S. Ramakrishnan's Blog, page 2
August 23, 2025
திரைப்பயணி -7
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி தொடரின் 7 வது பகுதி வெளியாகியுள்ளது. இதில் சாப்ளின் நடித்து இயக்கிய லைம்லைட் திரைப்படம் குறித்துப் பேசியிருக்கிறேன்
August 21, 2025
கனவில் பிறந்த உலகம்.
ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்கள் பெரும்பாலும் விலங்குகளை மையப்படுத்தியோ, தேவதை கதைகளையோ, விஞ்ஞானப்புனைவுகளையோ மையப்படுத்தி உருவாக்கப்படுகின்றன.

இதற்கு மாறாக இயற்கையின் பிரம்மாண்டத்தை, மனிதர்கள் இயற்கையோடு கொள்ள வேண்டிய உறவினை. போரின் விளைவுகளை, சிறார்களின் வியப்பூட்டும் கற்பனைகளை ஜப்பானிய அனிமேஷன் படமாக ஹயாவோ மியாசாகி உருவாக்குகிறார். அதே ஜப்பானில் வெளியாகும் அனீம் படங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அவை தனியொரு திரைப்பட வகைமையாகும்.
சீனா, பிரான்ஸ் மற்றும் ஈரானிலும் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட அனிமேஷன் படங்களைச் சமீபமாக உருவாக்குகிறார்கள். அவை பெரிய வெற்றியை பெறவில்லை. இந்தியாவில் அனிமேஷன் திரைப்பட உருவாக்கம் மிகவும் குறைவு. சமீபமாகச் சிலர் புராணக்கதைகளை அனிமேஷன் திரைப்படமாக வெளியிடுகிறார்கள். அவை வணிக ரீதியான வரம்புகளுக்குள்ளே அடங்கி நிற்கின்றன.
வெகு அரிதாகவே அரசியலை முதன்மைப்படுத்தி Persepolis. Waltz with Bashir போன்ற அனிமேஷன் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒலிக்கும் உண்மையின் குரல் வலுவானது. அந்த வரிசையில் 2023ல் வெளியாகியுள்ள Four Souls of Coyote சிறப்பான அனிமேஷன் படமாகும்.

அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர்கள் தங்கள் நிலத்தில் எண்ணெய் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்ட களத்தில் உள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்காகக் குலத்தந்தை போன்ற கிழவர் பூர்வகுடிகளின் பழங்கதை ஒன்றினைச் சொல்லத் துவங்குகிறார்.

பூமியில் இயற்கை எப்படி உருவானது உயிரினங்கள் எவ்வாறு தோன்றின . மனிதன் தோன்றிய விதம். நன்மை தீமை உருவான விதம். மனிதனின் பேராசை ஏற்படுத்திய விளைவுகள் எனப் படம் தனித்துவமான கதையை விவரிக்கிறது.
உலகை சிருஷ்டிக்கும் படைப்பாளி ஒரு கிழவர். அவர் கனவுகளின் அடிப்படையில் உலகைக் கட்டமைக்கிறார். முதலில் மலை, மரம் செடிகொடிகள் நீர்நிலைகள் உருவாகின்றன. வாத்து தான் அவர் உருவாக்கிய முதற்பறவை. அவருக்குக் கோபம் அதிகம். அதைக் கட்டுப்படுத்த முடியாத போது இடிமின்னல் பிறக்கிறது அது பறக்கும், பேசும் பாம்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

கொயோட் என்பது வட அமெரிக்காவின் சமவெளிகளில் வாழும் ஒரு வகை ஓநாய். அந்தக் கொயோட்டினை படைப்பாளி உருவாக்குகிறார். அதன் தவறான செயல்கள், தந்திரங்கள் எவ்வாறு அழகான வாழ்விடத்தை சிதைக்கிறது எனப் படம் விரிவு கொள்கிறது.
ஆரம்பத்தில் பூமி சொர்க்கத்தைப் போல அமைதியாக, அழகாக விளங்குகிறது. அங்கு அனைத்து விலங்குகளும் இணைந்து வாழுகின்றன.. எல்லோரும் தாவரங்களை மட்டுமே உண்ணுகிறார்கள்.

பசிக்காக இன்னொரு உயிரை கொல்வதைக் கொயோட் அறிமுகப்படுத்துகிறது. அது முதலில் ஒரு வாத்தைக் கொல்கிறது. முதல் கொலையின் பின்பாக உலகம் இரண்டாகப் பிளவுபடுகிறது. தான் உருவாக்கிய உயிர்களுக்குள் ஏற்படும் மோதலைப் படைப்பாளி காணுகிறார். அவரால் உலகின் தீமைகளைத் தடுக்க முடியவில்லை.
கொயோட்டிற்கு மரணமில்லை. அது ஒவ்வொரு முறை அழிக்கப்படும் போதும் புதிய உருவம் எடுத்தபடியே இருக்கிறது. நான்கு ஆன்மாக்கள் கொண்டதாகக் கருதப்படுகிறது. உண்மையில் அது ஒரு அடையாளம். இதில் வரும் படைப்பாளி புனிதரில்லை. அவர் பலவீனங்கள் கொண்டவராகவே சித்தரிக்கபடுகிறார். கனவிலிருந்தே உலகம் தோன்றுகிறது.
Only when the last tree has died, the last river has been poisoned and the last fish has been caught will we realise that we can’t eat money.” எனப் படத்தின் மையக்கருத்தை துவக்கத்திலே தெரிவித்துவிடுகிறார்கள்
ஆரோன் கௌடர் உருவாக்கியுள்ள Four Souls of Coyote மிக முக்கியமான அனிமேஷன் படமாகும். இதன் திரைக்கதையை எழுத்தாளர் கெசா பெரெமெனி எழுதியுள்ளார்
படத்தின் பெரும்பான்மை காட்சிகள் கையால் வரையப்பட்டிருக்கின்றன. 2D மற்றும் 3D ஐ ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள காட்சிகள், மாறுபட்ட கதை சொல்லும் முறை, மற்றும் படத்தொகுப்பு மிகச்சிறப்பாக உள்ளது. 100 நிமிஷங்கள் ஒடும் இந்த ஹங்கேரிய அனிமேஷன் படம் மிகவும் தனித்துவமானது,

பூர்வகுடியினருக்கே உரித்தான வண்ணங்கள். கதாபாத்திரங்களின் முக அமைப்புகள். நிலம் சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள். அழகான நிலப்பரப்புகள் எனத் துல்லியமாக உருவாக்கியுள்ளார்கள். வியப்பூட்டும் கேமிரா கோணங்கள், பிரம்மாண்டமான இயற்கை காட்சிகள் மிகுந்த நேர்த்தியுடன் உருவாக்கபட்டுள்ளன
எண்ணெய் குழாய் பதிப்பதற்காகக் கையகப்படுத்தபடும் அந்த நிலத்தின் வரலாற்றை அவர்கள் முடிவில் அறிந்து கொள்கிறார்கள். பூமியை காக்க வேண்டியது அனைவரின் கடமை என்பதை உணருகிறார்கள்.
பெரும்பான்மை ஹாலிவுட் படங்களில் பூர்வகுடி இந்தியர்கள் நாகரீகமற்ற, குரூரமான வேட்டையாடிகளைப் போலவே சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். அவர்களைக் கொன்று நிலத்தைக் கைப்பற்றிய வெள்ளைவீரர்களை நாயகராகச் சித்தரித்தே படங்கள் உருவாக்கபட்டுள்ளன. இந்தப் படம் அதற்கு மாற்றாகப் பூர்வகுடிகளுக்கே உரித்தான தொன்மக்கதையை, நம்பிக்கையை, சாகசங்களை நேர்மையாகப் பதிவு செய்துள்ளது
August 19, 2025
ஆப்பிளுடன் ஒரு நடனம்
புதிய சிறுகதை. ஆகஸ்ட் 20.2025
அது இரண்டரை நிமிஷ வீடியோ.
விஜயராகவனின் வாட்ஸ்அப்பில் வந்திருந்தது. இரண்டு நாட்களுக்குள் பத்து முறைக்கும் மேலாகப் பார்த்துவிட்டிருந்தார். துனிசியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தலையில் ஆப்பிள் ஒன்றை வைத்துக் கொண்டு ஆடுகிறாள். பூக்கள் நிரம்பிய அடர்நீல பாவாடை. முடிச்சிட்ட வெண்ணிற ஜாக்கெட். காதில் இரண்டுவகை காதணிகள். கையில் பட்டாம்பூச்சி உருவம் கொண்ட பிரேஸ்லெட். அவள் சுழன்றாடும் வேகத்திலும் ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழவில்லை.

