நாசமாய்ப் போகும் கலை

புத்தக வெளியீட்டு விழா வைக்காவிட்டால் எழுத்தாளனே இல்லை என்றார் நண்பரொருவர் என்னும் நண்பர் ஒருவர்.


தூக்கிவாரிப் போட்டது எனக்கு. என் பேர் தாங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சந்து பொந்துகளில் உலவிக்கொண்டிருக்கின்றன ஐயா! என்று சொல்லிப் பார்த்தேன்.


ம்ஹும். அதெல்லாம் கணக்கிலேயே சேராது என்று அடித்துச் சொல்லிவிட்டார்.


‘ஒரு புத்தகம் வருகிறதென்றால் மூன்று மாதங்களுக்கு முன்னால் அதைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடவேண்டும். முடிந்தால் நாலைந்து திசைகளில் இருந்து ஏழெட்டுப் பேரை நியமித்து திட்டியோ கண்டனம் செய்தோ நக்கலடித்தோ எழுத வைக்கலாம். பதில் கணைகளைத் தொடுப்பதற்கு ஒரு தொண்டர் படை தயாராயிருக்க வேண்டும். அவர்கள் கண்மூடித்தனமாக புத்தகத்தை ஆதரிக்கும் போர்வையில் உன்னை ஆதரித்துப் பேசவேண்டும்…’


‘யோவ் நான் என்ன கட்சியா நடத்துகிறேன்?’


‘அதெல்லாம் அப்படித்தான். இதோ எழுதுகிறேன்.. முடிக்கப் போகிறேன்.. மூணேகால் வரி மிச்சம்.. அடடா, மூட் போய்விட்டது என்று அவ்வப்போது அப்டேட் தரவேண்டும்.’


‘பிறகு?’


‘டோராபோரா மலைத் தொடரில் ஒரு சைக்கிள் பயணம் மேற்கொண்டுவிட்டு வந்து போன மூடைத் திரும்பப் பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பத்து நாள் இணையப் பக்கம் வராமல் இருக்கவேண்டும்..’


‘ஆப்கனிஸ்தானுக்கெல்லாம் இப்போது போக சாத்தியப்படாதே.’


‘உன்னை யார் அங்கே போகச் சொன்னார்கள். மொட்டை மாடிக்குப் போய் குவாட்டர் அடித்துவிட்டுக் குப்புறக் கிட, போதும்.’


நண்பரொருவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்று தோன்றியது. அவருக்கு ஒரு கமர்ஷியல் போராளியின் கல்யாண குணங்களை எடுத்துச் சொல்லி விளக்கத் தொடங்கினேன். விழாக்கள் வீண் செலவு. சமோசா காப்பி சாப்பிடத்தான் கூட்டம் வருமே தவிர ஒரு பயல் அங்கே புத்தகம் வாங்கமாட்டான்.


‘நீ ஒரு முட்டாள்!’ என்று ஆவேசமாக எழுந்து குற்றம் சாட்டினார் நண்பரொருவர். என்னடா இப்படி உண்மை பேசுகிறாரே என்று கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ‘எப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று இரு கட்சிக்கும் பொதுவில் கேட்டு வைத்தேன்.


‘விழா வைப்பது புத்தகம் விற்க என்று யார் சொன்னது?’


இப்போது மீண்டும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இப்படி ஒரே நாளில் பலமுறை தூக்கிவாரிப் போட்டால் எலும்பெல்லாம் கழண்டுவிடும். எனவே இனிமேல் தூக்கிவாரிப் போடாமல் பார்த்துக்கொள்ளத் தீர்மானித்தேன்.


‘வேறு எதற்கு விழா வைப்பது?’


‘அப்போதுதான் நீ பிரபலமாவாய்’


இங்கே நான் யோசிக்கத் தொடங்கினேன். நான் ரெகுலராகப் போகும் மாவா கடை சேட்டு மற்றவர்களுக்கு அரைப்பது போல எனக்கு அரைப்பதில்லை. ரெண்டு சிட்டிகை குங்குமப்பூ, ஜாதிக்காய் எசன்ஸ் சேர்த்து எனக்குத் தனியே அரைத்துத் தருவான். ரைட்டர் சார் என்று அன்போடு கூப்பிடுவான்.


நான் வழக்கமாக பெட் ரோல் போடும் பங்க்கின் முதலாளி என் வாசகர். ஓடி வந்து கையைப் பிடித்துக் குலுக்குபவர். எனவே அவரது கடைப் பையன்கள் என் வண்டிக்கு பெட் ரோல் போடும்போது ஏமாற்றுவதில்லை.


என் மகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் அலுவலகப் பணியில் இருக்கும் ஒரு பெண்மணியும் என் வாசகர்தான். எதற்காகவாவது நான் போகவேண்டி வந்தால், யாருக்கும் காத்திராமல் காரியத்தை முடித்துக்கொண்டு வந்துவிட முடியும்.


அட, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்காரன் என் வாசகனில்லை என்றாலும் நானொரு எழுத்தாளன் என்று அறிந்தவனாயிருக்கிறானே. ஒரு அவசரத்துக்கு அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு என்னவேண்டுமானாலும் வாங்கிச் செல்ல முடிவதைக் காட்டிலும் வேறென்னதான் பிரபலத்தின் கல்யாண குணம்?


