நான் என் தேசத்தை நேசிக்கிறேன்
நண்பர்களுக்கு சுதந்தர தின நல்வாழ்த்துகள்.
தேசப்பற்று உள்பட சகலமானவற்றையும் கிண்டல் செய்யும் ஆஃப்பாயில் அறிவுஜீவிதம் நாட்டில் மலிந்துவிட்டது. இணையப் பொதுவெளியில் இந்தப் போக்கு சமீப காலத்தில் மிகவும் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறேன்.
ஒரு பக்கம் இந்த ரக டிஜிட்டலி கரப்டட் அறிவுஜீவிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது. மறுபுறம் இத்தனை அபத்தங்களைப் பொதுவெளியில் வாந்தியெடுக்கும் சுதந்தரத்தையும் இந்த தேசமும் இதன் ஜனநாயகமும்தான் இவர்களுக்குத் தந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
என் நண்பர் ஜெயக்குமார் ஶ்ரீநிவாசனுடன் சில நாள்கள் முன்னர் பேசிக்கொண்டிருந்தபோது ‘இங்கே (இராக்கில்) இப்போது ஃபேஸ்புக் கிடையாது; திருட்டு வழியில்தான் வரவேண்டும்’ என்று சொன்னார். சீனாவில் என்னென்ன தடை செய்யப்பட்டிருக்கிறது என்று எப்போதோ ஒரு தளத்தில் பெரிய பட்டியலொன்று பார்த்தேன். நமக்கு இந்த இம்சையெல்லாம் என்றுமே இருந்ததில்லை. மிஞ்சிப் போனால் சவீதா பாபி கிடைக்காது போவாள். வேறு யாராவது ஒரு பாவியைக் கொண்டு பொழுதை ஓட்டிவிடலாம்.
காந்தி வேஸ்ட், சமஸ்கிருதம் ஒழிக, பட்ஜெட் மோசம், தமிழ் சினிமா உருப்படாது, தமிழ்நாடு தேறாது, இந்தியா உருப்படாது, போலிஸ் பக்ருதீன் நல்லவன், நரேந்திர மோடி கெட்டவர், நீயா நானா குப்பை, என்னைக் கூப்பிட்டால் மட்டும் ரத்தினம் – எதற்கு இதெல்லாம்?
செய்வதற்கு நிறைய இருக்கிறது. ஆக்கபூர்வமாக. அறிவுபூர்வமாக. ஆத்மார்த்தமாக. நான் என் தேசத்தை நேசிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்வதற்குக் கூட யோசிக்கும் அளவுக்கு சூழலை நாசமாக்கி வைத்திருக்கும் அறிவுஜீவி பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு விலகியிருங்கள். இந்த தேசம் நமக்கு நிறைய செய்திருக்கிறது. பதிலுக்கு நம்மால் முடிந்ததை சந்தோஷமாகச் செய்வோம். அட, ஒழுங்காக வரி கட்டிவிட்டுப் போவதைக் காட்டிலும் ஒரு தேச சேவை உண்டா. நடு ரோடில் வண்டி ஓட்டிக்கொண்டே எச்சில் துப்பாதிருப்பது அடுத்தது.
ஜெய்ஹிந்த்.
Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)