அந்தப் பெண்ணிற்கு இருபது வயதிற்குள் இருக்கக் கூடும். பாலாடைக் கட்டி போன்ற வாளிப்பான உடல். வட்ட முகம். கூழாங்கற்கள் போன்ற அழகான, பெரிய கண்கள். அந்தக் கண்களில் வெளிப்படும் சிரிப்பு தான் அவளைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் படி தூண்டுகிறது.
அவள் ஆடும் நடனத்திற்குப் பெயர் எதுவுமில்லை. உண்மையில் அவள் யாருடனோ விளையாடுகிறாள், அந்த நடனத்தை யார் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என வீடியோவில் தெரியவில்லை.
தலையில் ஆப்பிளை வைத்துக் கொண்டு அவளால் எப்படி இவ்வளவு வேகமாகச் சுழன்றாட முடிகிறது. நிச்சயம் இப்படிப் பல நாட்கள் ஆடிப் பழகியிருப்பாள். சிறுவயதில் துவங்கிய பழக்கமாக இருக்கக் கூடும்.
நமது ஊரில் கரகாட்டம் ஆடும் பெண்கள் கும்பம் வைத்துக் கொண்டு ஆடுவதில்லையா. அப்படித் தான் இதுவும். என்று தோன்றியது
ஆனால் அவள் தலையில் வைக்கபட்ட ஆப்பிள் ஒரு கனியைப் போல இல்லாமல் கிரீடம் போல மாறியிருந்தது.
சிறுவயதில் பம்பரத்தை சுழலவிட்டுக் கையில் வாங்கிக் கொள்ளத் தருவார்கள். உள்ளங்கையில் பம்பரம் சுழலும் போது ஏற்படும் கூச்சம். நெருக்கம். அலாதியான உணர்வு அவளது நடனத்தைப் பார்க்கும் போதும் ஏற்பட்டது.
விஜயராகவன் ஒவ்வொரு முறை அந்த வீடியோவைக் காணும் போதும் நடனமாடும் அவளது கைகள் காற்றில் ஏதோ எழுதுவதைப் போல உணர்ந்தார்.
அவள் நடனத்தின் போது தனது தலையில் ஆப்பிள் இருப்பதை மறந்திருந்தாள். பீறிடும் உற்சாகம். தனது உடலைத் தாமரை மலரென விரிக்கும் துடிப்பு. இளமை. இளமை. இளமை. அது தான் இப்படி ஆட வைக்கிறது. அவளது தலையில் இருப்பது ஆப்பிள் இல்லை. அவளது வயது.
அந்த வீடியோவை தனது தம்பிக்கு அனுப்பி வைக்கலாமா என விஜயராகவன் நினைத்தார். ஆனால் கவர்ச்சி நடனம் எனத் தவறாக நினைத்து விடுவானோ என்று தயக்கமாக இருந்தது.
கரீம்நகரில் வேலை செய்யும் அவரது தம்பி சந்தானகோபாலன் அன்றாடம் இருபது முப்பது வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்துவிடுகிறான். அவை பெரும்பாலும் ஜோதிடம், காமெடி அல்லது சாப்பாடு தொடர்பான வீடியோவாக இருக்கும். அவரும் பதிலுக்குச் சில நேரம் ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோவை அனுப்பி வைப்பார்.

