காஷ்மீரின் குரல்
டேனிஷ் ரென்சு இயக்கிய சாங்ஸ் ஆஃ பாரடைஸ் காஷ்மீரின் புகழ்பெற்ற பாடகியான ராஜ் பேகத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. மிக நேர்த்தியாக உருவாக்கபட்ட திரைப்படம். படத்தில் ராஜ் பேகம் நூர் பேகமாக மாற்றப்பட்டிருக்கிறார். இளமைக்கால நூர் பேகமாக நடித்துள்ள சபா ஆசாத் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவரது உடல்மொழி மற்றும் உடகள் குருவின் முன்னால் அமர்ந்து பாடும் விதம், மேடையில் பாடும் முறை என அற்புதமாக நடித்துள்ளார்.
சபா ஆசாத் நிஜமான பாடகி என்பதால் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

அவரது தந்தையாக பஷீர் லோன் நடித்துள்ளார். அவர் நடிக்கிறார் என்ற உணர்வேயில்லை. நிஜமான தந்தையாகவே உணரச் செய்கிறார். அது போலவே நூர் பேகத்தின் பாடும் திறமையை அடையாளம் கண்டு அவளுக்கு இசை கற்றுக் கொடுத்து உலகம் அங்கீகரிக்கச் செய்த குருவாக ஷிஷிர் சர்மா பிரமாதமாக நடித்துள்ளார்
காஷ்மீரின் இசை மற்றும் கவிதை மரபை படம் நேர்த்தியாகச் சித்தரிக்கிறது. லாலேஸ்வரி, ஹபா ஹதூன் எனக் காஷ்மீர் பெண்கவிகளையும், சூபி மரபினையினையும் படம் அடையாளப்படுத்துகிறது
வின்சென்சோ கண்டோரெல்லி ஒளிப்பதிவு காஷ்மீரின் அழகையும், அந்தக் காலக் கட்ட உணர்வையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
ரேடியோ காஷ்மீரின் முதல் பெண் பாடகியும் புகழ்பெற்ற இசைக்கலைஞருமான நூர் பேகத்தினைச் சந்தித்து நேர்காணல் செய்வதற்காக அமெரிக்காவில் இசை ஆய்வு செய்யும் ரூமி காஷ்மீர் வருகிறான். ஸ்ரீநகரில் தனது மகள் மற்றும் பேத்திகளுடன் நூர் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தன்னை நேர்காணல் செய்ய வந்துள்ள அவனைச் சந்திக்க நூர் பேகம் விரும்பவில்லை. ஆனால் விடாப்பிடியான அவனது காத்திருப்பு மற்றும் இசை ஆர்வம் அந்தச் சந்திப்பை சாத்தியமாக்குகிறது. அவனிடம் தனது கடந்தகாலத்தை நூர் பேகம் விவரிக்கிறார்.
டெய்லரின் மகளாக எளிய குடும்பத்தில் பிறந்த அவள் எப்படி இசைகற்றுக் கொண்டாள். ரேடியாவின் இசைப்போட்டியில் கலந்து கொண்டு எவ்வாறு வெற்றி பெற்றாள். குடும்பம் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பிற்குப் பயந்து தனது பெயரை மறைத்துக் கொண்டு பாடினாள். புகழ்பெற்றாள் என்பதைப் படம் அழகாக விவரிக்கிறது. கதையில் பெரிய திருப்பங்கள் எதுவுமில்லை. உண்மைக்கு மிக நெருக்கமான திரைக்கதை. படத்தின் இசையமைப்பாளர் பீட்டர் கிரெக்சன். சிறப்பான இசைய வழங்கியுள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் படித்து முடித்த ஆசாத் மக்பூல் ஷா ஒரு கவிஞர். காஷ்மீரின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். ரேடியோவில் அவரது கவிதைகளைத் தான் நூர் பேகம் பாடுகிறார். அவர்களுக்குள் ஏற்படும் காதல். அதற்கு ஊராரின் எதிர்ப்பு. அவர்கள் திருமணம் நடைபெறும் விதம் என நூர்பேகத்தின் தனிப்பட்ட வாழ்க்கையினையும் படம் விவரிக்கிறது. மக்பூல் ஷாவாக ஜைன் கான் துரானி நடித்துள்ளார்.
தனது மகளின் இசைத் திறமையைப் புரிந்து கொள்ளாமல் அவள் மீது கோபம் கொள்கிறார் நூரின் அம்மா பின்பு நூர் புகழ்பெற்ற பாடகியாகிறாள். அவளது பாடலை மக்கள் கொண்டாடுகிறார்கள். சந்தையில் நூரின் அம்மாவினை சந்திப்பவர்கள் எல்லோரும் அவளுக்கு நன்றி சொல்கிறார்கள். தனது தவற்றை உணர்ந்து தனது மகளிடம் அவள் மன்னிப்பு கேட்கும் காட்சி அழகானது. அப்போது நூரின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளே அவளது உண்மையான சந்தோஷம்.

ரேடியோ நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சேகரித்து வைக்கபட்டிருந்த அவளது பாடல்கள் முழுவதும் அழிந்து போகின்றன. அப்போது நூர் அடையும் துயரமும், ஒரு திருமணத்தில் நூர் பாடுவதைக் கேட்கும்போது, அதில் கவரப்பட்டு, அவளுக்குப் பயிற்சி அளிக்க குரு முடிவு செய்வதும்,. நூர் பேகம் போலவே பாடுவதில் ஆர்வம் கொண்டு வீட்டை விட்டு ஒடிவந்த இளம்பெண் அவளைச் சந்தித்து வாய்ப்பு கேட்பதும் மறக்க முடியாத காட்சிகள்.
காஷ்மீரி இசை மற்றும் கவிதைகளின் பெருமையைச் சொல்லும் இப்படம் ராஜ் பேகத்தின் வாழ்க்கையைச் சிறப்பாக, கலைநேர்த்தியோடு பதிவு செய்துள்ளது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
