குற்றமுகங்கள் 21 கார்டன் மார்த்தா
மதராஸில் எடுக்கபட்ட முதல் புகைப்படம் எது, யாரைப் படம் பிடித்தார்கள் எனத் தெரியவில்லை ஆனால் கார்டன் மார்த்தா புகைப்படம் எடுத்துக் கொண்ட போது அவளுக்கு வயது நாற்பது.

தனது உருவத்தை அச்சு அசலாகத் தன்னுடைய கையில் வைத்து பார்க்க முடியும் என்று அவள் கற்பனை கூடச் செய்ததில்லை. ஆகவே புகைப்படத்தை அவள் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்ணாடி காட்டாத எதையோ புகைப்படம் உணர்த்திவிடுகிறது. கண்ணாடியை விட்டு நாம் நகர்ந்தவுடன் பிம்பம் மறைந்துவிடும். ஆனால் கையில் உள்ள புகைப்படம் மாறாது.

கார்டன் மார்த்தா கோவாவில் பிறந்து வளர்ந்தவள். மதராஸிற்கு எதற்காக வந்தாள் என்று தெரியாது. ஆனால் 1846ல் பழவேற்காட்டில் பெரிய பங்களா ஒன்றில் வசித்து வந்தாள்.
தனது வீட்டிற்குள் எவரையும் அவள் அனுமதித்ததில்லை. எவரை சந்திப்பதாக இருந்தாலும் தனது தோட்டத்தில் தான் சந்திப்பாள். வீட்டைச் சுற்றி நூற்றுக்காண பூச்செடிகள், எலுமிச்சை மரமும் நெல்லி மரமும் கொண்ட பெரிய தோட்டத்தை உருவாக்கியிருந்தாள். அதன் மேற்கு பகுதியில் மரத்தாலான இருக்கைகள் வட்டமேஜை ஒன்றையும் உருவாக்கியிருந்தாள்.
மழை பெய்யும் நாட்களில் அவள் தனித்து அமர்ந்து நனைவதற்காகக் கல்லில் ஒரு இருக்கையும் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் அவளைத் தவிர வேறு எவரும் அமர இயலாது. மழைநாளில் கையில் ஒயின் போத்தலுடன் அவள் அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருப்பாள்.
கார்டன் மார்த்தா ஆண்கள் அணியும் சட்டையும் இரண்டு அடுக்குக் கொண்ட அடர்சிவப்பு அல்லது நீலப்பாவாடையும் அணிந்திருப்பாள். பருத்த உடல். உப்பிய முகம். உள்ளோடிய கண்கள். கார்டன் மார்த்தாவை குற்றவாளிகளின் அன்னை என்று அழைத்தார்கள். அவளது உத்தரவின் படி ஏவல் செய்யும் கூலிக்கொலையாளிகள் அவள் வசமிருந்தார்கள். தங்களது தொழில்போட்டியாளர்களைக் கொலை செய்வதற்கு வணிகர்கள் அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். சில வேளைகளில் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளைக் கொல்வதற்குக் கூட அவள் பணம் பெற்றிருக்கிறார்கள். யாரை வைத்து எப்படிக் கொலையை நடத்துவாள் என்று தெரியாது. ஆனால் அவளிடம் பணம் கொடுத்துவிட்டால் காரியம் முடிந்துவிடும் என்பதை வணிகர்கள் உணர்ந்திருந்தார்கள்.
கார்டன் மார்த்தா தான் கொன்ற ஒவ்வொருவர் நினைவாகவும் ஒரு ரோஜா செடியை வைத்திருந்தாள் என்றார்கள். அந்தச் செடியிலிருந்து ஒரு ரோஜாவை கூட அவள் பறிக்க மாட்டாள். செடியிலிருந்து பூவை பறிக்கும் உரிமை தனக்குக் கிடையாது என்று சொல்லுவாள்.
கார்டன் மார்த்தாவிற்கு மதநம்பிக்கை கிடையாது. ஆனால் கர்ப்பிணி பெண்களைக் கண்டால் அவர்கள் முன்பாக மண்டியிட்டு ஆசி கேட்பாள். அவள் தனது வீட்டுக் கட்டிலில் உறங்குவதுமில்லை. போதை மிகுதியில் குதிரை லாயத்தில் தான் உறங்குகிறாள் என்றார்கள்.
நடனம் இசை என எதிலும் ஈடுபாடு இல்லாத கார்டன் மார்த்தா குடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாள். கப்பலில் வரும் மதுவகைகளை மொத்தமாக வாங்கிக் கொண்டாள். தனிமையில் மது அருந்துவாள். புகைப்படம் எடுத்துக் கொள்வது அவளுக்குக் கிளர்ச்சியூட்டியது.
கார்டன் மார்த்தா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். புதிய புகைப்படத்திற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டாள். புதிய உடைகள் வாங்கி அணிந்து கொண்டாள். ஜேம்ஸ் ஜார்ஜ் என்ற அந்தப் புகைப்படக்கலைஞன் ஒவ்வொரு முறையும் அவளைச் சிரிக்கும்படி சொல்லுவான். அவளால் புகைப்படத்திற்காகச் சிரிக்க முடியாது.
வீடு திரும்பிய மார்த்தா அவளது வெள்ளிக்கிழமை புகைப்படங்களைத் தரையில் பரப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். ஒருமுறை அப்படிப் புகைப்படம் எடுத்துவிட்டு அவள் வீடு திரும்பிய மறுநாள் ஜேம்ஸ் ஜார்ஜ் பிரிண்ட் போட்ட அவளது புகைப்படத்தை ரங்கையா என்பவர் மூலம் கொடுத்து அனுப்பி வைத்தான்.
அந்தப் புகைப்படத்தில் அவள் கறுப்பு உடை அணிந்திருந்தாள். அதுவும் பூவேலைப்பாடுகள் கொண்ட உடை. அப்படி ஒரு புகைப்படத்தை அவள் எடுக்கவேயில்லை. அந்த உடையும் அவளிடம் கிடையாது. ஆனால் அதே முகம். அதே உருவம். தன்னைப் போலவே இருக்கும் இன்னொரு பெண் இருக்கிறாளா என அவளுக்குச் சந்தேகம் உருவானது.