விஜயராகவன் வேலை செய்யும் ஏடன் என்ற அமெரிக்க நிறுவனம் பங்குச்சந்தை தொடர்பான பணிகளையும் மேற்கொண்டிருந்தது. அதே நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பிரிவில் அவர் வேலையில் இருந்தார். இதற்கு முன்பாகவும் இரண்டு பெரிய இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் இருந்த காரணத்தால் இந்த நிறுவனத்தில் நல்ல சம்பளமும் மேலாளர் பதவியும் கிடைத்தது. ஆனால் ஒரே போன்ற சலிப்பூட்டும் வேலை. ஒரே அன்றாடம். இடைவிடாத அலுவலக மீட்டிங். திட்டமிடல். பொய் சிரிப்புகள். தூசி படிந்து கண்ணாடி ஜன்னல் மங்கிவிடுவதைப் போலத் தினசரிவாழ்க்கையின் கசடுகள் அவர் மீது நிறையவே படிந்திருந்தன.
அவரது ஒரே மகள் வர்ணா பெண்கள் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்துக் கொண்டிருந்தாள். காதில் எப்போது இயர்பட்ஸை மாட்டிக் கொண்டிருப்பாள். பாட்டுக்கேட்கிறாளா. எவருடனாவது பேசிக் கொண்டிருக்கிறாளா என எதுவும் தெரியாது. வீட்டில் அவர்களுடன் பேசும் போது இடது காதில் உள்ள இயர்பட்ஸை மட்டும் கழட்டிவிட்டுக் கொள்வாள்.
நான்கு மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் விஜயராகவனின் வாட்ஸ் அப்பை யாரோ ஹேக் செய்து அதன்வழியே ஆபாச படங்களைப் பலருக்கும் அனுப்பி வைத்துவிட்டார்கள். அவரது பெயரில் நடந்த பகிர்வைப் பற்றி அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. முகம் தெரியாத ஒருவனால் தான் குற்றவாளியாக்கபடுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“பணம் கேட்டு ஏமாற்றாம.. இப்படிச் செக்ஸ் படம் மட்டும் அனுப்பி வச்சானேனு சந்தோஷப்படுங்க“ என்றார் சக ஊழியர் உமாபதி.
இது என்ன வகைச் சமாதானம் என அவருக்குப் புரியவில்லை. ஒருவன் அவமானப்பட வேண்டும். ஏமாற்றப்பட வேண்டும் எனப் பலரும் விரும்புகிறார்கள். அது போன்ற தருணத்தில் உள்ளூற ரசிக்கிறார்கள். மகிழ்கிறார்கள். அதைக் கண்கூடாக விஜயராகவன் அறிந்து கொண்டார்.
பிக்பாக்கெட் அடிப்பவனுக்கும் பைக் திருடுகிறவனுக்கும் ஒரு உருவம் இருக்கிறது. ஆனால் செல்போனில் இப்படி மோசடி செய்பவனுக்கு உருவமில்லை. அவன் ஒருவனுமில்லை. ஒரு வலைப்பின்னல். கறுப்பு சிலந்தி.
குழப்பத்தில் அவருக்குக் கைகள் நடுங்கத் துவங்கின. உடனடியாகத் தனது செல்போனை மாடியிலிருந்து வீசி எறிய வேண்டும் போலிருந்தது.
மதிய உணவு நேரத்தின் போது அலுவலக நண்பரான ராஜேந்திரன் “இது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை“ என்று சொன்னதோடு சில ஆலோசனைகளையும் சொன்னார்
“ராகவா.. நீ முதல்ல இந்த சிம்மைக் கழட்டித் தூக்கி போடு.. நாளைக்கே புது சிம் வாங்கிக்கோ. கொஞ்ச நாளைக்கு யாருக்கும் வாட்ஸ்அப் அனுப்பாதே. இந்த மாதிரி மோசடி எல்லாம் பல்கேரியாவில் இருந்து ஒரு கேங் செய்றதா சொல்றாங்க“
பல்கேரிய ஆள் எதற்காகத் தனது வாழ்க்கையோடு விளையாடுகிறான். தன்னை அவமானப்படுத்துகிறான். அவருக்குத் திடீரெனத் தனது செல்போனை கையாளுவது அபாயகரமான ஆயுதம் ஒன்றைக் கையாளுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
அவருக்கு நடந்ததைப் பற்றிக் கேள்விபட்ட நிர்வாக அதிகாரி அன்சாரியும் சொன்னார்
“டெக்னாலஜியாலே உருவாகிற பிரச்சனைகள் எல்லாமே புதுசு. விநோதமானது. அதை நாம புரிஞ்சிகிடவே முடியாது. திடீர்னு இன்னைக்குக் காலைல என்னோட பேங்க் அக்கவுண்டை ஓபன் பண்ண முடியலை. பாஸ்வேர்ட் தப்புனு வருது. இதே பாஸ்வேர்ட் தான் இத்தனை நாளா யூஸ் பண்ணிட்டு இருக்கேன். அரைமணி நேரம் போராடி பார்த்து முடியலை. ஆபீஸ்ல வந்து அக்கவுண்டை ஒபன் பண்ணினா.. தானா ஒபன் ஆகுது… இதை எப்படிப் புரிஞ்சிகிடுறது. சொல்லுங்க“
இதைக் கேட்டு ராஜேந்திரன் வேடிக்கையாகச் சொன்னார்
“மெஷினுக்கும் புத்திகெட்டு போகும்னு புரியுது“
அவர்கள் சப்தமாகச் சிரித்தார்கள். ஆனால் விஜயராகவன் சிரிக்கவில்லை. அவர் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத கவலையால் பீடிக்கபட்டார். ஆபாசப்படத்தைத் தான் அனுப்பியதாக நினைத்துத் தன்னைத் தவறாக நினைப்பவர்களும் இருப்பார்களே. அவர்களிடம் எப்படி விளக்கம் சொல்வது. தொடர்பில் உள்ள அனைவருக்கும் தான் ஆபாசப்படம் அனுப்பவில்லை எனத் தகவல் அனுப்பினால் அது இன்னும் பெரிய வெட்ககேடு இல்லையா.
கதவிடுக்கில் அடிபட்ட விரலில் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாவது போல அவரது கவலை இரவிற்குள் அதிகமாகியிருந்தது.
வீடு திரும்பிய இரவில் தனது வாட்ஸ்அப்பில் இருந்து ஏதேனும் வீடியோ அல்லது மெசேஜ் வந்ததா என மனைவி மற்றும் மகளிடம் கேட்டார்
“எப்பவும் குட்மார்னிங் மெசேஜ், அதுவும் ஒரு ரோஜாப்பூ தானேப்பா அனுப்புவே“ என்றாள் மகள் வர்ணா
அப்படி அனுப்பி வைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. மலர்கள் மீது என்ன கோபம். தினமும் நிஜமான ரோஜாப்பூவை கொடுத்தால் ஒரு வேளை சந்தோஷப்படுவாளோ என்னவோ.
அவரது மனைவி பானு அன்றாடம் ஒரு கோவிலின் வீடியோவை அவர் பார்க்க வேண்டும் என்று அனுப்பி வைக்கிறாள். இவ்வளவு ஆயிரம் கோவில்கள் இருப்பது இப்போது தான் அவருக்குத் தெரிய வந்தது.
பானு அடிக்கடி சிம்மை மாற்றிக் கொண்டேயிருப்பாள். எல்லாமும் ப்ரீபெய்டு சிம். அதனைக் குறிப்பிட்ட காலம் பயன்படுத்துவாள். பின்பு மாத கட்டணத்தை டாப்அப் செய்யமாட்டாள். ஆகவே அவரது செல்போனில் பானுவின் எண்களை வொய்ப் 1 வொய்ப் 2 வொய்ப் 3 வொய்ப் 4 என வரிசையாகப் பெயர் பதிவு செய்திருந்தார். சில நேரம் வொய்ப் 3 எனப் போன் அடிக்கும் போது அவரை அறியாமல் சிரிப்பு வருவதுண்டு.
ராஜேந்திரன் சொன்ன ஆலோசனைப் படி புதிய சிம் ஒன்றை வாங்கிக் கொண்டார் பழைய சிம் கார்டைத் தூக்கிப்போட்டார். இனிமேல் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவே கூடாது என்றும் நினைத்துக் கொண்டார்.
“ஏன்பா சிம்ம மாத்திட்டே“ என மகள் கேட்டாள்
“நெட்வொர்க் சரியில்லை“ என்று பொய் சொன்னார்
அலுவலக நிர்வாகப் பணிகளுக்காகப் புதிய வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்துள்ளதாகச் சொல்லி ராஜேந்திரன் கட்டாயப்படுத்தியதால் திரும்பவும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த துவங்கினார் ஆனால் பல்கேரியாக்காரனை நினைத்து மனதிற்குள் அச்சமாகவும் இருந்தது.
புதிய வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மாதவனோ, ராஜியோ தான் ஆப்பிளுடன் நடனமாடும் பெண்ணின் வீடியோவை ஷேர் செய்திருந்தார்கள்.