‘முட்டாள், முட்டாள், சர்வ முட்டாள்! உலகம் உன் பேட்டையோடு முடிந்துவிடுவதில்லை. பிரபலம் என்றால் மாநிலம் முழுதும் தெரிவது. முடிந்தால் நாடு முழுவதும் தெரிவது.’ என்றார் நண்பரொருவர்.


அதற்கு நான் நயந்தாராவாகப் பிறந்திருக்க வேண்டும். நான் எதற்கு நாடு முழுதும் தெரியவேண்டும்? என் புத்தகம் போய்ச் சேர்ந்தால் போதாதா?


ஒரு கணம் என்னை ஒரு சேற்றுப்புழுவைப் போல் பார்த்தார். ‘இதோ பார்! கவர்னர் மாளிகை விழா மண்டபம் வாடகைக்குக் கிடைக்கிறதா என்று கேள். ஒரு ஸ்பான்சர் பிடித்து வாடகைப் பணத்தைக் கட்டிவிடு. கமலஹாசனெல்லாம் வேண்டாம். அமிதாப் பச்சனைக் கூப்பிட்டு புத்தகத்தை வெளியிடச் சொல்லு. முதல் பிரதியைப் போனால் போகிறது; அவரது மருமவப் பொண்ணையே வாங்கிக் கொள்ளச் சொல்லிவிடலாம்.’


‘இதென்ன அக்கிரமம்? கவர்னர் மாளிகையில் விழா ஏற்பாடு செய்துவிட்டு ரோசய்யாவைக் கூப்பிடாதிருப்பது தவறல்லவா? அவர் நல்லி செட்டியார் போல விழாக்களுக்காகவே அவதரித்தவர் அல்லவா?’


‘கலர் கெட்டுவிடும். நான் சொல்வதை மட்டும் கேள். வாழ்த்திப் பேச நாலு பேர் வேண்டும். லோக்கல் சினிமா உலகத்தில் இருந்து ஒருத்தர். கேரள சினிமாவிலிருந்து ஒருத்தர்…’


இங்கே நான் இடைமறித்தேன். ‘ஒய் நாட் ஷகிலா?’


நண்பரொருவர் ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘நாட் எ பேட் ஐடியா. ரேஷ்மாவைக் கூட முயற்சி செய்யலாம். இதெல்லாம் பின்னவீன உத்தியில் சேரும்’ என்றார்.


எனக்குத் தூக்….


வேண்டாம், வலிக்கும். மேலே சொல்லுங்கள் என்றேன்.


‘யாராவது போலிஸ் உயரதிகாரிக்கு மேடையில் இடம் கொடுப்பது நல்லது. மண்டபத்துக்கு வெளியே விளக்கு வைத்த ஜீப்பும் காரும் நின்றால் ஒரு கெத்து.’


அடேங்கப்பா.


‘முக்கியமான விஷயம், டிவி சேனல் கவரேஜ். முடியாவிட்டால் யூட்யூப் லைவ் கவரேஜ்.’


எல்லாமே இரண்டு மணிநேர விழாவுக்கா? முடிந்து வீட்டுக்குப் போய்ப் படுத்தால் பொழுது விடிந்துவிடுமே ஐயா! என்றேன் பரிதாபமாக.


நண்பரொருவர் சிரித்தார். ‘அதுதான்! அதுதான்! அன்று விடியும் பொழுதில் நீ வீட்டை விட்டு வெளியே வந்தால் பார்க்கிறவர்கள் பார்வை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்!’


யோசித்துப் பார்த்தேன். மாவா சேட் என்னைப் பார்ப்பதே இல்லை. பரபரவென்று வேலையை முடித்து என்னைச் சீக்கிரம் அனுப்பிவைக்கும் தீவிரம்தான் அவனுக்கு. பெட் ரோல் பங்க் ஊழியரும் என்னைப் பார்ப்பதில்லை. டேங்க்கைத்தான் பார்ப்பார்.


‘நீ ஒரு வடிகட்டிய முட்டாள். பஸ்ஸில், ரயிலில் போகும்போது.. பொது இடங்களில் நடக்கும்போது…’


நான் பஸ், ரயிலில் போவதில்லை. கட்டணக் கழிப்பிடம் தவிர வேறு பொது இடங்களுக்கும் செல்வதில்லை. எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கிறதே என்றேன்.


‘சே.. ஒரு கறிகாய் வாங்கப் போகமாட்டாயா? ஒரு சலூனுக்கு? சூப்பர் மார்க்கெட்டுக்கு?’


‘சொன்னேனே. பெட்டிக்கடைக்காரப் பிள்ளைக்கு ஏற்கெனவே நான் ஒரு எழுத்தாளன் என்று தெரியும். சலூன் முனியசாமி பலகாலமாக என்னிடம் சினிமா சான்ஸ் கேட்டுக்கொண்டிருப்பவன். சூப்பர் மார்க்கெட்டெல்லாம் என் மனைவி டிபார்ட்மெண்ட்.’


‘நீ நாசமாய்ப் போ’ என்று நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு நண்பரொருவர் எழுந்துவிட்டார்.


அதைத்தானே இத்தனை காலமாகச் செய்துகொண்டிருக்கிறேன்?


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2014 21:58
No comments have been added yet.