்போது சந்தித்தாலும் அந்த வித்தியாசத்தை உணர்ந்ததில்லை. புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்னால் ஈக்காடுதாங்கலில் அந்த அலுவலக வாசலில் உள்ள பெட்டிக்கடையில் அவரைச் சந்தித்தேன்.
‘ராகவன், உணவு குறித்த உங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் தொடர் படிக்க அருமையாக இருந்தது; அதை டாக்குமெண்டரியாகச் செய்ய முடியுமா உங்களால்?’ என்று கேட்டார். யோசித்துவிட்டு, ‘முழுவதையும் செய்வது சிரமம்; சிலவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்’ என்று சொன்னேன்.
எனக்கு டாக்குமெண்டரி ஸ்கிரிப்ட் எழுதிப் பழக்கம் கிடையாது. அப்போது நான் முழுக்க முழுக்க சீரியல்களில் மூழ்கத் தொடங்கியிருந்தேன். ஒரே சமயத்தில் ஆறு சீரியல்கள் எழுதிக்கொண்டிருந்தேன். நேரம் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இருந்தாலும் கைலாசம் கேட்டு செய்ய முடியாது என்று சொல்லத் தோன்றவில்லை. ஒப்புக்கொண்டு, அப்போது ஆரம்பித்ததுதான் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.
கைலாசம் நிறைய மாதிரி டாக்குமெண்டரிகளைக் கொடுத்து பார்க்கச் சொன்னார். நான் ஒன்றிரண்டைப் பார்த்தேன். அதற்குமேல் பார்க்கவில்லை. எனக்குத் தோன்றுவதை எழுதினால் போதும் என்று ஆரம்பித்துவிட்டேன். அந்த அபுனை தொடருக்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. கைலாசத்துக்கு ரொம்ப சந்தோஷம். சரியாக வருகிறது; விடாமல் செய்யுங்கள் என்றார். துரதிருஷ்டவசமாக என் சீரியல் பணிகள் என்னை கொசோகொவ-வை சுமார் முப்பது எபிசோடுகளுக்குமேல் தொடரமுடியாதபடி செய்துவிட்டன. நாலைந்து வாரங்கள் ரொம்ப லேட்டாக ஸ்கிரிப்ட் கொடுக்கும்படியாகிவிட்டது. ஷூட்டிங் போகப் படாதபாடு பட்டுவிட்டார்கள். எனக்கே ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது.
கைலாசம் ஒரு நாள் கூப்பிட்டு ரொம்ப வருத்தப்பட்டார். ‘உங்களுக்கு சீரியல்தான் பிடித்திருக்கிறது. நான் ஃபிக்ஷன் பணியை மதிப்பதில்லை’ என்றார்.
அதற்கென்ன செய்வது? ஒரு எபிசோட் கொசோகொவ எழுதும் நேரத்தில் பத்து எபிசோட் முந்தானை முடிச்சு, பத்து எபிசோட் முத்தாரம் எழுதிவிட முடிகிறது. ஒரு முழு மாதத்துக்கான தேவதை எழுதிவிட முடிகிறது. தவிரவும் ஆய்வுக்காகப் படிப்பதற்கு நேரம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதையெல்லாம் சொல்லிவிட்டுத்தானே ஆரம்பித்தேன் என்கிற என் சமாதானம் அவருக்குப் போதவில்லை.
‘நீங்கள் ஒரு நல்ல ஜர்னலிஸ்ட். ஆனால் வலுக்கட்டாயமாக உங்களை அதிலிருந்து பிடுங்கிக்கொண்டுவிட்டீர்கள்’ என்றார்.
ரொம்ப திட்டிவிட்டதாக நினைத்தாரோ என்னவோ. மறுநாள் போன் செய்து, முந்தைய நாள் செல்லமே வசனம் ஒன்றைக் குறிப்பிட்டு, ‘பின்றய்யா’ என்றார்.
கைலாசம் ஒரு நல்ல ஜர்னலிஸ்ட். டாக்குமெண்டரிகள் மூலம் நிறைய சாதிக்கலாம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். கணபதி ஸ்தபதியைக் குறித்த அவரது ஒரு டாக்குமெண்டரிப் படம் தேசிய விருது பெற்றது. ஒரு சமயம் எனக்கு அதைப் போட்டுக்காட்டி கருத்துக் கேட்டிருக்கிறார். அவரது விஷுவல் மொழி நம்பமுடியாத அளவுக்கு சிறப்பானது. நுணுக்கமும் தெளிவும் கொண்டது. ஏகப்பட்ட பிபிசி டாக்குமெண்டரிகளைக் கொடுத்து என்னைப் பார்த்தே தீரவேண்டும் என்று எப்போதும் கட்டாயப்படுத்துவார். வட கிழக்கு மாநிலங்களில் ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான் ஒரு டாக்குமெண்டரி செய்யவேண்டும் என்று பல சமயம் கேட்டிருக்கிறார்.
‘சார், டாக்குமெண்டரியில் எனக்கு ஆர்வமில்லை; சீரியல்தான் என் இஷ்டம்’ என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். முறைத்துவிட்டுத் திரும்பிக் கொள்வார். இருப்பினும் ரமணி vs ரமணி மாதிரி ஒரு காமெடி கான்செப்ட் பிடிங்க; நாம செய்வோம் என்றும் சொல்லியிருக்கிறார்.
என்னுடைய ரெண்டு நாவலை அவரளவு திரும்பத் திரும்ப வாசித்தவர்களோ பாராட்டியவர்களோ யாருமில்லை. ‘அட்டகாசம்யா. இப்படி ஒரு கதையப் போட குங்குமத்துக்கு செம துணிச்சல்’ என்றார்.
கடும் உழைப்பாளி. பல நாள் ராத்திரி பத்து மணிக்கு மேலே அவரை நான் பு.த. அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். பிரம்மாண்டமான எடிட்டோரியல் ஹால் முழுதும் காலியாக இருக்கும். ஓரத்தில் இருக்கும் அவரது சிறு அறையில் அவர் மட்டும் தனியே உட்கார்ந்து என்னவாவது செய்துகொண்டிருப்பார். மீட்டிங் என்று போனால் வெட்டி அரட்டைகளுக்கு இடமே இல்லை. முதல் வரியில் மேட்டரை ஆரம்பித்துவிடுவார். பேசி முடித்த பிறகு ‘அப்பறம்?’ என்பார். அந்த ‘அப்பறம்?’ வரவில்லை என்றால் அவர் அப்போதும் பிசி என்று அர்த்தம்.
ஆர்வமும் சுறுசுறுப்பும் அபாரமான விஷயஞானமும் கொண்ட மனிதர். சிறந்த படிப்பாளி. தன் தந்தையின் புகழ்ச் சாயலைத் தன்மீது அவர் படியவிட்டதே இல்லை. நம்பமுடியாத அளவுக்கு எளிமையானவர். அவர் இறந்துவிட்டார் என்பதையும் என்னால் நம்பத்தான் முடியவில்லை.
அஞ்சலிகள்.
Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)