நடனமாடும் துனிசியப் பெண் வீடியோவைக் காணக்காண அவருக்குள் ரகசிய ஆசையொன்று முளைவிட ஆரம்பித்தது. அந்தப் பெண்ணைப் போலத் தலையில் ஒரு ஆப்பிளை வைத்து ஆடிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது. அப்படி நினைக்கும் போதே சந்தோஷமாகவும் கூச்சமாகவும் இருந்தது.
வீட்டில் தனது அறையை மூடிக் கொண்டு ஆடிப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து கொண்டபடியே அலுவலகம் விட்டு வரும் போது பழக்கடையில் காரை நிறுத்தி ஆப்பிள் வாங்கினார்.
அவர் ஒரு ஆப்பிளை தலையில் வைத்து பார்ப்பதை கடைக்காரன் விநோதமாகப் பார்த்தான்
“சிம்லா ஆப்பிள் சார்.. மாவா இருக்கும்“ என்றான்
துனிசியப் பெண் தலையில் வைத்தாடும் ஆப்பிளைப் போல இல்லாமல் கடையில் இருந்த ஆப்பிள் அளவில் சிறியதாக இருந்தது
“கொஞ்சம் பெரிய ஆப்பிளா இல்லையா“ எனக்கேட்டார்
“அது டேஸ்டா இருக்காது சார்… சின்ன ஆப்பிள் தான் ருசி“ என்றான் கடைக்காரன்
“ஆடிப்பார்ப்பதற்குத் தானே“ என மனதிற்குள் சொல்லிக் கொண்டு ஆப்பிள்களை வாங்கிக் கொண்டார்.
வீட்டிற்குப் போனதும் எப்போதும் போல அவரது சாப்பாட்டு பையை வெளியே எடுத்துப் பார்க்கும் பானு ஆப்பிள்களைப் பார்த்தவுடன் சப்தமாகக் கேட்டாள்
“இந்த ஆப்பிள் எங்கே வாங்குனீங்க“
“கார்னர் கடைல“
“உங்களை நல்லா மாற்றியிருக்கான். இது பேரிக்காய் மாதிரி நறுச் நறுச்னு இருக்கும். இனிக்காது. “
“பரவாயில்லை. நான் ஆப்பிள் சாலட் சாப்பிடப் போறேன்“ என்று பொய் சொன்னார்
பானு விநோதமாகப் பார்த்தபடி கேட்டாள்
“உங்களுக்குச் சாலட் பிடிக்குமா“
அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் ரகசியமாக ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். ஆப்பிளை தனது தலையில் வைத்துக் கொண்டார். கண்ணாடி முன்பாக நின்று தலையில் ஆப்பிள் சரியாக நிற்கிறதா எனப் பார்த்துக் கொண்டார்
பின்பு துனிசியப் பெண்ணைப் போலக் கைகளை விரித்து ஆட முயன்றார்.
ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழுந்து உருண்டோடியது. மூன்று நான்கு முறை தலையில் ஆப்பிளை வைத்து ஆட முயன்றும் தோல்வியில் முடிந்தது வருத்தமாக்கியது. ஈரமான ஆப்பிளை வெள்ளை துண்டிற்குள் வைத்து மறைத்தபடியே குளியல் அறைக்கதவை திறந்து வெளியே வந்தார். மனைவிக்குத் தெரியாமல் ஆப்பிளை மேஜையில் கொண்டு போய் வைத்தார்
சிறிய விஷயங்களைச் செய்ய முடியாமல் போவதில் அடையும் ஏமாற்றம் அதிக வலி தரக்கூடியது என்று உணர்ந்தார்.
துனிசியப்பெண் தலையில் ஏதேனும் பசையை வைத்து ஒட்டிக் கொண்டிருப்பாளோ என்று சந்தேகம் வந்து வீடியோவை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ஆப்பிள் தலையில் தானே நிற்கிறது.
அடுத்த நாள் அந்த ஆப்பிளை பையில் போட்டு அலுவலகத்திற்குக் கொண்டு சென்றார். லிப்டில் தனியே செல்லும் போது தலையில் வைத்துப் பார்த்துக் கொண்டார். அலுவலகத்தின் கழிப்பறையினை மூடிக்கொண்டு தலையில் ஆப்பிளை வைத்து ஆட முயன்று தோற்றார்.
வீட்டில், அலுவலகத்தில், மொட்டைமாடியில். என எங்கே சென்றாலும் யாராவது பார்த்து விடுவார்களோ என்று தயக்கமும் கூச்சமும் ஏற்பட்டது. ஆகவே யாரும் பார்க்காத கடற்கரை பகுதிக்குப் போய்த் தலையில் ஆப்பிளை வைத்து ஆடிப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.
வழக்கமாக அலுவலகம் விட்டு வீட்டுக்குப் போவதற்குப் பதிலாகக் கடற்கரை சாலையில் காரை ஒட்டிக் கொண்டு வெகுதூரம் சென்றார்.
மணல்மேடு ஒன்றினை ஒட்டி காரை நிறுத்திவிட்டு ஆப்பிளுடன் கடலை நோக்கி நடந்தார். வழியில் அறுந்த செருப்பு ஒன்று மணலில் தனியே கிடந்தது. நாய் ஒன்று மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தது.
தொலைவில் ஒரு காதல் ஜோடி கண்ணில் பட்டது. அவர்கள் தன்னைப் பார்க்க மாட்டார்கள் என்ற முடிவோடு தனது பையிலிருந்த ஆப்பிளை வெளியே எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு நடனமாட முயன்றார்.
ஆப்பிள் உருண்டு கடலை நோக்கி ஒடியது. அதைப்பிடிக்கப் போய்த் தடுமாறி விழுந்தார். வேகமாகப் பாய்ந்த அலை அவரை ஈரமாக்கியது. நனைந்த உடைகளுடன் மணல் ஒட்டிய ஆப்பிளை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார்
ஈரமான ஆப்பிள் என்பதால் தானோ என்னவோ அது தலையில் உறுதியாக நின்றது. அவர் கைகளை விரித்து ஆட முயன்றபோது உடல் எடைக்கல்லைப் போல இறுக்கமாக இருப்பதை உணர்ந்தார். உடல் வளைய மறுக்கிறது. கைகளை எளிதாகச் சுழற்ற முடியவில்லை. கழுத்தை இடது பக்கம் திருப்பும் போது வலிக்கிறது. சீரற்று அடைக்கப்பட்ட பஞ்சுத் தலையணைப் போலத் தனது உடல் இருப்பதை உணர்ந்து கொண்டார்.
ஒரு முறை சுழன்று வட்டமிடுவதற்குள் ஆப்பிள் விழுந்துவிடுகிறது. அந்த ஆப்பிள் அவரைக் கேலி செய்வதைப் போல உணர்ந்தார்.
பதினைந்து வயதில் இப்படி ஹாக்கி விளையாட வேண்டும் என ஆசை உருவாகி தினம் காலை எழுந்து மைதானத்திற்குப் போய்த் தீவிரமாக ஹாக்கி கற்றுக் கொண்ட நாட்கள் மனதில் வந்து போனது. வேலைக்குப் போன பிறகு ஹாக்கி மட்டையைக் கையில் தொடவேயில்லை. இப்போது வரை அவர் ஹாக்கி விளையாடுகிற ஒரு போட்டோ கூட அவரிடம் கிடையாது. அவரது மனைவி கூட நம்ப மறுத்துவிட்டாள்.
இத்தனை வருஷங்களில் அவர் எதையும் செய்து பார்க்க ஆசைப்பட்டதில்லை. எத்தனையோ முறை நண்பர்கள் சீட்டாட அழைத்திருக்கிறார்கள். அதில் தனக்கு விருப்பமில்லை என மறுத்திருக்கிறார்.. இன்னொரு முறை அலுவலக விருந்தில் மியூசிகல் சேர் போட்டி நடந்தது. அதில் கலந்து கொள்ள முடியாது எனக் கோபமாகவே மறுத்துவிட்டார்.
இவ்வளவு உறுதியாக இருந்த தன்னை இந்த இரண்டரை நிமிஷ வீடியோ எப்படி மாற்றியது என அவருக்கே புரியவில்லை. ஒருவேளை பல்கேரியாக்காரன் தனது பெயரை கெடுக்க முயன்ற போது ஏற்பட்ட அச்சம் தான் இப்படி உருமாறியிருக்கிறதோ என்றும் தோன்றியது.

