வாசன் மலர்

Pa Raghavan

நேற்று எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரைச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். படித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால் சில விவரங்கள் மறந்திருந்தன. ஒரு கட்டுரையை முழுக்கப் படித்தேன். செய்ய இருந்த வேலையெல்லாம் மறந்து போய் அடுத்தடுத்து எட்ட கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நிறுத்தவே மனம் வரவில்லை.

உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல. ஒரு வெற்றியாளரைக் குறித்து எழுதும்போது அவர் வெற்றியடைந்த கதையைச் சொல்வதினும், அவரது எந்தெந்தத் திறமைகள், குணங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தின என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் சரியான எழுத்தாக இருக்கும். இம்மலர் அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.

வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், வெற்றிக் கதைகள் எழுத விரும்புகிறவர்கள் இதனை மனத்தில் கொள்ள வேண்டும். சும்மா ஒருவர் போராடினார், கஷ்டப்பட்டார், இரவு பகலாக உழைத்தார், புதிதாக யோசித்தார், நிறைய தோற்றார், இறுதியில் ஜெயித்தார் என்று எழுதுவது எந்த வகையிலும் படிப்பவர்களுக்கு உத்வேகம் தராது. உபயோகமாகவும் இராது.

ஒவ்வொரு மனிதருக்கும் நூற்றுக் கணக்கான நிறங்கள் இருக்கும். இந்த நிறம் என்பது குணத்தையும் உள்ளடக்கியதுதான். நல்லவர் என்பது பொதுவான பண்பு. ஒருவர் எல்லோரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா காலக் கட்டத்திலும் நல்லவராகவே இருக்க முடியாது. அவருக்குக் கோபமே வராது என்பது சரியான கணிப்பு அல்ல. கோபமே இல்லாமல் ஒரு முழு வாழ்வை வாழ்ந்து முடிக்க முடியாது. அதே போலத்தான் அவர் இரக்க சுபாவமுள்ளவர், அவர் நகைச்சுவையாகப் பேசுவார், அவர் எப்போதும் சிந்தனை வயப்பட்டிருப்பார் என்பன போன்ற விவரிப்புகளும்.

ஒரு சராசரி மனிதன் சாதனையாளன் ஆவதற்கு (அது நோக்கமாக இல்லாவிட்டாலும்) சில பயிற்சிகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டியிருக்கும். தெரிந்து செய்யலாம், இயல்பாகவும் செய்யலாம். அதுவல்ல முக்கியம். ஆனால் குறிப்பிட்ட பயிற்சிகளில் மனம் ஒருமுகப்படுவதற்கு அவரை உந்தித் தள்ளும் இயல்புகள் எவை என்று பார்ப்பது முக்கியம்.

இந்த மலரில் அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வாசனுக்கு திறமைமிக்க ஊழியர்கள் பலர் தாமாகவே கிடைத்தார்கள் என்று அதில் சொல்கிறார். நாம் உடனே என்ன நினைப்போம்? அது அவரது அதிர்ஷ்டம்.

ஆனால் வேறொரு கட்டுரையில் வாசன் தமது ஊழியர்களை எப்படிக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் என்பதை இன்னொருவர் எழுதுகிறார். திறமையை இனம் காண்பது – கிடைத்த திறமைசாலிகளைத் தக்க வைத்துக்கொள்வது என்று இரண்டு விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.

ஒரு வட நாட்டு நடிகை இங்கே நடிக்க வந்தபோது அவரை ஒரு மதன மாளிகையில் தங்க வைத்து, பிரமித்துப் போகும் அளவுக்கு உபசரித்த கதையை ஒருவர் எழுதியிருக்கிறார். அடுத்தப் பக்கத்திலேயே இன்னொரு நடிகைக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து மிரட்டிய கதை வருகிறது. இரண்டுக்குமே தொழில் சார்ந்த காரணங்கள்தாம். நியாயமான காரணங்கள். ஆனால் இரண்டு சம்பவங்களின்போதும் தனிப்பட்ட ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இல்லாமல்தான் அவர் நடந்துகொண்டிருக்கிறார். எப்போதும் சமநிலையில் இருப்பது வெற்றிக்கு மிக முக்கிய சூட்சுமம் என்பார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் இந்த இரு சம்பவங்களும் வாசன் என்னும் ஆளுமையின் சமநிலை குலையாத மனப்பாங்கைப் புரியச் செய்துவிடுகின்றன.

அந்நாளில் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கும் படங்களில் அவரது நகைச்சுவைப் பகுதிகளை அவரே எழுதி, இயக்கிக் கொடுத்துவிடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. வாசனும் அவரைத் தமது ஒரு படத்துக்கு அழைத்தார். என்.எஸ்.கே. தனது பாணியில் ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதி, இயக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் போட்டுப் பார்த்தபோது வாசனுக்கு நிறைய விஷயங்கள் இடித்தன. எனவே கிருஷ்ணன் கொடுத்த மொத்தப் படச் சுருளில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அது எப்படி நான் எடுத்துத் தந்ததை நீங்கள் வெட்டலாம்?

வாசன் அவரை உட்கார வைத்து முழுப் படத்தையும் போட்டுக் காட்டியிருக்கிறார். நீக்கப்பட்ட காட்சிகளை ஏன் நீக்கினேன் என்று விளக்கியிருக்கிறார். சும்மா சுற்றி வளைத்துத் தனது செயலை நியாயப்படுத்துவதல்ல. ஒரு வரி. ஒரே ஒரு விளக்கம். அவ்வளவுதான். நீங்கள் செய்தது சரி என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் எழுந்து சென்றுவிட்டார்.

அந்த ஒரு வரி விளக்கம் வாசன் எவ்வளவு பெரிய திரைக்கதை வல்லுநர் என்பதை விளக்கிவிடுகிறது.

இந்தக் கட்டுரை முடியும் இடத்தில், வாசன் சினிமா கற்றுக்கொண்ட ஆரம்பக் காலம் குறித்த வேறொரு கட்டுரை இருக்கிறது. இரண்டையும் இணைத்து சிந்தித்தால், நேர்த்தியாகக் கற்றுக்கொள்ளும் ஒரு தொழில் தருகிற தன்னம்பிக்கை, எம்மாதிரி நெருக்கடி சமயங்களில் எவ்வளவு சிறப்பாக வேலை செய்யும் என்பது விளங்கிவிடும்.

தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு வெற்றியாளரின் வாழ்வும் இந்த மலருக்கு நிகரானதல்ல. இத்தனைக்கும் இது ஒரு தொகுப்பு நூல்தான். கால வரிசைப்படுத்தலோ, வெற்றி சூட்சுமங்களை விளக்கும் நோக்கமோ இதில் கிடையாது. வாசன் என்னும் ஆளுமையின் நினைவைப் போற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான். ஏராளமான நபர்கள், ஆளுக்கொரு விதமாக அவரவர் மொழியில், அவரவர் அனுபவத்தை எழுதியிருப்பதுதான். எந்த ஒழுங்கு வட்டத்துக்குள்ளும் அடங்காது.

இருப்பினும் ஒரு சிறந்த வெற்றி நூல் / வாழ்க்கைச் சித்திர நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க இது ஒரு மகத்தான கையேடு. இப்போது அச்சில் இருக்கிறதா, கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2025 21:30
No comments have been added yet.