கறுப்பு ஆடை புகைப்படத்துடன் ஜேம்ஸ் ஜார்ஜை தேடிச் சென்றாள். அவன் புகைப்படம் மாறிவிட்டது என்று அவளது புகைப்படத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தான். அந்தக் கறுப்பு உடை அணிந்தவள் தன்னைப் போலிருக்கிறாள். அவள் யார் என மார்த்தா விசாரித்தாள். தனக்கு நினைவில்லை. லிஸ்டரின் சகோதரி என ஞாபகம் என்றான். அவள் கர்னல் லிஸ்டரின் வீட்டிற்குச் சென்று விசாரித்தாள். அப்படி ஒரு சகோதரி கிடையாது என லிஸ்டர் மறுத்தார்.
அந்தப் பெண் யாரெனத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் மார்த்தா இறங்கினாள். அவளைப் பற்றிய விபரம் எதுவும் கிடைக்கவில்லை. பலரும் அது மார்த்தாவின் புகைப்படமே தான் என்றார்கள்.
கார்டன் மார்த்தாவிற்கு அவள் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வெறியாக மாறியது. அவளைக் கண்டுபிடிப்பதற்காகத் தனது பணத்தைத் தாராளமாகச் செலவு செய்ய ஆரம்பித்தாள். தன்னைக் கொன்றுவிட்டு அந்தப் பெண்ணைத் தனது இடத்திற்குக் கொண்டுவந்து விடுவார்கள் என்று பயப்படத் துவங்கினாள். தன்னைப் போல இன்னொரு பெண் இருப்பது நிஜமில்லை என்று ஆத்திரத்தில் கூக்குரலிட்டாள்.
பெயரில்லாத அந்தக் கறுப்பு உடை அணிந்த பெண் அவள் கொல்ல வேண்டியவளாக மாறினாள். அவள் யாராக இருந்தாலும் தேடிக் கொலை செய்துவிடும்படி மார்த்தா கட்டளை இட்டாள். அவளது கூலிக்கொலையாளிகளால் அப்பெண்ணைக் கண்டறிய முடியவில்லை. ஏமாற்றத்தில் மார்த்தா வெறித்தனமாக நடந்து கொண்டாள்.
கூலி கொலையாளிகளில் ஒருவன் கார்டன் மார்த்தாவை கொலை செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்தான். அன்றிரவே மார்த்தாவை அவளது தோட்டத்தில் வைத்து கொலையும் செய்தான்.
அவளது மரணத்தின் பின்பு கார்டன் மார்த்தாவின் வீட்டினை மக்கள் சூறையாடினார்கள். பூச்செடிகளைப் பிடுங்கி எறிந்தார்கள். அப்போது ஒரு மரப்பெட்டியில் பூ வேலைப்பாடுள்ள கறுப்பு உடை ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அது புகைப்படத்தில் அந்தப் பெண் அணிந்திருந்த அதே உடையாக இருந்தது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