அந்த நடனத்தை வெறும் விருப்பமாக மட்டுமின்றிப் பந்தயம் போல உணர்ந்தார். அதில் வெல்வது தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் பரிசு. அப்படியான பரிசு எதையும் தனக்கு இத்தனை ஆண்டுகளாகத் தான் கொடுத்துக் கொள்ளவில்லை. சிறுவயதில் மரம் ஏறும் போதும், சுழித்தோடும் ஆற்றில் நீந்திக் குளிக்கும் போதும் இந்தப் பந்தயத்தை உணர்ந்திருக்கிறார்.
அலுவலகத்தில் தினமும் அவரது மேஜையில் ஒரு ஆப்பிள் இருப்பதை ராஜி தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்
“ஏன் சார் தினமும் ஆப்பிளை கொண்டு வர்றீங்க.. சாப்பிடாமல் வீட்டுக்குக் கொண்டு போறீங்க“ எனக்கேட்டாள்
“இது சாப்பிடுற ஆப்பிள் இல்லை“ என்று மட்டும் பதில் சொன்னார்
ஒருவேளை பூஜையில் வைத்து மந்திரித்த ஆப்பிளாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டு கேட்டாள்
“எத்தனை நாள் சார் இப்படிப் பூஜை பண்ணி ஆப்பிள் வச்சிகிடணும்“
“அது என் வொய்ப்க்கு தான் தெரியும்“ என்றார்
அவர் ஆப்பிள் கொண்டு வரும் செய்தி அலுவலகம் முழுவதும் பரவியது. அவர் தனது காரின் முன்பாக நின்றபடி தலையில் ஆப்பிளை வைப்பதை பார்த்த வேலாயுதம் “பித்துப் பிடிச்சா தலைல எலுமிச்சம்பழம் தானே தேய்ப்பாங்க. சார் ஏன் ஆப்பிளை வைக்கிறார்“ எனக் கேலி செய்தான்.
ஆனால் இரண்டு மூன்று வாரங்களாகியும் அவரால் ஆப்பிளை தலையில் நிற்க வைக்க முடியவில்லை. விடுமுறை நாள் ஒன்றில் ஹோட்டலில் ஒரு ரூம் எடுத்து நாள் முழுவதும் இந்த நடனத்தைப் பயிற்சி செய்து பார்த்தார். ஏமாற்றமே மிஞ்சியது. இந்தத் தோல்வி அவரை மிகுந்த வருத்தமடையச் செய்தது.
வீட்டில் திடீரெனப் பின்னிரவில் எழுந்து கொண்டு கிச்சனுக்கு வந்து ஆப்பிளை வெளியே எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு கைகளைச் சுழற்ற முயன்று பார்ப்பார். ஆப்பிள் கிழே விழுந்து உருண்டுவிடும். அவரது விநோத நடத்தை மகளையும் மனைவியையும் கவலை கொள்ளச் செய்திருக்கக் கூடும்.
வர்ணா தான் முதலில் கேட்டாள்
“உனக்கு என்னப்பா. ஆச்சு. ஏன் என்னமோ மாதிரி இருக்கே“
“இல்லையே.. நல்லா தானே இருக்கேன்“
“நோ.. நடு ராத்திரில எழுந்து ஏன் தலையில ஆப்பிள் வச்சிகிடுறே“
“அது ஒரு டான்ஸ்மா“
“டான்ஸா.. நீ ஏன் அதைப் பண்ணுறே.. “
“நீ இந்த வீடியோவை பாரு புரியும்“ என மகளுக்கு அந்தத் துனிசியப் பெண்ணின் வீடியோவைக் காட்டினார். அவளுக்கு அந்த வீடியோ பிடிக்கவில்லை. எரிச்சலோடு சொன்னாள்.
“இது மாதிரி ஆயிரம் வீடியோ பாத்துருக்கேன்.. தலைல நிறையப் பானை வச்சிகிட்டு ஆடுற டான்ஸ் கூட இருக்கு. இதெல்லாம் கிம்மிக்ஸ். “
“இந்த பொண்ணு ஆப்பிளை வச்சிட்டு அழகா ஆடுறா. “ என்றார் விஜயராகவன்.
“அதுக்காக நீயும் ஆடுவியா. உனக்கு என்னமோ ஆகிருச்சி,, நாம ஒரு டாக்டரை பாக்கலாம்பா. “
அவளிடம் எப்படிப் புரியவைப்பது எனத்தெரியாமல் சொன்னார்
“ இதெல்லாம் ஜஸ்ட் பார் ஃபன். “
“அதுக்கு ஒரு தடவை செய்யலாம். நீ நிறைய நாள் நடுராத்திரில இப்படிச் செய்றே.. அம்மா ரொம்பப் பயப்படுறா.. உனக்காக நாகாத்தம்மன் கோவில்ல வேண்டுதல் பண்ணியிருக்கா“
“எனக்கு ஒண்ணும் இல்லை. ஐ ஆம் ஆல்ரைட்“
“அப்படின்னா.. இப்பவே இந்த ஆப்பிளை தூக்கி எறி“
“இல்லை. வர்ணா.. ஐ ஆம் கோயிங் டு பிராக்டிஸ் “ என்றார்
“அதான் ஏன்னு கேட்குறேன். நீயும் வீடியோ எடுத்து போடப்போறயா“
“நான் டான்ஸ் ஆடுனா. யார் பார்ப்பா“
“தெரியுதில்லை. பின்னே ஏன் இப்படிப் பண்ணுறே“
“இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்றே“
“இனிமே நீ ஆப்பிளை தொடவே கூடாது நம்ம வீட்ல ஆப்பிளே இருக்கக் கூடாது. “
“ஒகே. உங்களுக்குப் பிடிக்கலைன்னா.. விட்டுருறேன்“ என்று கோபத்துடன் கழிப்பறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.
அவரது மனது சமாதானம் கொள்ளவில்லை. தான் விரும்புகிற ஒன்றை தனது சொந்த வீட்டிலே செய்ய முடியவில்லை. இவர்கள் ஏன சிறிய ஆசைகளைக் கூடப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று கோபமாக வந்தது. ஆற்றின் சுழலுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல ஆப்பிள் நடனத்திற்குள் தான் சிக்கிக் கொண்டுவிட்டதாக உணர்ந்தார். அன்றைய கனவில் அவர் நடனம் ஆட முயன்று தோற்றார். ஆப்பிள் தலையில் நிற்கவேயில்லை.
அதன் பிறகான நான்கு நாட்கள் எப்போதும் போல அலுவலகம் சென்றார். வீடு திரும்பினார். ஐந்தாம் நாள் அலுவலகம் விட்டு திரும்பி வரும் போது பழக்கடையில் காரை நிறுத்தி ஆப்பிள் வாங்கினார்.
வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளை அழைத்தார்
“நான் இப்போ உங்களுக்காக ஆப்பிள் டான்ஸ் ஆடிக் காட்டப் போறேன்“
திகைத்துப் போன பானு கோபத்துடன் கேட்டாள்
“நீங்க அதை விடவேயில்லையே“
“ஒரு டிரை.. இப்போ பாரு“
என அவர் தான் வாங்கிக் கொண்டுவந்த ஆப்பிளை தலையில் வைத்தார். அவர் கையை உயர்த்துவதற்குள் ஆப்பிள் தலையில் இருந்து உருண்டு கிழே ஒடியது. யாரும் அதை எடுத்து தரவில்லை
“வர்ணா.. நீ வேணும்னா.. தலைல ஆப்பிள் வச்சி டான்ஸ் டிரை பண்ணேன்“ என்றார்
அவள் கோபத்துடன் கேட்டாள்
“கொலை பண்ணுற வீடியோ பாத்தா.. நாமளும் கொலை செய்தா எப்படி இருக்கும்னு டிரை பண்ணுவியாப்பா“
“அதுவும் இதுவும் ஒண்ணுல்லைம்மா. இது சும்மா ஜாலி“
பானு கோபத்துடன் வெடித்தாள்
“உங்களுக்கு ஆபீஸ் ஸ்ட்ரெஸ் அதிகமானா.. தியானம் பண்ணுங்க. இப்படி லூசு மாதிரி எதையாவது பண்ணிட்டு இருக்காதீங்க“.
“ ஏன் பானு இவ்வளவு கோவிச்சிகிடுறே. டான்ஸ் ஆடுறது தப்பா “
“டான்ஸ் ஆடுறதுக்கு நீங்க என்ன பச்ச பப்பாவா. வர்ணாவுக்குக் கல்யாணம் ஆயிருந்தா.. இந்நேரம் பேரன் பேத்தி பிறந்திருப்பாங்க. அந்த ஞாபகம் இருக்கட்டும். பாக்கிறதை எல்லாம் மனசுல வச்சிகிட கூடாது. அப்பப்போ மறந்துரணும். அது உங்களாலே முடியலை. எதைப் பாக்கணும். எதைப் பாக்க கூடாதுனு உங்க கண்ணுக்கு ஒரு பூட்டு போடணும்.. அப்படி ஏதாவது மெஷின் வந்திருக்கானு பாத்து சொல்லுங்க. அதை உடனே வாங்கிருவோம். “
அவளது கோபத்தை ஏற்றுக் கொண்டவரைப் போல அமைதியாக இருந்தார். அவருக்குள் குழப்பமான எண்ணங்கள் தோன்றி மறைந்தன. தன் மீதே அவருக்குக் கோபம் வந்தது. வருத்தம் உருவானது. கயிறு அறுந்து வானில் அலையும் பட்டத்தைப் போல உணர்ந்தார்.
தரையில் உருண்டு கிடந்த ஆப்பிளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்பு குனிந்து ஆப்பிளை கையில் எடுத்து வெறிகொண்டவரை போலக் கடித்துத் தின்னத் துவங்கினார்.
அதைத் திகைப்போடு பார்த்த மகளிடம் விஜயராகவன் சப்தமாகச் சொன்னார்
“நான் ஆப்பிள் திங்குறதை வீடியோ எடு.. சந்தானத்துக்கு ஷேர் பண்ணுவோம். குரூப்ல போட்டுவிடுவோம்.. “
வாயில் எச்சில் ஒழுக அப்பா பேசுவதை வர்ணா அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதும் அவளது ஒரு காதில் இயர் பட்ஸ் மாட்டப்பட்டே இருந்தது.
•••
August 16, 2025
திரைப்பயணி -6
திரைப்பயணி காணொளித் தொடரின் ஆறாவது பகுதி வெளியாகியுள்ளது.
இதில்12 Angry Men குறித்துப் பேசியிருக்கிறேன்
August 12, 2025
ஆகஸ்ட் 15 – நாயகி
ஆகஸ்ட் 15 மாலை நாயகி 1947 என்ற நிகழ்வு நடைபெறுகிறது
சுதந்திரப் போராட்டத் தியாகிகள் களத்தில் நிற்கையில் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர்களது மனைவியரின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி.
அரிதான இந்த நிகழ்வை அகிலா ஸ்ரீதர், ஜா.தீபா,பாலைவன லாந்தர் ,ஆர் காயத்ரி ,ரேவா, சவீதா ஜெயஸ்ரீ, தமிழ் பொன்னி ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்
இடம் : கவிக்கோ மன்றம். சிஜடி காலனி. சென்னை 4
நாள் :15. 8.2025
நேரம்: மாலை 4 மணி.


