வரையப்பட்ட பழங்கள்
“Poetry is an awareness of the world, a particular way of relating to reality.” என்கிறார் திரைப்பட இயக்குநர் ஆந்த்ரேய் தார்கோவெஸ்கி. அது ஓவியத்திற்கும் பொருந்தக்கூடியதே.

காமில் பிஸ்ஸாரோவின் ஆப்பிள் அறுவடை ஓவியம் 1888 ஆம் ஆண்டு வரையப்பட்டது, இந்த ஒவியத்தில் வண்ணங்களின் இணக்கம் மற்றும் துடிப்பு வசீகரமாகவுள்ளது. மரத்தின் சற்றே வளைந்த வடிவம் அதற்குத் தனி அழகை உருவாக்குகிறது. இது போன்ற சற்றே வளைந்த வடிவமாகவே கலைஞனும் இருக்கிறான். அந்த வளைவு இயற்கையாக உருவானது. வளைந்த மரம் என்பதால் அதன் கனிகள் கசந்து போவதில்லை. அந்த வளைவு மரத்திற்குத் தனித்துவத்தை அளிக்கிறது.
ஆப்பிளைச் சேகரிக்கும் பெண்கள் குனிந்திருக்கிறார்கள். அவர்களின் ஆடை வண்ணமே முதலில் கவர்கிறது. ஆப்பிள் பறிக்கும் ஆண் நேர்த்தியாக உடை அணிந்திருக்கிறான். விரிந்து பரந்திருக்கும் சூரிய வெளிச்சத்தை மரத்தின் நிழல்களே சமநிலை செய்கிறது. அதுவும் பின்புலத்தில் காட்டப்படும் வண்டியும் குதிரையும் அத்தனை அழகாக இருக்கிறது.
வழக்கமாக நிழலை வரைவதைப் போலப் பிஸ்ஸாரோ வரையவில்லை. உதிர்ந்த இலைகளின் அடர்த்தியைப் போல வரைந்திருக்கிறார். நீண்ட நேரமாக நடக்கும் அறுவடைப் பணியின் நடுவே இந்தக் காட்சி இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பது போலச் சேகரிக்கபட்ட பழங்கள் கொண்ட கூடை காணப்படுகிறது.
ஆப்பிள் அறுவடை செய்யும் அன்றாடக் காட்சி ஏன் ஓவியத்தில் முதன்மையாகிறது. இது ஆப்பிள் அறுவடையை மட்டும் குறிக்கவில்லை. மாறாகத் தொடரும் நிகழ்வு ஒன்றின் சிறு துண்டை அடையாளப்படுத்துகிறது. வேறு வேறு இசைத்துணுக்குகள் ஒன்று சேர்ந்து ஓலிப்பது போல இந்தக் காட்சி உருமாறுகிறது. ஆப்பிள் மரமோ, மனிதர்களோ அல்ல பிரகாசமாகச் சூரியனே ஓவியத்தினைச் சிறப்பாக்குகிறது,
ஆப்பிள் அறுவடை என்பது காலமாற்றத்தின் அடையாளம். அது பிஸ்ஸாரோ வின் அகவுணர்வின் வெளிப்பாடாகவும் மாறுகிறது, பாயிண்ட்லிசம் பாணியில் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் வண்ணப்புள்ளிகள் உயிர்ப்புடன் விளங்குகின்றன.
ஒரு ஆப்பிளையோ, பேரிக்காயினையோ, அல்லது திராட்சை பழங்களையோ ஓவியத்தில் காணும் போது வியப்பான பொருளைப் பார்ப்பது போலிருக்கிறது. பயன்பாட்டிலிருந்து ஒரு பொருளை துண்டித்தவுடன் அது விசித்திரமாகிவிடுகிறது.
பழங்களைப் பொறுத்தவரை அதைக் காலத்தின் குறியீடாகத் தத்துவம் கருதுகிறது. கவிதை அதனைக் கனிவின் வெளிப்பாடாகவும் இச்சையின் வடிவமாகவும் பதிவு செய்கிறது. பழங்களை வரைவதென்பது ஓவியத்தில் முக்கியப் பயிற்சி. குறிப்பாகப் பழங்களின் வடிவம், நிறம் மற்றும் அதன்மீது படரும் வெளிச்சம். நீர்துளிகள் மற்றும் அதன் இருப்பு நுண்மையாக வெளிப்படுத்தபடுகிறது.
மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் பழமும், கூடையில் வைக்கப்பட்டுள பழமும் ஒன்றல்ல. இரண்டின் இடமும் இருப்பும் வேறுவேறு பொருள் தரக்கூடியதே. ஓவியம் வாடாத மலர்களை உருவாக்கியதைப் போலக் காலத்தின் பிடியிலிருந்து பழத்தை விடுவிக்கிறது.
கலைவிமர்சகர் டேவன்போர்ட் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் பற்றி அழகாக எழுதியிருக்கிறார், பேரிக்காய் மனிதனுக்கும் தெய்வீகத்திற்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரம் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகக் கருதப்படுகிறது. ஆப்பிள் வழியாகவே தீமை உலகிற்கு அறிமுகமாகிறது. பேரிக்காய் வழியே அது சமன் செய்யப்படுகிறது என்கிறார் டேவன்போர்ட்.
ஆப்பிளும் பேரிக்காயும் ஒன்றாக இடம்பெற்றுள்ள ஒவியம் என்பது குறீயிட்டு பொருள் கொண்டது. டேவன்போர்ட் வீட்டில் இந்த இரண்டு மரங்களும் ஒன்றாகப் பிணைந்து நின்றிருந்தன என்கிறார்கள். நியூட்டனின் காலடியில் ஆப்பிள் விழுந்ததிற்குப் பதிலாகப் பேரிக்காய் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் எனக் கேள்வி எழுப்புகிறார்.
கருவுறுதல், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுளை ஆப்பிள் குறிப்பதாக நம்புகிறார்கள், கஜகஸ்தானில் பெண்கள் கருவுறுதலுக்காக ஆப்பிள் மரத்தின் கீழ் அடியில் படுத்துக் கொள்வது வழக்கம்.. இது போலவே ஆர்மீனியாவில்மணமக்கள் நல்ல அதிர்ஷ்டத்திற்காக ஒரு ஆப்பிளை வீச கூரையின் மீது ஏறி வீசுகிறார்கள். கிரேக்கப் புராணத்தில் வரும் தங்க ஆப்பிள் என்பது விசுவாசத்தின் அடையாளமாகும்.
மத்திய கிழக்கு நாடுகளில் கதை சொல்லி தனது கதையை முடிக்கும் போது மூன்று ஆப்பிள்கள் சொர்க்கத்திலிருந்து விழுந்தன: ஒன்று இந்தக் கதையைச் சொல்பவருக்கு, மற்றொன்று கதையைக் கேட்டவருக்கு, மூன்றாவது கதையில் வருபவருக்கு என்கிறார். ஆப்பிள் என்பது வான்வுலகின் பரிசாகக் கருதப்படும் மரபது.

பிஸ்ஸாரோவின் ஆப்பிள் அறுவடையைப் போலவே செசானின் ஆப்பிள்களும் புகழ்பெற்றவை. செசானின் ஓவியம் 1877 ஆம் ஆண்டு வரையப்பட்டது. அந்த எட்டு ஆப்பிள்கள் மாறாத வாழ்வின் இனிமையை அடையாளம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். வேறு வேறு ஆப்பிள்களின் இடையே ஒரு இணைப்பு மற்றும் சமநிலை உணர்வை உருவாக்குகிறார் செசான். அவர் வண்ணத்தையும் ஒளியையும் பயன்படுத்தும் அழகு வியப்பூட்டக்கூடியது.
தனது மாடல்களிடம் ஒரு ஆப்பிளாக இருங்கள் என செசான் உத்தரவிடுவார் என்கிறார்கள். ஒருவர் ஆப்பிளாக இருப்பது என்பது அசைவற்ற நிலை மட்டுமில்லை. முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நிலையுமாகும்.. தன்னையே ஆப்பிளுடன் செசான் ஒப்பிட்டுக் கொள்கிறார்.
உலகின் பார்வையில் ஆப்பிள் கொண்டிருக்கும் மதிப்பு பயன்பாடு கருதியது. ஆனால் அதைச் சமயம், வரலாறு, காலமாற்றம். கலையின் முழுமை, உணர்ச்சியின் வடிவம் எனப் பல்வேறு நிலைகளுக்கான அடையாளப் பொருளாக ஓவியமே மாற்றுகிறது. அசைவற்ற நிலையில் உறைந்துள்ள பழங்கள் மகத்தான சிற்பங்களைப் போலவே காட்சியளிக்கின்றன. பரவசம் தருகின்றன
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