August 8, 2025
திரைப்பயணி – 5
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளித் தொடரின் ஐந்தாம் பகுதி வெளியாகியுள்ளது.
இதில் ரோமன் ஹாலிடே பற்றி பேசியிருக்கிறேன்
August 5, 2025
திரைப்பயணி – 4
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளி தொடரின் நான்காம் பகுதியில் சைக்கோ திரைப்படம் பற்றி பேசியிருக்கிறேன்
August 4, 2025
தூத்துக்குடியின் பாவோ பாப் மரம்.
தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி வளாகத்தினுள் பாவோ பாப் (Baobab)மரமிருக்கிறது. நானூறு ஆண்டுகள் பழமையான மரம் என்கிறார்கள். ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த மரம் தூத்துக்குடிக்கு எப்படி வந்தது எனத்தெரியவில்லை. அராபிய வணிகர்கள் மூலம் வந்திருக்கக் கூடும். அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். பொன் மாரியப்பன். ஞானராஜ், ராம்குமார், ஜெயபால், காசிம் மற்றும் சில நண்பர்கள் உடன்வந்திருந்தார்கள்.

நான்கு யானைகள் ஒன்றாக நிற்பது போன்ற தோற்றத்திலிருந்தது. அதன் பிரம்மாண்டம். உறுதி, அகன்ற கிளைகளின் கம்பீரம் தனித்துவமாக இருந்தது. மரத்தில் காய்ந்து உதிரும் நிலையில் இருந்த ஒரு பூவைக் கண்டேன். சிறிய பிஞ்சு ஒன்றையும் கண்டேன்.

இதன் பூக்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். அவை இரவில் பூக்கும் தன்மை கொண்டவை என்றார்கள். அது போலவே இதன் காய்கள் பலாக்காய் அளவிற்குப் பெரிதாக இருக்கக் கூடியவை. இவை ஆறு மாதங்களுக்குப் பின்பே பழமாகி விழத் தொடங்குகின்றன.


Tree of Life என அழைக்கபடும் இந்த மரத்தை தமிழில் பெருக்க மரம் என்கிறார்கள். உள்ளூர்வாசிகளில் சிலர் இதனைப் பொந்தன் புளி என்றும் சொல்கிறார்கள்.

30 மீட்டர் உயரம் மற்றும் 50 மீட்டர் சுற்றளவு வரை வளரும் பாவோபாப் மரம் தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்கிறது. ஒரு லட்சம் லிட்டருக்கு மேலாகத் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் என்று படித்திருக்கிறேன். ஆப்பிரிக்காவின் கடுமையான கோடையில் இந்த மரத்திலிருந்து மக்கள் தண்ணீரை பெற்றுக் கொள்கிறார்கள். யானைகள் இந்த மரத்திலிருந்தே தண்ணீர் குடிக்கின்றன .

இந்த மரத்தின் பழம் அசாதாரணமாக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மெக்னீஷியம், பொட்டாஷியம் சத்துகள் மற்றும் அதிகமான விட்டமின் சி உள்ளது என்று குறிப்பிடுகிறார்கள். ஆப்பிரிக்காவில் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கான இயற்கை ஆதாரமாகப் பாவோ பாப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மருத்துவத்திற்காகவும் இதன் பட்டை வேர், இலைகள் மற்றும் கூழ் பயன்படுத்தபடுகிறது. மரத்தின் கிளைகளிலிருந்து புதிய மரம் துளிர்த்து விடும் என்பதால் இந்த மரத்திற்கு அழிவேயில்லை

குட்டி இளவரசன் நாவலிலும் லயன்கிங் படத்திலும் இந்த மரத்தைக் காணலாம்.
ராஜபாளையம் சின்மயா பள்ளி வளாகத்தில் இது போன்ற பாவோ பாப் மரம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். குஜராத்தின் சில இடங்களிலும் இதே மரத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவிற்குப் பாவோ பாப் மரங்கள் வந்தது குறித்து இப்போது விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இணையத்தில் இதற்கெனத் தனியே குழுவினர் இயங்கி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் உள்ள மரம் பள்ளிவளாகத்தினுள் காணப்படுகிறது. சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டுப் பழமையானது. இது வெறும் மரமில்லை. நூற்றாண்டுகளின் சாட்சியம்.
மரத்தின் அடியிலும் பள்ளியின் வெளியிலும் இந்த மரத்தின் சிறப்புகள் குறித்த அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். அத்தோடு இதனைப் பாதுகாப்பாகப் பராமரிப்பு செய்வதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். பல்வேறு பள்ளி மாணவர்களை அழைத்து வந்து இதனைக் காணச் செய்யலாம்.
இந்த பாவோ பாப் மரத்தை தூத்துக்குடி புத்தகத் திருவிழா தனது சின்னமாக உருவாக்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
July 31, 2025
விலகும் திரை
ஒரு நடிகர் எப்படி உருவாகிறார் என்பதை அறிந்து கொள்வதற்குச் சரியான திரைப்படம் Mr. Burton. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம். மார்க் எவன்ஸ் இயக்கியுள்ளார்.

ஆசிரியரான பிலிப் பர்ட்டனால் கண்டறியப்பட்டு அவரது ஆதரவு மற்றும் ஊக்கத்தால் எப்படி ரிச்சர்ட் பர்ட்டன் புகழ்பெற்ற நடிகராக மாறினார் என்பதைப் படம் சிறப்பாக விவரிக்கிறது.
1940களின் முற்பகுதியில் போர்ட் டால்போட்டில் கதை நடைபெறுகிறது, தாயை இழந்த ரிச்சர்ட் மூத்த சகோதரி சிஸ் மற்றும் அவரது கணவர் எல்ஃபெட்டால் வளர்க்கப்படுகிறான். தந்தை ஒரு சுரங்கத் தொழிலாளி. குடிகாரர். சகோதரியின் கணவன் எல்ஃபெட்க்கு அவனைப் பிடிக்கவில்லை. படிக்கப் போக வேண்டாம் என வேலைக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் ரிச்சர்ட்டிற்கு நடிப்பதில் ஆர்வமிருக்கிறது. நடிகனாக வேண்டும் என்று கனவு காணுகிறான். இதை அறிந்து கொண்ட பிலிப் உதவி செய்திட முன்வருகிறார்.

பிலிப் பர்ட்டன் அற்புதமான கதாபாத்திரம். ஆசிரியரான அவர் தனியே வாழுகிறார். ஷேக்ஸ்பியரை அவர் பாடம் நடத்தும் விதம் அழகானது. குறிப்பாகக் கவிதைகளை எப்படி வாசிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார். அவரது நாடக குழுவில் ரிச்சர்ட் ஜென்கின்ஸ் இணைந்து கொள்கிறான்.
தனது வீட்டின் ஒரு அறையிலே ரிச்சர்ட்டை தங்க வைத்துத் தேவையான பயிற்சிகள் கொடுத்து நடிகராக்குகிறார். ஆக்ஸ்போர்டில் பயிலுவதற்கான உதவித்தொகை பெறுவதற்காக அவனைத் தத்தெடுத்து தனது சொந்த மகனாக்கிக் கொள்கிறார்.
அப்போது ரிச்சர்ட்டின் தந்தை ஐம்பது பவுண்ட் பணம் வாங்கிக் கொண்டு தனது மகனைத் தத்து கொடுக்கிறார். இன்னும் இது போலப் பிள்ளைகள் இருக்கிறார்கள், வேண்டுமா என்று கேலியாகப் பிலிப்பிடம் கேட்கிறார்.
நாடகம் எழுதும் திறமை கொண்டிருந்தும் பிலிப் பர்ட்டன் அங்கீகாரம் கிடைக்காமலே போகிறார். ஆகவே அவராக நாடகங்கள் நடத்துகிறார். மாணவர்களை நடிகர்களாகப் பயன்படுத்துகிறார்.
திறமையான ரிச்சர்ட்டிற்குப் பிலிப் பர்ட்டன் வழங்கும் பயிற்சிகள் முக்கியமானவை. குறிப்பாகக் குரலை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்காக மலை உச்சிக்கு அழைத்துச் சென்று உரத்துச் சப்தமிடச் செய்வது முக்கியமான காட்சியாகும்.

நாடகத்தில் நடித்து ரிச்சர்ட் புகழ் பெறுகிறான். இதனால் ஷேக்ஸ்பியரின் சொந்த ஊரான ஸ்ட்ராட்ஃபோர்டில் நடைபெற இருக்கும் ஹென்றி IV நாடகத்திற்காகத் தேர்வு செய்யப்படுகிறான். அங்கே. குடி, பெண்கள் என அவனது கவனம் திசைமாறிப் போகிறது. தன்னை விடப் பெரிய நடிகன் எவருமில்லை எனக் கர்வம் கொள்கிறான்.
பிலிப் அவனது நடிப்பை விமர்சனம் செய்யும் போது அவருடன் சண்டையிடுகிறான். ஷேக்ஸ்பியர் வசனங்களை அவன் எப்படிப் பேச வேண்டும் எனப் பிலிப் விளக்குகிறார். ரிச்சர்ட் அவரை மோசமாகத் திட்டித் துரத்துகிறான். இது போலவே நாடகத்தின் இயக்குநர் சொல்லும் ஆலோசனைகளையும் கேட்க மறுக்கிறான்.
பிலிப் பர்டன் அவனது தவறுகளை மன்னிக்கிறார். அவன் புகழ்பெற்ற நடிகனாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாறாத அன்போடு துணை நிற்கிறார். ஹென்றி IV நாடகம் வெற்றி பெற்ற பின்பு ரிச்சர்ட் பர்டன் நடந்து கொள்ளும் முறையும் பிலிப்பை அவன் சந்தித்து மன்னிப்பு கேட்பதும் அழகான காட்சிகள். தேவாலயத்தில் அமர்ந்திருக்கும் பிலிப் முகத்தில் வெளிப்படும் உணர்வு அபாரமானது.

பிலிப் பர்ட்ன் வீட்டின் உரிமையாளரான மா தனித்துவமிக்கக் கதாபாத்திரம். அவர் ரிச்சர்ட் மீது காட்டும் அன்பு. பிலிப்பை புரிந்து கொண்டிருக்கும் விதம் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.
பிரிட்டிஷ் திரைப்படங்களுக்கே உரித்தான தயாரிப்பு நேர்த்தி. சிறந்த நடிப்பு. மற்றும் தேர்ந்த கலை இயக்கத்தை இதிலும் காண முடிகிறது.
இந்தப் படம் ரிச்சர்ட் பர்டனைப் பற்றியது என்றாலும் அவரது ஆசிரியர் பிலிப் பற்றிய படமாகவே விரிகிறது. பிலிப் போன்ற ஆசிரியர்கள் உலகின் வெளிச்சம் படாமல் ஒதுங்கி விடுகிறார்கள். படம் அவருக்குச் செலுத்தப்பட்ட அஞ்சலி போலவே இருக்கிறது.
ரிச்சர்ட் பர்ட்டனாக ஹாரி லாவ்டி நடித்திருக்கிறார். பிலிப்பாக நடித்திருப்பவர் டோபி ஜோன்ஸ். இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தன்னால் உருவாக்கபட்டவர் என்று ஒரு போதும் ரிச்சர்ட் பர்ட்னைப் பற்றி பிலிப் குறிப்பிடுவதில்லை. தான் நன்றி மறந்தவன். இப்போது உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டேன் என ரிச்சர்ட் தான் மன்னிப்புக் கேட்கிறான். நாடக ஒத்திகையின் போது நடக்கும் பிரச்சனைகள். மௌனமாக அவற்றைப் பிலிப் அவதானித்தபடி இருப்பது. மேடையில் ரிச்சர்ட் வெளிப்படுத்தும் அபாரமான நடிப்பு, இறுதிக்காட்சியில் வெளிப்படும் அன்பு எனப் படம் மறக்கமுடியாத தருணங்களைக் கொண்டிருக்கிறது
••
July 28, 2025
குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன்
அவனை கட்டைக்கை பரந்தன் என்று அழைத்தார்கள். இருபத்திரெண்டு வயதிருக்கும். கற்சிலையைப் போல உறுதியான உடல் கொண்டிருந்தான்.

அவனது வலது கை அளவில் சிறியது. பிறக்கும் போதே அந்தக் கையின் அளவு அப்படியிருந்தது. எழுதிக் கொண்டிருக்கும் போது பென்சிலின் நுனி உடைந்துவிடுவது போல அவனை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது கடவுள் வைத்திருந்த களிமண் தீர்ந்துவிட்டது என்று வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் கேலி செய்தார். மாணவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள். அது தான் பரந்தன் பள்ளிக்குச் சென்ற கடைசி நாள். அதன்பிறகு அவன் நாள் முழுவதும் தெருவில் சுற்றியலைத் துவங்கினான்.
தெருவில் என்பதுகூட தவறு. ஊருக்குள் என்றே சொல்ல வேண்டும். எதற்காக அலைகிறோம் என்ற நோக்கமே இல்லாமல் தெருத்தெருவாகச் சுற்றினான். எங்காவது ஆட்கள் அமர்ந்து வெட்டிக்கதை பேசிக் கொண்டிருந்தால் அருகில் அமர்ந்து பேச்சைக் கேட்பான். மீன்சந்தைக்குப் போய் யார் என்ன மீன் வாங்குகிறார்கள் என வேடிக்கை பார்ப்பான். கோவில் யானை வீதிவலம் வரும் போது கூடவே நடப்பான்.
இப்படி இரவிலும் சுற்றியலைந்த போது தான் அவனுக்கு திருடர்களின் சகவாசம் கிடைத்தது. இரவில் முளைக்கும் நட்சத்திரங்களைப் போன்றவர்களே திருடர்கள். அவர்களை பகலில் காண முடியாது. ஒருவேளை பார்க்க முடிந்தாலும் அடையாளம் தெரியாது.
திருடர்கள் அவனிடம் உன்னுடைய குரல் வித்தியாசமாக இருக்கிறது. நீ நாயைப் போல குலைத்துக் காட்டு என்றார்கள். அவன் நாயைப் போல குரைத்தான். நிஜமான நாய் ஒன்று பதில் கொடுத்தது. திருடப் போகிற வீட்டை நம்ப வைப்பதற்காக அவன் நாய் போல பொய்க் குரல் கொடுப்பவனாக மாறினான். அந்த சப்தம் கேட்டால் பாதுகாப்பாக இருக்கிறோம் என வீட்டோர் நினைத்துக் கொண்டார்கள். அப்படி நாய்க்குரல் கொடுப்பதற்காக அவனுக்கு திருட்டில் சிறுபங்கை அளித்தார்கள். அதுவே அவனுக்கு போதுமானதாகயிருந்தது.
திருடப் போகிற இடம் எது என தெரியாத காரணத்தால் பகலில் அதைப் பற்றி கற்பனை செய்து கொண்டிருப்பான். திருடப் போன வீட்டின் பின்புறம் அமர்ந்து சில நேரம் இருட்டுப்பூச்சியின் குரலை வெளிப்படுத்தினான்.. பொய்க்குரல் திருட்டிற்கு உதவியாக இருந்தது. திருடர்கள் சுவரில் ஏறுவதற்கு உடும்பை கொண்டு செல்வது போல அவனை போகும் இடமெல்லாம் அழைத்துப் போனார்கள்.

அப்படி ஒரு திருட்டிற்குப் போன போது வீட்டிற்குள்ளிருந்து “வந்துட்டயா யாகா.. வந்துட்டயா யாகா“ என்ற பெண்குரலை கேட்டாள். “யார் அந்த யாகா“ எனத் தெரியவில்லை.
திருடர்களின் ஒருவன் சொன்னான்.
“இந்த வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு பார்வை கிடையாது. ஆகவே அவளிடம் இரவில் திருட வேண்டாம். பகலில் திருடுவோம்“.
அது தான் திருடர்களின் இயல்பு.
அவர்கள் புறப்படும் போது மறுபடியும் அதே குரல் கேட்டது “வந்துட்டயா யாகா“. இந்த முறை கட்டைக்கை பரந்தனால் அந்த குரலின் பரிதவிப்பை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
“வந்துட்டேன்“ என்று பதில் சொன்னான்.
இதற்காக திருடர்கள் அவனை கோவித்துக் கொண்டார்கள்.
அந்தப் பெண் “யாகா நீ வெளியே நிக்குறயா“ எனக் குரல் கொடுத்தாள். ஆனால் மறுமொழி சொல்வதற்கு பரந்தன் அங்கேயில்லை. அவனை இழுத்துக் கொண்டு போயிருந்தார்கள்.
மறுநாளின் பகலில் பரந்தன் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொண்டான். உள்ளே பெண் குரல் கேட்கவில்லை. ஒருவேளை உறங்கிக் கொண்டிருக்க கூடும். அவளது வீட்டின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தான். குரல் கேட்கவேயில்லை.
அந்த வீடு பர்மா செட்டியுடையது. அவர்கள் குடும்பத்துடன் மலேயா போயிருக்கிறார்கள். காவலுக்கு வைத்திருந்த ஆளும் தனது சொந்த கிராமத்திற்கு போய்விட்டிருந்தான் என அறிந்து கொண்டான்
இரண்டு நாட்கள் இப்படி காலையும் மதியமும் அந்த வீட்டை சுற்றிவந்தான் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு நாள் பின்மதியம் அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டில் யாருமில்லை. ஒவ்வொரு அறையாக தேடிய போதும் அங்கே எவருமில்லை. பெண் குரல் கேட்டதே. அவள் எங்கே போயிருப்பாள் என தேடினான். பல மாதமாக பூட்டியிருந்த வீடு போல தூசிபடிந்து போயிருந்தது.
அப்படியானல் உள்ளே இருந்து குரல் கொடுத்து தங்களைப் போல திருட வந்த இன்னொருவன். அவன் தன்னைப் போலவே பொய் குரலில் சப்தம் கொடுத்திருக்கிறான்.
அந்த பெண் குரலில் இருந்த தவிப்பு உண்மையாக இருந்தது. யார் அந்த பொய்க்குரலோன், அவனைப் பார்க்க வேண்டும் என பரந்தனுக்கு ஆசை உருவானது.
பெண்குரல் கேட்ட வீட்டிலிருந்து எந்த பொருளையும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெளியேறும் போது ஒருவர் திருடன் திருடன் எனக் கத்திக் கூப்பாடு போடவே பரந்தன் ஒடத்துவங்கினான். மக்கள் சுற்றிவளைத்து பிடித்துவிட்டார்கள். காவல்துறை வீடு புகுந்து திருடினான் என்று கைது செய்தார்கள்.
1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் தேசம் எங்கும் உருவானது. அதை ஒடுக்குவதற்காக காவலர்கள் முழுமுயற்சி எடுத்தார்கள். சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. இந்த நெருக்கடியின் போது சிறிய குற்றங்களை உடனே விசாரித்து தண்டனை கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பரந்தன் விசாரணை கைதியாகவே நீண்டகாலம் சிறையில் இருந்தான்.
இறுதி விசாரணையின் போது அவன் நாயைப் போல குரைத்துக் காட்டினான். பூச்சியினைப் போல சப்தம் எழுப்பினான். நீதிமன்றம் அதனை வேடிக்கை மட்டுமே பார்த்தது. முடிவில் திருட்டிற்காக ஆறுமாதம் சிறைதண்டனை கிடைத்தது.
தண்டனை காலம் முடிந்து வெளிவந்தவுடனே பெண் குரல் கொடுக்கும் திருடனைத் தேட ஆரம்பித்தான். கண்டுபிடிக்க முடியவேயில்லை. ஆண்டுகள் உருண்டோடின. வீதியில் சந்தையில் நின்றபடியே அவன் “வந்துட்டயா யாகா“ என பெண்குரலோனைப் போலவே சப்தமிடத் துவங்கினான். பித்தேறிவிட்டதாக அவனைத் துரத்தினார்கள்.
அதன்பிறகான நாட்களில் ஊரின் ஏதோவொரு தெருவில் “வந்துட்டயா யாகா“ என்ற குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிறுவர்கள் அந்தக் குரலை கேலி செய்து விளையாடினார்கள். சில நேரம் அப்படி குரல் கொடுக்கும் பரந்தன் மீது கல்லெறிந்து மகிழ்ந்தார்கள்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
